
………………………..
தமிழ்நாட்டுக்கே சோறு போடும் டெல்டா மாவட்டங்களில்,
இந்த வருடமும் தூர்வாரும் பணிகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்திருக்கின்றன ….
காவிரி டெல்டா மாவட்டங்களிலுள்ள ஆறு, வாய்க்கால்
உள்ளிட்ட நீர்நிலைகளில் தூர்வாரும் பணிக்காக
80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு,
4,965 கிலோமீட்டர் தூரத்துக்கு 683 இடங்களில் தூர்வாரும்
பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. முதல்வர் மு.க.ஸ்டாலினும்
இந்தப் பணிகளை ஆய்வுசெய்வதற்காகக் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு அண்மையில் விசிட் செய்தார்.
இந்த நிலையில், தூர்வாரும் பணி குறித்துப் பேசுகிற
டெல்டா விவசாயிகள், ‘‘வழக்கம்போல் இந்த ஆண்டும்
தூர்வாரும் பணிகளில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளன.
2 ஆண்டுகளுக்கு முன் எதிர்க்கட்சியில் இருக்கும்போது கூறிய குற்றச்சாட்டுகளை இப்போது இவர்களே ஆளும் கட்சியாக இருக்கும்போது இன்னமும் சாமர்த்தியமாக, ஓட்டைகள் வெளியே தெரியாமல் செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனாலும் ……!!! அதே ஊழல் … அதே முறைகேடுகள்…
ஆறு, சாலை ஓரங்களிலுள்ள பிரதான வாய்க்கால்களில்
மட்டுமே ஓரளவுக்குத் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுள்ளன.
அந்த இடங்களை மட்டும்தான் முதல்வருமே பார்வையிட்டார்’’ என்கின்றனர்.
பொதுப்பணித்துறையில் பணியாற்றும் சில நேர்மையான அலுவலர்களிடம் பேசியதற்கு – ‘‘ஒரு கிலோமீட்டர் தூரமுள்ள வாய்க்காலை ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் நான்கு
நாள்களில் தூர்வாரி முடித்தார்கள். ஒரு நாளைக்கு
அதிகபட்சம் எட்டு மணி நேரம் வீதம், மொத்தம் 32 மணி நேரம்
வேலை நடந்துள்ளது.
ஒரு மணி நேரத்துக்கு அதிகபட்சம் ஜே.சி.பி வாடகை
ஆயிரம் ரூபாய். ஆக மொத்தம் 32,000 ரூபாய்தான் செலவு.
ஆனால் ஒரு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப்படி அதிகாரிகள், ஆளுங்கட்சிப் பிரமுகர்களின்
கமிஷனுக்கும் சேர்த்துத்தான் திட்ட மதிப்பீடே
போடப்படுகிறது’’ என்றார்கள்.
தமிழகக் காவிரி உழவர்கள் பாதுகாப்புச் சங்கத்தின்
செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமல்நாதன் பேசும்போது,
‘‘பதிவேடு, வரைபடங்களில் உள்ளபடி வாய்க்கால்களின்
இயல்பான ஆழ, அகலத்துக்குத் தூர்வாரப்படுவது இல்லை.
கச்சிதமாக வேலை முடிந்ததுபோலக் காட்ட, ஒரு பகுதியில் முழுமையாகப் புதர்களை அப்புறப்படுத்துவது, அதே
பகுதியில் வாய்க்காலின் வேறு இடத்தில் அரைகுறையாகத் தூர்வாருவது என, திட்டமிட்டு முறைகேடு செய்பவர்கள் பல டெக்னிக்குகளைக் கையாள்கின்றனர்’’ என்றார்.
இதைப்பற்றி விகடன் செய்தி தளம் சொல்கிறது –
விவசாயிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் பெற,
தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும்
துறைச் செயலாளர் ஆகியோரைத் தொடர்புகொள்ள
முயன்றோம். ஆனால், அவர்கள் நமது அழைப்பை
ஏற்கவில்லை. இதையடுத்து தமிழ்நாடு பொதுப்
பணித்துறையின் தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தியிடம் பேசினோம்.
“தூர்வாரும் பணிக்காக நிதி ஒதுக்கப்பட்ட பகுதிகளில்,
100 சதவிகிதம் பணி நிறைவடைந்துள்ளது. பொதுவாக
அனைத்து ஆறு, வாய்க்கால் பகுதிகளிலும் தூர்வாரும் பணி மேற்கொள்வதென்பது சாத்தியமில்லை.
தண்ணீர் செல்ல முடியாத நிலையிலுள்ள இடங்களை
ஆராய்ந்து அங்குதான் பணி மேற்கொள்ளப்படும். இதுதான் நடைமுறைச் சாத்தியமும்கூட. மற்றபடி தூர்வாரும்
பணியில் எந்தவொரு முறைகேடும் நடைபெறவில்லை”
என ஒட்டுமொத்தமாக மறுத்தார்.
இந்த விளக்கங்கள் எந்த அளவிற்கு
ஏற்கத்தக்கவை …?
.
………………………………………………….