தேவ ரகசியம் ….

……………

ஒரு தாய்க்கு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பிறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் குழந்தையின் தந்தை இறந்திருந்தார்.

எமதர்மன், ஒரு எமதூதனை அனுப்பி ‘அந்த தாயின் உயிரை எடுத்துக் கொண்டு வந்துவிடு’ என்றான்.

சென்ற எமதூதனோ “ஐயோ பாவம்! அப்பாவும் இல்லை, அம்மாவின் உயிரையும் எடுத்துவந்துவிட்டால் இந்தக் குழந்தைக்கு யார் கதி” என்று பரிதாபப்பட்டு, அந்தத் தாயின் உயிரைக் கவராமல் திரும்பிவிட்டான்.

இதை அறிந்த எமராஜாவோ, “இதோ பார், உனக்கு தேவ ரகசியங்கள் தெரியவில்லை. கடவுளுடைய அருளாட்சி எப்படி நடக்கிறது என்பதும் புரியவில்லை. அது தெரிகிறவரைக்கும் நீ பூமியில் போய் கிட” என்றுக் கூறி அவனைத் தூக்கி பூமியில் போட்டு விட்டார்.

அவன் அட்ட கருப்பான உருவில் பூமியில் ஒரு பூங்காவில் முனகிக் கொண்டு படுத்துக்கிடக்க, அந்த வழியாக வந்த ஒரு தையற்காரன், “என்ன இது, இங்கே முனகல் சத்தம் கேட்கிறதே” என்று அவனைப் பார்த்துப் பரிதாபப்பட்டு, தன்னிடம் இருந்த துணியை அவனுக்குப் போர்த்தி, என்னுடன் வா… என அழைத்தான்.

எமதூதன் ஒரு வார்த்தைக் கூட பேசாமல் தையற்காரனுடன் அவன் வீட்டிற்குச் சென்றான். திண்ணையில் எமதூதனும், தையற்காரனும் படுத்துக் கொண்டார்கள்.

தையற்காரனின் மனைவி தையற்காரனை மட்டும், ‘சாப்பிட வா’ என்று கூப்பிட, அவன் விருந்தாளி வந்திருக்கிறானே! என்றுச் சொல்ல, அவளோ தன் கணவனைத் திட்டினாள். “விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று” என்று மனதுக்குள் எண்ணிய எமதூதன் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

பத்து நிமிடம் கழித்து தையற்காரனின் மனைவி ‘சரி சரி வா’ என எமதூதனை சாப்பிட வரச்சொல்லிக் கூப்பிடுவதைக் கண்டு அவன் லேசாக சிரித்தான். சிரித்ததும் கன்னங்கரேலென்று இருந்த அவன் உடம்பு கொஞ்சம் பொன்னிறமாக மாறியது.

தையற்காரன் அவனிடம், “எனக்கு காஜா போட, பட்டன் தைக்க உதவிக்கு ஆளில்லை. உனக்கு தங்க இடம் தந்து, சாப்பாடும் போடுகிறேன். எங்கள் வீட்டில் இருந்து கொள்” என்று சொன்னான். அதன்படியே எமதூதன் தையல்காரனின் உதவியாளன் ஆகிவிட்டான்.

அப்படியே பத்து வருடங்கள் கடந்து போனது. ஒரு குதிரை வண்டியில் ஒரு பணக்காரப் பெண்மணி கை கொஞ்சம் முடமாக இருக்கிற ஒரு குழந்தை, அத்துடன் நல்ல ஆரோக்கியமான மற்றொரு குழந்தை என இரண்டு பேரையும் கூட்டிக் கொண்டு வந்து தையற்காரனிடம், இந்தக் குழந்தைக்கு சட்டை நல்லா தளர்வாக தைக்க வேண்டும். கை கொஞ்சம் சரி இல்லாமல் இருக்கிறது என்று சொன்னாள்.

எமதூதன் அந்த குழந்தையையும், பணக்கார பெண்மணியையும் பார்த்து சிரித்தான். சிரித்ததும் அவன் உடம்பு இன்னும் கொஞ்சம் பொன்னிறமாக மாறியது!

இன்னும் ஐந்து வருடம் கடந்து சென்றது. ஒருநாள் ஒரு பெரிய பணக்காரன் பென்ஸ் காரில் வந்து இதில் பத்து மீட்டர் துணி இருக்கிறது. 20 வருஷம் தாக்குப் பிடிக்கிற மாதிரி சூப்பராக சபாரி சூட் தைத்து வை” என்று சொல்லிவிட்டுப் போனான்.

இதற்கிடையில் எமதூதனோ கை தேர்ந்த தையற்காரனாக மாறி இருந்தான். ஆனால் அவன் பணக்காரன் ஆர்டர் கொடுத்துவிட்டுப் போன சபாரி சூட்டை தைக்காமல் இருந்தான். முதல் நாள் போய், இரண்டாவது நாளும் கடந்து போய்விட்டது.

“தையற்காரன், நாளைக்கு தருவதாக ஒப்புக் கொண்டிருந்தோமல்லவா? அந்த பணக்காரன் வந்து கேட்டால் அவனுக்கு நாம் என்ன சொல்வது?” என்று கேட்டதும், இவன் டர்ர்ரென்று அந்த சபாரி துணியைக் கிழித்து அதில் ஒரு தலையணை உறை, பெட்கவர் தைத்தான். இதைக் கண்ட தையற்காரன் எமதூதனிடம், நீ என் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடுவதற்கு வந்தாயா? இப்போது அவன் இங்கே வந்து நான் ஆர்டர் கொடுத்த சபாரி சூட்டு எங்கே என்று கேட்டால் நான் என்ன பண்ணுவது? என்றான்.

அப்போது அந்த பணக்காரனின் கார் டிரைவர் பரபரப்புடன் ஓடி வந்து, நீங்கள் சபாரி தைக்காதீர்கள். முதலாளி இறந்து விட்டார். அதனால் அவருக்கு ஒரு தலையணை உறையும், மெத்தை உறையும் தைத்து விடுங்கள் என்று சொன்னான்.

அதைக் கேட்டதும், எமதூதன் முகத்தில் சிரிப்பு வர, அவன் முழுவதும் பொன்னிறமாக மாறி மெதுவாக உயர்ந்து மேலே போகத் தொடங்கினான்.

தையற்காரனோ, அப்பா நீ யார்? உன் வாழ்க்கையில் இதுவரைக்கும் மூன்று முறை சிரித்தாய். ஒவ்வொரு முறை நீ சிரித்த போதும் உன் உடம்பு பொன்னிறமாக மாறியது. அதற்கான விளக்கத்தை சொல்லிவிட்டு போ! என்றான்.

அவன், நான் எமனுடைய தூதுவன். அப்பா இல்லாத குழந்தைக்கு அம்மாவும் இறந்து போனால், அந்தக் குழந்தைக்கு யார் கதி என்று பரிதாப்பட்டு அந்தத் தாயின் உயிரை எடுக்காமல் விட்டதனால், பூமியில் போய் தேவ ரகசியத்தை தெரிந்து கொண்டு வா.. என்று எமதர்மன் என்னை இங்கே அனுப்பினார். அதனால் தான் பூமிக்கு வந்தேன். இப்போது ரகசியத்தைத் தெரிந்து கொண்டு விட்டேன். நான் திரும்ப எனது பணியில் சேரப் போகிறேன் என்றான்.

‘நீ என்ன தெரிந்து கொண்டாய்? எனக்கும் சொல்லிவிட்டுப் போயேன்’ என்று தையற்காரன் கேட்டான்…

உன் மனைவி என்னை சாப்பிட அழைக்கவில்லை அல்லவா? அப்போது அவள் முகத்தில் தரித்திர தேவி தெரிந்தது. அடுத்த பத்தாவது நிமிடம் என்னைச் சாப்பிட வா என்று அழைத்த போது அவள் முகத்தில் மகாலட்சுமி தெரிந்தார். அப்போது, இந்த உலகில் “ஒருவன் பணக்காரன் ஆக இருப்பதற்கும், ஏழையாக இருப்பதற்கும் அவனுடைய எண்ணங்கள் தான் காரணம்” என்று தெரிந்து கொண்டேன். இது போய், அது வருவதற்கு பத்து நிமிடங்கள் தான் தேவை என்றும் தெரிந்து கொண்டேன். இதுதான் தேவரகசியம் ஒன்று!

மனிதர்களிடமே பெரிய திட்டங்கள் எல்லாம் இருக்கிறது. ஆனால், எந்த கார்டை வைத்து விளையாடுவது என்று தெரியாததினால் வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள்.

பத்து வருடம் கழித்து ஒரு பணக்கார பெண்மணி குதிரை வண்டியில் வந்தாள் அல்லவா? அவளுடன் ஒரு குழந்தை கை முடமாக வந்தது அல்லவா? அதுதான், அம்மா இறந்து விட்டால் யார் பார்த்துக் கொள்வார்கள் என்று நான் பரிதாபப்பட்ட குழந்தை. நிஜமான தாய் ஏழை. அவள் இறந்து விட்டால் கூட இந்தக் குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்வதற்கு, இதற்கு கொஞ்சம் தளர்வாக துணித் தைக்கவேண்டும் என்று சொல்கிற அளவிற்கு ஒரு பணக்கார அன்பான அம்மாவை இறைவன் தயாராக வைத்திருக்கிறான். இது எனக்கு தெரிந்த போது இரண்டாவது முறை சிரித்தேன். ஒரு எமதூதன் ஆகிய எனக்கே பரிதாபம் இருக்கிற போது, இறைவனுக்கு இருக்காதா? அவன் அதற்கு ஒரு மாற்று வழி வைத்துக் கொண்டுதான் எந்த உயிரையும் எடுப்பான். இது தேவ ரகசியம் இரண்டு! கடவுள் எல்லாம் காரண காரியங்களோடு நடத்துகிறான்.

மூன்று நாட்களில் சாகப் போகிறவன், இன்னும் 20 வருஷம் நான் உயிரோடு இருக்கப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டு, 20 வருஷத்திற்கு வருகிற மாதிரி துணி தை என்று சொன்னான் அல்லவா! எனக்குத் தெரியும் அவன் சாகப்போகிறான் என்று. அதனால்தான் நான் துணி தைக்கவே இல்லை. அவன் இறந்த அந்த நேரத்தில் துணியை கிழித்து தலையணை உறையும், மெத்தை உறையும் தைத்தேன்.

இந்த ஜனங்கள் இந்த உலகத்தில் ஏதோ நூறு வருஷம், இருநூறு வருஷம் வாழப் போவதாக நினைத்துக் கொண்டு குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.!! நேற்று இருந்தவன் இன்று இல்லை. அதுதான் இந்தக் கலியுகத்தின் எதார்த்தமான உண்மை! அது தெரியாமல் ஒவ்வொருவனும் நான் மட்டும் ரொம்ப வருஷம் இருப்பேன் என்றும், மற்றவன்தான் செத்துக் கொண்டிருக்கிறான் என்றும் நினைக்கிறான் அல்லவா? அதுதான் மூன்றாவது ரகசியம்!!

அதனால்தான் இந்த உலகத்தில் மனிதன் திறமையாக செயலாற்ற முடியாமல், இன்னும் 20 வருடம் கழித்து நடக்கப் போகிற குழந்தையுடைய கல்யாணத்திற்கு இன்றைக்கு காசு இல்லையே என்று வருத்தப்படுகிறான்!! அதுபோலவே இன்னும் 17 வருடம் கழித்து கல்லூரியில் படிக்கப் போகிற பையனுக்கு பணம் கட்ட பணம் இல்லையே என்று இப்போதே வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறான். அதனால்தான், உலகத்தில் நிம்மதி இல்லாமல் இருக்கிறது. பேசிக் கொண்டிருக்கிறபோது செத்துப் போவோம் என்று நினைத்தால், நீ சந்தோஷமாக இருப்பாய்!

முதலாவது, ஏழையாக இருப்பதும் பணக்காரன் ஆக இருப்பதும் நம்முடைய எண்ணங்களால் தான் நடக்கிறது.

இரண்டாவது, எது நடந்ததோ அதற்கு ஈசன் ஒரு மாற்றுவழி வைத்திருப்பார். மனிதனின் மனநிலையில் உள்ள ஈகோவினாலும், அறியாமையினாலும் அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை.

மூன்றாவது, எந்த நேரத்திலும் சாவு வரலாம். இது தெரியாமல் மனிதர்கள் கொட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அஞ்ஞானம்தான் உலகில் உள்ள துக்கங்களுக்கு எல்லாம் காரணம்.

இவைதான் அந்த மூன்று தேவ ரகசியங்கள் என்று சொல்லிவிட்டு விடைபெற்றான் அந்த எமதூதன்
(படித்தது ….)

.
…………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

2 Responses to தேவ ரகசியம் ….

  1. bandhu சொல்கிறார்:

    அற்புதம்!

    சொல்ல வேறு வார்த்தைகள் இல்லை!

  2. மணிகண்டன். S சொல்கிறார்:

    தெளிவான விளக்கம்.🙏🏻

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s