……

…..
ஜெயமோகன் ஒரு இலக்கியவாதி…
சர்வ நிச்சயமாக – அரசியல்வாதியல்ல ….
எந்தவொரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவரும் அல்ல.
எழுத்துலகில் அவரது சாதனைகள் பிரமிப்பூட்டுபவை …
எப்போதாவது அவர் நிகழ்கால அரசியல் குறித்து
கருத்து தெரிவிப்பதுண்டு.
கீழே இருப்பது அவர் அண்மையில் தெரிவித்திருக்கும்
ஒரு கருத்து… கவனிக்கப்பட வேண்டிய,
யோசிக்கப்பட வேண்டிய ஒரு கருத்து
என்று நான் கருதுவதால் கீழே தந்திருக்கிறேன்.
வாசக நண்பர்கள், தங்கள் கருத்துகளை
தாராளமாக பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.
………………………………..
நான் அரசியல் பிரச்சாரமெல்லாம் செய்யவில்லை.
என் பணி அது அல்ல. ஆனால் இன்றைய சூழலில்
கொஞ்சம் யோசிக்கும் இஸ்லாமியர் எடுக்கக்கூடிய
நிலைபாடு காங்கிரஸுடன் இணைநிற்பதாகவே
இருக்க முடியும் என்பது என் எண்ணம். அதை அவர்களுக்கு அறிவுறுத்தவில்லை. அவர்கள் மறுப்பார்கள் என்றால்
வாதிடவும் போவதில்லை.
நடுநிலைநோக்கு கொண்ட இந்துக்கள், இந்துமதம் வெறுமொரு அரசியலியக்கமாக சிறுத்துவிடக்கூடாது என எண்ணுபவர்கள், எடுக்கவேண்டிய நிலைபாடும் அதுவே.
இஸ்லாமியர் காங்கிரஸுக்குள் இஸ்லாமிய அடையாளத்துடன்
ஒரு தனிக்குழுவாக இருப்பார்கள் என்றால், வாக்குவங்கியாகச்
செயல்பட்டு தங்கள் மதவாத நோக்கங்களுக்கு காங்கிரஸை செலுத்துவார்கள் என்றால், அது காங்கிரஸை பலவீனப்படுத்தும்.
இஸ்லாமியக் கட்சி என்னும் முத்திரை காங்கிரஸ் மேல் விழ
அதன் இந்து வாக்குகள் அகலும். அவ்வாறு செய்யவே
பாரதிய ஜனதா முயலும். இங்குள்ள வேகாத முற்போக்குகளும்
முகநூல் லிபரல்களும் தங்களுக்கு புரட்சிகர அடையாளம்
வரவேண்டுமென எண்ணி இஸ்லாமியர்கள்
மத அடையாளத்துடன் தங்களை அரசியல்களத்தில்
முன்வைப்பதை ஊக்குவிப்பார்கள். அது இஸ்லாமியரை
அயன்மைப்படுத்தி அவர்களின் அரசியலை குறுக்கும்,
அதிகாரத்தில் அவர்களின் இடத்தை அறவே இல்லாமலாக்கும்.
அவ்வாறு செய்யும் நாச்சுழற்சி முற்போக்கினரும்
லிபரல்களும் நடைமுறையில் இஸ்லாமியரின் எதிரிகளாகவே செயல்படுகிறார்கள்.
காங்கிரஸும் பாரதியஜனதாவும் ஒன்று என்னும் கோஷம் இருபதாண்டுகளாக இஸ்லாமியர் நடுவே ஒலிக்கிறது.
அவ்வாறு கூவுபவர்கள் யார், எங்கே தங்கள் சமூகத்தைக்
கொண்டு செல்கிறார்கள் என இப்போதாவது உணராவிடில்
இஸ்லாமியர் வீழ்ச்சியை நோக்கியே செல்கிறார்கள்.
இஸ்லாமியர் காங்கிரஸ் நோக்கிச் செல்லவேண்டும்.
இஸ்லாமியர்களாக அல்ல ——-
மதச்சார்பற்ற ஜனநாயகம் மேல் நம்பிக்கை கொண்டவர்களாக.
மதத்தை அவர்கள் தங்கள் இல்லங்களில், உள்ளங்களில் வைத்துக்கொள்ளலாம். ஒருபோதும் மதத்தை பொதுவெளியில் கொண்டுவரக்கூடாது.
மதவாதிகளை தங்கள் அரசியல்களத்திற்கு கொண்டுவரக்கூடாது. மதவாதத்துக்கு எதிரி மதவாதமல்ல, ஜனநாயகமே.
சுருக்கமாகச் சொன்னால், காங்கிரஸ் –
இஸ்லாமியர்களை நோக்கி சென்றால் அது காங்கிரஸின் அழிவு.
காங்கிரஸை நோக்கி இஸ்லாமியர் செல்லவேண்டும்.
இன்னமும் காங்கிரஸ் நேரு உருவாக்கிய இலட்சியவாதத்தையே அடித்தளமாகக் கொண்டுள்ளது. அதை இஸ்லாமியர்
நம்பி ஏற்கவேண்டும்.
தேசிய முஸ்லீம் மட்டுமே பாரதியஜனதா உருவாக்கும்
இஸ்லாமிய எதிர்ப்பை எதிர்கொள்ளமுடியும்.
தீவிர முஸ்லீம் அந்த எதிர்ப்புக்கு உரமூட்டுபவர்.
காங்கிரஸ் வலுவாக இருந்தாகவேண்டும்.
வரலாற்றில் வேறு வழியே இப்போது தென்படவில்லை.
இது என் கருத்து.
இதைச் சொல்வது இன்றைய சூழலில் உடனே என்னவகையாக
எல்லாம் திரிக்கப்படும் என அறிவேன். ஓரமாக இந்த குரலும்
ஒலிக்கட்டுமே என்றுதான் எழுதுகிறேன்.
.
………………………………………………
காங்கிரஸ் எப்போதுமே முன்னெடுப்பது, சிறுபான்மையினரின் வாக்கு அரசியல். சிறுபான்மையர், தங்கள் மதத்துக்கு எது நல்லது என்று நினைத்து அதற்கேற்ற கட்சிக்கு மொத்தமாக (almost…. That too, as per the instruction given in churches or mosques) வாக்களிக்கின்றனர். இது நடக்கும்வரை, மத உணர்வுகொண்ட (அது அதிகமாகிக்கொண்டே வருகிறது என்பதை நான் அவதானிக்கிறேன்) இந்துக்களின் வாக்கு பாஜகவுக்கு அதிகமாகிக்கொண்டே போகும். பாஜக, மதவாதக் கட்சி என்று சோனியா/ராகுல்/பிரியங்கா போன்ற கிறித்துவர்கள் சொல்லும்போதும், திமுக போன்ற ‘கடவுள் நம்பிக்கை’ இல்லை என்று போலி லேபிள் வைத்துக்கொண்டு இந்துக்களுக்கு எதிரானவற்றைச் செய்யும் கட்சிகள்/தலைவர்கள் சொல்லும்போதும், இந்துக்கள் நம்பப்போவதில்லை. முஸ்லீம்களுக்காக என்று உருவாக்கப்பட்ட கட்சிகள் (லேபிளுக்காக மதச்சார்பின்மை என்று சொல்கின்ற முஸ்லீம் கட்சிகள்) திமுக, காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும்போதும், பாஜகவின் வாக்கு வங்கி அதிகரிக்கும், அரசியலில் மத வெறுப்புணர்வுதான் பெரும் பங்கு வகிக்கும். (மக்களின் வாழ்வாதாரத்துக்குப் பெரும் பிரச்சனை ஏற்படும்வரை. அப்படி வாழ்வாதாரத்துக்குப் பிரச்சனை ஏற்படும்போது, அந்த மக்களுக்கு வாக்களிக்க வேறு கட்சி தென்படாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது. அதனால்தான் AAP போன்ற கட்சிகள், ஹிந்துப் பகுதிகளில் ஹனுமான் சாலீசா, முஸ்லீம் பகுதிகளில் ‘அல்லாஹு அக்பர்’ என்று balance பண்ண முயற்சிக்கிறது.)
தமிழகத்தில் காங்கிரஸ் என்ற கட்சி இருக்கிறதா? வாக்கு வங்கி அரசியலுக்காக (அதாவது முஸ்லீம்களின் கிறிஸ்துவ மக்களின் வாக்கு ஒன்றையே குறிவைத்து), சோனியா/ராகுல் கவனம் தன் மீது விழவேண்டும், தமிழக காங்கிரஸ் தலைவராக ஆகவேண்டும் என்ற காரணத்துக்காக ஜோதிமணி, ராமர் என்ற ஒன்று தமிழகத்திலேயே கிடையாது, அவருக்கு கோவிலே கிடையாது, ராமருக்கும் தமிழர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று வட இந்திய மீடியாக்களிடம் பேசியிருக்கிறார். அவர், தமிழர் நாகரீகத்துக்கும் கிறித்துவம் இஸ்லாமியத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று இதுவரை பேசியிருக்கிறாரா? இத்தகைய பேச்சுக்களை யார் எதிர்க்கவேண்டும்? திக/சுபவீ போன்ற அல்லக்கைகள், ‘கடவுள் இல்லை’ என்று பேசும் கூட்டங்களில், முஸ்லீம் மற்றும் கிறித்துவ தலைவர்கள் மேடையைப் பகிர்ந்துகொள்கின்றனர். நியாயமாக அவர்கள் என்ன சொல்லவேண்டும்? நாங்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள், திக/சுபவீ/கம்யூனிஸ்ட்களோடு தொடர்பு உள்ளவர்கள் எங்களுக்கும் எதிரிதான் என்றல்லவா stand எடுக்கவேண்டும்?
அதனால, ஜெமோ அவர்களின் ஆலோசனை விழலுக்கு இரைத்த நீராகத்தான் அமையும்.
பொதுவாக முஸ்லிம்கள் அதிகம் உறுப்பினர்களாகப் பயணிக்கும் ஒரு சில குழுக்களிலும், எல்லா மதம் சார்ந்த, மத நம்பிக்கையில்லாத அனைத்து சகோதரர்களும் பயணிக்கும் நான் ஏற்படுத்திய ‘ஒளி அழகிய கடன் அறக்கட்டளை’ என்ற பெயரில் நான் ஏற்படுத்திய முகப் புத்தகக் குழுவிலும் நான் அவ்வப்போது தொடர்ந்து வற்புறுத்தும் எனது கருத்தோடு பெரும்பாலும் ஒத்திருக்கும் கருத்து இது. வித்தியாசம் என்னவென்றால் முஸ்லிம்களின் பங்களிப்பு பாஜக + பாஜக ஆதரவு மானிலக் கட்சிகள் தவிர்த்த பிற எதிர்க்கட்சிகளில் தாம் விரும்பும் ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து நேர்மையான முறையில் மதச்சார்பற்ற வகையில் இயங்க்வேண்டும் என்பதே. மற்றபடி முஸ்லிம் லீக் அல்லது மத அடையாளமுள்ள எந்தக் கட்சியிலும் சேர்ந்து பயணிப்பதும், ஒரு கட்சியில் இருந்தாலும் அதில் சிறுபான்மைப் பிரிவு என்றோ, முஸ்லிம் பிரிவு என்றோ இயங்குவதனை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்பதுதான் எனது கருத்தும். { எனது கருத்தையும் எல்லா முஸ்லிம்களும் ஏற்பர் என்ற நம்பிக்கை எனக்கு இல்லையென்றாலும், நான் இதனை தொடர்ந்து வலியுறுத்துகிறேன்.}. எழுத்தாளர் ஜெயமோகன் காங்கிரசைப் பரிந்துரைப்பது அது ஒரு தேசியக் கட்சி, இந்தியா முழுதும் அறிமுகமான ஒன்று என்பதால் அவரது அபிப்ராயம் சரியே. ஆனால் தமிழக அரசியல் சூழலில் காங்கிரசை (மட்டும்) நம்புவது திரும்பவும் ஆரம்பத்திலிருந்து ஒரு புதிய கட்சிபோள் மேலெழவேண்டிய நெடு நாள் போராட்டமாகவே இருக்கும். காரணம் அந்தக் கட்சிய் தனித்து இயங்கும் தெம்பின்றி ஏதாவது ஒரு மானிலக் கட்சியை நம்பவேண்டிய சூழல்.
– மதுக்கூர் என்.எஸ்.எம். சாகுல் ஹமீது