பேரண்டத்தின் ஆரம்ப காலத்தைக் காட்டும் புகைப்படம் -அறிவியல் அதிசயம் – ஜேம்ஸ் வெப் …..

…………….

பேரண்டத்தின் குழந்தைப் பருவத்தைக் காட்டும் வகையில், இதுவரை இல்லாத தெளிவோடு, ஆழத்தோடு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது அமெரிக்காவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஐரோப்பிய விண்வெளி முகமையான இ.எஸ்.ஏ., கனடா விண்வெளி முகமையான சி.எஸ்.ஏ. ஆகியவை சேர்ந்து உருவாக்கிய இந்த தொலை நோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

‘விண்வெளியில் உள்ள புவியின் கண்’ என்று வருணிக்கப்படும் ஹபிள் விண்வெளி தொலைநோக்கியின் ஆயுள் முடிவை நெருங்கி வரும் நிலையில், ஜேம்ஸ் வெப் அதன் வாரிசாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

10 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய்) செலவில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விண்வெளியில் ஜேம்ஸ் வெப் எடுத்த முதல் முழு வண்ணப் புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது.

ஒரு புகைப்படம்தானே. இதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம் என்று தோன்றுகிறதா?

விண்வெளியில் தொலைதூர உடுத் திரள்களை (நட்சத்திரக் கூட்டங்களை)
படம் எடுப்பது என்பது கேமிராவை ஆன் செய்து, கிளிக் செய்வது போல சில விநாடி வேலை அல்ல.

பேரண்டத்தின் தொலைதூரத்தைப் பார்ப்பதில் சிக்கல் என்னவென்றால், பேரண்டத்தின் தூசிப்படலம் ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் பார்க்க முடியாதபடி காட்சியை மறைத்துவிடும். எனவே எக்ஸ்ரே, அகச்சிவப்புக் கதிர்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி அதிநவீன கருவிகளின்
உதவியோடு தரவுகளைத் திரட்டி அவற்றைப் படமாக தொகுத்தே வழங்குவார்கள்.

இப்படி பேரண்டத்தை காட்சிப் படுத்தி இதுவரை எடுக்கப்பட்ட படங்களில் இதுவரை இல்லாத அளவு ஆழத்தோடும், தெளிவோடும் அமைந்திருப்பதுதான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்ட முதல் படத்தின் சிறப்பு என்கிறது நாசா.

பேரண்டத்துக்கு 600 மில்லியன் வயது ஆனபோது…
ஜேம்ஸ் வெப் – ஹபிள் ஒப்பீடு –

ஜேம்ஸ் வெப் – ஹபிள் தொலைநோக்கிகள் எடுத்த ஆழ்புலப் புகைப்படங்களின் ஒப்பீடு.

பெரு வெடிப்பின் மூலமாக 13.8 பில்லியன் (1380 கோடி) ஆண்டுகள் முன்பு இந்தப் பேரண்டம் உருவானது என்று கணிக்கிறார்கள் அறிவியலாளர்கள்.

பிறந்து 600 மில்லியன் ஆண்டுகள் மட்டுமே ஆனபோது பேரண்டத்தின் குறிப்பிட்ட பகுதி எப்படி இருந்தது என்பதைத்தான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் முதல் படம் காட்டுகிறது.

இதைவிட சுவாரசியம், இந்தப் படம் எப்படி எடுக்கப்பட்டது என்ற
விவரம்தான்.

மேலே இருக்கும் ஜேம்ஸ் வெப் படத்தை பார்த்தீர்களா. அதில் உள்ள
ஒவ்வொரு ஒளிப்புள்ளியும் ஒரு உடுத் திரள் ஆகும். நட்சத்திரங்களை
தமிழில் உடு என்று அழைக்கிறோம். உடுக்கள் கூட்டமாக இருப்பதே
உடுத்திரள். நமது சூரியன் இடம் பெற்றுள்ள உடுத்திரளின் பெயர்தான் பால்வெளி மண்டலம்.

இப்படி பல உடுத்திரள்கள் சேர்ந்த கூட்டத்தை ஆங்கிலத்தில் கிளஸ்டர்
ஆஃப் கேலக்சிஸ் என்கிறார்கள். நாம் இதை உடுத்திரள் கூட்டம் என்று அழைக்கலாம்.

ஜேம்ஸ் வெப் வெளியிட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க புகைப்படம் காட்டுவது SMACS 0723 என்று பெயரிடப்பட்ட ஒரு உடுத்திரள்
கூட்டம்தான்.

உண்மையில் இந்த உடுத்திரள் கூட்டம் 4.6 பில்லியன் ஒளியாண்டு
தூரத்தில் உள்ள காட்சியைத்தான் இந்தப் படம் காட்டுகிறது.

ஆனால், இந்த உடுத்திரள் கூட்டம் பின்னணியில் அதைத்தாண்டி நெடுந்தொலைவில் உள்ள உடுத்திரள்களின் ஒளியை வளைத்தும் பெரிதுபடுத்தியும் காட்டுகிறது.

இதற்கு ஈர்ப்பு விளைவு என்று பெயர்.

நமது சாதாரண கேமிராவில் ஜும் லென்ஸ் எப்படி தொலைதூரக் காட்சியை இழுத்து பெரிது படுத்திக் காட்டுமோ அப்படி, நடுவழியில் உள்ள உடுக்களின், உடுத் திரள்களின் ஒளி விண்வெளி தொலைநோக்கிக்கு ஜும் லென்ஸ் போல செயல்பட்டு அதைவிட நெடுந்தொலைவில் உள்ள காட்சியை காண உதவி செய்வதே ஈர்ப்பு விளைவு எனப்படுகிறது.

James Webb

இப்படி இந்த ஈர்ப்பு விளைவின் உதவியோடு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த இந்தப் படத்தின் பின்னணியில் உள்ள, மிக நெடுந்தொலைவில் உள்ள உடுத்திரளின் ஒளி, இந்தப் பேரண்டம் தோன்றி வெறும் 600 மில்லியன் ஆண்டுகளே ஆகியிருந்தபோது பிறந்தது ஆகும்.

அதாவது பேரண்டம் குழந்தைப் பருவத்தில் இருந்தபோது இந்த உடுத்திரள் எப்படி இருந்தது என்பதை இது காட்டுகிறது.

இந்த தொலைவு என்பது இதுவரை காட்சிப் படுத்தப்படாத தொலைவு என்பதுதான் இந்தப் படம் வரலாற்று முக்கியத்துவம் பெறக்காரணம்.
இதுவரை எடுக்கப்பட்ட பேரண்டத்தின் புகைப்படங்களிலேயே, மிகவும் ஆழமான, விரிவான விவரங்களுடன் கூடிய அகச்சிவப்பு கோணமாக
இந்த படம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஒரு மணல் துகள் அளவு வானத்தில்..
தரையில் கைக்கெட்டும் தொலைவில் கிடக்கும் ஒரு மணல் துகளை
கற்பனை செய்துகொள்ளுங்கள். வானத்தில் அந்த மணல் துகள்
அளவுக்கான இடத்தை படம் பிடித்தபோதுதான், நீங்கள் மேலே பார்த்த எண்ணிலடங்கா உடுக்களை கொண்ட பல உடுத்திரள்கள் தெரிகின்றன.

ஹபிளைவிட மிக விரைவாக..
இது போன்ற ஆழமான புலத்தை காட்சிப் படுத்துவதற்கு ஹபிள் தொலைநோக்கி பல வாரங்களுக்கு விண்வெளியை உற்றுநோக்க வேண்டியிருக்கும். ஆனால், ஜேம்ஸ் வெப் 12.5 மணி நேரம் மட்டுமே விண்வெளியை உற்றுநோக்கி இந்தப் புகைப்படத்தை உருவாக்கியுள்ளது.

இந்தப் படம் முதல் படம்தான். இன்னும் ஆழமாக, மேலும் தொலைவாகப் பயணித்து 13.5 பில்லியன் ஆண்டு தொலைவுக்கு சென்று பார்க்க
முடியும் என்கிறார் நாசா நிர்வாகி பில் நெல்சன். பேரண்டம் பிறந்ததே
13.8 பில்லியன் ஆண்டுகள் முன்புதான் என்பதைக் கணக்கில்
கொண்டால் இது பேரண்டத்தின் தொடக்க காலத்துக்கு அருகே
செல்வதற்கு ஒப்பானது.

(நன்றி – பிபிசி வலைத்தளம் …)

.

…………………………………………………………………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s