…….

……………….

அவள் ஒரு விபச்சாரி. அவளை வைத்துக் கதை எழுத
வேண்டுமென்று எழுத்தாளன் விரும்பினான்.
ஆகவே அவன் அவளிடம் சென்றான்.
‘பெண்ணே! நீ இவ்வளவு கெட்ட நிலைக்கு
வரக்காரணம் என்ன ? ‘
என்று எழுத்தாளன் கேட்டான்.
‘என்ன ? … கெட்ட நிலையா ? அப்படி ஒண்ணும் எனக்கு
சீக்குக் கீக்குக் கிடையாது. ஒங்கிட்ட சீக்கில்லாமே இருந்தா
அதுவே ஆண்டவன் புண்ணியம் ‘ என்றாள் விபச்சாரி.
‘இல்லே, உனக்கு சமுதாயம் எவ்வளவு பெரிய கொடுமையை
இழைத்துவிட்டது! ‘ என்றான் எழுத்தாளன்.
‘கொடுமை என்ன கொடுமை! பசிக்கொடுமை எல்லோருக்குந்
தானிருக்கு… இந்த போலீசுக்காரங்க தொந்தரவு இல்லாட்டி
ஒண்ணுமில்லே ‘ என்றாள் விபச்சாரி.
‘கண்ட கண்டவங்க கிட்டெல்லாம் போகிறது உனக்கு
கஷ்டமாக இல்லை ? ‘
‘யாரும் கண்ட கண்டவங்க கிட்டெல்லாம் போகல.
எனக்குன்னு ஒரு புருஷன் இருக்காரு ‘
‘மற்ற பெண்கள் எல்லாம் கட்டின புருஷனோடு மட்டும்தான்
இருக்கிறார்கள். வேறு ஆண்பிள்ளைகளோடு சம்பந்தம் வைத்துக்கொள்வதில்லை தெரியுமா ? ‘
‘அப்படியா ? ‘
‘பின்பு ? ‘
‘சரி, உங்களுக்கு பெஞ்சாதி இருக்குங்களா ? ‘
‘ஊம், இருக்கு ‘
‘நீங்க மட்டும் எங்கிட்ட வந்திருக்கீங்களே ஒங்களுக்கு
வெக்கமா இல்லே ? .. சரி, அது கிடக்கட்டும்; வாங்க –
நேரமாவுதுங்க ‘
கொடுமையிலும் கொடுமை,
கொடுமையை கொடுமை என்று புரிந்து கொள்ளாததுதான்.
எழுத்தாளனுக்கு அது புரியவில்லையோ என்னவோ,
விபச்சாரியைக் காட்டி, வாசகர்களின் கண்ணீரைப்
பிதுக்கியெடுத்து, நாலு காசு சம்பாதிக்கும்
எண்ணத்தை மட்டும் அன்றோடு கைவிட்டான்.
(நன்றி – ஜி.நாகராஜன்)
.
……………………………………………….