முதல்வருக்கு எதிராக, அறநிலையத்துறை அமைச்சர் செயல்படுவாரா…???

…………………

…..

அண்மையில் அறநிலையத்துறை அமைச்சர்
திரு.சேகர்பாபு அவர்கள் அறிவித்ததாவது –

” சிவனை ஜோதி வடிவில் பார்க்கும் நாளை சிவராத்திரியாக
கொண்டாடி வருகிறோம். அந்த வகையில் அறநிலையத்துறை
வரலாற்றில் முதல் முறையாக மாகா சிவராத்திரி அன்று
100-க்கும் மேற்பட்ட ஆன்மீக கலைஞர்கள் இணைந்து
மார்ச் 1ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 2-ஆம் தேதி
காலை 6 மணி வரை, 12 மணி நேர மாகா சிவராத்திரி விழா
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மைதானத்தில்
நடைபெற இருக்கிறது.

2, 500 இருக்கைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது… “


இதை கடுமையாக கண்டித்து –
” தமிழக அரசு சார்பில் மகாசிவராத்திரி விழா நடத்துவது
இந்துத்துவா மாடல் ” – என்று திராவிடர் விடுதலை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க. ராசேந்திரன் கடும் கண்டனம்
தெரிவிப்பதாக கீழ்க்கண்ட அறிக்கை வெளியாகி இருக்கிறது….

Sunday, February 27, 2022,

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு
வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு மிகவும் அதிர்ச்சியளிக்கக்
கூடியதாக உள்ளது. மயிலாப்பூர் கோயிலுக்கு சொந்தமான ஒரு மண்டபத்தில் மகா சிவராத்திரி விழாவை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார் அமைச்சர்.

மகா சிவராத்திரியன்று கண் விழிக்க வேண்டும் என்கிற
மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி சுமார் 40,000 பேரைக்
கூட்டி மார்ச் 1ஆம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை
6 மணி வரை ஆன்மீக பிரச்சாரம், ஆன்மீக பட்டிமன்றம்,
ஆன்மீக இசை என இரவு முழுவதும் ஆன்மீகத்தை மக்களிடம் பரப்பப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றிலேயே முதல்முறையாக
திமுக அரசுதான் இந்த பணியை செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திராவிட மாடல் அல்ல அறநிலையத்துறையின்
பணி என்பது கோயில்களை பராமரிப்பது, கோயில்களில் நடக்கும் சடங்குகள், கும்பாபிஷேகங்களை முறையாக கண்காணித்து
அதற்கான ஏற்பாடுகளை செய்துத் தருவது, கோயில் நிலங்களை மீட்டெடுப்பது போன்றவைதான். இதனை மிகவும் சிறப்பாக அமைச்சர் சேகர்பாபு செய்து வருகிறார்.

ஆனால், மக்களைத் திரட்டி ஆன்மீகம் என்ற பெயரில் மதப்பிரச்சாரம் செய்வது அறநிலையத்துறையின் பணியல்ல. அது திராவிட
மாடலும் அல்ல.

உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியை,
‘திராவிட மாடலுக்கு கிடைத்த வெற்றி’ என்று முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் குறிப்பிடுகிறார். டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு,
‘தேர்தல் வெற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அகில
இந்திய அளவில் மிகப்பெரிய தலைவராக உயர்த்திவிட்டது,
அரசியலில் அவர் மிகப்பெரிய பங்கை ஆற்றுவதற்கான
வாய்ப்பை உருவாக்கியுள்ளது’ என தலையங்கம் தீட்டியுள்ளது.
மக்களிடம் சென்று கல்வி, மருத்துவத்தை வழங்குவது,
மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்வதுதான்
திராவிட மாடல்.

ஆனால், மக்களிடம் மதப்பிரச்சாரம் செய்வதுதான் திராவிட
மாடல் என சேகர்பாபு போன்ற அமைச்சர்கள் செய்வது தமிழ்நாடு
அரசு கட்டிக்காத்து வளர்த்து வரும் அடிப்படை கொள்கையை
குழிதோண்டி புதைக்கும் ஆபத்தான போக்கு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

மயிலாப்பூர் ஆன்மீக நகரமா? இதுவரை எந்த அறநிலையத்
துறையும் செய்யாத வேலையை இப்போது ஏன் செய்ய வேண்டும்
என்ற கேள்வியும் எழுகிறது.

உத்தர பிரதேசத்தில் ராமன் பிறந்ததாக சொல்லப்படும்
அயோத்தியை கோயில் நகரமாக, புனித நகரமாக இந்துத்துவ
பாஜக அரசு அறிவிக்கிறது. ஆனால், மயிலாப்பூர் சட்டமன்ற
உறுப்பினர் வேலு, மயிலாப்பூரை ஆன்மீக நகரமாக மாற்றப்
போகிறேன் என்கிறார்.

அயோத்தியிலாவது ராமன் பிறந்தான் என்று கூறுகிறார்கள்?
மயிலாப்பூரில் யார் பிறந்தார் – அதனை ஆன்மீக நகரமாக
மாற்றுவதற்கு. ..? சென்னையிலுள்ள மற்ற தொகுதிகளைக்
காட்டிலும் மயிலாப்பூர் மட்டும் ஏன் ஆன்மீக நகரமாக சட்டமன்ற உறுப்பினருக்கு தெரிகிறது. வண்ணாரப் பேட்டையோ,
ராயபுரமோ ஆன்மீக நகரமாக முடியாதா?

திராவிட மாடல் ஆட்சியை குழிதோண்டி புதைப்பதற்கெனவே
சபதம் எடுத்துக்கொண்டவர்கள் வாழும் பகுதிதான் ஆன்மீக பகுதி, அவர்களை மகிழ்விப்பதுதான் எனது கடமை என ஒரு சட்டமன்ற
உறுப்பினர் புறப்படுகிறார். அவருக்கு துணையாக மயிலாப்பூரை
ஆன்மீக நகரமாக மாற்றுவதன் ஒரு பகுதியாக மக்களை திரட்டி மதப்பிரச்சாரம் செய்யப்போகிறேன் என்று அறிவித்துள்ளார்
அமைச்சர் சேகர்பாபு. இது திராவிடன் மாடல் ஆட்சியை
குழிதோண்டி புதைக்கும் செயலாகும்.

அண்ணாவும், கலைஞரும் கட்டிக்காத்த கொள்கையில் ஓட்டை
போடுகிற மிகப்பெரிய ஆபத்தாகும். உண்மைகள் கசக்கும்
என்று சொன்னாலும் அவற்றை சுட்டிக்காட்ட வேண்டியது
நமது கடமை.

தமிழ்நாடு முதலமைச்சர் கட்டாயம் இதில் தலையிட வேண்டும்.
திமுகவில் லட்சக்கணக்கான சிந்தனையாளர்கள், திராவிட
இயக்க கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள் இன்னமும் அமைச்சர்களாக, பொறுப்பாளர்களாக, உறுப்பினர்களாக
இருக்கிறார்கள் என்பதை அமைச்சர் சேகர்பாபு புரிந்துகொள்ள
வேண்டும் என பணிவோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இவ்வாறு விடுதலை ராசேந்திரன் தெரிவித்துள்ளார்.


இங்கே சில விஷயங்களை சொல்ல வேண்டியிருக்கிறது….

ஓன்று –

முதலமைச்சரை கேட்காமல், முதலமைச்சர் ஒப்புதல் அளிக்காமல்,
அறநிலையத்துறை அமைச்சர் இந்த மாதிரி அறிவிப்புகளை
வெளியிட்டிருப்பாரா….? செயல்படுவாரா.. ?

ஏதோ – அறநிலையத்துறை அமைச்சர் தன்னிச்சையாக,
முதலமைச்சரின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுவதாக
சித்தரிக்க இந்த ராஜேந்திரன் அவர்கள் முயல்வது ஏன்…?

நேரடியாக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை கண்டித்து
அறிக்கை விட இவருக்கு துணிச்சல் இல்லை… அதானே….?

நேரடியாக முதலமைச்சரை கண்டித்தால், தற்பொது இவர்கள்
அனுபவிக்கும் சலுகைகள், வசதிகள் அனைத்தும் காணாமல்
போய் விடும் என்பது தானே காரணம்….?

இரண்டு –

மைலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் “சிவராத்திரி”
கொண்டாடப்படுவது இது முதல் தடவை அல்ல… வருடா வருடம்
இயல்பாகவே கோவில் அரங்கில், கோவில் செலவில் – சிறப்பாக கொண்டாடப்படும் விழா தான்.

இந்த தடவை திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு,
திமுக – ஹிந்துக்களுக்கு விரோதமான கட்சி என்கிற கருத்தை
நீக்க முயன்று வருகிறது…. அந்தப்பணியை முன்னெடுத்து
வருகிறார் திரு.சேகர்பாபு அவர்கள்… இது நிச்சயமாக அவரது சொந்த கொள்கை நிலை அல்ல…. முதலமைச்சர் விரும்புவதைத்தான்
அவர் எதிர்பார்ப்பதைத்தான் இவர் அதீத விளம்பரத்துடன் நிறைவேற்றி
வருகிறார்….

மூன்று –

இந்த மாதிரி பிரச்சினை ஒன்று உருவானதற்கு காரணம்,
அறநிலையத்துறை அமைச்சர் கொஞ்சம் அதீத ஆர்வம் காட்டி,
இது அறநிலையத்துறை ( அதாவது திமுக அரசின் ஒரு அங்கம் )
சார்பாக இதை அறிவித்தது தான்… வழக்கம்போல், கோவில்
நிர்வாகத்தின் சார்பில் இந்த அறிவிப்பு வந்திருந்தால் –
இந்த கண்டனங்களுக்கெல்லாம் வேலையே இருந்திருக்காது…

நான்கு –

வழக்கமான இந்து கோவில் விழாக்களை எல்லாம், தமிழக
அரசோ, அறநிலையத்துறையோ – முன்வந்து ஏற்று நடத்த
வேண்டுமென்கிற அவசியமே இல்லை; அந்தந்த கோவில்
சம்பந்தப்பட்ட, மத சம்பந்தப்பட்ட விழாக்கள், திருவிழாக்களை
எல்லாம், சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகங்களே கவனித்துக்
கொள்ளும்…

ஓட்டு ஆதாயம் கருதி ஒரு மதத்திற்கு ஆதரவாகவும், இன்னொரு
மதத்திற்கு எதிராகவும் நடந்து கொள்ளாமல் –
அரசு என்பது, அரசு நிர்வாகம் என்பது –
அனைத்து மதங்களுக்கும் பொதுவாக, இணக்கமாக இருந்தால்
அதுவே போதுமானது.

எந்த ஒரு மதத்திற்கும் சார்பாகவும் அரசு இயங்க வேண்டாம்…
எந்த ஒரு மதத்திற்கு எதிராகவும் அரசு இயங்க வேண்டாம்.

அரசு என்பது அனைவருக்கும் பொதுவானதாக, அனைத்து
மதங்களுக்கும், ஆன்மிக உணர்வுகளுக்கும் – ஆதரவாக
இருந்தால் அதுவே போதுமானது…..


ஆமாம் – முக்கியமான மனிதரை விட்டு விட்டு, நாமெல்லாம்
பேசிக்கொண்டே போகிறோமே….!!!
எங்கே போனார் இனமானத் தலைவர்/பேராசிரியர் கி.வீரமணி
அவர்கள்….? சிவராத்திரி விஷயத்தில் திமுக அரசை கண்டிக்க
துணிச்சல் இல்லாமல் பதுங்கிக் கொண்டு விட்டாரா….?

அவரும் ராசேந்திரனைப் போல், அறநிலையத்துறை
அமைச்சரை மட்டும் கண்டித்து விட்டு,
அமைச்சர் சேகர்பாபு அவர்கள் முதலமைச்சரின்
கொள்கைகளுக்கு எதிராக, செயல்படுவதை கண்டிக்கிறேன்
என்று பாதுகாப்பாகச் சொல்லி இருக்கலாமே…!!!

.
……………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to முதல்வருக்கு எதிராக, அறநிலையத்துறை அமைச்சர் செயல்படுவாரா…???

 1. bandhu சொல்கிறார்:

  சேகர்பாபு, ஸ்டாலின் இவர்களுக்கு சிவராத்திரி மீது எந்த அக்கறையும் கிடையாது. இந்த அறமில்லாத துறை மூலம் கோவில் நிலங்களை கொள்ளை அடிப்பது , நீண்ட நாள் குத்தகை என்று ஆரம்பித்து ஆட்டையை போடுவது என்பது மட்டுமே இவர்கள் குறிக்கோள்.

  இந்த ராஜேந்திரன் (இந்த விஷயத்தில் இவர் பெயர் கொஞ்சம் பிரபலமானது இவருக்கு கிடைத்த லாபம்), வீரமணி.. இவர்களெல்லாம் விசிலடிச்சான் குஞ்சுகளிடம் ஸ்டாலினை முட்டுக்கொடுக்க இது போன்ற ஒரு வெற்று அறிக்கை விட்டு வயிறு வளர்க்கும் ஓசி சோறுகள்.

  சிவன் சொத்து குலநாசம் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. என் கண் முன்னேயே இப்படி அழிந்த குடும்பத்தை பார்த்திருக்கிறேன். எல்லாவற்றையும் அவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்!

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  மேலே இடுகையில் நான் சொல்லியிருப்பதிலிருந்து ஒரு பகுதி –

  ……………
  நான்கு –

  வழக்கமான இந்து கோவில் விழாக்களை எல்லாம், தமிழக
  அரசோ, அறநிலையத்துறையோ – முன்வந்து ஏற்று நடத்த
  வேண்டுமென்கிற அவசியமே இல்லை; அந்தந்த கோவில்
  சம்பந்தப்பட்ட, மத சம்பந்தப்பட்ட விழாக்கள், திருவிழாக்களை
  எல்லாம், சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகங்களே கவனித்துக்
  கொள்ளும்…
  ……………

  நேற்றைய மாலை வெளியாகி இருக்கும் ஒரு செய்தியின்படி,
  அறநிலையத்துறை ஆணையர், அனைத்து கோவில் நிர்வாகங்களுக்குக்கும்
  ஒரு சுற்றறிக்கை/ஆணை அனுப்பி இருக்கிறார்….

  கோவில் விழாக்கள், அந்தந்த கோவில் நிர்வாகத்தால்,
  கோவில் வளாகத்தில், கோவில் நிதி நிலைக்கேற்ப மட்டுமே
  நடத்தப்பட வேண்டும் – என்று….

  எனவே, அமைச்சரின் விசேஷ “சிவராத்திரி” கொண்டாட்டங்கள்
  பற்றிய அறிவிப்பு –

  “அம்போ ” —– சிவ சம்போ… !!!!

  .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.