பொய் வழக்கால் சீரழிந்த 26 ஆண்டு வாழ்க்கை ….

……….

ஒரு சின்ன நிஜக்கதை –

உத்தரப்பிரதேசத்தில் உள்ள முஜாபர்நகர் மாவட்டத்தை
சேர்ந்தவர் ராம் ரதன். விவசாய கூலி வேலை செய்து
தனது குடும்பத்தை நடத்திக்கொண்டிருந்தார்.

கடந்த 1996-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி ரதனுக்கு
44 வயதாக இருந்த போது காலையில் தோட்டத்தில்
வேலை செய்து கொண்டிருந்தவரை போலீஸார் பிடித்து
சென்றனர்.

ரதன் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி இருப்பதாக தங்களுக்கு
ரகசிய தகவல் கிடைத்திருப்பதாக போலீஸார்
தெரிவித்தனர். ரதன் தன்னிடம் எந்த விதமான
துப்பாக்கியும் இல்லை என்று எவ்வளவோ எடுத்து
சொல்லியும் அதிகாரிகள் கேட்காமல் உள்ளூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று ஆயுத தடுப்பு
சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

ரதனிடம் ஆயுதம் பறிமுதல் செய்ததாக போலீஸார்
தெரிவித்தனர். ஆனால் அவர்கள் ஆயுதத்தை
கடைசி வரை காட்டவே இல்லை. உள்ளூர் அரசியல்
பிரச்சையில் ரதன் கைது செய்யப்பட்டு இருந்தார்
எனக் கூறப்பட்டது.

இரண்டு மாதத்திற்கும் மேலாக சிறையில்
அடைக்கப்பட்டு இருந்த ரதன், பின்னர் ஜாமீனில்
விடுவிக்கப்பட்டார். கடந்த 26 ஆண்டுகளாக ஒவ்வொரு
முறையும் வழக்கு விசாரணைக்கு வரும் போது ரதன்
நீதிமன்றத்துக்கு வருவார். சம்பாதிக்கும் பணத்தில்
பெரும்பகுதியை நீதிமன்றத்துக்கே செலவிட்டார்.
26 ஆண்டுகள் நடந்த சட்டப்போராட்டம் இப்போது
முடிவுக்கு வந்திருக்கிறது.

ரதன் அப்பாவி என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ரதன் கூறுகையில், “போலி வழக்கால் எனது வாழ்க்கையே சீரழிந்துவிட்டது. எனது பிள்ளைகளை
முழுமையாக படிக்க வைக்க முடியவில்லை.
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராவதில் எனது
பாதி வாழ்க்கை வீணாகிவிட்டது.

நான் அப்பாவி என்பதை நிரூபிப்பதற்காக ஏறத்தாழ
30 ஆண்டுகள் போராடி இருக்கிறேன்.
இறுதியாக உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆனால் இதற்கு நான் அதிக விலை கொடுக்கவேண்டி
யிருந்தது. எனக்கு இப்போது 70 வயதாகிறது” என ரதன்
தெரிவித்தார்.

26 ஆண்டுகளில் –
400 நாள் விசாரணைக்கு அழைக்கப்பட்ட ரதன்
கடந்த 2020-ம் ஆண்டே இவ்வழக்கில் இருந்து
விடுவிக்கப்பட்டார். ஆனால் அரசு வழக்கறிஞர்
இந்த வழக்கையும் எதிர்த்து மேல் முறையீடு செய்தார்.
அதில் இப்போதுதான் தீர்ப்பு கிடைத்திருக்கிறது.


மொத்தம் 400 நாட்கள் நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறார்.
ஒவ்வொரு ஹியரிங்குக்கும் வக்கீலுக்கு கப்பம் கட்ட
வேண்டி இருந்திருக்கும்… எத்தனை தண்டம் அழுதிருப்பார்
என்று நாமே யூகித்துக்கொள்ளலாம்.

400 நாட்கள் வேலைக்கு சென்றிருக்க முடியாது.
சம்பளம் இழந்திருப்பார்…?

இது ஒரு பொய் வழக்கு என்று கண்டறிந்து வழக்கை
6 மாதங்களுக்குள்ளேயே தள்ளுபடி செய்திருக்கலாம்.

” தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி “
என்பதை நீதிபதிகள் எப்போது உணரப்போகிறார்கள்… ?

போலீஸ் பொய் வழக்குகளும்,
அதீத நீதிமன்ற தாமதங்களும் –

இந்த நாட்டின் சாபக்கேடுகள்….

என்று இந்த அவலத்திலிருந்து மீளப்போகிறது –
” பாருக்குள்ளே நல்ல ” நம் நாடு … ?????????????????????????????????????????????

.
…………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.

1 Response to பொய் வழக்கால் சீரழிந்த 26 ஆண்டு வாழ்க்கை ….

  1. புதியவன் சொல்கிறார்:

    இதற்குக் காரணமானவர்களுக்கு நீதிபதி தண்டனை கொடுக்கவில்லையா? விவசாயிக்கு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்கச் சொல்லத் தெரியவில்லையா? காங்கிரஸ் தலைமையின் சதியால் வாழ்க்கையின் பெரும்பகுதியை இழந்த நம்பி நாராயணைப்போல எத்தனை ஆயிரம் (லட்சம்) பேர் வாழ்கையை காங்கிரஸ் தலைமை அழித்துள்ளதோ

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.