ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள் –

………………

மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் மாலன் அவர்களுக்கு
அவர் மொழிபெயர்த்த ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ நூலுக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பார்சி இன பிணந்தூக்கியின் வலி மிகுந்த காதல்… அந்த வலிமிகுந்த காதலுக்குப் பின்னால் இருக்கும் வலிமையான காரணம்தான் ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ நூலின் கரு.

புகழ்பெற்ற எழுத்தாளர் சைரஸ் மிஸ்திரியின் ‘Chronicle of a Corpse Bearer’ நூலுக்கு ஏற்கெனவே சாகித்ய அகாடமி விருதும் தெற்காசிய இலக்கியத்திற்கான சர்வதேச விருதும் கிடைத்துள்ள நிலையில், இந்நூலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காக மாலனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குள்ளாகவே இது குறித்து எதிர்ப்புகள், விமரிசனங்கள்….
பாஜகவுக்கு நெருக்கமானவர் என்பதால் இந்த விருது
என்றெல்லாம்.

மாலன் பல பத்தாண்டுகளாக எழுதி வருபவர். என் இளம்
வயதிலிருந்தே, நான் அவரது எழுத்துகளை விரும்பி படித்து
வருகிறேன்.
நல்ல சரளமான தமிழ் நடை.
தெளிவான, அழகான, அனுபவபூர்வமான எழுத்து அவரது.

பாஜகாவுக்கு நெருக்கமானவர் என்பதற்காக அவருக்கு
விருது என்று சொல்வது முட்டாள்தனமான, கண்மூடித்தனமான,
நியாயமற்ற விமரிசனம்.

உண்மையில், ஆளும் பாஜக கட்சிக்கு நெருக்கமானவராயிற்றே –
விருது கொடுத்தால், விமரிசனங்கள் கிளம்புமே என்றெண்ணி,
ஒருவேளை அவருக்கு விருது கொடுக்கப்படாமல் இருந்திருந்தால் –
அது தான் அவருக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாக
இருந்திருக்கும்.

விருது பெற்ற மாலன் அவர்களை விகடன் செய்தித்தளத்தின்
சார்பாக நேர்காணல் நிகழ்த்தி, அந்த உரையாடல்களை
விகடன் தளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்….

சுவாரஸ்யமான அந்த உரையாடலிலிருந்து –

………………..

சைரஸ் மிஸ்திரியின் ‘Chronicle of a corpse bearer’ நூலைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற சிந்தனையைத் தூண்டியது எது?

“எனக்கு இரண்டு மொழிகள் தெரியும் என்பதற்காக மொழிபெயர்ப்பதில்லை. மொழிபெயர்ப்புக்கென்று கொள்கை வைத்துள்ளேன். ஒன்றைப் படிக்கும்போது ஒரு புதிய செய்தியை, புதிய ஜன்னலை நமக்குள் திறக்கவேண்டும். அப்படித்தான், மாசேதுங் கவிதைகளை மொழிபெயர்த்துள்ளேன். ஆயுதம் தாங்கிய போராளிக்குள் ஒரு மென்மையான கவிஞன் இருக்கிறான். அதேபோல, எழுத்தாளர் குளோரியா நெய்லர் அமெரிக்காவின் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் கருப்பின பெண்களின் வாழ்க்கையை நாவலாக எழுதியுள்ளார். அமெரிக்காவிலும் குடிசைப் பகுதிகள் உண்டு. கருப்பினப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை ஆவணப்படுத்திய அந்த நாவலையும் மொழிபெயர்த்திருக்கிறேன்.

அப்படித்தான் சைரஸ் மிஸ்திரியின் ‘Chronicle of a corpse bearer’ நாவலும் ஈர்த்தது. 2015-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது அறிவித்தபோது இந்நாவல் எனக்கு அறிமுகமானது. பார்சிகள் வரலாறு நமக்குத் தெரியாது. அவர்கள் குறித்த புத்தகங்களும் தமிழில் இல்லை. பார்சி இனத்தில் உயர்வாக மதிக்கப்படுகிறார்கள் பூசாரிகள். ஆனால், அதே இனத்தில் கடுமையான வேலைகளைப் பார்க்கும் ஒடுக்கப்பட்ட பிரிவான பிணந்தூக்கிகள் மதிக்கப்படுவதில்லை. இதில், பூசாரியின் மகன் தனது காதலுக்காக பிணந்தூக்கியாகி அந்த குறுகிய வாழ்க்கைக்கு வருகிறான். திரும்பவும் பூசாரி வாழ்க்கைக்கு அவனால் சென்றிருக்க முடியும். பல்வேறு நெருக்கடிகளுக்கும் மத்தியில், காதலுக்காக பிணம் தூக்கும் வேலையையே பார்த்து வருகிறான்.

Chronicle of a Corpse BearerChronicle of a Corpse Bearer
இறந்த பின்னும் தனது உடல் பயன்பட வேண்டும் என்ற சிந்தனையில், கழுகுகளுக்கு அதை இரையாக்கும் பார்சி மக்களின் கொடையும், பிணந்தூக்கிகளை நடத்தும் அவர்களின் மறுபக்கமும், காதல் போராட்டங்களும் என்னை வசீகரித்தன. அந்த வசீகரிப்பே, பார்சி மக்களின் வாழ்க்கையை தமிழர்களுக்கு சொல்லவேண்டும் என்ற சிந்தனையைத் தூண்டியது. 2017-ம் ஆண்டு மொழிபெயர்க்கத் துவங்கி 2018-ல் நிறைவு செய்தேன். 2019-ம் ஆண்டு சாகித்ய அகாடமி வெளியிட்டது. அப்போது, வெளியான புத்தகத்திற்குத்தான், இப்போது விருது கிடைத்துள்ளது. சாகித்ய அகாடமி சொல்லி நான் மொழிபெயர்க்கவில்லை. ஆனால், மொழிபெயர்க்க அனுமதி வாங்கினேன். ஒரு மொழியில் வெளியாகி பரிசு பெற்ற நாவல்களை மற்ற மொழிகளில் மொழி பெயர்க்கவேண்டும் என்பது சாகித்ய அகாடமியின் அடிப்படை. அனுமதி கேட்டபோது அவர்களே பதிப்பித்தார்கள்.”

சைரஸ் மிஸ்திரியையோ, பார்சி மக்களையோ இதற்காக சந்தித்தீர்களா?

“சைரஸ் மிஸ்திரியைப் பார்த்ததும் கிடையாது. பேசியதும் கிடையாது. அவரது எண்ணும் இல்லை. இனிமேல்தான் பேசவேண்டும். தற்போது, அவர் எந்த மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது தெரியாது. எனக்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பது அவருக்குத் தெரிந்தும் இருக்கலாம். தெரியாமலும் போயிருக்கலாம். அதேபோல, இதுவரை பார்சி இன மக்கள் யாரையும் நான் சந்திக்கவில்லை. ஊடகங்கள் மூலம் அறிமுகமான பார்சி மக்கள் ரொம்ப செல்வந்தர்களாக இருப்பார்கள் என்பதுதான் நமக்குத் தெரியும். ஆனால், பார்சி இனத்திலும் இப்படி ஒரு வாழ்க்கை இருப்பது தெரியாது. எனக்கு பார்சிகள் குறித்த சில விளக்கங்கள் தேவைப்பட்டபோது சில புத்தகங்களைப் படித்தேன்.”

‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ எழுத்துநடை எளிதாக, தமிழ் மக்களுக்கு தகுந்தவாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று பாராட்டுகிறார்களே? இந்த சவாலை எப்படிக் கையாண்டீர்கள்?

“மொழிபெயர்ப்பின் நோக்கம் ஒன்றை மற்றொருவருக்கு அறிமுகப்படுத்துவதுதான். மூலத்தைவிட மொழிபெயர்ப்பு குறைவானது என்று நான் நினைக்கவில்லை. கூடுதலான உழைப்புத் தேவை. கூடுதலான புரிதல் தேவை. இல்லாத ஒன்றை அறிமுகப்படுத்தும் நோக்கம் உயர்ந்தது. மாக்சிம் கார்க்கியின் அம்மாவைப் போல் தனது அம்மாவை ஒப்பிட்டார் பேரறிவாளன். ‘தாய்’ நாவல் அவருக்குள் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்! அந்தளவுக்கு, வாசகர்களுக்கு தாக்கம் ஏற்படவேண்டும். கடுமையான மொழியில் இருந்தால் அதன் நோக்கம் தோல்வியடைந்துவிடும். மொழிபெயர்ப்பு என்பது என்னைப் பொருத்தவரையில் மொழி ஆக்கம்தான். வசதியான வார்த்தை. எந்த மக்களுக்காக எழுதுகிறோமோ அவர்களால் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்திலேயே மொழிபெயர்க்கிறேன். வார்த்தையை மொழிபெயர்த்துவிடலாம். ஆனால், கலாசாரத்தை அடுத்தவருக்குச் சொல்வதுதான் மிகப்பெரிய சவால். அதுதான் ஒரு நுட்பமான வேலை. கலாசாரத்தைப் பற்றிய புரிதல் இருக்கவேண்டும். இதற்காக, பார்சி மக்களின் புனைவில்லாத சரித்திரம், சமூக வார்த்தை குறித்தெல்லாம் படித்தேன்.”

ரா.பி.சேதுப்பிள்ளை தொடங்கி சாகித்ய அகாடமி விருது என்றாலே சர்ச்சையாகி விடுகிறதே?

‘சாகித்ய அகாடமி’ விருது! ‘சாகித்ய அகாடமி’ விருது!
“சாகித்ய அகாடமியின் விருது ரொம்ப மிகையாக இங்கு புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்றே நினைக்கிறேன். முதலில் சாகித்ய அகாடமி ஓர் அரசு சார்ந்த நிறுவனம் அல்ல. அரசு உதவிபெறும் நிறுவனம். ஒரு தனி அமைப்பு. அரசியலைப்பு சட்டத்தில் 22 மொழிகள்தான் உண்டு. ஆனால், ஆங்கிலத்திற்கும் ராஜஸ்தானி மொழிக்கும் சேர்த்து 24 மொழிகளுக்கு விருது கொடுக்கிறார்கள். இதனை சினிமாத்துறையினருக்கு கொடுக்கப்படும் தேசிய விருது போன்ற அரசின் விருது என்று நினைத்துக் கொள்கிறார்கள். சாகித்ய அகாடமி அப்படியான விருது அல்ல. மக்கள் விரும்பும் திரைப்படங்களும் கலைநயமிக்கத் திரைப்படங்களும் வருகின்றன. இதில், கலைநயமிக்கப் படத்திற்கு விருது கொடுத்தால் மக்கள் பார்க்காத ஒரு படத்துக்கு எப்படி விருது கொடுக்கிறார்கள் என்ற கேள்வி கேட்பார்கள் அல்லவா? அப்படித்தான், தனக்குப் பிடித்த ஓர் எழுத்தாளருக்குக் கொடுத்திருக்கலாமே என்று நினைக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக வெகுஜன பத்திரிகைகளில் எழுதக்கூடிய எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைக்கவில்லை. ஆனால், சிறுபத்திரிகைகளில் எழுதக்கூடியவர்களுக்குக் கிடைக்கிறது.”

பொதுவாகவே சிறுபத்திரிகையில் இருப்பவர்கள் வெகுஜன பத்திரிகையில் எழுதுபவர்களை ஏற்றுக்கொள்வதில்லையே?

“அவர்களின் பார்வை ரொம்பக் குறுகியதாக இருக்கிறது. ’நான் எழுதுவதை நீ படி’ என்பது ஓர் அணுகுமுறை. ’உனக்குப் புரிவதைப்போல நான் சொல்கிறேன்’ என்பது இன்னொரு அணுகுமுறை. ‘இலக்கியம் என்பது பொதுமக்களுக்கானதல்ல; என்று நினைக்கக்கூடியவர்களும் இருக்கிறார்கள். பொதுமக்களுக்கானது என்று நினைப்பவர்களும் ‘அது வணிகப் பத்திரிகை’ என்றும் நினைக்கிறார்கள். ஆனால், எதிலுமே வணிகம் இருக்கிறது என்பது எனது பார்வை. நானும் சிறுபத்திரிகையிலிருந்து வந்தவன்தான். சிறு பத்திரிகைகளின் சோதனை முயற்சிகளைப் பாராட்டுகிறேன், வரவேற்கிறேன். ஆனால், வாசகனைப் புறக்கணித்துவிட்டு தன்னுடையை அவஸ்தையை எளிதில் விளங்கிக்கொள்ள முடியாத மொழியில் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வாழ்க்கை பன்முகத்தன்மை கொண்டது.”

’ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ காதல் மூலம் சமத்துவத்தைப் பேசுவதால் கேட்கிறேன். ஆணவப்படுகொலை குறித்த உங்கள் பார்வை?


“எனக்கு சாதிகளில் நம்பிக்கை இல்லை. மனிதர்களில் உயர்வு, தாழ்வு ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. ஆணவப்படுகொலை தவறானது. ஆரம்பத்தில் நாம் இனக்குழுக்களாக இருந்தோம். அதன் நீட்சிதான் சாதி சங்கங்கள். அதனால், சாதி அடையாளம் வலுப்பெற்று ஆணவப்படுகொலைகள் நடக்கின்றன. நிச்சயமாக கண்டிக்கப்படவேண்டியது. தவிர்க்கப்படவேண்டும்.”

‘சாகித்ய அகாடமி குழுவில் இருப்பதால் மாலனே தனக்கு விருது அறிவித்துக்கொண்டார்’, ‘பாஜக ஆதரவாளர் என்பதால் விருது கிடைத்திருக்கிறது’ என்பது போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றனவே?

“சாகித்ய அகாடமி விருதுக்கு ஒரு நாவல் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறது என்ற தெளிவின்மையால்தான் இப்படிப் பேசுகிறார்கள். நான் வேறு சில அமைப்புகளிலும்தான் உறுப்பினராக இருக்கிறேன். ஆனால், சாகித்ய அகாடமி போல் சிறந்த தேர்வுமுறை எதிலும் கிடையாது. மூன்று நிலைகளில் தேர்வு நடைபெறுகிறது. கடந்த ஐந்தாண்டு காலக்கட்டத்தில் தாங்கள் படித்ததில் சிறந்த புத்தகங்களை 30 பேர் பரிந்துரை செய்வார்கள். அதிலிருந்து ஒரு குறும்பட்டியலைத் தயாரித்து நடுவர் குழு தேர்வு செய்யும். அந்தக் குழுக்களில் பெரும்பாலும் வெவ்வேறு அரசியல் சார்ந்தவர்கள்தான் இருக்கிறார்கள். நடுவர் குழுவில் பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கமுடியாது. நான் பொதுக்குழுவில் இருக்கிறேன். பொதுக்குழுவில் இருப்பவர்களுக்கு விருது கொடுக்கக்கூடாது என்ற தடை விதிகளில் இல்லை. ஆலோசனைக் குழுவிலும் 5 பேர் இருக்கிறோம். ஆலோசனைக் குழு வருடத்திற்கு ஒருமுறைதான் கூடும். அதனால், சாகித்ய அகாடமி விருதுகளைத் தீர்மானிக்கவும் முடியாது. தலையிடவும் முடியாது. விருதுக்கு யாரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது ரகசியமானது. விருது அறிவிக்கும்போது நானும் பொதுக்குழுக் கூட்டத்தில் இருந்தேன். எனது புத்தகம் பரிந்துரைக்கப்பட்டது எனக்கு தெரியாது. அப்படித் தெரிந்திருந்தால் முன்கூட்டியே வேண்டாம் என்றிருப்பேன். பிரஸ் ரிலீஸ் கொடுக்கப்படும்போதுதான் எனக்கே தெரியும். அதனால், இதில் பெரிய அறம் பிறழ்ந்த செயல் நடந்திருப்பதாக நான் நினைக்கவில்லை. அது சாத்தியமும் இல்லை.

இது 2019-ம் ஆண்டு வெளியான புத்தகம். நான் தலையிட்டு விருது வாங்க முடியும் என்றால் 2019-ம் ஆண்டே செய்திருப்பேனே? மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதில்லையே? எழுத்தாளர்களையோ, பேராசிரியர்களையோ, நூலகர்களையோ இந்தமாதிரி ஒரு புத்தகம் வந்துள்ளது என்பது போய்ச் சேர நேரம் எடுத்திருக்கலாம்.

இதில், எனக்கு நேரடியாக எந்தப் பங்கு கிடையாது. தமிழ் குழுவின் தலைவர் சிற்பி சாருக்கும் கிடையாது. இதேபோல், சாகித்ய அகாடமிக்கு சம்மந்தப்பட்ட பலருக்கு சாகித்ய அகாடமி விருது கொடுக்கப்பட்டுள்ளது. சு.வெங்கடேசன், சசிதரூர், இமையம் என பாஜகவுக்கு எதிரான கருத்துடையவர்களுக்கும் விருது கிடைத்துள்ளதே? எனக்குக் கிடைத்தால் மட்டும் அரசியலா? அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது.

விவரம் தெரியாமல் பேசுகிறவர்களின் விமர்சனங்களை நான் பொருட்படுத்துவதில்லை. திமுக சார்ந்த எழுத்தாளர்கள், இடதுசாரி எழுத்தாளர்கள், தேசியம் சார்ந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். நான் தேசியம் சார்ந்த எழுத்தாளன். என் அரசியல் நிலைப்பாட்டிலிருந்து பேசுவேனே தவிர, இலக்கியத்திற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. அதற்கு ஆகச்சிறந்த உதாரணம் முதல்வர் ஸ்டாலினின் வாழ்த்து. ‘அறிவார்ந்த நூல்கள் தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டும்’ என்றார். அதுவேறு தளம். அது புரியாதவர்கள் சாதி கோணத்தில், அரசியல் கோணத்தில் வன்மத்தோடு விமர்சிக்கிறார்கள். புத்தகத்தைப் படித்துவிட்டு கருத்தையோ, மொழி நடையையோ விமர்சியுங்கள். அதை நான் வரவேற்பேன்.”

.
……………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , . Bookmark the permalink.

1 Response to ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள் –

  1. tamilmani சொல்கிறார்:

    பொதுவாக பார்சி இன மக்களை பற்றிய இலக்கிய பதிவுகள் நன்கு
    “கற்றறிந்த” தமிழகத்தில் காண கிடைப்பதில்லை . சைரஸ் மிஸ்திரி,அவரது
    சகோதரர் ரோஹின்டன் மிஸ்ட்ரி ஆகியோரது நாவல்கள் பார்சி சமூகத்தை பற்றிய
    தகவல்கள் அதிகம் கொண்டவை . பார்சி மக்கள் பெரும்பாலும் மும்பை , குஜராத்தின் சில
    பகுதிகளில் அதிகம் வசிக்கிறார்கள். அவர்கள் பெரும் செல்வந்தர்கள் என்ற எண்ணமே
    பலருக்கு. அவர்களிலும் விளிம்புநிலை மனிதர்கள் உண்டு.மாலன் அவர்கள் மொழி
    பெயர்த்த இந்த நாவல் வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தை தர கூடும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.