கயவர் கூட்டம் – பெண்கள் ஜாக்கிரதை ….

…….

…….

பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு
மனசாட்சியே இல்லாமல், எதற்கும் – எத்தகைய பாவத்திற்கும்
துணிந்த சில கயவர் கூட்டங்கள் நமது நடுவிலேயே இயங்கி
வருகின்றன.

இவர்களைப் பற்றிய உண்மைகள் பொதுவாக நமக்கு
தெரிவதில்லை….. அண்மையில் நான் படித்த ஒரு செய்தி கட்டுரை
இத்தகைய மோசடி கும்பல்களை பற்றிய சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருக்கிறது. இந்த தகவல்கள் விமரிசனம் வாசக
நண்பர்களையும் சென்றடைய வேண்டும் என்று அந்த கட்டுரையை
கீழே பதிப்பித்து இருக்கிறேன் ..( சமூக அக்கறையுடன் இதை வெளியிட்ட
விகடன் செய்தி தளத்திற்கு நமது நன்றிகள் …….)

……………………………..

குடும்பப் பெண்களை குறிவைக்கும் பாலியல் கும்பல்…
களத்தில் இறங்கிய ஜூ.வி…

சாட்டையை சுழற்றிய ஐ.ஜி;

ஒருகாலத்தில், டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற
மெட்ரோ சிட்டிகளில் மட்டுமே கேள்விப்பட்ட ஆன்லைன் விபசாரம்,
தற்போது திருச்சிக்குள்ளும் தலைகாட்ட ஆரம்பித்துள்ளது.
இந்தக் கொடுமையின் பிடியில் இளைஞர்கள் மட்டுமல்லாமல்,
அப்பாவிப் பெண்களும் அவர்களது குடும்பமும் சிக்கிச் சின்னா
பின்னமாகிக் கொண்டிருக்கிறது. அப்படிச் சிக்கிக்கொண்ட
பெண் ஒருவரின் கணவர் நம்மிடம் பேசினார். “என் மனைவியைக்
கொஞ்சம் கொஞ்சமாப் பேசி, இந்தப் பாழாப்போன பழக்கத்துலருந்து
மீட்டுட்டேன். இனி யாரும் அந்த மாதிரி சிக்கிடக் கூடாது…” என்று
அழுதவண்ணம் அவர் சொன்ன விஷயங்கள் அனைத்தும் அதிர்ச்சி ரகம்!

தெரியாமலோ அல்லது ஓர் ஆர்வத்திலோ இணையத்திலுள்ள ஏதேனும்
ஆபாச வெப்சைட், டேட்டிங் வெப்சைட்டுகளுக்குள் பெண்கள்
நுழைகிறார்கள். அங்கு அவர்கள் விரும்பும் உடைகள், மேக்கப்
பொருள்கள் போன்றவற்றின் விளம்பரங்களைக் காட்டி, அதில்
‘மொபைல் எண்ணைக் கொடுத்தால் டிஸ்கவுன்ட் கிடைக்கும்’
எனக் கவர்ச்சிகரமாக வலைவிரிக்கிறார்கள். இதில் பெண்கள்
கொடுக்கும் மொபைல் எண்களை வைத்தே, அந்தப்
பெண்களுக்கெதிரான தூண்டிலாகப் பயன்படுத்திவிடுகிறார்கள்
ஆன்லைன் பாலியல் தொழில் மாஃபியாக்கள்!

அதாவது தங்களிடமுள்ள பெண்கள் மூலமாக சம்பந்தப்பட்ட
பெண்களின் செல்போனில் தொடர்புகொண்டு மூளைச்சலவையை
ஆரம்பிக்கிறது பாலியல் தொழில் மாஃபியா. நல்ல தோழியாகப்
பேச ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாகத் தொழிலுக்குள்
இழுக்கிறார்கள். ‘அதிக பணம், எந்தக் காரணத்தைக்கொண்டும்
தகவல்கள் வெளியே கசியாது’ என்ற உத்தரவாதங்களினால்
இவர்களின் வலையில் சிக்கிக்கொள்ளும் பெண்களை ஒரு சர்வீஸ் அபார்ட்மென்ட்டுக்கு வரச் செய்வார்கள்.

அப்படி வரும் பெண்களை அந்தக் கும்பலிலுள்ள ஒருவரே முதலில்
பலியாக்குவார். அப்போது அறையில் ஆங்காங்கே பல கோணங்களில் வைக்கப்பட்டிருக்கும் கேமராக்களில் சகலமும் பதிவாகிவிடும்.
பிறகு எதிர்பாராத அளவு பணம் கொடுத்து அனுப்பிவிடுவார்கள்.
இதன்பிறகு, அந்தக் கும்பல் கூப்பிடும்போதெல்லாம் சம்பந்தப்பட்ட
பெண்கள் வந்து ஒத்துழைக்க வேண்டும். முடியாது என்று சொல்லும்
பெண்களுக்கு அடுத்த ஆப்ஷனைக் கொடுக்கிறது இந்த மாஃபியா.

‘முகத்தைக் காட்டவேண்டியதில்லை. உடலை மட்டும் காட்டினால்
போதும்’ என்பதுதான் அந்த ஆப்ஷன். முகத்தை மட்டும் துணியால்
மூடியபடியோ அல்லது முகமூடி அணிந்துகொண்டோ பாலியல்
படங்களில் நடிக்க வைப்பார்கள். அடுத்து ‘லைவ் ஷோ’வாகச்
சில ஆப்கள் மூலம் அவர்களை இதில் ஈடுபடுத்துவார்கள்.
பாலியல் படங்களில் நடிக்கும் பெண்களுக்குச் சில ஆயிரங்கள்
கொடுத்துவிட்டு, அந்த வீடியோக்களை அதற்கெனவே புழங்கும் வெப்சைட்டுகளுக்கு விற்பனை செய்துவிடுவார்கள். வெறும்
செல்போனை வைத்து மட்டும் எடுக்கப்படும் அந்த மாதிரி
வீடியோக்கள் ஆயிரங்கள் தொடங்கி லட்சங்களில் விலைபோகும்.

இரண்டாவது ஆப்ஷனுக்கும் ஓகே சொல்லாத பெண்களின்
வாட்ஸ்அப்புக்கு, முதலில் எடுக்கப்பட்ட வீடியோ வந்து விழும்.
அதன் பிறகு மிரட்டத் தொடங்கிவிடுவார்கள். அவர்கள் மிரட்டுகிற
தொனியில் எந்தப் பெண்ணும் பயந்துவிடுவார்கள். மாட்டிக்கொண்ட
பெண்கள் பிறகு அவர்களுக்கு அடிமைதான்.

இந்த விவகாரங்களையெல்லாம் கேள்விப்பட்டு அதிர்ந்துபோன நாம்,
திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணனிடம் விஷயத்தைக் கூறினோம்.

சிறிதும் தாமதிக்காமல், சைபர் க்ரைம் கூடுதல் எஸ்.பி பால்வண்ணநாதன் தலைமையில் ஆறு பேர்கொண்ட ஒரு டீமை அமைத்தார் ஐ.ஜி. நாம் குறிப்பிட்டிருந்த ஒரு நம்பரைத் தொடர்புகொண்டு பேசியது போலீஸ்.

எதிர்முனையில் தயக்கமே இல்லாமல் பேசியது, 35 வயது மதிக்கத்தக்க
ஒரு பெண். “சார், ஒரு மணி நேரத்துக்குன்னா மூவாயிரம்.
நைட் ஃபுல்லான்னா பத்தாயிரம் ஆகும். ஓ.கே-ன்னா, நான் அனுப்புற
அக்கவுன்ட் நம்பருக்கு ஜி பே பண்ணுங்க. அப்புறமா பேசலாம்”
எனச் சொல்லித் தொடர்பைத் துண்டித்தார் அந்தப் பெண். கொஞ்ச
நேரத்தில் அடுத்த அழைப்பு. அதில் பேசிய ஆண் குரலும், கிட்டத்தட்ட
அதையே கூறியதோடு, “பக்கா சேஃப்டியா இருக்கும்” என உத்தரவாதம்
தந்தது. அடுத்த சில நிமிடங்களில் போலீஸின் வாட்ஸ்அப்புக்குப் பல இளம்பெண்களின் அரைகுறைப் படங்கள் வந்து விழுந்தன.

பாலியல் தொழில் நடப்பதை உறுதிசெய்துகொண்ட நமது போலீஸ் டீம்,
ஐ.ஜி பாலகிருஷ்ணனின் ஆலோசனைப்படி, அந்தக் கும்பலின்
செல்போன் எண்ணுக்கு ஜி பே மூலம் பணம் அனுப்பியது. சிறிது
நேரத்திலேயே திருச்சியின் புறநகர்ப் பகுதியிலுள்ள ஓர் இடத்தைக் கூறி,
அங்கு வரச் சொன்னார்கள்.

இளவயது போலீஸ்காரர் ஒருவர், கஸ்டமர்போல அவர்கள்
குறிப்பிட்டிருந்த இடத்துக்கு டூ வீலரில் சென்றார். அவரைப்
பின்தொடர்ந்து காரில் சென்ற போலீஸ் டீம், அரை கிலோமீட்டர்
தூரத்துக்கு முன்பாக சென்றிருப்பவரின் கூகுள் மேப்பை கவனித்தபடி காத்திருந்தனர்.

சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகு, கஸ்டமர்போலச் சென்ற
போலீஸிடமிருந்து சிக்னல் கிடைக்கவே, அதிரடியாக அந்த
இடத்துக்குச் சென்ற மஃப்டி போலீஸார், அங்கிருந்த இரண்டு பெண்கள்
உட்பட பாலியல் தொழில் மாஃபியாக்கள் இருவரை வளைத்துப்
பிடித்துக் கைதுசெய்தனர்.

அவர்களிடமிருந்த இரண்டு பெண்களும் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், ‘ஸ்டிங் ஆபரேஷனை’ துல்லியமாக நடத்தி முடித்த ஐ.ஜி பாலகிருஷ்ணனிடம் பேசினோம்.

“வெளியூரிலிருந்து வந்து தங்கி வேலைக்குச் செல்லும் பெண்களும்,
கல்லூரிப் பெண்களும்தான் இவர்களின் முதல் இலக்கு.
அடுத்ததாகக் குடும்பச்சூழல், பொருளாதாரப் பிரச்னைகள்
இவற்றைப் பயன்படுத்தி, நல்ல சம்பளத்தில் வேலை தருவதாகத்
தூண்டில் போட்டு, படித்த குடும்பப் பெண்களுக்கும் வலை வீசுகின்றனர்.

தற்போது, வில்ஃபிரட் மார்செலினோ, கருணாநிதி என்ற இரு விபசார புரோக்கர்களும் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். திருச்சி மற்றும்
அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் மூன்று முக்கியமான
விபசார நெட்வொர்க்குகளும் தற்போது தீவிர கண்காணிப்பில் உள்ளன.
விரைவில் அவர்களும் சிக்குவார்கள்” என்றார்.

இணையதளங்களில் ஆப்களில் தேவையில்லாமல் நம்பர்களைக்
கொடுக்காதீர்கள். அறிமுகமில்லாத நபர்கள் தொடர்புகொண்டு
பேசும்போது கவனமாகத் தவிர்த்துவிடுங்கள். தேவையற்ற
லிங்க்குகள் மொபைலுக்கோ மெயிலுக்கோ வரும்போது அவற்றைத்
திறக்காதீர்கள். உங்கள் வாழ்க்கையை அழித்துவிடும் ஆபத்து,
ஒரு லிங்க் மூலமாகக்கூட வரலாம்!

..

………………………………………………………………………………………………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

2 Responses to கயவர் கூட்டம் – பெண்கள் ஜாக்கிரதை ….

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ..

  புனித ரமலான் பண்டிகையை கொண்டாடும்
  எனது அன்பிற்குரிய நண்பர்களுக்கும்,
  அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும்
  எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை
  தெரிவித்துக் கொள்கிறேன்…..

  அன்புடன்,
  காவிரிமைந்தன்

  ..

 2. Tamil சொல்கிறார்:

  உண்மை ஐயா.

  இதை இதோடு விடாமல் மற்ற இடங்களிலும் இதுபோன்று நடவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.