வேல்முருகனுக்கு திமுக மீது ஏகப்பட்ட புகார்கள் ….

…………………………

” அண்ணா அறிவாலயத்திலேயே சாதிப் பாகுபாடு பார்க்கப்படுகிறது.

திமுக-வில் பல பவர் செண்டர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மையே…

துரைமுருகன் பெயருக்குத்தான் பொதுச்செயலாளர். அவருக்கு தி.மு.க-வில் என்ன அதிகாரம் இருக்கிறது என்பது, தி.மு.க-விலுள்ள அத்தனை பேருக்கும் தெரியும்.”

……………………

தி.மு.க அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ.
‘கூட்டணியில் இருந்துகொண்டு, அரசை விமர்சிக்க என்ன காரணம்…’
என்ற கேள்வியோடு வேல்முருகனிடம் பேசினேன்…

“ ‘தி.மு.க-வுக்கு ‘ஜிங் சாங்’ அடிக்க மாட்டேன்’ என்று
ஆவேசமாகப் பேசியிருக்கிறீர்களே… என்னதான் பிரச்னை?”

“பா.ம.க-வைச் சேர்ந்த தம்பிகள் சிலர், ‘வேல் முருகன் தி.மு.க-வுக்கு
‘ஜிங் சாங்’ அடிக்கிறார்’ என்ற கருத்தைத் தொடர்ந்து முன்வைத்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையிலும், ‘என் கண் முன்னே என் சமூக
மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால், நான் துணிந்து கேள்வி கேட்பேன்,
கூட்டணி தர்மத்துக்காக வாய்மூடி இருக்க மாட்டேன்’ என்பதையும் உணர்த்தவுமே அப்படிப் பேசினேன்.”

“தி.மு.க அரசில், அப்படியென்ன அநியாயம் நடந்துவிட்டது?”

“நிறைய இருக்கின்றன. என்னுடைய தொகுதியில் ஆற்றில் மூழ்கி
இறந்த ஒருவரின் குடும்பத்துக்கு நிதியுதவி கேட்டிருந்தேன். அதற்குப்
பிறகு நடந்த சம்பவங்களுக்கெல்லாம் நிதியுதவி வழங்கப்பட்டுவிட்டது.
நான் கேட்ட நபருக்கு மட்டும் வழங்கப்படவில்லை. ஜூலை ஒன்றாம்
தேதி நடந்த பாலியல் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு
இழப்பீடு கோரினேன். அதுவும் நடக்கவில்லை. மற்ற சமூகத்தினர் பாதிக்கப்பட்டால், உடனே பரிகாரம் கிடைக்கிறது. வன்னியர்
சமூகத்துக்கு மட்டும் கிடைப்பதில்லை.

இட ஒதுக்கீட்டுக்காகப் போராடிய தியாகிகளின் நினைவாக 4 கோடி
ரூபாயில் மணிமண்டபம் கட்டப்படுகிறது. அதன் மூலம் யாருக்கு
என்ன பயன்? அவர்களின் குடும்பத்தினருக்கு வீடு கட்டிக்
கொடுக்குமாறு சட்டமன்றத்திலேயே பேசினேன். அதுவும்
நடக்கவில்லை. வன்னியர் பொதுச் சொத்து நல வாரியத்துக்கு
இன்னும் தலைவர் நியமிக்கப்படவில்லை.

தி.மு.க வெற்றிக்கு நானும் எள் முனை அளவேனும் உதவியிருக்கிறேன். பா.ம.க-வைத் தவிர, மற்ற அனைத்து வன்னியர் அமைப்புகளும் தி.மு.க-வைத்தான் ஆதரித்தோம். ‘கூட்டணியில் இருக்கிறீர்களே… நீங்கள் சொல்லக் கூடாதா?’ என்று வன்னிய மக்கள் என்னிடம் முறையிடுகிறார்கள். மக்கள் என்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.

துறைச் செயலாளர்கள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள்,
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் என்று எந்தப் பொறுப்பிலும் வன்னியருக்கு
முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. மாநகராட்சி மேயர்களிலும் பிரதிநிதித்துவம் இல்லை. வாக்கு அரசியலுக்கு மட்டும் வன்னிய
மக்களைப் பயன்படுத்திக் கொண்டு விட்டுவிடுகிறார்கள் என்ற
கொதிப்பு எங்கள் சமூக மக்களிடம் இருக்கிறது.

இப்படியான வன்னியர் சமூக எதிர்ப்பால்தான் தி.மு.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம், ‘வன்னியருக்கு எதிரான ஆட்சி’ என்கிற
பிம்பம் ஏற்படுகிறது. இதைவைத்தே பா.ம.க அரசியல் செய்யும்.
அது, 2024 தேர்தலில், கூட்டணி வெற்றியைக்கூட பாதிக்கும்.”

“வன்னியர் சமூகத்தை தி.மு.க முழுமையாகப் புறக்கணிக்கிறது
என்று சொல்கிறீர்களா?”

“அப்படிச் சொல்லிவிட முடியாது. தி.மு.க-வில் இருக்கும்
ஒருசிலர்தான் புறக்கணிக்கிறார்கள். முதல்வர் அதைச்
சரிசெய்ய வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்.”

“தி.மு.க-வின் மிக உயர்ந்த பதவியான பொதுச் செயலாளர்
பதவியிலேயே வன்னியர்தானே இருக்கிறார்?”

“துரைமுருகன் பெயருக்குத்தான் பொதுச்செயலாளர். அவருக்கு
தி.மு.க-வில் என்ன அதிகாரம் இருக்கிறது என்பது, தி.மு.க-விலுள்ள
அத்தனை பேருக்கும் தெரியும்.”

“முதல்வர் ஸ்டாலினைத் தாண்டி, உதயநிதி, சபரீசன் என
தி.மு.க-வில் பல ‘பவர் சென்டர்கள்’ இருப்பதாகச்
சொல்கிறார்களே…”

“அது இயற்கை. முதல்வராக இருப்பவரின் குடும்பத்தில் இருப்பவர்கள்
பவராக இருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாதுதான். அதிகாரிகள் வர்க்கமே, பவர் இல்லாதவர்களுக்கும் ஜிங் சாங் அடித்து, அவர்களை பவரானவர்களாக உருவாக்கிவிடுகிறது.”

“புதிதாக வன்னியர் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரத் தாமதம்
ஆவதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?”

“முதல்வருக்கு மனமிருக்கிறது… ஆனால், தி.மு.க-வில் இருக்கும் உயர் சாதியினர் சிலர்தான் தடுக்கிறார்கள். அப்படித் தடுக்கும் சக்திகளின் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. அதேசமயம் முன்னேறிய அந்த சாதிக்காரர்கள்தான் முதல்வருக்கு நெருக்கமாகவும்,
ஆலோசகர்களாகவும், நண்பர்களாகவும், வேண்டப்பட்டவர்
களாகவும் இருக்கிறார்கள்.

அண்ணா அறிவாலயத்திலேயே
சாதிப் பாகுபாடு பார்க்கப்படுகிறது.”
……
……

“பா.ஜ.க-வில் நீங்கள் இணையவிருப்பதாகச் சொல்கிறார்களே?”

“முற்றிலும் தவறான தகவல். நான் பா.ம.க-விலிருந்து விலக்கப்பட்ட
போதே பொன்னார், அமித் ஷா போன்ற பலர் என்னை பா.ஜ.க-வில் சேரச்சொல்லி அழைத்தனர். அத்தனையையும் நான் மறுதலித்து
தான் தனிக்கட்சி கண்டேன். நான் எங்கும் செல்லமாட்டேன்”

“தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனவே?”

“சட்டம்-ஒழுங்கில் தமிழ்நாடு காவல்துறை இன்னும் கூடுதல் கவனம் செலுத்தத்தான் வேண்டும். உயரதிகாரிகள் பலர் கூட்டணியில்
இருக்கும் நான் போன் செய்தால்கூட எடுப்பதில்லை. எடுத்தாலும்
மெத்தனமான பதிலைத்தான் சொல்கிறார்கள். எனக்கே இப்படிப்
பிரச்னை இருக்கிறது என்றால், சாதாரண மக்களின் கருத்தை
எப்படிக் காதுகொடுத்துக் கேட்பார்கள்… அதன் விளைவுதான்
இதெல்லாம். முதல்வர் இதைச் சரிசெய்ய வேண்டும்.”

“அதிகாரிகள் சரியில்லை, காவல்துறை சரியில்லை, தி.மு.க-வில்
சிலர் சரியில்லை என்கிறீர்கள். அப்படியென்றால் முதல்வர் மட்டும்
சரியாகச் செயல்படுகிறாரா?”

“நேர்மையான, ஊழலற்ற, மக்களுக்கான நல்ல அரசைக் கொடுக்க
வேண்டும் என்று ஸ்டாலின் ‘விரும்புகிறார்’ (அழுத்திச் சொல்கிறார்). ஆனால், அந்த விருப்பத்தை நிறைவேற்றுபவர்கள் அவருக்கு
வாய்க்கவில்லை என்பதுதான் என்னுடைய பார்வை.”
(நன்றி – ஜூனியர் விகடன்…)

.
…………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to வேல்முருகனுக்கு திமுக மீது ஏகப்பட்ட புகார்கள் ….

  1. புதியவன் சொல்கிறார்:

    இதற்கெல்லாம் காரணம், தேர்தல் முடிந்ததும், ‘வேலை முடிந்தது. இனி எங்கள் கட்சி வேலையைப் பார்க்கிறோம். 100 நாட்கள் அரசுக்கு தேனிலவு நேரம். அதுவரை விமர்சிக்க மாட்டோம்’ என்று கூட்டணிக் கட்சிகள் எல்லாம் சொல்லணும். கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டும்தான், ஆனால் ஆக்கபூர்வமான விமர்சனத்தை எங்கள் கட்சி செய்யும் என்று அறிவிக்க பயப்படறாங்க. திமுக கூட்டணிக் கட்சிகள் என்ன செய்யறாங்கன்னா, திமுகவுக்கு கொத்தடிமை வேலை பார்க்கறாங்க. திமுக தவறுகளையும், அரசின் தவறுகளையும், தமிழகத்தில் நடக்கும் தவறுகளையும், திமுகவை விட, அவர்களின் அடிமைகளாய்க் கருத்துச் சொல்லி மக்களின் நகைச்சுவைக்கு ஆளாகிறார்கள். சமீபத்தில்கூட கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் தன் அடிமைத்தனத்தைக் காட்ட, பிரச்சனையில் சிக்கிய பள்ளியை உடனே அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று திமுகவினரைவிட திமுகவின் கொத்தடிமையாக அறிக்கைவிடுகிறார். இப்படி எல்லாக் கூட்டணிக் கட்சிகளும் அடிமைத்தனத்தையே தங்கள் கொள்கையாகக் கருதுவதால், எதற்கு தனிக்கட்சி? அவர்கள் என்ன நினைக்கறாங்கன்னா, இப்படி கண்ணைமூடிக்கொண்டு ஜால்ரா அடிக்கவில்லையென்றால், ஓரிரண்டு சீட்டு பிச்சையும் கிடைக்காமல் போய்விடும் என்று பயப்படறாங்க. அவங்களுக்குத் தெரியும், தனித்துத் தேர்தலைச் சந்தித்தால் ஒரு சில ஆயிரம் வாக்குகள் வாங்குவதற்குள் அவர்களுக்கு மூச்சு தள்ளிவிடும் என்று.

    இப்போ வேல்முருகனுக்கு வேறு அஜெண்டா இருப்பதால் திமுகவை விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார். இது அவர் கட்சிக்கு நல்லதா கெட்டதா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.