விகடன் தலையங்கத்திற்கு …. பதில் கிடைக்குமா ?தண்டிப்பதற்கு ஏன் தாமதம் முதல்வர் அவர்களே – ?

……

தமிழகத்தில் ஊழல் புகார்கள் மீது – மேல் நடவடிக்கைகள்
ஏன் எடுக்கப்படுவதில்லை என்று விகடன் வார இதழ்
தனது தலையங்கத்தில் கடுமையாக வினவி இருக்கிறது.

இதற்கு பிறகாவது சம்பந்தப்பட்டவர்களை
காப்பாற்றும் முயற்சிகள் கைவிடப்பட்டு – உரிய
மேல் நட வடிக்கை எடுப்பதில் தீவிரம் காட்டப்படுமா …?

விகடன் தலையங்கத்தை பார்த்த பிறகும் இதற்குரிய
விளக்கம் எதுவும் அரசு தரப்பிலிருந்து வெளிவராதது
ஏன்…?

………………………….

ஊழல், முறைகேடு வழக்குகளில் அரசியல்வாதிகள்
சிக்குவதும் தண்டனைக்குள்ளாவதும் வழக்கமான நிகழ்வு.
ஆனால் அந்த அரசியல்வாதியின் முடிவை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டுச் செயல்படுத்தும் அதிகாரிகள் மீது
பெரும்பாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும் அந்தவகை
அதிகாரிகள் உயர் பொறுப்புகளைப் பிடித்து, குற்ற உணர்வே இல்லாமல் பணியாற்றி ஓய்வு பெற்றுவிடுகிறார்கள்.
இந்த நிலை எல்லா ஆட்சிகளிலும் தொடர்ந்துகொண்டே
வருவது வருத்தமளிக்கிறது.

சென்னை, கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்காக விடப்பட்ட 811 கோடி ரூபாய் டெண்டர்களில் முறைகேடுகள் செய்து அரசுக்குப் பெரும் இழப்பு
ஏற்படுத்தியதாக கடந்த ஆட்சியில் உள்ளாட்சித்துறை
அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு தொடர்ந்தனர்.

எஸ்.பி.வேலுமணி மற்றும் அவர் உறவினர் வீடுகளில்
சோதனையும் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை
நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை, சென்னை மாநகராட்சி
கமிஷனராக இருந்த பிரகாஷ், கோவை மாநகராட்சி
கமிஷனராக இருந்த விஜய கார்த்திகேயன், சென்னை
மாநகராட்சி துணை கமிஷனர்களாக இருந்த கந்தசாமி,
மதுசூதன் ரெட்டி உட்பட 12 அதிகாரிகள் இந்த
முறைகேடுகளுக்குத் துணைபோனதைக் கண்டறிந்தது.

அவர்களையும் வழக்கில் சேர்க்க அனுமதி கோரி தமிழக
அரசுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதமே கடிதம் எழுதி
யிருந்தது. எட்டு மாதங்கள் கடந்தும் அரசுத் தரப்பிலிருந்து
இதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. உயர் அதிகாரிகளே இவர்களுக்கு அரணாக இருந்து காப்பாற்றுகிறார்களோ
என்ற சந்தேகம் மக்களுக்கு எழுகிறது. ‘இந்த வழக்கில்
10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும்’
என்று கடந்த நவம்பர் 25-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை பெரிதாக எந்த முன்னேற்றமும்
இல்லை.

லஞ்ச ஒழிப்புத்துறையின் கடிதத்துக்கு சட்டப்படி நான்கு மாதங்களுக்குள் அரசு பதிலளிக்க வேண்டும். எனினும்,
எட்டு மாதங்கள் கடந்தும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
யாரால் இந்தக் காலதாமதம் என்பதைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டியது தமிழக முதல்வரின் கடமை.

ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் மிகுந்த நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் வாக்களித்து ஆட்சியை மாற்றுகிறார்கள்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும்,
ஊழல் செய்த அரசியல்வாதிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்த்தார்கள்.

வந்த வேகத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், தங்கமணி, கே.பி.அன்பழகன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில்
சோதனையிடப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

அதன்பின் எந்த முன்னேற்றமும் இல்லை. வேலுமணி வழக்கில்
லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டும் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்
உட்பட 12 அதிகாரிகளில் பலர் பணிமாற்றம் பெற்று முக்கியத் துறைகளுக்குச் சென்றுள்ளார்கள்.

முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த
காலங்களில் சில அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டே பொதுமேடைகளில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
அந்த அதிகாரிகளும் கூட தற்போதைய நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறார்கள்.

இந்த முரண் மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது.

அரசியல்வாதிகளுக்குப் பணிந்தோ அல்லது உடன்பட்டோ
ஊழலுக்குத் துணைபோகிற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஊழலை ஒழிக்க முடியாது. மக்களுக்குப்
பதிலளிக்க வேண்டிய கடமை முதல்வருக்கு இருக்கிறது.

.
…………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

2 Responses to விகடன் தலையங்கத்திற்கு …. பதில் கிடைக்குமா ?தண்டிப்பதற்கு ஏன் தாமதம் முதல்வர் அவர்களே – ?

 1. புதியவன் சொல்கிறார்:

  விகடன் தலையங்கம் நகைப்புக்கிடமாக இருக்கிறது. திமுக ஜால்ராவாக இருந்துவிட்டு, அந்தப் பழக்க தோஷத்தில் இந்தக் கட்டுரையை போகிற போக்கில் எழுதியிருக்கிறது விகடன்.

  ஊழல் செய்யச் சொல்லித் தருபவர்களே இந்த அதிகாரிகள்தாம். முழுமையாக ஊழலை நடமுறைப்படுத்துவதும் இந்த அதிகாரிகள்தாம் (பெரும்பாலானவர்கள்). அப்புறம் அவங்க மீது நடவடிக்கை எடுத்தால் நீர் எப்படி வயலுக்குப் பாயும்? செந்தில் பாலாஜி ஊழல்வாதி என்று குற்றம் சாட்டிய திமுக ஸ்டாலின், தன் கட்சியில் முக்கிய அமைச்சராக ஆக்கி, அவரைப்பற்றி திமுக பிரமுகர்கள், அமைச்சர்கள் தன்னிடம் குற்றப்பத்திரிகை வாசிக்கக்கூடாது என்று சொன்னதன் காரணம், ஊழலை ஒழிக்கவா?

  400 கோடி கொடுத்து, அதற்கும் மேல் பல நூறு கோடிகளைத் தேர்தலில் செலவழித்து பதவிக்கு வந்தது, மக்களுக்கு நன்மை செய்யத்தான் என்று விகடன் மட்டும் நம்புகிறது போலும்.

 2. ஆதிரையன் சொல்கிறார்:

  முதல்வரின் கவனத்திற்கு இந்த கட்டுரை இன்னும் செல்லவில்லை என தெரிகிறது.
  கவனத்திற்கு சென்றவுடன், நடவடிக்கை பாயும். ஊழல் செய்தவர்கள் கட்சி மாறுவதை தவிர வேறு வழியில்லை

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.