10 மாதங்களில் திமுக ….

….

…..

பொதுவாகவே, நமக்கு ஆட்சியையோ, கட்சியினரையோ
விமரிசித்தோ, குறைகூறியோ எழுதுவதால் – திருப்தியோ,
மகிழ்ச்சியோ ஏற்படுவதில்லை.

மாறாக, வருத்தமும் – கோபமும் தான் வருகிறது.

அய்யோ – இப்போதே இப்படியென்றால், இன்னும் 4 வருடங்கள்
தமிழகம் இவற்றையெல்லாம் எப்படி தாக்குப் பிடிக்கப்போகிறது
என்று ஆதங்கம் தான் ஏற்படுகிறது.

முன்னதாக 2006 முதல் 2011 வரை ஆட்சியில் இருந்த திமுக –

2011-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில்
தோற்றுப்போனதற்கு முக்கிய காரணமே அதற்கு முந்தைய
திமுக ஆட்சியில் அந்த கட்சியினர் நடத்திய
கட்டப்பஞ்சாயத்து வேலைகள் மற்றும் மாமூல் வசூல் தான்
என்று சொல்லப்பட்டது ….

கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது –
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் அந்த அராஜகங்கள் கட்டவிழ்த்து விடப்படும் என்றே அதிமுகவும் அதன் கூட்டணி
கட்சிகளும் பிரதானமாக பிரச்சாரம் செய்தன…

அதெல்லாம் உண்மையாகி விடுமோ என்பதற்கான அறிகுறிகள்
திமுக ஆட்சியின் முதல் 10 மாதங்களிலேயே தெரிய ஆரம்பித்து
விட்டன.

சென்னையில் ஒரு பெண் திமுக கவுன்சிலரின் கணவர்
அந்த வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வீடு கட்டுவோரிடம் பணம்
கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாக
வலம் வருகிறது ….

இன்னொரு பக்கம் தாம்பரம் மாநகராட்சி திமுக
பெண் கவுன்சிலரின் உறவினரும் திமுக இளைஞர் அணி
நிர்வாகிகள் அனைவரும் – அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில்
மாமூல் கேட்டு, அதை குறிப்பிட்ட நேரத்துக்குள் அவர் தராததால்
கடையை அடித்து நொறுக்கும் காட்சிகளும் வெளியானது …

திமுகவினர் போலீசாரை மிரட்டுவது,

அமைச்சரே அதிகாரியை ஜாதிப் பெயர் சொல்லி அழைப்பது
என அத்துமீறல் புகார்கள் ஆங்காங்கே தலைதூக்க
தொடங்கியுள்ளன …

ஆதி திராவிடர் நலத்துறையில், 38 லட்சம் ரூபாய் லஞ்சப்பணம்
விவகாரத்தில், அதில் முதல் குற்றவாளியாக போலீஸ் வழக்கில்
பதிவு செய்யப்பட்டிருப்பவரையே, சம்பந்தப்பட்ட இலாகா –
விசாரணை அதிகாரியாக நியமித்திருப்பதும் சர்ச்சையை
கிளப்பி இருக்கிறது.

டெல்லியில், அனைத்துக் கட்சித் தலைவர்களை சந்தித்து
பேசியபோது – தமிழகத்தில் நல்ல முறையில் ஆட்சி நடத்துவதாக
அவர்கள் புகழ்ந்தார்கள் என்று முதல்வர் மகிழ்ந்து பேசிய
அதே நேரத்தில்தான் தமிழகத்தில் இந்த சம்பவங்கள்
பரவலாக வெளியாகின…

திமுக பெண் கவுன்சிலர்களின் உறவுக்கார ஆண்கள் –
கவுன்சிலர்களின் அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு
அராஜகமாக நடந்து கொள்வது –

கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்
உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு
என்ற நல்ல நோக்கத்தையும் அர்த்தமற்றவை ஆக்கிவிடுகின்றன….

திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிசம் தலைதூக்கும் என்ற
பொதுவான பார்வை ஒன்று தமிழக மக்களிடையே உள்ளது…

அந்தப்பார்வை வளர்ந்தால் அது தமிழகத்தில் புதிதாக தொழில்
தொடங்க முன் வருவோரையும் தயங்க செய்யும் … அது மாநிலத்தின்
பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும்…

அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்திருக்கும் அராஜகங்களை ஒழித்துக்கட்ட -முதல்வர் இப்போதே, உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக மிக அவசியம்….

வளர்ச்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட மற்ற காரணங்களை விட
சட்டம் ஒழுங்கை தான் மக்களும், வர்த்தக சமூகத்தினரும்,
தொழில் துறையினரும் – முக்கியமாக கருதுகின்றனர் …

எனவே, சட்டம்-ஒழுங்கை சொந்த கட்சியினரே சீர்குலைப்பதை
பார்த்தும் முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை
யென்றால் …திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர எதிர்க்கட்சிகள் பெரிதாக எதுவும் முயற்சி செய்ய வேண்டியதில்லை…

திமுக கட்சியைச் சேர்ந்த சில அராஜக கும்பலே – மக்களிடையே
ஆட்சியின் மீது அதிருப்தி வளர்வதற்கு காரணமாகி விடுவார்கள்…

இதெல்லாம் நாம் சொல்லித்தானா திமுக தலைமைக்கு
தெரிய வேண்டும்… ? அவர்களே உணர்ந்துகொண்டு, விரைவில்,
மக்களின் நம்பிக்கையை பெறுவதற்குண்டான ,
உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நம்புவோம்.

.
………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.

5 Responses to 10 மாதங்களில் திமுக ….

 1. ஆதிரையன் சொல்கிறார்:

  அடுத்தும்,தொடர்ந்து தங்களது ஆட்சிதான் என்ற நம்பிக்கை இருந்தால், ஒருவேளை பொறுமையாக பஞ்சாயத்துகளை செய்யலாம்.அந்த நம்பிக்கை துளியும் இல்லாத நிலையில், அடுத்த 4 ஆண்டுகளுக்குள்ளாகவே சாதிக்க வேண்டிய நிர்பந்தம். பாவம் என்னதான் செய்ய சொல்லுகிறீர்கள் …

 2. கார்த்திகேயன் சொல்கிறார்:

  கவலை வேண்டாம் பாஜக வந்துரும்னு சொன்னா அத நம்ப ஒரு முட்டாள் கூட்டமிருக்கு ஓட்டு போட

  • ஆதிரையன் சொல்கிறார்:

   பிஜேபி தமிழகத்தில் மெள்ள காலூன்றுகிறது.அதை ஏற்க மனம்தான் மறுக்கிறது …

 3. புதியவன். சொல்கிறார்:

  தங்கள் மீது கைது நடவடிக்கை வரும் என்பது தெளிவாகத் தெரிந்தவுடன், கைது செய்ய அனுமதி கொடுக்கப்போகிறவரை டேமேஜ் செய்து தன்மீது தவறில்லை, காழ்ப்புணர்ச்சியால் இவை நடக்கின்றன என கட்சிக்கார்ர்களான பத்திரிகையாளர்களை அவரவர் தொலைக்காட்டியில் பரப்பச்சொல்லலாம் எனத் திட்டமிட்டு இப்போது ஏதாவது நடக்கின்றனவா?

 4. புதியவன் சொல்கிறார்:

  ஆளுநரைப் பத்தி விவாதிக்க நாடாளுமன்றத்தில் திமுக கொடுத்த நோட்டீஸை மக்களவைத் தலைவர் ஏற்றுக்கொள்ளவில்லை. திமுக உடனே வெளிநடப்பு செய்தது. பிறகு உடனே உள்ளே வந்து திரும்பவும் அந்த நோட்டீஸை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னது. மக்களைத்தலைவர் பொருட்படுத்தவில்லை என்பதால் திரும்பவும் உடனே வெளிநடப்பு செய்தனர். தமிழகத்தில் உடனே ஆளும் கட்சி சார்பாகவே பேசும் மீடியாக்கள், திமுக இரண்டு முறை வெளிநடப்பு செய்தது என்று செய்திபோடுகின்றனர். பேசாம திமுக தொடர்ந்து பத்துமுறை உள்ளே வருவதும் வெளியே செல்வதுமாக இருந்தால் கின்னஸ் ரெக்கார்ட் செய்திருக்கும். தொலைக்காட்சி ஊடகங்களும் அதைப்பற்றியே பேசி பொழுதைக் கழித்திருக்கும். வாய்ப்பைத் தவரவிட்டுவிட்டார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.