கற்பனையை மிஞ்சிய ஒரு நிஜ சம்பவம் – DNA என்னும் விஞ்ஞான மந்திரம் செய்த ஒரு அற்புதம் …

……..

இது 2021-ல்

……………….

இது 1979-ல்

………….

கோவையில் 70-களில் ப்ளூ மௌண்டெயின் என்கிற ஆதரவற்றோர்
இல்லத்தை மேரி காத்தரீன் என்பவர் நடத்தி வந்துள்ளார். அங்கு
விஜயா, ராஜ்குமார் என்கிற இரு குழந்தைகளை அவர்களின்
பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். விஜயாவும் ராஜ்குமாரும்
உடன் பிறந்தவர்கள் ஆவர். இவர்களின் தந்தை பெயர் அய்யாவு
தாய் பெயர் சரஸ்வதி.

ராஜ்குமாரை டென்மார்கைச் சேர்ந்த தம்பதி தத்தெடுத்துச் சென்ற
நிலையில் விஜயாவை அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தம்பதி
தத்தெடுத்துச் சென்றுள்ளனர்.

ராஜ்குமாரின் தற்போதைய பெயர் கேஸ்பர் ஆண்டர்சன்,
விஜயாவின் தற்போதைய பெயர் டயான் விஜயா கால்.

1979-ம் ஆண்டு பிரிந்த ராஜ்குமாரும் விஜயாவும் 43 ஆண்டுகள் கழித்து
மீண்டும் சந்தித்துள்ளனர். அப்போது இவர்களைப் பற்றி ஆவணப்படம்
ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அதில் டயான் பேசுகையில் எனக்கு மூணு வயசு இருந்தப்ப என் அம்மா ஆசிரமத்துல கொண்டு வந்து விட்டுட்டு இங்கேயே இரு உனக்கு சாப்பிட வாங்கிட்டு வரேண்னு சொல்லிட்டு போனாங்க. நான் போகாதீங்கனு அழுதேன். அது தான் நான் என் அம்மாவை கடைசியா பார்த்தது என்றார்.

டயான் 1979-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ம் தேதி கோவையிலிருந்து
தத்தெடுக்கப்பட்டு அமெரிக்கா அழைத்து செல்லப்பட்டார். கேஸ்பர் அதே
பிப்ரவரியில் 9-ம் தேதி தத்தெடுக்கப்பட்டு டென்மார்க் அழைத்துச்
செல்லப்பட்டார்.

டயான் தனக்கு ஒரு தம்பி இருந்ததை நன்கு நினைவில் வைத்துள்ளார்.
ஆனால் கேஸ்பர் தத்தெடுக்கப்படும் போது மிக இளம் வயது என்பதால்
தனக்கு ஒரு அக்கா இருந்தது நினைவிருக்கவில்லை.

வெள்ளைக்கார நாட்டில் ஒரு வெள்ளைக்கார குடும்பத்தில் வளர்ந்தபோது மிகவும் அந்நியமாக உணர்ந்தேன். என் அம்மாவின் நினைவு என்னைவிட்டு அகலவில்லை. இந்தியாவைப் பற்றிய நினைவு எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் என்னை தத்தெடுத்த குடும்பம் என்னை மிகவும் சிறப்பாக பார்த்துக் கொண்டார்கள் என்கிறார் டயான்.

கேஸ்பர் பேசுகையில் `ஐரோப்பாவுல தத்தெடுக்கப்பட்டாலும் நான்
இந்தியாவைச் சேர்ந்தவன் என்பதை என் தோல் நிறமே அடையாளப்படுத்திடும்.


நான் தத்தெடுக்கப்பட்டது எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும்.
ஆனால் என் வேர்களை தேடிச் செல்வதற்கான சந்தர்ப்பம் எனக்கு அமைஞ்சதே இல்லை. 2015-ம் வருஷம் தான் முதல் முறையா தமிழ்நாட்டுக்கு வந்தேன். அதுக்குப் பிறகு 2019ல ஒரு தடவை வந்தேன்.

கோயம்புத்தூர் வந்து பார்த்தப்ப நான் தத்து கொடுக்கப்பட்ட ஆசிரமம்
வெகு நாட்களுக்கு முன்பே மூடப்பட்டிருந்துச்சு. அதை பராமரிச்சுட்டு
வந்தவங்ககிட்ட இருந்து எனக்கு சில போட்டோக்களைத் தவிர வேறு எதுவும்
கிடைக்கல. அதனால நான் நம்பிக்கையிழந்து டென்மார்க்
திரும்ப போயிட்டேன்.

அப்ப தான் டி.என்.ஏ பரிசோதனை செய்து பார்க்கலாமேனு சிலர் என்கிட்ட
சொன்னாங்க. அதற்காகவே சில நிறுவனங்கள் இயங்கிட்டு வருது.
நம்மோட டி.என்.ஏ மாதிரிகளை பரிசோதிச்சு ஏற்கனவே அவங்ககிட்ட
இருக்கற மாதிரிகளில ஏதாவது ஒத்துப் போகுதானு கண்டுபிடிக்கலாம்.
அப்படி ancestry என்கிற நிறுவனத்துல என் டி.என்.ஏ மாதிரிகளை
பரிசோதனைக்கு கொடுத்தேன்.

தொடக்கத்துல எனக்கு சாதகமான எந்த தகவலும் கிடைக்கவில்லை.
ஆனால் சில மாதங்கள் கழிச்சு அமெரிக்காவின் உடா நகர்ல இருந்து
மேத்யூனு ஒருத்தர் என்னை தொடர்பு கொண்டார். அவருடைய டி.என்.ஏவும்
என்னுடைய டி.என்.ஏவும் ஓரளவு ஒத்துப்போவதாகச் சொன்னார்.
நான் டி.என்.ஏ பரிசோதனை கொடுத்த அதே நிறுவனத்துல எனக்குப் பின்னர்
மேத்யூ டி.என்.ஏ பரிசோதனைக்கு கொடுத்திருக்கார்` என்றார் கேஸ்பர்.

டயான் தனக்கு ஒரு தம்பி இருந்ததை நன்றாக நினைவு கூர்கிறார்,
`நான் ஆசிரமத்தில இருந்தப்ப என் கூட ஒரு சின்ன பையன் இருந்தான்.
அவனுக்கு பசிக்கிறப்பலாம் என்கிட்ட இருந்த உணவு பொருட்கள்,
திண்பண்டங்களை அவனுக்கு சாப்பிட கொடுத்திருக்கேன்.
எனக்கு இப்போ -ஐந்து குழந்தைகள் இருக்காங்க. என் மகன் மேத்யூ
வேலை காரணமாக கொஞ்ச காலம் இந்தியாவில் பெங்களூருவுல இருந்தான்.

அங்கிருந்தப்ப தான் என்னுடைய சொந்தக்காரர் ஒருத்தரை
கண்டுபிடிச்சுட்டேன்னு போன் பண்ணி சொன்னான். என்னால நம்ப முடியலை.


நான் தூரத்து சொந்தமா இருப்பார்னு நினைச்சேன். நானும் ஒரு நிறுவனத்துல
டி.என்.ஏ பரிசோதனை கொடுத்திருந்தேன். ஆனா எனக்கு சாதகமா
எந்த முடிவும் கிடைக்கலை` என்கிறார் டயான்

கேஸ்பர் பேசுகையில் `மேத்யூ என்கிட்ட பேசுறப்ப கோயம்புத்தூர்ல உங்களை
தத்தெடுத்த அதே ஆசிரமத்துல இருந்த என் அம்மாவும் தத்தெடுக்கப்பட்டதா
சொன்னார். நான் என் அப்பா அம்மாவை தேடி தான் இந்தியாவுக்கு வந்தேன்.
ஆனா எனக்கு ஒரு அக்கா இருக்காங்கன்றது சுத்தமா தெரியவே இல்லை.
என் அக்கா வேற ஒரு நிறுவனத்துல டி.என்.ஏ பரிசோதனை கொடுத்திருக்காங்க. 2019ல முதல் முறை என் அக்கா கிட்ட பேசுனேன்.

கொரோனாவால நேர்ல சந்திக்க முடியலை. இந்த வருஷம் பிப்ரவரி மாசம்
அமெரிக்கா போய் என் அக்காவ நேர்ல சந்திச்சேன். அப்ப என் அக்கா
டி.என்.ஏ பரிசோதனை கொடுத்திருந்த 23andme என்கிற நிறுவனத்துல
நானும் டி.என்.ஏ பரிசோதனை கொடுத்தப்ப 100% ஒத்துப் போச்சு.

1979-ல் ஆதரவற்றோர் இல்லத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் –

ஆனா அதுக்கு முன்னாடியே அவங்க என் அக்கா தான்னு எனக்கு தெரிஞ்சிடுச்சு. நான் ஆசிரமத்துல இருந்து வாங்கிட்டு போன போட்டோல என் பக்கத்துல தான் அவங்க இருந்திருக்காங்க. ஆனா நான் அந்த போட்டோல என்னை மட்டும் தான் பார்த்தனே தவிர இவங்களை கவனிக்கலை

இந்தியாவுல அப்பா அம்மாவை தேடி போன எனக்கு ஒரு அக்கா இருக்காங்க
அவங்களை இந்தியாவுல இல்லாம அமெரிக்கால தான் கண்டுபிடிப்பேன்னு
கனவுல கூட யோசிச்சிருக்க முடியாது. புனைவு கதைகள் கூட இந்த மாதிரி
ஒரு பயணம் அமைஞ்சிருக்குமானு தெரியலை. என் அக்காவை பத்தி
கேள்விபட்டப்ப ஏற்பட்ட உணர்வை விவரிக்கவே முடியாது. ஆச்சரியத்துக்கும்
அப்பாற்பட்ட உணர்வு அது` என்றார் கேஸ்பர்.

டயான் பேசுகையில், என் பையன் என்கிட்ட சொன்னப்ப ஏதோ சொந்தக்காரங்களா இருப்பாங்கனு தான் முதல்ல நினைச்சேன். ஆனா அது என்னோட சொந்த தம்பின்றது அடுத்து தான் தெரிஞ்சுது. அவன்கிட்ட முதல் முறை பேசுனப்பவே அதை நான் கண்டுபிடிச்சுட்டேன். டி.என்.ஏ ப ரிசோதனை எல்லாம் ஒரு சம்பிரதாயமா தான் செஞ்சோம் என்றார்.

டயான் அமெரிக்காவின் உடா மாகாணத்தில் வசித்து வருகிறார்.
கேஸ்பர் டென்மார்க்கில் வசித்து வருகிறார். இருவரும் தற்போது நெருங்கிய
தொடர்பில் இருந்து வருகின்றனர். மிக விரைவில் இருவரும் ஒன்றாக
இந்தியா வந்து தங்களின் வேர்களை தேடிச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

சில சமயங்களில், வாழ்க்கையில் இப்படி அபூர்வங்களை சாத்தியப்படுத்திக்
காட்டும் விஞ்ஞான வளர்ச்சி பிரமிப்பை ஊட்டுகிறது….

43 ஆண்டுகளுக்கு முன்னர் கோவையில் பிரிந்த உடன்பிறப்புகள்,
கண்டங்கள் கடந்து அமெரிக்காவில் சந்தித்து கொள்ளும் அசாத்தியத்தை சாத்தியப்படுத்தியிருக்கிறது அறிவியல் வளர்ச்சி. தொழில்நுட்ப யுகத்தில்
நிகழும் நேர்மறையான நிகழ்வுகளில் விஜயா மற்றும் ராஜ்குமாரின் கதை
ஒரு முக்கியமான இடத்தைப் பெறும். (மூலம் – பிபிசி செய்தித்தளம் )

.
…………………………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.

3 Responses to கற்பனையை மிஞ்சிய ஒரு நிஜ சம்பவம் – DNA என்னும் விஞ்ஞான மந்திரம் செய்த ஒரு அற்புதம் …

 1. புதியவன் சொல்கிறார்:

  சிலவற்றைப் பற்றிப் படிக்கும்போது, நம்பவே இயலாது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு இது. நான் மறுபிறப்பில் நம்பிக்கை உள்ளவன். அது போன்ற பல நிகழ்வுகளை (பிறப்பை விட, அது சார்ந்தவர்களுக்கு இவன்/இவள் இந்தமாதிரி பூர்வ ஜென்மத்தில் இருந்தான்(ள்), இனி வரும் ஜென்மத்தில் இங்கு பிறப்பாள் என்பது மாதிரி) படித்திருக்கிரேன். நல்ல பகிர்வு.

 2. Tamil சொல்கிறார்:

  இதில் டிஎன்ஏ பரிசோதனை செய்யவேண்டும் என்று இருவருக்கும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் நினைப்பு வந்து இருக்கிறது என்பது உண்மையில் அதிசயம்.

  ஆங்கிலத்தில் இன் டியூஷன் என்று சொல்வார்கள்.

 3. mekaviraj சொல்கிறார்:

  அருமை.

  இதில் வேறொரு செய்தி உள்ளது. வெளிநாட்டுக்காரர்கள்கூட இந்தியா வந்து குழந்தைகளை தத்தெடுத்து செல்கிறார்கள்.

  இங்குள்ள பலர் குழந்தையின்மைக்கு பல வருடங்களாக சிகிச்சை மேற்கொள்கிறார்கள். இது தேவையா?

  குழந்தை தத்தெடுப்பு முறைப்படுத்தப்பட்டுள்ளது. அதை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s