வேண்டுமென்றே அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவோர் ……

…………………..

அதிகாரம் செலுத்தக்கூடிய பதவிகளில் தவறான மனிதர்கள் இருந்தால், அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு உதாரணம் இந்த நிகழ்வு. சமீர் வாங்கடே மும்பை மண்டல போதைப்பொருள் தடுப்புத் துறை இயக்குநராக இருந்தவர். இவரது பணிக்காலத்தில்தான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு சொகுசுக்கப்பலில் போதை மருந்து பயன்படுத்தியதாக ஒரு கும்பல் கைது செய்யப்பட்டது. பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகனான ஆர்யன் கானும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர். அந்த நேரத்தில், ஆர்யன் கான் போதைப் பொருள் பயன்படுத்தியதற்கான ஆதாரம் இருந்ததாகவும், சர்வதேசப் போதைக் கடத்தல் கும்பலுடன் அவருக்குத் தொடர்பு இருந்ததாகவும் நீதிமன்றத்தில் போதைப்பொருள் தடுப்புத் துறை தெரிவித்தது. இதனால் ஆர்யனுக்கு இரண்டு முறை ஜாமீன் மறுக்கப்பட்டது. மூன்று வாரங்களுக்குப் பிறகே அவர் சிறையிலிருந்து வெளியில் வர முடிந்தது.

ஷாருக்கான் மற்றும் ஆர்யன் கான் பற்றி அந்த நேரத்தில் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. எனினும், ‘பிரபலங்களின் பெயரைக் கெடுப்பதற்காகவும், மிரட்டிப் பணம் பறிப்பதற்காகவும் போதைப்பொருள் வழக்கு என்ற அஸ்திரத்தை சமீர் வாங்கடே பயன்படுத்துகிறார்’ என்று மகாராஷ்டிர அமைச்சர் ஒருவரே அந்த நேரத்தில் குற்றம் சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு அடுத்து சொகுசுக் கப்பல் வழக்கை டெல்லியைச் சேர்ந்த போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் புலனாய்வுப் பிரிவு ஏற்று விசாரிக்க ஆரம்பித்தது. இப்போது இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆர்யன் கானும் இன்னும் ஐந்து பேரும் குற்றமற்றவர்கள் என்று போதைப்பொருள் தடுப்புத் துறை இப்போது தெரிவித்து, அவர்களை வழக்கிலிருந்து விடுவித்துள்ளது.

சொகுசுக்கப்பலில் நடைபெற்ற ரெய்டை வீடியோ எடுக்கவில்லை. ஆர்யன் கான் கைது செய்யப்பட்டபோது அவரிடம் போதைப் பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அப்போது அவர் போதையிலும் இருக்கவில்லை. சட்டப்படி செய்யவேண்டிய மருத்துவப் பரிசோதனைகளையும் ஆர்யன் கானுக்குச் செய்யவில்லை. ‘போதை மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஆர்யன் எங்களைக் கண்டித்தார்’ என்று நண்பர் ஒருவர் வாக்குமூலம் கொடுத்தபிறகும், ‘ஆர்யனுக்காக அவர் நண்பர் ஒருவர் போதை மருந்து வாங்கி வைத்திருந்தார்’ என்று சொல்லி அவரைக் கைது செய்தார் சமீர் வாங்கடே. இப்போது, ‘ஆர்யனை வேண்டுமென்றே வழக்கில் சிக்கவைக்க சமீர் வாங்கடே திட்டமிட்டிருக்கிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று போதைப்பொருள் தடுப்புத் துறை அறிவித்திருக்கிறது.

தனக்கு இருக்கும் அதிகாரத்தை உள்நோக்கத்துடன் பயன்படுத்தி ஆதாரமே இல்லாமல் ஒருவர்மீது குற்றம் சுமத்தி, அவரைச் சிறையிலும் தள்ள ஒருவரால் முடியும் என்றால், அந்த அதிகாரம் எல்லோருக்குமே அச்சுறுத்தலாக மாறுகிறது. இந்தப் பொய் வழக்கால் அவர்கள் அடைந்த மனவேதனைக்கும் சந்தித்த அவதூறுகளுக்கும் எந்த இழப்பீடும் நியாயம் சேர்க்க முடியாது.

நாடே அறிந்த ஒரு பிரபலத்தின் மகனுக்கே இப்படி நேர்கிறது என்றால், எளிய மக்களின் நிலைமை என்ன என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. ஷாருக் குடும்பம் சட்டப்போராட்டம் நடத்தி மகனை மீட்க முடிந்தது. இதுபோன்ற பொய் வழக்குகளில் சிக்கி எத்தனை பேர் சிறைகளில் வாடுகிறார்களோ என்ற வேதனை எழுகிறது. தங்கள் சொந்த விருப்புவெறுப்புகளுக்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதிகார முறைகேடுகளால் அப்பாவிகள் பாதிக்கப்படாமல் தடுக்க சட்ட வழிமுறைகளை உடனடியாக உருவாக்க வேண்டும்.
( நன்றி – விகடன் தலையங்கம் ….!!! )

பி.கு. –
‘ஆர்யனை வேண்டுமென்றே வழக்கில் சிக்கவைக்க
சமீர் வாங்கடே திட்டமிட்டிருக்கிறார்….
அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ – என்று போதைப்பொருள்
தடுப்புத் துறை இப்போது அறிவித்திருக்கிறது –

இதற்கு சமீர் வாங்கடே மட்டும் தான் காரணமா … ?
இத்தனையும் நடக்கும் வரை அவரது தலைமை அலுவலகமான –
போதைப்பொருள் தடுப்புத் துறை என்ன செய்து கொண்டிருந்தது …?
ஏன் உடனடியாக தலையிடவில்லை …?
அவர்களும் மறைமுகமாக இதற்கு துணை நின்றனரா ……?

.

………………………………………………………………………………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to வேண்டுமென்றே அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவோர் ……

 1. Tamil சொல்கிறார்:

  விசாரணை அதிகாரி தவறு செய்திருப்பார் என்று நான் நம்பவில்லை.அவர் பலிகடா ஆக்கப்பட்டு உள்ளதாகவே எனக்குத் தோன்றுகிறது

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Tamil,

   என் கருத்தும் அதுவே தான்.
   அரசியல்வாதிகளின் விருப்பத்தை தான்
   அவர் நிறைவேற்றி இருப்பார்.
   அவர் மீது நடவடிக்கை என்பது
   வெறும் நாடகமே……!!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.