அபூர்வ ராகம் – லா.ச. ரா.( கொஞ்சம் வித்தியாசமான கதை )

……

…..

வீணையின் ஸ்வரக் கட்டுகளை விருதாவாய் நெருடிக்
கொண்டிருக்கையில் திடீரென்று ஒரு வேளையின் பொருத்தத்தால்
ஸ்வரஜாதிகள் புதுவிதமாய்க் கூடி ஒரு அபூர்வ ராகம் ஜனிப்பது
போல் அவள் என் வாழ்க்கையில் முன்னும் பின்னுமில்லாது
முளைத்தாள்.

இல்லாத சூரத்தனமெல்லாம் பண்ணி கோட்டையைப் பிடித்து
ராஜகுமாரியை பரிசிலாய் மணந்த ராஜகுமாரனைப்போல் நான்
அவளை அடைந்து விடவில்லை. நாங்கள் சர்வசாதாரணமாய்
பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு அவர்கள் மூன்று நாள்
முன்னதாகவே வந்து நடத்தி வைத்த முகூர்த்தத்தில்
மணந்து கொண்டவர்கள்தாம். ஆகையால் இறுதி செய்யாத
செயலையோ, நம்பாத விஷயங்களையோ தேடி அலையவேண்டாம்.

நான் –

முதலில் என்னைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன்.
வாழ்க்கையில் என் லக்ஷியம் என்னவென்றால் –
ஒன்றும் செய்யாமல் இருப்பதுதான்.

எனக்கு கால்நடையாய் ஊர்களைச் சுற்ற வேண்டுமென்று ஆசை. மூட்டையில்லாமல் முடிச்சில்லாமல் கண்டவிடத்தில்
தின்று கையலம்பிவிட்டு வாசல் திண்ணையிலோ மரத்தடியிலோ படுத்துறங்கிவிட்டு ..

மேகங்களைக் குன்றுகள் தடுத்து குடங்குடமாய் மழை கொட்டும்
மலைநாட்டின் கமுகுச் சோலைகளையும் மாடுகளைப் போல்
மந்தை மந்தையாய் யானைகள் மேய்வதையும் பார்க்கவேண்டும்.
அசைவற்ற மனதில் அமைதி நிறைந்த்தாய் பார்த்தவர்கள்
சொல்லிக்கொள்ளும் கன்யாகுமரியின் கடற்கரையில் ஓங்கி நிற்கும் மணற்குன்றுகளில் ஒன்றின்மேல் உட்கார்ந்துகொண்டு
சூர்யாஸ்தமனத்தைப் பார்க்கவேண்டும் என்று ஒரு ஆசை.
நான் மொத்தத்தில் வேண்டுவது ஒன்றும் வேண்டாம் என்பதே.

இதனால் எனக்கு உலகத்தில் எனக்கு வெறுப்பு அல்லது ஞானப்
பைத்தியம் பிடித்துவிட்டது என்று இல்லை. எனக்கு வாழ்க்கையில்
தான் பற்று. அதைவிட்டால் வேறு நம்பிக்கையில்லை.
கண்கண்டதில் நம்பிக்கையில்லை. அதைத்த தள்ளிவிட்டு
காணாததைத் தேடி எப்படிப்போவேன்?

ஆனால் என் இஷ்டப்படி இவ்வுலகத்தை அனுபவிப்பதில்தான்
எனக்கு ஆசை. இந்த மிருகத்தனம் என்னுடைனே பிறந்துவிட்டதென்று நினைக்கிறேன்.

என்னுடலில் என் அப்பனின் மிருக ரத்தம் ஓடிற்று என்று நினைக்கிறேன்.
என் அப்பன் ஒரு உதவாக்கரை, ஓடுகாலி, சீட்டாட்டம், புகையிலை,
கஞ்சா கூட உண்டாம். கிளியை வளர்த்துப் பூனைக்குக் கொடுத்த
மாதிரி என் தாய் என் அப்பனுக்கு வாழ்க்கைப் பட்டுவிட்டாள்.
என் அப்பன் தோற்றம் எப்படி என்றுகூட அறியேன். நான் வயிற்றில் ஆறுமாதமிருக்கையிலேயே வீட்டை விட்டு ஓடிப்போனவன்
இன்னமும் திரும்பி வரவில்லை.

என் தாய் இன்னமும் குங்குமம் அணிந்துகொண்டுதானிருக்கிறாள்.
இருந்தும் என் அப்பனின் கதி நாங்களிருவரும் ஒருவருக்கொருவர் வெளியிட்டுக்கொள்ளாது உள்ளூர வேதனைப்பட்டுக்கொண்டு
என்றும் தீராததோர் சந்தேகம்.

எப்பவுமே அப்படித்தானாம். திடீர் திடீரென்று வருவது. அகப்பட்டதைச் சுருட்டிக்கொள்ளுவது. உடனே ஓடவேண்டியது. அப்படியும் எனக்கு
முன் நான்கு பிறந்து இறந்துவிட்ன. நான் மாத்திரம் தங்கிவிட்டேன்.
பணத்தென்போ மனிதத் துணையோ இல்லாது என்னை வளர்த்து
படிக்கவைத்து உலகத்தாரோடு ஒருவனாய்ச் சமமாக்கிய மகத்தான
பெருமை என் தாயைச் சாரும். அவளில்லாது நானில்லை.

இருந்தும் தன் கடமையைச் செய்யத் தவறி நான் என் கண்ணாலும்
கண்டிராத என் தகப்பனைத்தான் என் மனம் நாடிற்று. அடிக்கடி
அவனைப்பற்றிச் சிந்திப்பேன். நான் தலையைச் சாய்த்துக்கொண்டு யோசிக்கையில் அப்படியே என் அப்பன் மாதிரியிருக்கிறதென்று
அம்மா சொல்வாள்.
என் தாயிடத்தில் எனக்கு மரியாதை. நன்றி.
ஆனால் அப்பனிடந்தான் ஆசை. காரணம்?

காரணமேயில்லாத சில வேடிக்கைகள் உலகத்தில் இருக்கின்றன.
உலகத்தில் தன்னைப் படாதபாடு எல்லாம் படுத்தி வைத்த கடவுளிடத்தில் அம்மாவுக்கு அபார பக்தி, பூஜை புனஸ்காரம் பட்டினி பலகாரம் ஆசாரம் அனுஷ்டானம் எல்லாம் அமர்க்களம். நாள் கிழமை வந்தால் வயிற்றில்
சோறு விழுவதற்குள் விழிகள் மலையேறிவிடும். அம்மா பட்டதில்
கால்பங்குகூட பட்டிராத எனக்கு மாத்திரம் ஏன் பக்தியில்லை?

அவளுக்கு எவ்வளவு மறு உலகத்தில் நம்பிக்கையோ அத்தனைக்
கத்தனை என் மனம் இங்குதான் ஊன்றி நின்றது. எதற்குச்
சொல்லவந்தேன் என்றால், எப்படியோ அம்மா இருக்கும்வரை
அவளுக்கடங்கி சமர்த்துப் பிள்ளையாய் இருந்துவிட்டு, அவள் கடன்
கழிந்ததும் உதறித் தோளில் போட்டுக்கொண்டு ஊரை விட்டுக்
கிளம்பிவிடக் காத்திருந்தேன்.
ஆயினும் அம்மா என்னைச் சும்மா விடும் வழியாயில்லை.
ஜாதகங்களைப் போட்டுப் புரட்டிக்கொண்டு இருந்தாள்.

ஆரம்பத்தில் ஜயம் என் பக்கம்தான் இருந்த்து. லேசில் ஜாதகம் ஒத்துக்கொள்ளவில்லை. (நம் ஜாதகம்தான் அலாதி
ஜாதகமாயிருக்கிறதே!) அப்படியோ ஒன்றிரண்டு பெண் பார்க்கப்
போனவிடத்தில் குற்றங்குறை சொல்லித் தப்பித்துக்கொண்டேன்.
அம்மாவுக்கும் அலுத்துவிட்டது.

அப்புறம் ஒரு ஜாதகம் வந்தது. பொருத்தம் ஏதோ சுமார்தானாம்.
அம்மாவுக்கு அவ்வளவு திருப்தியில்லை. பெண் அமாவாசையில்
ஜனனம். “பெண் பார்க்கப் போவோமா?” என்றாள். என் பதில்
தான் எப்பொழுதும் என்னிடம் தயாராய் இருக்கிறதே.
“பிடிக்கவில்லை“ என்று. ஆகையால் பெண் பார்க்கப் போனோம்.

நீலம் உடுத்தி, இரை தின்ற பாம்புபோல் கனத்துப் பின்னல்
முழங்காலுக்கும் கீழ் தொங்க, நிமிர்ந்த தலை குனியாது
சமைலறையினின்று வெளிப்பட்டு வந்து நமஸ்கரித்து மையிட்ட
கண்களை ஒருமுறை மலர விழித்து புன்னகை புரிந்து நின்றாள்.
அவ்வளவுதான்.

அவள்தான் நான் கண்ட அபூர்வ ராகம்.

சில விஷயங்கள் நடந்துவிடுகின்றன. கால காரணங்களற்று.
அவை நேர்ந்த்தற்கு நேர்ந்ததுதான் சாக்ஷி.
அம்மாதிரி முன்னும் பின்னுமற்றது எங்கள் சந்திப்பும் வாழ்வும்.
அவள் அத்துடன் விடவில்லை. கணீரென்று “பஜ்ஜிக்கு உப்பு
சரியாயிருந்ததோ? நான்தான் பண்ணினேன்“ என்றாள்.

அம்மாவுக்கு தூக்கிவாரிப் போட்டது. அவள் வீட்டாருக்கு கூட முகம்
மாதிரியாய்ப் போய்விட்டது. திடீரென்று எல்லார் முகத்திலும்
வழிந்த அசடைக் கண்டு எங்களிருவருக்குந்தான் சிரிப்புத் தாங்க
முடியவில்லை. கையைக் கொட்டிக் கலகலவென்று நகைத்து
சமையலறைக்குள் மறைந்தாள்.

அம்மாவுக்கு இந்த சம்பந்தம் பிடிக்கவில்லை. “ஏண்டா? இவளை விட
எவ்வளவோ ரம்பைகளைத தள்ளிவிட்டாயே. இவளிடம் என்னடா
கண்டுவிட்டாய்? கன்னங்கரேலென்று தொட்டால்கூட ஒட்டிக்
கொள்ளும் போலிருக்கிறாள்”
“ஏனம்மா? நான் சிவப்பாயிருக்கிறேன் என்று என் நிழல் எனக்காகச் சிவப்பாயிருக்கிறதா? இல்லை, அது கறுப்பாயிருக்கிறதென்று
அதைத் தனியாய் அறுத்துத்தான் எறிந்து விடுகிறதா? அது மாதிரி
அவள் எனக்காகவென்றே பிறந்திருக்கிறாள்“
“அதுவும் அமாவாசையாய் பார்த்தா?“
“எத்தனையோ நாட்களில் ஒன்று“
“மயிர் எவ்வளவு நீளம் பார்த்தையா? வீட்டுக்கு ஆகாதென்று
சொல்லுவார்கள்“
“அதெல்லாம் மயிர் கட்டையாயிருக்கும் பொம்மனாட்டிகள்
அஸிகையில் சொல்லும் பேச்சு..“ (சபாஷ். எனக்குக்கூட இவ்வளவு சாமர்த்தியமாகப் பேச வருகிறதே)
“பாடக்கூடத் தெரியவில்லையேடா..“
“அவளே ஒரு ராகம். அவள் தனியாய் கூடப் பாடணுமா?“

“என்னடா வெட்கமில்லாமல் பிதற்றுகிறாய்? எல்லாம் கிடக்கட்டும் –
என்னதான் இந்தக் காலத்துப் பெண் என்றாலும் – பத்துப்பேர்
நடுவில் கூடத்தில் லஜ்ஜையில்லாமல் பஜ்ஜிக்கு உப்புப் போதுமா
என்று கேட்டுதே! ஏதேது இப்பவே இப்படியிருந்தால் போகப்போக
ஊரையே விற்றுவிடுவாள் போலிருக்கே!“

“அவள் பேசவில்லை அம்மா – ராகம் பேசுகிறது. அபூர்வ ராகம்.
அரங்கேறுபடி கஷ்டம்தான். இதோ பார், நான் கலியாணம் பண்ணிக்க வேண்டுமென்றிருந்தால் – அதுவும் உனக்காகத்தான் பண்ணிக்கணும் – அவளைத்தான் பண்ணிக்கொள்வேன். இல்லாவிட்டால்….“
ஆகையால் எங்களிருவருக்கும் மணம் நடந்தது.
இனிமேல்தான் சிரமம்.

நாங்கள் இன்னமாதிரி இருந்தோம் என்று சித்தரிக்க மேற்கொண்ட
முயற்சி கேவலம் ஒரு புருஷன் பெண்ஜாதியின் அந்தரங்க
வாழ்க்கையை அம்பலமாக்கும் விரஸமாய் முடியுமா அல்லது
எங்கள் இளமையின் புதுமையில் வாழ்க்கையையே ஒரு மஹா
சங்கீதமாயும் அதில் அவளை ஒரு அபூர்வராகமாயும் பாவித்து
அதன் சஞ்சாரத்தை உருவாக்கும் வசன கவிதையாக அமையுமா
அறியேன்.

வாஸ்தவத்தில் இவ்வரலாற்றில் என் பாத்திரம் எவ்வளவு
முக்கியமாதென்று எனக்கு இன்னமும் நிச்சயமாகவில்லை. நான் இப்பொழுதிருக்கிற மாதிரி அப்போதில்லை. முன்னைவிட எனக்கு
இப்போது “நாகரீகம்“ முற்றிவிட்டது! என் உடலில் ஓடிய என்
அப்பனின் மிருக ரத்தம் சுண்டிவிட்டது. நானும் என் தாயின்
இஷ்டப்படி எல்லோரும் போல ஆகிவிட்டேன். பாழடைந்த கோவில்
மூலவர் மேல் எலியும் பெருச்சாளியும் ஓடுவதுபோல் என் மேல்
பேரன் பேத்திமார் ஏறி விழுந்து விளையாடுகின்றனர். கடன், வியாதி,
கவலை. குடும்பம், எல்லாம பெருத்துவிட்டன.

இத்தனைக்கும் இடையில் நான் அவளைப் பற்றி நினைப்பதுமில்லை.
ஆயினும் ஏதாவது ஒரு சமயம், இப்பொழுது நடக்கும் ஏதேனும்
ஒரு சம்பவம் பழைய நினைவுகளைக் கிளப்பிவிட்டு, நெஞ்சு
படபடக்கையில் அது பழைய ரத்த வேகத்தின் சாயையோ அல்லது
வயதான கோளாறுதானோ என்று சந்தேகமாயிருக்கிறது.

அபூர்வ ராகம். அதே வக்கரிப்பு பிடாரன் கை பிடிபடாத பாம்புபோல
அபாயம் கலந்த படபடப்பு, ஸ்வர ஸ்தானங்கள் பிடிபடாது
பழகப் பழக எல்லையேயற்றது போல நடையுடை பாவனைகளில்
சிந்தும் ஒரு கவர்ச்சி, வேட்டையில் வேடுவன் மேல் பாயத் திரும்பிய
மிருகம்போல் பயந்த ஒரு முரட்டுத்தனம், சிலிர்சிலிர்ப்பு.

அவள் அம்மாவை மயக்கிவிட்டாள். அம்மாவுக்கு வேண்டிய பணிவிடை,
பக்தி, ஆசாரம் எதிலும் குறையவில்லை. வந்த புதிதில் ஏதோ ஒரு
விசேஷ தினத்தன்ன்று படங்களுக்குப் பூச்சூட்டி விளக்கு ஏற்றி எதிரில் நிவேதனங்களை வைத்துக்கொண்டு அம்மா ஒவ்வொரு நாமமாய்
அக்ஷர சுத்தமாய் சாவதானமாய்ச சொல்லி அர்ச்சித்துக்
கொண்டிருக்கையில், என் வயிற்றில் பசி எலிபோல் பிராண்டுகையில்,
அவள் கண்களை மூடி கற்பூரக் கொழுந்தென அசைவற்று நிற்கும்
பரவசம் கண்டு பகீரென்றது. அம்மா ஏதோ காரியமாய் பின்கட்டுக்குச்
சென்றதும் சமையலறையில் நுழைந்தேன்.

“நான் ஒரு பாவி“ என்று ஆரம்பித்தேன்.
மூடுசூளையாய் பேசுவதிலேய எனக்கு ஒரு ஆசை. நான் இதுவரை
அவளுடன் பளிச்செனப் பேசியதில்லை. மிருகங்கள் வாய் திறவாது ஒன்றொயொன்று புரிந்து கொள்வது போல் நாங்கள் அர்த்தமற்ற
அல்லது அர்த்தம் மறைந்த வார்த்தைகளைப் பேசியே ஒருவரை
யொருவர் அர்த்தம் கண்டுகொள்வதில் ஒரு இன்பம்.
“நான் ஒரு பாவி“ என்றேன் மறுபடியும்.

“இது ஒரு புண்ணிய நாடு. காரைக்காலம்மையார், மங்கையர்கரசி,
சக்குபாய். மீராபாய், அகமுடையான்களைக் கரையேற்றிய
புண்ணியவதிகள் பிறந்த நாடு“ என்றேன்.
“என்னை மறந்துவிட்டீர்களே!” என்றாள்.
“ஆம். நான் ஒரு பாவி. நல்ல வழி காட்ட ஒரு நல்ல மனைவியிருந்தும்
கரையேற இயலாது தவிக்கிறேன். எனக்கு கிடைத்திருக்கும் பாக்கியம்
எனக்குத் தெரியவில்லை. பசி கண்ணை மறைக்கிறது.
ஆட்கொள்ளல் வேண்டும்“
“பக்தரே, உம் பசியை மெச்சினேன். நான் தொழும் கடவுளை உமக்குக்
காண்பிக்க யாதொரு ஆட்சேபணையுமில்லை“
“எங்கே? எங்கே? என் பூனைக் கண்ணுக்குத் தெரியவில்லையே! என்று
இரு கைகளையும் நீட்டிக்கொண்டு மிரளமிரள விழித்துப்
பிரலாபித்தேன். “அவர் தூணிலுமிருப்பாரா? துரும்பில்தான்
இருப்பாரா?“

“இல்லை. வெண்கலப் பானையிலிருக்கிறார்“ என்று சிப்பல் தட்டை
நீக்கி உள்ளிருக்கும் சக்கரைப் பொங்கலைக் காண்பித்தாள்.
“ஹா..ஹா..! தரிசித்தேன்! என் வாயில் ஆனந்த பாஷ்பம ஊறுகிறதே!
சுருக்க அவரை இலையில் வட்டியுங்கள், வட்டித்துவிடுங்கள்!
அவருடன் நான் கலக்க முடியாவிட்டாலும் அவர் என்னுடன்
கலந்துவிடட்டும்“

“பக்தரே. பதறாதீர்! புண்ணிவதிகளுக்கும் பசிக்கும் என்பதை
மறந்துவிடாதீர்!“ என்ற அவள் என்னைக் கையமர்த்திவிட்டு இரண்டு
விரலால் ஒரு கவளம் வழித்து வாயில் போட்டுக்கொண்டு விரலைத்
தொண்டை வரைக்கும் கொடுத்து சப்பிய பொழுதுதான் எனக்கு
நிம்மதி ஆயிற்று. இதுவும் ஒரு மிருகம்தான்.

மிருகம்! மிருகம்! எத்தனை தடவை சொன்னாலும் அலுக்க
மாட்டேன்கிறது.உயர்ந்த ஜாதிக் காட்டுமிருகம். நின்றவிடத்தில்
நிற்கமாட்டாள். உடலையும் உள்ளத்தையும மிஞ்சிய வேகம்
அவளை அலைத்தது.
நாவற்பழம் போன்று பளபளக்கும் கண்களும் இயற்கையாகவே
காரியங்களிலும் உடலிலும் விறுவிறுப்பும் சிற்சில சமயங்களில்
உலகத்தின் மெதுவைத் தாங்கப் பொறுமையற்று முகம்
சுளிக்கையில் அதில குறுகுறுக்கும் களையும்.
தொம்மங்கூத்தாடி சாட்டைபோல் தடித்து, முழங்காலுக்கும் கீழ்
தொங்கும் பின்னலும்…

அபூர்வ ராகத்தின் ஜீவஸ்வரமாய் அவள் கூந்தல் விளங்கிற்று.
பின்னால் வெறுமென முடிந்தால் ஒருபெரும் இளநீர் கனத்துக்கு
கழுத்தை அழுத்திக் கொண்டிருக்கும். பின்னலை எடுத்துக்
கட்டினால் கூடை திராக்ஷையை அப்டியே தலையில் கவிழ்த்த்து
போலிருக்கும். நாங்கள் எப்படியும் தெருவில் போனால் திரும்பிப்
பாராதவர் இல்லை. அதுவே லஜ்ஜையை உண்டுபண்ணும்.

அம்மாவுக்கு அம்மயிரைப் பின்னப் பின்ன ஆசை. விதவிதமாய்
பூ வாங்கி வைத்துப் பின்னுவாள். பின்னி முடிவதற்குள் தோள்பட்டை
விட்டுவிடும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒருபாடு. தலைக்கு
மாத்திரம் எண்ணெய் தனியாய்த் தேய்த்து துணி துவைப்பதுபோல்
அம்மிக்கல்லின் மேல் கூந்தலைக் குமுக்கி ஒரு கட்டையால்
எண்ணெய் விட அடித்து அலசுவாள். உலர மறுநாளாகும்.கூந்தலை
முடித்துப் படுக்க இயலாது. முடிச்சை அவிழ்த்து கட்டிலுக்கு வெளியே தொங்கவிட்டுத்தான் படுக்கவேண்டும்.

ஓரிரவு விழித்துக்கொண்டேன். மயிர் பெருந்தோகையாய் படர்ந்திருந்த்து. மெதுவாய் தொட்டேன். சரியாய் மூன்றங்குல ஆழத்திற்கு கை
அழுந்திற்று. விடிவிளக்கின் மங்கிய வெளிச்சத்தில் அதைப் பார்த்தால்
ஏதோ எங்கேயோ, வறண்ட பூமியில் குன்றுகள் தடுத்துக்
குடங்குடமாய்ப் பெய்ய ஏகமாய்த் தண்ணீரை ஏற்றிக்கொண்டு
செல்லும் மேகம்போல.
அவள் முகத்தில் தவழ்ந்த புன்னகையிலிருந்து அவள் விழித்துக் கொண்டுவிட்டாளென்று கண்டேன். ஆனால் கண்ணைத்
திறக்கவில்லை.
“என் கவி என்ன யோசனை பண்ணுகிறது?“
நான் அவளை ராகம் என்பதால் அவள் என்னைக் கவியென்று
கேலி செய்வாள்.
“பெருத்த யோசனைதான்!“

“உன் மயிர் உன்னைவிடக் கறுப்பா அல்லது நீ அதைவிடக் கறுப்பா?“
கண்ணை விழிக்காது அவள் புன்னகை புரிவது எவ்வளவு
அழகாயிருக்கிறது! சின்னக் குழந்தை தூக்கத்தில் சிரிப்பது பொன்று.
“இந்த யோசனை கொஞ்சம் தாமதமாய் வருகிறது“
“ஏனோ?“
“என்னைக் கட்டிக்கொண்ட பொழுதே தோன்றியிருக்க வேண்டாமா?“
“உன் கறுப்பின் இருள் என் மனதில புகுந்து, அந்தச் சாயத்தில் என்னைக் குருடாக்கிவிட்டதே! ஆனால் எனக்கு வெளிச்சம் வேண்டாம். இவ்விருள்
என் மனதில எப்போதுமே நிறைந்து இருக்கட்டும்“
நான் அவள் பக்கமாய்ச் சாய்கையில் அவள் வைர மூக்குத்தி ஜ்வலித்தது. தாழம்பூவின் மணம் மனத்தை மயக்கியது. மூடிய கண்ணைத் திறவாது
அவள் என் கையை நாடி, விரலோடு விரல் பின்னி இழுத்து மார்பின்மேல் வைத்துக்கொண்டாள்“
“பாருங்கள். நான் கறுப்பாயிருந்தாலென்ன? என் இதயம் உங்களுடையது மாதிரியேதான் துடிக்கிறது. வேணுமானால்…“

“நன்றாகத்தான் துடிக்கிறது. கறுப்பாயிருப்பவர்களில் ரத்தத்திற்கே
படபடப்பு அதிகம் என்று சொல்வார்கள். நான் கறுப்பாயில்லையே
என்றுதான் எனக்கு இருக்கிறது“
“இரண்டுபேரும் ராகமாய்விட்டால் அப்புறம் ராகத்தை வாசிக்க
யாராவது வேண்டாமா? அதனால்தான் என் கவி சிவப்பாயிருக்க
வேண்டும். நான் ராகம் – கறுப்பாகத்தானிருப்பேன். என்னைக் கட்டி
வாசிக்கும் என் கவி சிவப்பாகத்தான் இருக்கவேண்டும். கவிக்கு ராகம் வேண்டுமெனில். ராகத்திற்கும் கவி வேணும்“

“நாம் இருவரும் கொஞ்ச நாள் பிரிந்திருந்து பார்ப்போமே!“ என்றேன்.
இப்போது சொல்லிவிடுகிறேன்.இதுதான் எங்கள் வாழ்க்கையில்
அடிப்படையான பெருங்குறை. எங்கள் ஒற்றுமை.
சில ஒற்றுமைகள் இருக்கின்றன. நாசத்திற்கே வித்தான பயங்கரமான ஒற்றுமைகள். காற்றுடன் நெருப்பு, விளக்கோடு விட்டில், மூங்கிலோடு
மூங்கில்.

அவள் கண்கள் திறந்தன. படுத்திருந்தபோதிலும் பாய்ச்சலில்
பதுங்கிய சிறுத்தைபோல் ஜாக்கிரதையானாள்.
ஏன்? நான் என்னத்தைப் பண்ணிவிட்டேன்? என் மேல் என்ன கோபம்?
என்று கேட்கவில்லை.
“வெறுமனே, இருந்து பார்ப்போம்!“ என்றேன். உனக்கு உன் பிறந்த
வீட்டிற்குப் போகவேண்டுமென்று இருக்காதா? நீ எனக்கு வைத்திருக்கும் சூனியத்திற்கு எவ்வளவு சக்தி என்று நான் அறிந்து கொள்ளவேண்டாமா?
எனக்கே சரியாயப் புரியவில்லை. அவளை ஏன் பிறந்த வீட்டுக்குப்
போகச் சொன்னேன்?

ஒருவர் சக்தியை ஒருவர் ஆழம் பார்க்க வேணுமென்றிருக்கலாம்.
மிருகங்கள் தங்கள் பலத்தை ஆராய்வது போல.
அல்லது அவள் என் அருகில் இருப்பது கனிந்த தழலின் அழகைக்
கையில் ஏந்தி அனுபவிக்க முயல்வது போன்றிருக்கலாம்.
இருந்தும், சொன்னதும் ஏன் சொன்னேன் என்று மனம் அங்கலாய்க்க ஆரம்பித்துவிட்டது. அவள் என்னைத் தகித்தாலும் அவளை விட்டுப்
பிரிய மனம் வரவில்லை.

அரைக்கணம் ஒளி மங்கினாற் போலிருந்தது. இருந்தும் இங்குதான்
இருப்பேன் என்று முரண்டவில்லை. அப்படிச் சொல்லமாட்டாளா
என்று என் மனம் ஏங்கிற்று. ஆனால், அவள் விட்டுக் கொடுக்காமல்,
“அப்படியே போய்விடுகிறேன்“ என்று சொல்லி விட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்டுவிட்டாள்.
அம்மாவுக்கு அவள் ஊர்போகும் காரணம் தெரியாது.
எங்களுக்கே தெரியவில்லையே! ஏதோ சாக்குச் சொல்லி அவள்
சகோதரனை வரவழைத்தாகிவிட்டது. வாசலில் வண்டி நின்றது.
என் அறைக்குள் வந்து நின்றாள். நான் ஒரு புத்தகத்தை வைத்துக்
கொண்டு மனம் அதில அழுந்தாது, மும்மரமாய் படித்துக்
கொண்டிருந்தேன்.
“வருகிறேன்“ என்றாள்.
மயிரைப் பளபளக்க அழுந்த வாரி நெற்றியில் நடு வகிடு
எழுமிடத்திலும் புருவங்களுக்கும் மத்தியில் குங்குமமிட்டிருந்தாள்.
பவழ மாலை அகஸ்மாத்தாய் மேலாக்கின் வெளியே வந்திருந்த்து. உள்ளங்கையிலும். கால்விரல் நகங்களிலும் அம்மா ஆசையுடன்
இட்டிருந்த மருதாணி பற்றியிருந்தது. இந்த நிமிஷங்கூட தடுத்தால்,
நின்றுவிடுவாள்.

போவதற்கிருக்கிறாய். வருகிறேன் என்கிறாயே! என்று விகடமாகக்
கேட்கலாமா என்று தோன்றிற்று.
“நான் போவது நீ போகச் சொன்னதால்தானே!“ என்று கேட்டு
விட்டால்? எப்படி என் தோல்வியை ஒப்புக்கொள்வேன்.?
“ஏன் முகம் வெளுத்திருக்கிறது?“ என்றேன்.
அதெல்லாம் ஒன்றுமில்லை. இப்போ வரும் சோப்பிலேயே சுண்ணாம்பு
அளவுக்கு மிஞ்சிக் கலந்திருக்கிறது. என் கறுப்புக்கூட
வெளுக்கும்படியிருந்தால் ..
உங்களுக்கு ஏன் கண் சிவந்திருக்கிறது?“ என்று புன்னகை புரிந்தாள்.
“ஆமாம். தூசி விழுந்திருக்கும்“ என்று கண்ணை நன்றாய்க
கசக்கிக்கொண்டேன்.
“போய்வருகிறேன்“
அவள் ஊருக்குப் போய் ஒருவாரம் ஆகிவிட்டது. இதென்ன வாழ்க்கை.
இவ்வளவு சூன்யமாகக்கூடஇருக்க முடியுமா என்ன? எதைத் தொட்டாலும் எடுத்தாலும் நினைத்தாலும் அவள் உருவம் இடைமறித்துக்கொண்டு நின்றது –

பளபளக்க வாரி முடிந்த மயிரும் நெற்றியில் நடுவகிடு எழுமிடத்திலும்
இரு புருவங்களுக்கு மத்தியிலும் இட்ட பொட்டும், மேலாக்கின்
வெளிவந்த பவளமாலையும் உள்ளங்கையிலும் கைகால் நகங்களிலும
பற்றிய மருதாணியும்….
சோறு தொண்டையில் விக்கியது. உலகம் ஏன் இவ்வளவு
சோபையற்றுவிட்டது? அல்லது எனக்குத்தான் இறக்கை ஒடிந்துவிட்டதா?
“என்னடா, நீயா கலியாணமே வேணடாமென்ற பிள்ளை?“ என்று
அம்மா கேலி பண்ண ஆரம்பித்துவிட்டாள்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை அம்மா! வெய்யிலல்லவா!“ என்று மீசையை முறுக்கிக்கொண்டு சிரித்தாலும்,என் சிரிப்பு என்னையே ஏளனம்
பண்ணிற்று. இருப்புக்கொள்ளாது நடந்துகொண்டே சென்றேன். கால் இழுத்துக்கொண்டு போனபடி.

எதிரே ஒரு பிணம் வந்தது.
பிராமணப் பிணம். கொட்டுப்பறை, பூப்பல்லக்கு ஒன்றுமில்லாது, சுட்டுப்பொசுக்குவதற்காக அவசர அவசரமாய் எடுத்துக்கொண்டு
ஓடுகிறார்கள். முறுக்கான வாலிபம். வயது இருபது இருபத்தி ஐந்து
தானிருக்கும். ரொம்பக் கிடக்கவில்லை. முகம் சுண்டவில்லை.
தூங்குகிறாற்போல் இருந்தது. எந்த நிமிஷம் எங்கேயென்று சாவு காத்திருக்கையிலேயே, வாழ்க்கையில் சௌகரியமாயிருக்க முடிந்தும், ஒருவரையொருவர் பரீக்ஷை பார்த்துக்கொண்டு, விரல் வழி
வழியவிட்ட தேன்போல, வாழ்நாளை நழுவ விடுகிறோம்.

என்னால் பிரிந்திருக்க முடியாது. அவளை எப்படியாவது திருப்பி வரவழைத்துக்கொள்ள வேண்டும். என் தோல்வியை ஒப்புக்கொள்ளாது.
சட்டென ஒரு யோசனை தோன்றிற்று. அசட்ட யுக்தியோ சமத்து
யுக்தியோ, அப்பொழுது என்ன தெரிகிறது! நேரே தபாலாபீசுக்கு
சென்று ஒரு தந்தியடித்தேன்.
“கடுஞ்சுரம்! அபாயம்! புறப்பட்டு வரவும்“

நாளை காலை போய்ச்சேரும். அலறிப் புடைத்துக்கொண்டு
ஓடிவருவாள். பார்த்துப் பரிகசிக்கலாம். அப்படியோ ரொம்பவும் கோபித்துக்கொண்டாலும் ஏதேனும் சமாதானம் சொல்லிக்
கொள்ளலாம். எப்படியோ வந்துவிடுவாள்.
இரவு இத்தனை நாளாக இல்லாத நிம்மதியுடன் தூங்கினேன்.
நடு இரவில் கதவை யாரோ உடைத்தார்கள்.
“தந்தி ஸார்!”
தந்தி! வயிறு பகீர். தந்தி அனுப்பவதைப் போலல்ல.
வந்த தந்தியை வாங்கியுடைத்துப் படிப்பது.
“பாம்பு கடித்துவிட்டது. புறப்படவும்“
“அம்மா!“
அம்மா சுவாமி பிறையண்டை போய் கன்னத்தில் போட்டுக்
கொள்கிறாள். இன்னும் அரைமணி நேரத்தில் வண்டி.
புலி புலி விளையாடப் போய் புலியே வந்தாச்சு.
நாங்கள் போய்ச்சேரும் வரை இருப்பாளா? அவளைத்தான்
காண்போமா? அவள் உடலைக் காண்போமா?

வண்டியில் போகையில் கண்முன், மாலை கண்ட பிராமணப்
பிணக்கோலம் மறுபடி சென்றது. இவ்வேளைக்கு அது சிதையில் எரிந்து சாம்பலாகிப் போயிருக்கும்.
அட மடயா, வாழ்க்கையோடு என்ன பரிக்ஷை?எந்த நிமிஷத்தில்
எங்கேயென்று சாவு காத்துக்கொண்டிருக்கிறது. விதி, வினை
யெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். நீ அவளை அவள் வீட்டிற்கு அனுப்பாமலிருந்தால், பாம்பு கடித்திருக்குமா?
ஏன் எங்கள் செயல்களெல்லாம் அர்த்தமற்று இருக்கின்றன?

வண்டியை விட்டிறங்கினோம். அவள் வீட்டிலிருந்து யாராவது
வந்திருந்தாலும் வந்திருக்கலாம். குனிந்த தலை நிமிர மறுத்தது.
என்மேல் ஒரு பிடி விழுந்தது.அவளேதான். என்னை இறுகக் கட்டிக்
கொண்டு கதறினாள். எங்களைச் சுற்றிக் கூட்டம் கூடிவிட்டது கூட
எங்களுக்குத் தெரியாது. நாங்கள் இங்கில்லை.

மாமனார் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. “என்னய்யா
சுத்த மடையன் மாதிரி வேலை செய்திருக்கிறீர்?“ என் குழந்தை
தவித்த தவிப்பு எனக்கல்லவோ தெரியும்!“
“இதென்ன இது? எனக்கு ஒன்றுமே புரியல்லியே!“ என்றாள்
அம்மா, பாவம்! அவளுக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை.
“என்னவா?.. இதோ பாரும் உங்கள் பிள்ளை சமர்த்தை!“ என்று
தந்தியை அம்மா முகத்தெதிரே ஆட்டினார். “இரவெல்லாம்
அழுது அழுது என் குழந்தை முகமெல்லாம் வீங்கிவிட்டது.
அவள் பட்ட அவஸ்தையைப் பார்த்தால் ஏரோப்ளேன் இருந்தால்கூட
புறப்பட்டு விடலாம் போல உடம்பு பரபரத்தது. இருந்தும்
காலையில்தான் வண்டி. உங்கள் பிள்ளை கல்மாதிரி உடம்பை
வைத்துக்கொண்டு ஸ்வாசமிழுத்துக் கொண்டிருக்கிறதென்று
தந்தி அடித்தால் நன்றாயிரக்கிறதா? இவர் என்ன
சின்னக் குழந்தையா?“
“சரிதானப்பா ரொம்ப ரொம்ப குதிக்கிறேளே?
எனக்கு மாத்திரம் பாம்பு கடித்ததா? தந்தி நீங்கள்தானே
அடித்தீர்கள் மறந்துபோச்சா?“
மாமா பின்னடைந்தார்
“எல்லாம் நீ படுத்தின பாடுதானே!“

அம்மா முகத்தில் அருவருப்புத் தட்டிற்று.“என்னடா அம்பி!
இந்தக காலமே இப்படித்தானாடா?“ என்றாள்.
ஏன் எங்கள் செயல்கள் அர்த்தமற்று விடுகின்றன?
சின்னக் குழந்தைகளுக்குச் சொல்ல. அவர்கள் முழு மனதுடன
நம்பும் ராஜராணிக் கதைபோல் எங்கள் வாழ்க்கை சிற்சில
சமயங்களில் கடற்கரையில், சூரியனுடைய சப்தவர்ண ஜாலங்கள்
மிளிர்ந்து, காற்றில் நடுநடுங்கும் இலை நுரை போன்ற நலுங்கிய அழகு.
துக்கம் அதிகமானாலும் பைத்தியம்தான். சந்தோஷம் மிஞசினாலும் பைத்தியந்தான். பித்து பிடித்தவனும் பைத்தியந்தான். இவர்களில்
நாங்கள் எவர்?
கோடை முடிந்து மாரி வந்துவிட்டது.

அம்மா, யாரோ நாலுபேர் தீர்த்த யாத்திரை போகிறார்கள் என்று
சேர்ந்து கிளம்பிவிட்டாள். போகும் இடத்துக்குப் புண்ணியம்
தேடவேண்டும். சாவிற்கு எப்பொழுதும் தயாராயிருக்க வேண்டும்.
கடவுளிடத்திலே கணக்குச் சரியாக ஒப்பித்தாக வேண்டும்.
இதெல்லாம் அம்மாவின் கொள்கை. இங்கிருக்கையிலேயே
மறு உலகின் சிந்தைதான் அவளுக்கு. ஆகையால், தான்
போகவேண்டும். ஆனால் என் காரணங்களே வேறு என்று புள்ளி
போட்டிருந்த இடங்களெல்லாம் பார்க்க அம்மாவுக்குத்தான் வாய்ப்பு
முதலில் கிட்டிவிட்டது. தென்னாடெல்லாம் சுற்றியபிறகு காசி, கயா,
பிரயாகை வரை போய்வருவதாகத் திட்டம். அம்மா எங்களைத்
தனியாய் விட்டுச் சென்றதே விபத்தாய் முடிந்தது. மிருகங்களாகிய
எங்களைக் கட்டியாள யாருமில்லை.

மழை, அந்தச சமயம்போல் – ஆனால் எப்போது பெய்தாலும்
அப்படித்தான் சொல்கிறோம் – எப்போதும் பெய்ததில்லை.
தெருவில் வெள்ளம் முழங்காலாழத்திற்கு ஓடியவண்ணமிருந்த்து.
இரண்டு வாரங்களாக சூரியனைக் கண்டவரேயில்லை. பகலிலும்
இருள் கனத்துத் தேங்கிற்று. மழை விடாது பெய்துகொண்டிருந்த்து.
வீட்டிற்குள் அடைந்து கிடந்தோம் – கூட்டிலடைத்ததுபோல்,
மாடிக்கும் கீழுக்குமாய் அலைந்து வெதும்பினோம்.

பதினைதாம் நாளிரவு ஏதோ விளக்கண்டை உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தோம். ஜன்னலும், கதவுகளும் படார் படார்
என்று மோதிக்கொண்டிடன. புயல், மரங்களினூடே பாய்ந்து
ஊளையிட்டது.
புத்தகத்தை அலுப்புடன் டப் என்று மூடிவிட்டு “வெளியே போவோமா?“
என்றாள்.

“எங்கே போகிறது? சினிமா கினிமா எல்லாம மழைக்குப் பயந்து மூடித்தொலைத்திருக்கிறானே!”
“கடற்கரைக்குப் போவோம்!” என்றாள்.
“போவோம்!“
புயலில் குடையைக் கொண்டு போகச் சாத்தியமில்லை. தூறல்
முகத்தில் சாட்டை அடித்தது. தெருவிளக்கின் வெளிச்சத்தில்
குடைக் கம்பி கனத்தில் பளபளத்துக்கொண்டு பூமிக்கும் வானத்திற்கும்
ஜல்லி கட்டியது போன்றிருந்த்து. தெருவில் ஜலம் பிரவாகமாய் ஓடியது.
சாபம் பிடித்த்துபோல் தெரு வெறிச்சென்றிருந்தது. இந்த மழையில்
எங்களைத்த தவிர எவன் கிளம்புவான்? எதிர்காற்றில் முன்
தள்ளிக்கொண்டு ஒருவரையொருவர் இறுகித் தழுவியவாறு
ஜலத்தில் இழுத்து இழுத்து நடந்து சென்றோம்.
இடையிடையே இடியில் பூமி அதிர்ந்தது.

கடலில் அலைகள் மதில்கள்போல் எழுந்து, மனிதனின்
ஆசைக்கோட்டை போல் இடிந்து விழுந்தன. எங்களை வாரி வாயில் போட்டுக்கொள்ள வேண்டுவது போல் துரத்திக்கொண்டு ஓடிவந்தன. ஏமாற்றமடைந்த அரக்கனின் ஆத்திரம்போல, அவைகளின் கோக்ஷம்
காதைச் செவிடு படுத்திற்று. ஒரு அலை அவளைக் கீழே தள்ளிவிட்டது. வெறிக்கொண்டவள் போல் சிரித்தாள். ஜலத்தின் சிலுசிலுப்பு
சதையுள் ஏறுகையில நெருப்பைப் போல் சுறீலெனப் பொரிந்த்து.
புயலில் எங்கள் அங்கங்களே பிய்ந்துவிடும் போலிருந்தன.

திடீரென்று இடியோடு இடி மோதி ஒரு மின்னல் வானத்தில்
வயிற்றைக் கிழித்த்து.. இன்னமும் என் கண்முன்
அம்மின்னல். மறைய மனமில்லாமல் தயங்கிய வெளிச்சத்தில்
நான் கண்ட காட்சி! குழுமிய கருமேகங்களும், காற்றில் திரைபோல் எழும்பி,குளவியாக கொட்டும் மணலும், கோபக் கண்போல்.
சமுத்திரத்தின் சிவப்பும், அலைகளில் சுழிப்பும், அடிபட்ட நாய்போல்
காற்றின் ஊளையும், பிணத்தண்டை பெண்கள் போல் ஆடி ஆடி
அலைந்து அலைந்து மரங்கள் அழும் கோரமும்.!
இத்தனைக்கும் மூலகாரணிபோல் அவள் நிமிர்ந்து நின்றாள்.

அவள் ஆடை உடலிலிருந்து பிய்ந்துவிடும் போல் பின்புறம் விசிறி
விரிந்து, காற்றில் தோகை போல் விறைத்து நின்று படபடத்த்து.
பிதுங்கிய சிற்பமென அங்க அவயவங்கள் நிமிர்ந்துகொண்டு நின்றன.
மின்னலின வழி, விசும்புநின்றிழிந்த விணிணுலகத்தவள்
போலிருந்தாள். ஜலமேறி அடையாய்க் கனத்த கூந்தல், காற்றின்
மிகுதியில் நக்ஷத்திர வால்போல் சீறிற்று. இவ்வியற்கையின்
இயக்கத்தில் அவளும் சேர்ந்து இழைந்து புயலுடன் நின்றாள்.
மின்னல் மறைந்தது.

வெடவெடக்கும் குளிரில் பற்கள் கிலுகிலுப்பைக் கற்கள் போல்
கடகடக்க ஆரம்பித்துவிட்டன. புயல் எங்களை வீட்டிற்குத் தள்ளிக்
கொண்டு போயிற்று. உடலில் பிசினாய் ஒட்டிக்கொண்ட ஆடையைக்
களைந்து வேறு உடுத்துவதற்குள் போதும்போதும் என்று ஆகிவிட்டது.
காலையில் எழுந்திருக்கையிலேயே வெகு நேரமாகிவிட்டது.
உடல் கணுக்கணுவாய் தெறிக்கும் வலியில் எழுந்திருக்கக்கூட
முடியவில்லை.அவள் எழுந்திருக்கவில்லை.

“கடற்கரைக்கு உலாவப் போனது எப்படியிருக்கிறது என்றேன்?“.
கண்கள் மூடியபடியே புன்னகை புரிந்தாள். அவசரமாய்
வேலைக்குப் போனேன்.

நான் மாலை திரும்புகையில் வீட்டில் சந்தடியில்லை. கட்டிலில் நான் விட்டுப்போனபடியே படுத்திருந்தாள். கண் திறக்கவில்லை.
பகீரென்றது.
“என்னடி!“
நெற்றியில் கை வைத்தேன். மழுவாய்க் காய்ந்த்து. மூச்சிலிருந்ததே
யொழிய பேச்சில்லை. கருமான் பட்டரை போலி ஆவியடிக்கும்
அனல் மூச்சு.

டாக்டர் வந்து என்னவோ புரட்டிப் புரட்டி பரீக்ஷை செய்து பார்த்தார். ஸ்மரணையற்று, போட்டது போட்டபடி கிடந்தது அந்த
நின்ற இடத்தில் நிற்காது துருதுருக்கும் உடம்பு!
“இது நீங்கள் ஒண்டியாய் சமாளிக்க முடியாது!“என்றார்.
மூஞ்சியை முழுநீளம் வைத்துக்கொண்டு. “ஆஸ்பத்திரி“
“ஆஸ்–பத்–தி–ரி !“
நேற்றிரவு வெறிபிடித்து விளையாடினோம். இன்று ஆஸ்பத்திரி!
“விஷயம் முற்றிவிட்டது ஸார். வீட்டில் பெரியவாள் யாராவது
இருந்தால் வரவழையுங்கள்“
அம்மாவுக்குத் தந்தியா? நான் என்னுள் ஒடுங்கிப் போனேன்.
“ஆஸ்பத்திரியில்கூட கூட்டத்தில் கோவிந்தா ஆகிவிடும்.
வீட்டில் பெரியவாள் யாராவது இருக்கட்டும். நான் வந்து பார்க்கிறேன்,
என்னவோ?“

உள்பிரக்ஞையிருக்கையிலேயே மண்டையில் சம்மட்டியிலடிப்பது
போலிருந்தது. அம்மாவுக்குத தந்தியடிக்க விலாசத்தயும்
பணத்தையும் அவரிடமே கொடுத்துவிட்டுக் கட்டிலண்டை வந்து உட்கார்ந்தவன்தான், எத்தனை நாழி இப்படி இடம்பெயராது
திக்பிரமை கொண்டு உட்கார்ந்திருந்தேனோ அறியேன்.

என்னில் என்னென்ன எண்ணங்கள் ஓடின அறியேன். வெளியே
அடைமழை பெய்துகொண்டிருந்த்து நினைவிலிருக்கிறது. எங்களுக்கு நம்பிக்கையிருக்கறதோயில்லையோ, ஒரு நாளும் தவறாது எரியும்
சுவாமி விளக்கு இரண்டு நாளாய் எரியவில்லை. அது நினைவிருக்கிறது.
கண்ணெதிரில் கடுஞ்சுரம் அவள் புசுமையை உறிஞ்சுவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அது நினைவிருக்கிறது.

வைத்தியர் தினம் மூன்று தடவை வந்தார். ஒவ்வொரு தடவையும்
அவர் முகம் சுண்டியது. அது ஞாபகமிருக்கிறது.
என் தோளைப் பிடித்துக் குலுக்கினார். “தைரியமாயிருமய்யா.
உமக்கு முதலில் ஒரு ஊசி போடவேண்டும் போலிருக்கிறது.
இந்த மும்முரத்தில் ஒரு மருந்தும் ஒன்றும் செய்வதிற்கில்லை.
இன்று ராத்திரி தாண்டணும். நீர கூடியவரைக்கும் தெம்பாயிரும்.
நீங்கள் இப்படியிருந்தால் அப்புறம் படித்தவனுக்கும்
படியாதவனுக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது?“

நாங்கள் படித்தவருமில்லை. படியாதவருமில்லை.
நாங்கள் மிருகங்கள்.
“இளம் வயது – அதுதான் தாக்குப்பிடிக்கவேணும் –
உங்க அம்மா வந்துவிட்டாரா?“
அம்மா, மாலை அஸ்தமன வேளைக்கு வந்தாள். என்னுடன்
பேசவில்லை. கட்டிலில் படுத்திருந்தவள் முகத்தை ஒரே முறை
பார்த்தாள். நாடியைத் தொட்டாள். நேரே குழாயடிக்குப் போய்
ஸ்நானம் பண்ணினாள். நெற்றிக்கிட்டுக்கொண்டு சுவாமி
விளக்கையேற்றி வைத்து எதிரே உட்கார்ந்துவிட்டாள்.

பிறகுதான் எனக்கு உள் பிரக்ஞை வெளியிலும் சிறுகச் சிறுகப்
பரவி நினைவு தொடர ஆரம்பித்தது.
இரண்டே நாள் ஜுரம் அந்த உடலை சக்கையாய் சப்பியெறிந்து
விட்டது. உருவம் கூட சிறுத்துவிட்டது. மூச்சு நூலிழைந்தது.

படுத்ததிலிருந்து அந்த வாயினின்று ஒரு முனகல் கூட எழவில்லை.
மிருகம்போலவே நோயை மௌனமாக அனுபவித்துக்கொண்டிருந்தாள்.
கூந்தல் கட்டிலிருந்து படுதாப்போலிறங்கி வீழ்ந்து முகம்
கண்ணாடிபோல் ஒரேயடியாய்த் தெளிந்து போயிருந்தது.
அம்மா எழுந்து வந்து மருமகள் நெற்றியில் விபூதியை இட்டாள்.
என்னை, “நீ போய்ப் படுத்துக்கொள்“ என்றாள். நான் சின்னக்
குழந்தையை போல் பேசாமல், ரேழித்த திண்ணையில்
படுத்துக்கொண்டேன்.
மணி ஒன்று.ரெண்டு, முணு, நாலு
“அம்பீ!“
அடிவயிற்றில். நெருப்பை அப்படியே கொட்டிற்று.
அதே சமயம் வாசலில் டாக்டரின் காரும் வந்து நின்றது.
இருவரும் சேர்ந்து உள்ளே போனாம்.
அரைக்கண்ணாயிருந்த இமைகள் முழுவதும் மூடிவிட்டன.
டாக்டர் நாடியைப் பிடித்துப் பார்த்தார். நன்றாகப் பரிசோதித்துப்
பார்த்தார். அவர் முகம் மலர்ந்தது.

“ஜயம் ஸார்! கண்டம் தப்பித்தது ஸார்!“

அம்மா ஏதோ பேச முயன்று கையைத் தூக்கி ஜாடை காட்டினாள்.
வாய் திறந்து திறந்து கண்கள் பெருகின. சுவாமி பிறையண்டை
போய் தடாலென்று விழுந்துவிட்டாள்.
அது நினைவிருக்கிறது.

உடம்பு படிப்படியாய்த் தேறி வந்த்து. அம்மா கைராசியிலும்,
அம்மா போடும் பத்தியத்திலும், அம்மா பண்ணும் சமரக்ஷணையிலும் உயிரற்றதுகூட உயிர் பெற்றுவிடும். அப்படித்தானே ஆயிற்று!
எழுந்து நடமாட மாதமாகிவிட்டது.

அன்றுதான், படுக்கையினின்று எழுந்தபின் முதன் முதலாகத்
தலைக்கு தண்ணீர் விட்டது.
பிற்பகல் மூன்றிருக்கும். நான் கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தேன்.
பச்சைப்புடவை உடுத்தி, உலர வளர்த்திய கூந்தல் முழங்கால் வரை
தொங்க, இன்னமும் பஞ்சடைப்பு முற்றிலும் மறையாத கண்களில்
கனிந்த பார்வையுடன், ஆடி அசைந்து நடந்து என்னருகில் வந்து
ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்துக்கொண்டு நின்றாள். வெற்றிலையைக்
கன்னத்தின் ஓரத்தில் அடக்கிக் கொண்டிருந்தாள். பளபளக்கச்
சிவந்திருந்த உதடுகளில் புன்னகை பரவியது.

கிடந்து தேறியது முதல் அவள் வசீகரம் முன்னிலும் பன்மடங்கு
அதிகரித்திருந்த்து. பழைய முரட்டுத்தனம் தணிந்து, ஒரு தனி
அடக்கமும் அமைதியும் வந்திருந்தன. கச்சேரி முடிவில், கார்வையும்
மெருகேறிய குரலில் விஸ்தரிக்கும் ராகத்தின் கனிவைப்பொல்,
நெருப்பில் நயம் துலங்கும் தங்கம்போல்.

நாங்கள் பேசவில்லை. பேச என்ன இருக்கிறது? இதயங்களில்
அமைதி விளிம்பு கட்டி இருந்த்து. அந்நிலையின்
நிர்ச்சலனத்தினாலேயே, இந்த முத்திநிலை இப்படியே இருக்குமா
என்ற சந்தேகம் உடனேயே உண்டாகிவிட்டது. ஊஞ்சல் சங்கிலியைப்
பிடித்திருந்த என் கைமேல், அவள் கை பொத்திற்று.
“குழந்தைகளா!“
அம்மா பூஜை அறையிலிருந்து கூப்பிட்டாள்.

என்ன காரணம் எங்களுக்கே தெரியவில்லை. சொல்லி
வைத்தாற்போல் இருவரும சேர்ந்தே நமஸ்கரித்தோம். அம்மா
ஆசீர்வதித்தாள்.

“உட்கார்ந்து கொள்ளுங்கள். ஒன்று சொல்லத்தான் உங்களைக்
கூப்பிட்டேன்“ நாங்கள் பேசாது காத்திருந்தோம் – சின்னக்
குழந்தைகள் போல.

“நீங்கள் இரண்டுபேருமே ரொம்பக் கஷ்டப்பட்டு விட்டீர்கள். சுவாமி புண்ணியத்தில், மலைபோல் வந்த்து பனிபோல் நீங்கியது. என்
குழந்தை பிழைத்தது. அந்த திருப்பதி வெங்கடாஜலபதியின்
கிருபைதான் தவிர வேறு என்ன சொல்ல இருக்கிறது. என்றைக்கும
ஒன்று வைத்துக்கொள்ளுங்கள். சுவாமிமேல் பாரத்தைப் போட்டுவிட்டு
எதைச் செய்தாலும், அவர் பார்த்துக்கொள்வார். நாம் இவ்வளவாவது
உண்டு உடுத்து உயிர் வாழ்வதே அவரால்தான். அவனன்றி ஒரு
அணுவும் அசையாது. எப்பவும் அவனை நம்புங்கள். அவனை நம்பி வேண்டிக்கொண்டேன். இவள் பிழைத்தாள்.

ஆகையால் இப்பொழுது வேண்டுதலையை நிறைவேற்றிவிட
வேண்டும். அவன் தன்னால் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டான்.
நம்முடைய பிரார்த்தனைதான் பாக்கி. தெய்வத்திற்கு செலுத்த
வேண்டியதை முன்னைக்கு முன்னால் செய்துவிடவேண்டும்.
அதை ஒத்திப்போடக்கூடாது. நான் தீர்மானம் பண்ணிவிட்டேன்.
ஞாயிற்றுக்கிழமை நல்ல நாளாயிருக்கிறது. திருப்பதிக்குப்
புறப்படணும். இவள் மயிரை முடியிறக்குவதாக வேண்டிக்
கொண்டிருக்கிறேன்“

தலை சுழன்றது. அம்மா இன்னும ஏன் மூச்சுவிடாமல்
பேசிக்கொண்டே போகிறாள்?
ஓரக்கண்ணால் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவளைக் கவனித்தேன்.
அவள் புன்னகை உயிரற்று அப்படியே உறைந்து போயிருந்தது.
சிட்டுக்குருவி சிறகு போல் அடித்துக்கொள்ளும் இதயத்தின்
பதைபதைப்பை அடக்க ஒரு கை மார்பை நாடிப்போயிருந்தது.
இன்னொரு கை, குதிகால் சதையை ரத்தம் கசிவது கூடத் தெரியாது பிய்த்துக்கொண்டிருந்தது.

நாளை ஞாயிற்றுக்கிழமை.
இன்னும் இரண்டரை நாட்கள்தான் முழங்கால்வரை தொங்கும் மயிர் –
அபூர்வ ராகத்தின் ஜீவஸ்வரம். பிறகு?
இதென்ன கூந்தலுக்கா இவ்வளவு பிரமாதம், இன்னும் ஆறு மாதமோ
ஒரு வருஷமோ போல் தானே வளருகிறது. தவிர சுவாமிதானே
சாகக் கிடந்தவளைக் காப்பாற்றிக் கொடுத்தார். அவருக்கு சேர
வேண்டியதைச் செலுத்தித்தானே ஆகவேண்டும்! எல்லோரும் வேண்டிக்கொள்ளவில்லையா! இதென்ன புதிதா!

எல்லாம் புரிகிறது. ஆனால் இதெல்லாம் எங்களுக்கு வேண்டாம்.
நாங்கள் மிருகங்கள். அடுத்த நிமிடத்தில் எங்களுக்கு நம்பிக்கை
கிடையாது. ஒவ்வொரு நிமிஷத்தையும் அந்தந்த நிமிஷத்திற்குப்
பூராவாக அனுபவிப்பதுதான் எங்களுடைய அடிப்படையான இயல்பு.
வளைந்து கொடுக்கும பழக்கம் எங்களுக்கில்லை. நாங்கள அடங்க வேண்டுமெனில் எங்களை ஒடித்துத்தானாக வேண்டும்.

இந்த இரண்டு நாளும் நாங்களிருவரும் இதைப் பற்றிப் பேசவில்லை.
அவள் தன் மனதிலிருப்பதை விட்டுக்கொடுக்கவில்லை.
சற்றே காற்றடித்தாலும் சப்திக்கும் முறுக்கேறிய தந்தி போல் அவள்
ஒரு புதுக்கலகலப்பாய் இருந்தாள். அவள் சிரிப்பில், கண்ணாடி
உடையும் சத்தம் போல ஒரு சிறு அலறல் ஒலித்தது. இதைத்தவிர
மற்றதெல்லாம் பேசினோம். சிரித்தோம். கும்மாளமடித்தோம்.
ஆயினும் இதுதவிர வேறெதுவும் எங்கள் நினைவில் இல்லை.

எனக்குப் பேச வாயில்லையோ அல்லது சொல்ல வகையில்லையோ,
நான் தனியனாகிவிட்டேன். அவள் இப்படி வேண்டியில்லாத ஒரு
வனப்பில ஜ்வலிப்பதைத் தடுக்கவோ, தணிக்கவோ வழியில்லாது
வெறுமென பார்த்துத் தவித்துக்கொண்டிருந்தேன்.
மறுநாள் காலை வண்டி.
இரவில் அறையில நுழைந்தேன். அவள் கண்ணாடி எதிரில்
உட்கார்ந்துகொண்டு, மயிரை அழுந்தப் பளபளவெனச் சீவி வாரி முடிந்துகொண்டிருந்தாள். என் மனத்தில் என்னென்னவோ
எழும்பிக் குழப்பிற்று. என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள்.
“உங்களை ஒரு கேள்வி கேட்க வேண்டுமென ரொம்ப நாளாய்
எண்ணம்“ என்றாள்.
“என்ன?“
“நான் கிடந்தபோது ஏதாவது ஜன்னியில் பிதற்றினேனா?
அவஸ்வரம் பேசினேனா?“
“அபூர்வ ராகத்திற்கு அபஸ்வரமே கிடையாது“ என்றேன்.
“சரி. நான் அப்பொழுது இறந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமோ?“
“இதென்ன கேள்வி?“
“பதில் சொல்ல முடியுமா, சொல்லத் தைரியமில்லையா?“
“எப்படி நன்றாக இருந்திருக்கும்? அபூர்வ ராகத்தின் நிரடலான நிரவல்
கட்டத்தில ராகம் தவறல் அதைவிட அவமானம் உண்டோ?“

“ஆனாலும் பிடிப்பின் எடுப்பாய்ப் பூராவும் இருக்க முடியுமோ?“
எதற்காக என்ன கேட்கிறாள் என்று புரிந்தும் புரியாது தவித்தேன்.
“ராகம் தன் இயல்பு மாறாதவரை எப்படியிருந்த்லும் சுஸ்வரந்தான்.
இந்த மூடுமந்திரம ஏன்? பளிச்சென்று சொல்லேன்“

கையில் சீப்பை வைத்துக்கொண்டு ஏற இறங்க என்னை ஒருமுறை
மலர விழித்துப் பார்த்தாள். அங்கு ஆயிரம் கேள்விகள் குமுறின.
“இயல்பு என்று சொல்வதன் அர்த்தம் என்ன? பட்சிகளுக்குப்
பறப்பதுதான் இயல்பு. இறக்கையை ஒடித்துவிட்டு இயல்பு
மாறாதவை பட்சி பட்சிதான் என்றால் என்ன சரி? ராகத்திற்கும்
பட்சிக்கும் என்ன வித்தியாசம்? இரண்டிற்கும் மேல் சஞ்சாரம்தானே!“

“இப்போ என்னவென்கிறாய்?“
“ஒன்றுமிலை ராகத்தினோட முடிவும் எடுப்பாய்த்தானிருத்தல்
வேண்டும்“. கொண்டையைப் போட்டுக்கொண்டு எழுந்தாள்.
“எங்கே?“
“கீழே போகணும். இதோ வருகிறேன்..“
படுக்கையில் உட்கார்நதபடி யோசனையில் ஆழ்ந்தேன்.
வெளிப்படையாகச் சொல்லி ஆற்றிக்கொள்வதில் ஆறுதலுண்டு.
இப்படி வெளிக்காண்பிக்காமலே உள்படும் வேதனைதான்
சகிக்க முடியவில்லை. நிம்மதிற்ற உறக்கத்தில் கண்கள் செருகின.

நாளை காலை எழுந்ததும் அம்மாவிடம் சொல்லிவிடுகிறேன்.
திருப்பதிக்கு போவது முடியாது. அம்மா சும்மாயிருக்க மாட்டாள்.
வீட்டில் ரகளை நடக்கத்தான் போகிறது. நடக்கட்டும்.
கண்டிப்பாய் நடந்தே தீரம். இருந்தும் வேறு வழியில்லை.
இதனால் தெய்வ கோபத்திற்கு ஆளானாலும் சரி. இதற்காக
அம்மாவிடமிருந்து கண் மறைவாய் இருக்கும்படி நேர்ந்தாலும் சரி, தெய்வத்திடமிருந்து ஓடும்படியாயிருந்தாலும் சரி. எங்கேயாயினும்
இருவரும் போய்விடுவோம். இதற்காக எங்கள் சுபாவம் மீறி
எப்படியிருக்க முடியும்?

அவளிடம் சொல்ல, அவளையெழுப்புவதற்காக அவள் பக்கம்
கையை நீட்டினேன். அவள் இடம் வெறிச்சென்றிருந்தது.
விழித்துக்கொண்டேன்.
அவளைக் காணோம். “வருகிறேன்“ என்று போனவள் இன்னும்
திரும்பி வரவில்லை.
வரமாட்டாள் என்றும் எனக்கு உடனே தெரிந்துவிட்டது.
எனக்குத் தோன்றியதே தீர்மானமாய் கடியாரத்தில் மணி அடித்தது. கூவிக்கொண்டே கீழே ஓடினேன். அம்மா விசுப்பலகையினின்று
திடுக்கென்று விழித்துக்கொண்டு எழுந்தாள்.
“என்னடா?“
“அவளைக் காணோமே அம்மா!“
“என்னடா பேத்தறே?“
“அவளைக் காணோமே அம்மா!“ அம்மா பரக்கப் பரக்க வாசலுக்கும கொல்லைப்புறத்திற்கும் ஓடினாள்.
அவள் எங்கே அம்மா அகப்படப் போகிறாள்!

“என்னடா அம்பி உக்காந்துட்டே? தேடேண்டா. என்னாவது
பண்ணேண்டா. ஐயோ! என் குழந்தையைக் காணோமேடா!“
எனக்குப் பெரும் ஓய்ச்சல் கண்டுவிட்டது.
“பிரயோசனமில்லையம்மா, அவள் அகப்படமாட்டாள். அவளுடைய
உயிரற்ற உடலை நாம் காணக்கூட அவள் இசையாள்.
சுறா மீன்களுக்கு இரையானாலும் ஆவேனென்று, சமுத்திரத்திற்குள்
நடந்து போய்விட்டாள். கடவுளுக்கு மயிரைக் கேட்டாய்.
உயிரையே கொடுத்துவிட்டாள் போ! அவள் சொல்லிக் கொண்டு
தான் போனாள். எனக்குத்தான் தெரியவில்லை.
ராகம் முடிந்துவிட்டது.

இனி, வீணை வீணையாய் உபயோகப்படாது. அடுப்பில்
வைக்கத்தான் சரி. நான் என்னுள் இறந்துவிட்டேன். இறந்தே
போனேன். நீ எதைச் சொன்னாலும் கேட்கத்தயார்…“

.
…………………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.