
………
அப்போதெல்லாம், புரட்சித்தலைவர், மக்கள் திலகம்
என்கிற பட்டங்கள் எல்லாம் கிடையாது…
எங்களுக்கு அவர் “எம்ஜியார்” மட்டும் தான்…!
11-12 வயதிருக்கும் எனக்கு – முதல் தடவையாக
நான் எம்ஜியார் படம் பார்த்தபோது.
அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாக்களில் மூன்று ஹீரோக்கள்
இருந்தார்கள். மூவருக்கும் மூன்றெழுத்து தான்…
சிவாஜி, எம்ஜியார், ஜெமினி…
இதில் வேடிக்கை என்னவென்றால்
சிவாஜியை பிடித்தவர்களுக்கு எம்ஜியாரை பிடிக்காது.
எம்ஜியாரை பிடித்தவர்களுக்கு சிவாஜி
பெயரைச் சொன்னாலே எரிச்சல்.
இதில் அதிருஷ்டம் செய்தவர்ஜெமினி தான்.
அவரை கொண்டாடியவர்களும் இல்லை –
வெறுத்தவர்களும் இல்லை….He was a soft hero..!
எனக்கு என்னவோ – சிவாஜியையும் பிடிக்கும்…
எம்ஜியாரையும் பிடிக்கும்…
ஆனால், என் அண்ணாக்களும் ( 4 பேர்…!!! ), நண்பர்களும்
என்னை ஒரு விசித்திர ஜந்துவாகவே பார்த்தார்கள்.
அவர்களில் ஒருவனைத்தவிர மீதி எல்லாருமே சிவாஜி பிரியர்கள்….
சிவாஜியை பிடிப்பவனுக்கு எப்படி எம்ஜியாரை பிடிக்க முடியும்
என்று என்னிடம் சண்டை பிடிப்பார்கள்…..!!
ஒருவரை பிடிப்பதால் இன்னொருவரை பிடிக்கக்கூடாது
என்பது சட்டமா என்ன ?
என் ரசனை எனக்கு …
ராஜா, ராணி – சரித்திரப்படம் என்றால் –
அவை எம்ஜியாரை தவிர வேறு யாருக்கும் பொருந்தாது –
என்பது என் அபிப்பிராயம்.
இன்று வரை அந்த அபிப்பிராயம் மாறவில்லை…
சிவாஜியை வேறு விஷயங்களுக்காக பிடிக்கும் –
அற்புதமான வசன உச்சரிப்பு, தமிழ், அவரது கம்பீரக்குரல்,
வித்தியாசமான முகபாவங்கள்,
மாறுபட்ட கதாபாத்திரங்கள்…
எனவே எனக்கு அன்றிலிருந்து இன்று வரை
இருவரையுமே பிடிக்கும்.
ஜெமினியை அந்த காலத்தில் நாங்கள் எல்லாம்
அங்கீகரிக்கவே இல்லை.
ஆனால், பிற்காலத்தில் பழைய படங்களை பார்க்கும்போது,
ஜெமினி மட்டுமே மிக இயற்கையாக (underplay) நடித்திருப்பதும்,
மற்ற இருவரின் நடிப்பிலும் மிகைத்தன்மையும் இருப்பதையும்
உணர முடிந்தது.
காலங்கள் மாறும்போது, ரசனைகளும் மாறுகின்றனவே…!
அந்த காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த எம்ஜியார் படம்
“மலைக்கள்ளன்” – இப்போதும் எனக்கு பிடித்த
பாடல்களில் ஒன்று, நாமக்கல் கவிஞரின் அந்த
“எத்தனை காலந்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே ” என்று எம்ஜியார் பாடும் பாடல்.
பின்னர் நிறைய படங்கள் – எல்லாம் ராஜா ராணி,சரித்திர
படங்கள். மதுரை வீரன், மகாதேவி, மன்னாதி மன்னன்……
நாடோடி மன்னன் – என்று வரிசையாக….
எம்ஜியாருக்கு பிடித்த பாடலாக “அச்சம் என்பது மடமையடா”
பாடலை கூறுவார்கள்…எனக்கும் மிகவும் பிடித்த பாடல் இது…
இளமையில் நான் பெரும்பாலும், வடக்கேயே படித்தாலும்,
ஒரு மூன்று வருட காலம் சென்னையில் படித்தேன்.
அந்த சமயத்தில் என் நெருங்கிய தோழர்களில் ஒருவர் –
திமுகவை உருவாக்கிய ஐந்து தலைவர்களில் ஒருவரான
என்.வி.நடராஜன் அவர்களின் மகன் என்விஎன் பன்னீர்செல்வம்…!
அவன்(ர்), தந்தை திமுகவில் முக்கிய தலைவர்களில்
ஒருவராக இருந்ததால், எம்ஜியார், அவருக்கும் நன்கு
பழக்கமானவராக இருந்தார். எம்ஜியாருக்கு
கட்சியில் அப்போது இருந்த செல்வாக்கு பற்றி எல்லாம்
பன்னீர்செல்வத்தின் மூலம் அப்போதே எனக்கு தெரிய வந்தது….
பின்னர் நான் வடக்கே போய் விட்டேன்…
எம்ஜியார் முதலமைச்சராக இருந்தபோது நான்
பெரும்பாலும் வடக்கேயே இருந்தேன். இடையில்
தமிழ்நாட்டிலும் சில ஆண்டுகள் இருந்தேன்… அவர்
மறைந்த சமயத்தில் இங்கே, திருச்சியில் தான் இருந்தேன்.
ஒரு திரைப்பட நடிகராகவோ,
ஒரு அரசியல்வாதியாக,
முதலமைச்சராகவோ,
எம்ஜியார் அவர்களை ரசித்ததை விட,
விரும்பியதை விட –
ஒரு மிகச்சிறந்த மனித நேயமுள்ள மனிதராக,
தான் சந்திக்கும் அனைவரையுமே
நேசித்த ஒரு மனிதராக,
அடுத்தவருக்கு தெரியாமலே,
வெளியே சொல்லாமலே –
பலருக்கும் உதவி புரியக்கூடிய
ஒரு நிஜ ஹீரோவாக,
தனக்கென்று எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளாமல்,
தான் சம்பாதித்ததை எல்லாம்
பிறருக்காகவே செலவழித்த ஒரு
அற்புதமான கொடைவள்ளலாக, ஒரு நல்ல மனிதராக –
என் இதயத்தில் நிறுத்திக் கொள்ளவே நான் விரும்புகிறேன்…
பிற்காலத்தில், இரண்டு சமயங்களில்
அவரை மிக நெருக்கத்தில்
பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
ஸ்ரீரங்கத்தில் ராஜகோபுரம் உருவாகிக் கொண்டிருந்தது….
கோபுரத்தில், 200 அடி உயரத்தில் தொழிலாளர்கள்
வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்….
கும்பாபிஷேகம் நெருங்கிக் கொண்டிருந்ததால் தீவிரமாக
வேலை நடந்து கொண்டிருந்தது….
மஹாராஷ்டிராவில் பணி புரிந்து கொண்டிருந்த நான் –
அந்த சமயத்தில் விடுமுறையில் அங்கே போயிருந்தேன்…
ஒரு ஞாயிறு காலை சுமார் பத்து மணி இருக்கும் –
கோபுரத்திற்கு கீழே – காந்திஜி சிலையருகே –
திடீரென்று ஒரு கார் வந்து நின்றது….
ஒரே சமயத்தில் முன்,பின் கதவுகள் திறந்தன.
ஆச்சரியம் – நம்பவே முடியவில்லை…
எந்தவித பந்தாவோ, போலீஸ் பாதுகாப்போ இல்லாமல் –
எம்.ஜி.ஆர். (கூடவே இதயம் பேசுகிறது மணியனும்…)
காரிலிருந்து வெளியே வந்தார்….
திடீரென்று அந்த இடமே பரபரப்பானது..
சுற்று முற்றும் பார்த்தார்… மேலே கோபுரத்தை பார்த்தார்…
வலது கையைத் தூக்கி மேலே பார்த்துக் கொண்டே அசைத்தார்..
மேலே, கோபுரத்தின் உயரத்தில் வேலை செய்துகொண்டிருந்த
கட்டிடத்தொழிலாளர்களுக்கு ஒரே ஆச்சரியம்,
மகிழ்ச்சி, ஆரவாரம் –
“வாத்யாரே” “வாத்யாரே” என்று
மேலேயிருந்து பலத்த கூக்குரல்கள்…!!!
மேலே பார்த்து – எல்லாருக்கும் வணக்கம் சொன்னார்…
எல்லா பக்கமும் கைகுவித்து
அனைவருக்கும் வணக்கம் சொன்னார்.
அடுத்த நிமிடம் காரில் ஏறினார்…. பறந்து விட்டார்…
ஒரே நிமிடத்தில் அந்த இடத்தையே மகிழ்ச்சி வெள்ளத்தில்
ஆழ்த்தி விட்டு பறந்து விட்டார்.
எம்ஜியாரே அக்கறையுடன் வந்து பார்த்த மகிழ்ச்சியில் –
பின்னர் பணி படு மும்முரமாக நடந்தது….!
பின்னர் ஒரு தடவை எம்ஜிஆர் அவர்களுடன்
ஒரே மேடையில்,
அலுவலக நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற சம்பவம்….
(அதைப்பற்றி இதே விமரிசனம் தளத்தில்
முன்பொரு தடவை விவரமாக எழுதி இருக்கிறேன்…)
சுமார் இரண்டு மணி நேரங்கள் மேடையில், அவருக்கு
மிக அருகாமையில், இரண்டடி தூரத்தில் நின்றுகொண்டு,
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த
மகிழ்ச்சிகரமான, மறக்கமுடியாத அனுபவமும் கிடைத்தது….
ஒரு மிகப்பெரிய ஆளுமையின் அருகாமையை
அப்போது நன்கு உணர முடிந்தது….
எங்கேயோ, தொலைதூரத்தில்,
எந்தவிதத்திலும் அவருடன் சம்பந்தம் இல்லாத
என் போன்ற ஒருவனுக்கு
தன்னுடைய இருப்பின் (simply by his presence ) மூலமே
இவ்வளவு நெகிழ்ச்சியையும், மகிழ்ச்சியையும்
அவரால் கொடுக்க முடிந்தால் –
அவருடன் வருடக்கணக்கில் நெருங்கிப்பழக,
சேர்ந்து உழைக்க – அவரது சகல பரிமாணங்களையும்
கண்டு அனுபவிக்க – வாய்ப்பு கிடைத்தவர்கள்
அவரைப்பற்றி எத்தகைய நினைவுகளில் இருப்பார்கள்…?
எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா
கொண்டாடப்படும் இன்றைய தினம் அவரைப்பற்றி
அவசியம் எழுத வேண்டும் என்று தோன்றியது.
பத்திரிகைகளின் மூலமும்,
மற்ற பிரபலங்களின் மூலமும் தெரியாத
எதை நான் புதிதாகச் சொல்லி விடப்போகிறேன்…?
எனவே தான், அவரைப்பற்றிய
என் நினைவுகளைப்பற்றி சொல்ல முனைந்தேன்….
“வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி,
மக்கள் மனதில் நிற்பவர் யார்….? ”
கட்சி, அரசியல், வகித்த பதவிகள் –
இவற்றை எல்லாம் தாண்டி –
எத்தனை ஆண்டுகள் ஆனாலும், மக்கள் மனதில்
நிலைத்து நிற்கக்கூடிய மிகச்சில மனிதர்களில்
எம்.ஜி.ஆர். அவர்களும் ஒருவர்….!!!
( 5 வருடங்களுக்கு முன் நான் இதே தளத்தில் எழுதிய
இந்த இடுகையை சில நண்பர்கள் எடுத்து
படித்திருப்பதை பார்த்து, நானும் ஒருமுறை படித்தேன்.
எனக்கும் மிகவும் பிடித்திருந்தது. எனவே இங்கே
மறுபதிவு……!!!)
.
…………………………………………………..
//அவருடன் வருடக்கணக்கில் நெருங்கிப்பழக, சேர்ந்து உழைக்க – அவரது சகல பரிமாணங்களையும் கண்டு அனுபவிக்க – வாய்ப்பு கிடைத்தவர்கள்
அவரைப்பற்றி எத்தகைய நினைவுகளில் இருப்பார்கள்…?// – வெகு நெருக்க்மாக இருந்தவர்களில் சிலர், அவரின் கடைசி காலத்தில் வலிமை குன்றி இருந்த நிலையைக் கண்டு மனம் வருந்தினர், ஆனால் எம்.ஜி.ஆர், மற்றவர்கள் முன்னால் தன் இமேஜை விட்டுக்கொடுக்காமலேயே இருந்தார். எம்ஜியாரிடமும், சுயலாபத்துக்காக அரசியலில் ஒட்டிக்கொண்டவர்கள், தங்கள் அரசியல் லாபத்துக்காக ஜா/ஜெ என்று அணிமாறி பிறகு தங்கள் வாழ்க்கைக்காக அதிமுகவின் எதிரிக்கட்சியான திமுகவில் சேர்ந்து தங்கள் வாழ்க்கையை வளம்பெறச் செய்துகொண்டனர்.
எம்ஜிஆரிடம் இருந்த விசுவாசம் அளவு, கருணாநிதியிடம் (அவரைச் சூழ்ந்திருந்தவர்கள்) யாருமே இல்லை என்பதுதான் சோகம்.
//“வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி,
மக்கள் மனதில் நிற்பவர் யார்….? ”
கட்சி, அரசியல், வகித்த பதவிகள் –
இவற்றை எல்லாம் தாண்டி –
எத்தனை ஆண்டுகள் ஆனாலும், மக்கள் மனதில்
நிலைத்து நிற்கக்கூடிய மிகச்சில மனிதர்களில்
எம்.ஜி.ஆர். அவர்களும் ஒருவர்….!!!
// True