அதிமுக-வின் மில்லியன் டாலர் கேள்வி –

……

……

திருமதி சசிகலா – மீண்டும் அதிமுக-வில் இணைவாரா….?

அதிமுக-வின் பிரிந்து சென்ற மக்கள் அனைவரும் அவருடன்
அதிமுகவில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்களா…>?

இது குறித்து திரட்டிய சில தகவல்களை முதலில் இங்கே
பகிர்ந்து கொள்கிறேன் –

அதிமுக-வின் இரட்டைத் தலைமையின்
இரண்டு விதமான நிலை –

ஓபிஎஸ்-ஸை பொருத்த வரையில்,

கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஒதுக்கி, பலவீனப்படுத்தும் வேலையில் தீவிரமாக இருக்கும் எடப்பாடியாரை கட்டுப்படுத்த –

திருமதி சசிகலா மீண்டும் உள்ளே வந்தால், தேவலை தான்…
அதனால், தனது தற்போதைய நிலை பறிபோனாலும்,
எடப்பாடியாருக்கும் அதே நிலை தானே ஏற்படும் என்கிற
சமாதானம்….மனதிருப்தி…!!! தென் மாவட்டங்களில் தனது
செல்வாக்கு கொஞ்சம் கூடும் என்கிற நம்பிக்கை…

எடப்பாடியாரைப் பொருத்த வரையில்,

ஓபிஎஸ் கூட்டம் திருமதி சசிகலா குழுவினருடன் எப்படியும்
இணைந்து விடும் போலிருக்கிறது. அந்த நிலையில்,
தன்னைச் சுற்றி எத்தனை பேர் இருப்பார்கள் என்பது
நிச்சயம் இல்லை; துண்டுபட்ட அதிமுகவின் ஒரு பகுதிக்கு
மட்டுமே தான் தலைவராக இருக்கும் நிலை ஏற்படும்….

எனவே, எல்லாரும் ஒரே கும்பலாக ஒரே இடத்தில்
இருப்பது தான் பாதுகாப்பு; வேறு வழியில்லை என்றால்
ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்…
ஆனால், அதே சமயம், திருமதி சசிகலா உள்ளே வந்து –
ஓபிஎஸ்ஸும், சசிகலாவும் சேர்ந்து கொண்டு
தான் பழிவாங்கப்பட்டால் என்ன செய்வது என்கிற பயம் கூடவே…

தவிர, அதிமுக இதில் முடிவெடுப்பதில் பாஜகவுக்கும்
ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது…. அது என்ன …?

இதில் யார் கை ஓங்கினால் என்ன….
யார் கை தாழ்ந்தாலென்ன ….? என்றெல்லாம் அது
கவலைப்படுவதாக இல்லை…

 • புதிய தலைமையாக யாராக வந்தாலும் சரி, அவர், தாங்கள்
  சொல்வதை கேட்பவர்களாக இருக்க வேண்டும்…
  தங்களிடம் இணங்கிப் போகிறவர்களாக இருக்க வேண்டும்….அவ்வளவுதான்…!!!

அதிமுக-வின் அனைத்து குழுவினரும் ஒன்றாகச் சேர்ந்தால்,
அடுத்து வரும் 2024 பார்லிமெண்ட் தேர்தலுக்கு கூடுதல்
பலம் கிடைக்கும்…கூடுதல் ஓட்டுகள் கிடைக்கும். ஒருங்கிணந்த
அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து போட்டியிடும்போது,
இன்னும் அதிகமான இடங்களில் வெல்ல முடியும்…

எனவே அனைத்து குழுக்களும் திருமதி சசிகலாவோடு
அதிமுகவில் இணைவதே பாஜக-வுக்கு லாபம்….
அதற்கான முயற்சிகளில் தான் பாஜக இறங்கி இருக்கிறது.

ஓபிஎஸ் ஏற்கெனவே – தங்கள் வழிக்கு வந்து விட்டார்.
திருமதி சசிகலாவை கொண்டு வருவதில் எந்த கஷ்டமும் இல்லை;
அவர் ஏற்கெனவே அதைத்தான் எதிர்பார்த்து
காத்துக் கொண்டிருக்கிறார்…

எடப்பாடியாரை மட்டும் வழிக்கு கொண்டு வர வேண்டும்;
அதற்கான முயற்சிகளில் தான் பாஜக தலைமை தற்போது
ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது…

தேனியில் ஓபிஎஸ் க்ரூப், திருமதி சசிகலாவுக்கு ஆதரவாக
தீர்மானம் போட்ட மறுதினம் –
தமிழக பாஜகவின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்.
எடப்பாடியாரின் வீட்டிற்கு சென்று சந்தித்ததாகவும்,

 • 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க பலமாக இருந்தால்
  மட்டுமே நமது கூட்டணிக்கு நல்லது. கடந்த சட்டசபைத்
  தேர்தலின்போதே திருமதி சசிகலாவையும், அ.ம.மு.க-வையும்
  கட்சியில் இணைக்க டெல்லி சொன்னது . ஆனால், அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாமல் போனதே தி.மு.க தமிழகத்தில் ஆட்சிக்கு வர
  காரணமாகி விட்டது. அதேநிலை வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரக் கூடாது’ என்று டெல்லி மேலிடம் சொன்னதாக
  கூறி இருப்பதாகவும் –
 • ” இந்த இணைப்பிற்கு, எடப்பாடியார் ஒத்துழைக்க வேண்டும்….
  எடப்பாடியாருக்கு, எந்தவித குந்தகமும் இல்லாத வகையில்
  இணைப்பு நிகழ பாஜக மேலிடம் உதவும் ..” என்றும்
  சொல்லி இருக்கிறார் என்று ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது….
  (இதில் எந்த அளவு நிஜமோ, நமக்குத் தெரியாது…!!!)

சசிகலா விவகாரத்தில் எப்போதும் எதிர்ப்பு காட்டி
உரக்க குரல் கொடுத்து வந்த திருவாளர்கள் வேலுமணி, தங்கமணி,
சி.வி.சண்முகம் உள்ளிட்டவர்களும் சில நாட்களாக சசிகலாவுக்கு
எதிராக பேசாமல், அமைதி காப்பதற்கும், டெல்லியின்
இந்த நிலைப்பாடுதான் காரணம் …

தீவிரமாக எதிர்ப்புக்குரல் கொடுத்து வந்த
முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயகுமார் ஜெயிலுக்கு போய் வந்தது,
இந்த இணைப்புக்கு எதிராக அவர் குரல் கொடுப்பதையும் நிறுத்தி வைத்திருக்கிறது போலும்.

அண்மையில் – அதிமுகவின் செய்தித்தொடர்பு செயலாளர்
(முன்னாள் அமைச்சர் )வைகைச்செல்வன், ஒரு பத்திரிகைக்கு
பேட்டி கொடுத்திருக்கிறார்….

ரொம்ப தமாஷான பேட்டி –
எவ்வளவு அதி ஜாக்கிரதையாக,
எதிலும் சிக்கிக்கொள்ளாமல் பதில் சொல்கிறார் பாருங்கள்….

………………

“அ.தி.மு.க-வின் ஒற்றைத் தலைமையாக யார் வர வேண்டும்
என நீங்கள் நினைக்கிறீர்கள்?’’

“இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் என இரண்டு பேரையும் நாங்கள்
ஒன்றாகவே பார்க்கிறோம். அந்தவகையில், இரண்டு பேருமே
இணைந்து அ.தி.மு.க இயக்கத்தை வழிநடத்த வேண்டும்
என்பதுதான் எங்கள் கோரிக்கை!’’

“ஆனால், அ.தி.மு.க-வுக்குள் ‘ஒற்றைத் தலைமையே வேண்டும்’
என்ற கோஷம் அதிகரித்துவருகிறதே..?’’

“ஆமாம்… உண்மைதான். ‘ஒருவரே இருந்து கட்சி முடிவுகளை
எடுப்பது நல்லது’ என்ற கருத்து கட்சிக்குள்
நிலவி வரும்போதும் கூட, இருக்கிற இருவரில் யாரை இழப்பது,
யாரை எடுப்பது ?
ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவருமே எங்களின் இரு கண்கள்.
தாயை இழப்பதா, தந்தையை மறுப்பதா? பதில் சொல்ல முடியாத
இந்தக் கேள்விக்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
அதுவரையில் நாம் காத்திருக்கத்தான் வேண்டும்!’’

“ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவருமே வேண்டாம்… ‘சசிகலா,
கட்சித் தலைமை ஏற்கட்டும்’ என்றுதானே அ.தி.மு.க-வினர்
போஸ்டர் ஒட்டிவருகின்றனர்?’’

“ `தகுதி உள்ளது தப்பிப் பிழைக்கும், வெற்றிடத்தைக் காற்று
நிரப்பும் ” என்பார்கள். யாரையும் வலிந்து திணிக்க முடியாது.
‘சசிகலா, தலைமை ஏற்க வேண்டும்’ என்று ஆங்காங்கே
தொண்டர்கள் ஆசைப்படலாம். ஆனால், அது கட்சியின்
ஒருமித்த கருத்தாக எழ வேண்டும்; ஒருமித்த எண்ணமாக
உதிக்க வேண்டும். தகுதியுள்ளது தானாகவே பீறிட்டு
வெளிக்கிளம்பும். ( …!!!)
அப்படித் தகுதியான ஒன்றை நோக்கி, அ.தி.மு.க தொண்டர்கள் நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்!’’(…???)

“விரைவில் ‘அ.தி.மு.க தலைமைப் பொறுப்பை சசிகலா ஏற்பார்’
என்று சொல்கிறீர்களா?’’

“அப்படிச் சொல்ல முடியாது….!!!”

“ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரும் இந்தக் கட்சியை நல்ல முறையில் நடத்திவருகிறார்கள். இவர்களையும் தாண்டி, மிகப்பெரிய வாக்குவங்கியை அள்ளித் தரக்கூடிய அளவுக்கான ஒரு மகா சக்தி, அ.தி.மு.க-வுக்குள் வரும்போது மிகப்பெரிய எழுச்சி அலை ஏற்படும்!’’

( எப்படி குழப்புகிறார் பாருங்கள்… இப்போதைய தலைமையையும்
ஆதரித்து பேச வேண்டும்… ஒருவேளை, எதிர்காலத்தில்
தலைமை மாறினாலும் – தனக்கு ஏதும் பாதகம் வந்துவிடக்கூடாது…)

“அந்த ‘மகா சக்தி’ சசிகலாதானே?’’

“அப்படி எடுத்துக்கொள்ள முடியாது. மகா சக்தி என்று
நான் சொல்வது என்னுடைய தனிப் பட்ட கருத்து. இந்தக் கருத்து ஒட்டுமொத்த அ.தி.மு.க-வின் கருத்தாகவும் பிரதிபலிக்க
வேண்டும். அதாவது, சசிகலாவின் ஆதரவு சக்திகள்,
கட்சியின் ஒட்டுமொத்த ஆதரவு அலையாகப் பெருக வேண்டும். அப்படியான சூழல் உருவாகவில்லையென்றால்,
வலிய கொண்டுவந்து திணிப்பதாகிவிடும். அதைத்
தொண்டர்களேகூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!’’

“இரட்டைத் தலைமையே சிறப்பாகச் செயல்படுகிறது என்றால்,
‘சசிகலா தலைமை தேவையில்லை’ என்று உங்களால்
உறுதியாகச் சொல்ல முடியுமா?’’

( இப்படி திரும்ப திரும்ப கார்னர் பண்ணினால் – அவர்
என்ன தான் செய்வார்… எனவே மீண்டும் …. )

“இந்தக் கேள்விக்கான பதிலைக் காலம்தான் தீர்மானிக்கும்
என்று ஏற்கெனவே நான் சொல்லிவிட்டேன். இந்த பதிலை
நான் சூசகமாகவோ அல்லது சுற்றிவளைத்துச் சொல்வதாகவோ
நினைக்க வேண்டாம். காலம்தான் ஒவ்வொரு விஷயத்தையும் தீர்மானிக்கிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓ.பி.எஸ்-தான் ஆட்சிப்
பொறுப்புக்கு வந்தார். அதன் பிறகு காலத்தின் தேவை கருதி, இ.பி.எஸ்-ஸும் ஓ.பி.எஸ்-ஸும் ஒன்றிணைந்தார்கள். இப்போது
கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் தேர்தல் தோல்விகளையடுத்து, பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.

இந்தச்சூழ்நிலையில், கட்சியை மீட்டெடுத்துக் கொண்டுவருவதற்கு இரட்டைத் தலைமை அரும் பாடுபட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இந்தச் சர்ச்சைகளையும் சலசலப்புகளையும் அமைதிப்படுத்துவதற்குத் தீவிரமான நடவடிக்கைகளைக்
கட்சி எடுக்க வேண்டும்.’’

………………………………………….

இவ்வளவு ” சேதிகளை” திரட்டி, தந்து விட்டேன்…

இப்போது, நீங்களாவது –

அந்த மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் சொல்லுங்களேன்…

அதிமுகவில் சசிகலா –
இணைவாரா…???

மாட்டாரா …???? !!!!

.
………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to அதிமுக-வின் மில்லியன் டாலர் கேள்வி –

 1. bandhu சொல்கிறார்:

  இதில் மறைக்கப்பட்ட பெரிய ரகசியம்.. ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது. அந்த மர்மம் வெளிவந்து யாரும் தண்டனை பெறாதவரை அடிமனதில் அனைவர் எண்ணமும், ‘இவங்கெல்லாம் சேர்ந்து அம்மாவை கொன்றுவிட்டார்கள்’ என்பது தான் என நினைக்கிறேன். சசிகலா சேர்ந்தாலும் பெறாவிட்டாலும் ஆகப்போவது எதுவும் இல்லை! பிஜேபி எதிர்க்கட்சியாக வருவது தமிழகத்துக்கு நல்லது!

  • புதியவன் சொல்கிறார்:

   வைகைச் செல்வன் பேட்டியைப் படித்து Bandhuவும் அவர் போல எழுதியிருக்கிறார்

 2. புதியவன் சொல்கிறார்:

  ரொம்ப tricky question. அதிமுகவுக்கு ஒருங்கிணைக்கக்கூடிய ஒற்றை, ஸ்ட்ராங் தலைமை தேவை. இப்போது இருப்பவர்களில் (வருத்தமாத்தான் இருக்கு எழுத) தினகரனைத் தவிர அத்தகையை வலிமையான தலைமையை நான் பார்க்கவில்லை. எடப்பாடி நல்லவர், ஆனால் மறைமுகமாக திமுகவிற்கு உதவுகிறார், திமுக தலைமைக்கு உதவுகிறார் (பல விஷயங்களில், தேர்தலில் அல்ல). முழுமையான திமுக எதிர்ப்பு, பாஜகவுடன் சேராமை இருந்தால்தான் அதிமுக பலத்தோடு இருக்கும். அதிமுக என்பதே முழுமையான திமுக எதிர்ப்பு, தனித்துவம். அதனை எடப்பாடி காவு கொடுத்திருக்கிறார் பல சந்தர்ப்பங்களில். ஓபிஎஸ் அதிமுகவுக்கான தலைமை அல்ல என்றே நான் சில காலமாக நம்புகிறேன். அவர் ரொம்பவே பாஜக பக்கம் சார்கிறார், முக்குலத்தோர் என்ற சாதியும் அவர்மீது நிழலாகப் படிந்துள்ளது. தினகரன் நன்றாகப் பேசுகிறார், அரசியல் நிலைப்பாடு கொண்டிருக்கிறார், ஆனால் அவர் அதிமுகவை மிகவும் பாதிப்படையச் செய்கிறார். சசிகலா, பூட்ட கேஸ்..இனி அவரால் அதிமுகவுக்கு பிரயோசனமில்லை

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இந்த இடுகைக்கு சம்பந்தமில்லாதது…

  ஆனால், அவசியம் பார்க்க வேண்டிய மனதை உருக்கும் ஒரு காட்சி –

  …..

  …………………………

  • புதியவன் சொல்கிறார்:

   போர்,சம்பந்தமில்லாத பல சாமானியர்களின் வாழ்வைப் புரட்டிப்போடக் கூடியது. அதனால்தான், நாட்டின்மீதான போரைத் தூண்டும் எதையும் நாம் பேச்சின்மூலம் தீர்க்கவேண்டும். சிறிய நாட்டின்மீது போர் தொடுத்தாலும் பெரிய நாட்டின்மீது தற்காப்புக்காக போரில் இறங்கினாலும் விளைவு ஒன்றேதான்.

   நிறையபேர், பாகிஸ்தான் மீது நாம் படையெடுக்கவேண்டும், சீனா நம்மீது படையெடுத்தாலும் நாம் மிகவும் ஸ்ட்ராங்க் என்றெல்லாம் பேசும்போது எனக்குச் சிரிப்புத்தான் வரும். போர் என்றாலே, நாட்டின் மக்களின் வாழ்வு கடுமையாகப் பாதிக்கப்படும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.