

……………………
ரெயில் பயணத்தின்போது மிகவும் உதவும் வகையில்
பல வசதிகள் அண்மைக் காலங்களில்
ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இது குறித்த
தகவல்கள் பெரும்பான்மையான மக்களுக்கு
தெரியப்படுத்தப்படவே இல்லை… (அதிகம் பயணிகளுக்கு
தெரிந்தால் தங்களுக்கு அநாவசியமாக கூடுதலான
பணிச்சுமை ஏற்படுமென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள்,
பணியாளர்கள் நினைத்திருப்பார்களோ என்னவோ..? )
எனக்கு தெரிய வந்த அத்தகைய வசதிகள் பற்றிய
விவரங்களை, நமது வாசக நண்பர்களின் பார்வைக்கு
கொண்டு வந்திருக்கிறேன்…. கீழே –
……………………………….
நீண்ட தூர ரயில் பயணங்களில் பயணிகள்
பல்வேறு விதமான பிரச்சனை சந்திக்கிறார்கள்.
திருட்டு, கடத்தல் உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளிட்ட
குற்ற சம்பவங்களும், கோச்களில் தண்ணீர்
இல்லாமல் போவது, டாய்லெட் சுத்தமாக இல்லாமல்
இருப்பது என பல பிரச்சனைகளை பயணிகள்
அன்றாடம் சந்தித்து வருகின்றனர்….
ரயில் பயணிகள் பலருக்கு இந்த பிரச்சனைகளை
யாரிடம் சொல்லி புகார் அளிக்க வேண்டும் இதற்கு
எப்படி தீர்வு காண வேண்டும். ஓடும் ரயிலில் ஒரு
பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு எப்படி உடனடியாக தீர்வு
காண வேண்டும் உள்ளிட்ட விஷயங்கள் பலருக்கு
தெரியவில்லை.
ரயில்வே நிர்வாகம் இதற்காக என்ற பிரத்தியேகமாக
ஒரு தளத்தை உருவாக்கி வைத்துள்ளது. Rail MADAD
(Mobile Application for Desired Assistance
During travel) என்ற பெயர் கொண்ட இந்த ஆப்
மூலம் ரயில் பயணத்தின் போது நமக்கு தேவைப்படும்
உதவிகளை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
உதாரணமாக ரயில் பயணித்தின் போது நோயாளிகள்
யாருக்காவது அவசரமாக மருத்துவ உதவி
தேவைப்பட்டால் இந்த ஆப் மூலம் மருத்துவ உதவிகளை
முடிந்தால் நேரடியாகவோ அல்லது போன் மூலமோ
வீடியோ கால் மூலமோ பெற முடியும். இது மட்டுமல்ல
திருட்டு, கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தாலும்
இந்த ஆப் மூலம் போலீசாரின் உதவியை நாட முடியும்.
ரயில் பெட்டியில் பயணிக்கு சக பயணி தொந்தரவு
கொடுத்தால், பெண்களுக்கு பயணத்தின் போது
பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவானால் மக்கள்
நேரடியாக இந்த ஆப் மூலம் புகார் அளித்து போலீசாரின்
உதவியை நாட முடியும்.
இது போக ரயிலில் தொலைந்து போன பொருட்கள்
குறித்தோ, ரயிலில் கழிப்பறை சுத்தமாக இல்லை,
தண்ணீர் வரவில்லை போன்ற புகார்களையும் இந்த
ஆப்பில் செய்ய முடியும். புகார் பதிவானவுடன் புகாரின்
தன்மையை அறிந்து அந்த புகாரை பெறும் அதிகாரி
அதற்கு உரிய ரயில்வே அதிகாரிகளையோ அல்லது
ரயில்வே போலீசாரையோ தொடர்பு கொண்டு
புகார் குறித்து விளக்கமளித்து அதற்கு தீர்வு காண
சொல்லுவார்கள். இந்த புகார்களுக்கு குறிப்பிட்ட
நேரத்தில் தீர்வு காண வேண்டும் என்ற உத்தரவும்
அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இப்படியாக ஒவ்வொரு கோட்டத்திற்கும் இந்த
தளத்தில் வரும் புகார்களுக்கு தீர்வு காண்பதற்காக
பிரத்தியேகமாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் ஒரு புகார் பதிவாகிவிட்டால் அந்த புகார்
குறித்த தீர்வு கிடைக்கும் வரை அந்த புகாரின்
ஸ்டேட்டஸை அப்டேட் செய்து கொண்டே இருக்க
வேண்டும். பயணிகள் புகார் அளித்தவுடன் அந்த
புகாருக்கான எண் ஒதுக்கப்படும் அந்த புகாரின்
நிலை குறித்து அந்த எண்ணை பயன்படுத்தி
ஆன்லைன் மூலமே தெரிந்து கொள்ள முடியும்.
தமிழகத்தை தாண்டிவிட்டால் ரயில்களில் குறிப்பாக
வட இந்தியாவில் ரயில்களில் முன்பதிவு செய்து
பயணித்தாலும் முன்பதிவில்லாத பெட்டிக்கு டிக்கெட்
எடுத்தவர்கள் முன்பதிவுள்ள பெட்டியில் முன்பதிவு
செய்து பயணிக்கும் நபர்களுக்கு தொந்தரவு
செய்வார்கள் என பலர் புகார் அளித்திருப்பார்கள்
இப்படியாக வட இந்தியாவில் ரயில்
பயணத்தை மேற்கொண்டாலும் இந்த ஆப்பை
பயன்படுத்தி புகார் அளிக்கலாம்.
இப்படியாக வேறு நபர்கள் உங்கள் சீட்டை ஆக்கிரமித்து வைத்திருந்தால் நீங்கள் இந்த ஆப்பில் புகார் செய்தவுடன்
இது நேரடியாக புகார் அதிகாரிக்கு செல்லும் அவர்
நீங்கள பயணிக்கும் ரயிலில் உள்ள டிக்கெட் பரிசோதகர்
மற்றும் அந்த ரயிலில் உள்ள போலீசாருக்கு இந்த புகார்
அளித்த விபரங்களை அனுப்பி உடனடியாக நடவடிக்கை
எடுக்க உத்தரவிடுவார்.
அதை பெற்றவுடன் அதிகாரிகள் அந்த புகாரை சென்று
பார்த்து அதை உடனடியாக சரி செய்து தரவேண்டியது
அவர்கள் கடமை. குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்த
புகார்கள் சரி செய்யப்பட்டதா அல்லது அதன் நிலை
என்ன? என்பது குறித்து புகார் மைய அதிகாரிக்கு
அப்டேட் செய்ய வேண்டும்.
இது அதற்கு மட்டுமல்ல ஒருவேளை ரயிலில் பயணிக்கும்
பயணிக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டாலோ
திடீரென அவரது உடல்நிலை யாரும் எதிர்பாராத
வகையில் சிரியஸ் ஆகிவிட்டாலோ உடனடியாக
இதில் புகார் அளிக்கப்படும் பட்சத்தில் அடுத்த
ரயில்நிலையத்தில் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, ஆம்புலன்ஸ் உதவி உள்ளிட்டவைற்றையும்
பெற்றுக்கொள்ள முடியும். இன்று இந்த ஆப் குறித்த
விழிப்புணர்வு மிகவும் குறைவாக தான் இருக்கிறது.
மக்கள் பலர் இந்த ஆப்பை முறையாக
பயன்படுத்துவதில்லை.
ரயில் பெட்டிகளில் தண்ணீர் இல்லை என்ற புகார்
வந்தால் அடுத்த தண்ணீர் வசதி கொண்ட ரயில்
நிலையத்திற்கு ரயில்கள் சென்றதும் அங்கு தண்ணீர்
நிரப்பபடும். இந்த புகார் அளிக்கும் வசதி
செல்போன் ஆப், ஆன்லைன் வெப்சைட்களில்
மட்டுமல்ல – சாதாரண செல்போன் வைத்திருப்பவர்
களிடமும் இருக்கிறது.
ஆன்லைன் ஆப் அல்லது வெப்சைட் பயன்படுத்த
முடியாதவர்கள் அல்லது தெரியாதவர்கள் தங்கள்
செல்போனில் 139 என்ற ரயில்வே . உதவி எண்ணிற்கு
போன் செய்தும் உங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.
இதற்கு ஸ்மார்ட் போன்கள் தான் இருக்க வேண்டும்
என்று இல்லை எந்த செல்போனிலிருந்து
வேண்டுமானாலும் புகாரளிக்கலாம் தமிழ், ஆங்கிலம்,
ஹிந்தி என 12 மொழிகளில் இந்த சேவை
வழங்கப்படுகிறது. இது நேரடியாக ஐவிஆர்எஸ்க்கு
கனெக்ட் ஆகும். இந்த ஆப் மத்திய அரசின்
உமாங்க் அப் உடனும் இணைக்கப்பட்டுள்ளது.
அதன் மூலமாகவும் பயன்படுத்தலாம்
அதிலிருந்து நீங்கள் தேர்வை செய்யும் மொழியை
பொருத்து அந்த மொழி தெரிந்த ஒரு அதிகாரிக்கு
கனெக்ட் ஆகும். அவரிடம் உங்கள் புகார்களை
பதிவு செய்யலாம்.
.
………………………………………………..
சமீப காலங்களில் நீண்ட தூர இரயில் பயணத்தில் நான் கண்ட நல்ல மாற்றங்கள்..
டாய்லெட் க்ளீனாக இல்லை என்றால் போன் மூலமாக கம்ப்ளெயிண்ட் செய்தால் உடனுக்குடன் சரி செய்வது. தண்ணீர் வரவில்லை என்றால் அடுத்த ஸ்டேஷனில் தண்ணீர் நிரப்புவது. இவற்றைச் செய்தபிறகு, யார் கம்ப்ளெயிண்ட் செய்தார்களோ அவர்களிடம் செய்துவிட்டோம் என்று சொல்வது, தேவையானால் கூட்டிச் சென்று காட்டுவது… பெட்டியில் குப்பை இருந்து கம்ப்ளெயிண்ட் செய்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பது. இதுபோலவே ப்ளக் வேலை செய்யலை என்றாலோ மற்றவை வேலை செய்யவில்லை என்றாலோ அதனைச் சரி செய்வது. உணவு பற்றிய கம்ப்ளெயிண்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பது. நமக்குத் தேவையானால் முன்கூட்டியே லிஸ்டில் உள்ள ரெஸ்ட்ராரண்டுக்கு உணவு ஆர்டர் செய்து, அந்த ஸ்டேஷன் வரும்போது அவர்கள் கொண்டுவந்து தருவது எனப் பல முன்னேற்றங்கள்.
இதுதவிர, பெண் பயணி ஒவ்வொருவரையும் ஒன்று அல்லது இரு பெண் போலீஸ் வந்து பேசி, இருக்கையின் எண்ணைக் குறித்துக்கொண்டு, அவர்களை போட்டோ எடுத்துக்கொண்டு, ஒரு நம்பரைக் கொடுத்து, எமெர்ஜென்சியில் அந்த நம்பருக்கு போன் செய்யச் சொல்லுவது. இதனை ராஜதானியிலும் இன்னொரு இரயிலிலும் நான் எக்ஸ்பீரியன்ஸ் செய்தேன்.
வளர்ந்த நாடுகளில் இவைகள் அடிப்படை உரிமைகள். இந்தியாவும் அதனை நோக்கிச் சென்றுகொண்டிருப்பது பாராட்டத்தக்கது. முதல்படியாக, உணவு அராஜகங்களை 6 வருடங்களுக்கு முன்னால் குறைக்க ஆரம்பித்ததே மாற்றங்களின் ஆரம்பம்.