மிக சுவாரஸ்யமான ஒரு சென்ற நூற்றாண்டுத் தமிழர் …. (1)

…..

….

தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அரிய மனிதர், சென்ற நூற்றாண்டில்,
1920, 30, 40-களில் நிகழ்த்திய அரிய சாதனைகள் பற்றி இன்றைய
தலைமுறைக்கு பெரும்பாலும் தெரியாமலே போய் விட்டது.

இந்தக் காலத்தைப்போல், அப்போதைய நாட்களில் வீடியோ, தொலைக்காட்சிகள் இல்லை; அச்சு ஊடகங்கள் அதிகம் இல்லை;
எனவே , அப்போதைய காலங்களில், வார இதழ்களில் வெளிவந்த
கட்டுரைகள் தான்…எங்கோ இருந்தவற்றை தேடியெடுத்து
தான் இங்கே தொகுக்கிறேன்….

‘இதயம் பேசுகிறது மணியன்’ தான் நம்மைப் பொறுத்த வரையில்,
பயண கட்டுரையாளர்களின் துவக்கமாக இருந்தார். அந்த காலத்தில் ஆனந்த விகடன், பயணக் கட்டுரைகள் எழுதுவதற்காகவே, அவரை
கம்பெனி செலவில், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தது…

ஆனால், அவருக்கு பல ஆண்டுகள் முன்பாகவே,
தன் சொந்த பணத்தை செலவழித்து, உலகின் பல நாடுகளுக்கும்
பயணம் செய்து, தன் அனுபவங்களை பயணக் கட்டுரைகள் மூலம்
பதிவு செய்து, இடையிடையே பல சாதனைகளையும் நிகழ்த்திய
அரிய தமிழர் ஏ.கே.செட்டியார் என்று அறியப்பட்ட, சிவகங்கை
மாவட்டத்தைச் சேர்ந்த திரு.அ.கருப்பன் செட்டியார்….

தன் பயண நூல்களால் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய அனுபவத்தை ஏற்படுத்தியவர் திரு. ஏ.கே.செட்டியார்… கோட்டையூரில் 03.11.1911
அன்று பிறந்தார். திருவண்ணாமலையில் படித்துக் கொண்டிருக்கும்
போதே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். மகாத்மா காந்தியைத்
தமது தலைவராக ஏற்றார்.

தமது இருபதாவது வயதில் மியான்மரின் (பர்மா) தலைநகரமான
ரங்கூனில் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் வெளியிடப்பட்ட
‘தனவணிகன்’ என்ற இதழுக்கு ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

புகைப்படக் கலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு,
1930 ஆம் ஆண்டு ஜப்பான் சென்று ‘இம்பீரியல் ஆர்ட்ஸ்
கலாசாலையில்’ சேர்ந்து புகைப்படக் கலையில் தேர்ச்சி பெற்றார்.

அவர் ஜப்பான் நாட்டில் தாம் கண்ட காட்சிகளையும், பெற்ற அனுபவங்களையும் கட்டுரைகளாக எழுதி ‘தனவணிகன்’
இதழுக்கு அனுப்பினார். அதில் வெளியிடப்பட்ட அவரது
பயணக் கட்டுரைகள் படிப்போரின் உள்ளத்தைக் கவர்ந்தது. அக்கட்டுரைகள் தொகுக்கப் பெற்று ‘ஜப்பானில் சில நாட்கள்’
என்னும் நூலாக வெளியிடப்பட்டது. இது தான் அவரது முதல் நூல்.

ஜப்பானில் புகைப்படக் கலையைப் பயின்ற செட்டியார்
மேல்பயிற்சிக்காக அமெரிக்கா சென்று நியூயார்க்கிலுள்ள ‘போட்டோகிராபிக்ஸ் இன்ஸ்டிடியூட்டில்’ சேர்ந்து பட்டயப் படிப்பில் (டிப்ளமா) தேர்ச்சியடைந்தார். படிப்பு முடிந்து இந்தியா
திரும்புகையில் இங்கிலாந்து, அயர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ்
முதலிய நாடுகளுக்குச் சென்று வந்தார்.

டிசம்பர் 1937-ல் – அவர் ஆஸ்திரியாவிலுள்ள பாட்காஸ்டீனுக்குச்
சென்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸைச் சந்தித்து, அவரைப் படம் பிடித்திருக்கிறார்.

இந்தப் பயண அனுபவங்களைக் கட்டுரைகளாக வெளியிட்டார். அக்கட்டுரைகள் பின்னர் ‘உலகம் சுற்றும் தமிழன்’ என்னும் பெயரில் நூலாக 1940 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதற்குப் பிறகு ஏ.கே.செட்டியார் ‘உலகம் சுற்றும் தமிழன்’ என்றே அழைக்கப்பட்டார். பெயருக்கேற்ப, தம் வாழ்நாளில் அவர், கப்பல், விமானம், ரெயில், என்று சுமார் நான்கு இலட்சம் மைல்களுக்கு மேல் பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது நூல்களிலேயே அதிகமான பதிப்புகள் வெளிவந்த நூல்,
‘உலகம் சுற்றும் தமிழன்’… அந்த நூல் மாணவர்களுக்குப்
பாட நூலாகவும் வைக்கப்பட்டது. பல பதிப்புகள் வெளியிடப்பட்டு
அந்தக் காலத்தில், பதிப்புத்துறையில் ஒரு சாதனை புரிந்தது …

ஏ.கே.செட்டியாரின் பயண நூல்கள் மிக எளிமையானவை….
தெளிவானவை…… அவர் தனது கட்டுரைகளில், தேவைக்கு மேல்
எதுவும் எழுதுவதில்லை. மேலும், மனிதப் பண்பு, மனித நேயம்
என்பவற்றையே முன்னிறுத்தி அவரது எழுத்துக்கள்
அமைந்தன.

தானே வெளியிட்டு வந்த மாத இதழான ‘குமரிமலர்’ இதழில்
1943 ஆம் ஆண்டு முதல், தமது பயணக் கட்டுரைகளை எழுதி
வெளியிட்டார். ‘குமரி மலர்’ மாத இதழைத் தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றை ஆவணப் படுத்துவதற்கு முக்கியக் கருவியாகக் கைக்கொண்டார். பாரதியின் இந்தியா, சக்கரவர்த்தினி, கர்மயோகி மற்றும் சில சுதேசமித்திரன் கட்டுரைகளை முதலில் வெளியிட்டதில் குமரி மலருக்கு முக்கியப் பங்குண்டு.

மாதம் ஒரு புத்தகமாக 1943-ல் தொடங்கிய குமரி மலர், ஏ.கே.செட்டியார்
மறையும் வரை ஒரு சிறு இடைவெளி நீங்கலாக, மாதந் தவறாமல் வெளிவந்தது. குமரி மலர், புத்தகக் கடைகளில் விற்கப்படவில்லை; விரும்பிச் சேர்ந்த சந்தாதாரர்களுக்கு மட்டுமே அனுப்பி
வைக்கப்பட்டது…..!

ஆவணத்திரைப்படம் எனும் வகையைத் தமிழகத்திற்கு
முதன் முதலாக அறிமுகப்படுத்திய பெருமையும்,
ஏ.கே.செட்டியாரையே சாரும்.

1937 அக்டோபரில், நியூயார்க்கிலிருந்து டப்ளின் நகருக்கு
அட்லாண்டிக் கடலில் கப்பலில்பயணித்துக் கொண்டிருந்த
சமயத்தில்,

26 வயதுகூட நிரம்பாத அந்த தமிழ் இளைஞர் –
காந்தியின் வாழ்க்கையை ஓர் ஆவணப்படமாக எடுக்க வேண்டும்
என்று கனவொன்று கண்டார்.

1938-ல் ‘டாக்குமெண்டரி ஃபிலிம்ஸ் லிமிடெட்’ என்ற குழுமத்தை ஏ.கே.செட்டியார் நிறுவினார். முதலில் இந்தியாவில் காந்தி
பற்றிய படப் பதிவுகளைத் திரட்டிய ஏ.கே.செட்டியார், பிறகு வெளிநாடுகளில் தம் தேடலைத் தொடர்ந்தார்.

அடுத்த இரண்டரை ஆண்டுகள். இதற்காகவே இருமுறை உலகைச்
சுற்றினார். கப்பலிலும் விமானத்திலும் ரயிலிலும் ஒரு லட்சம் மைல் பயணித்தார். அவரே நேடால், டர்பன் முதலிய தென்ஆப்பிரிக்க
நாடுகளுக்குச் சென்று பல இடங்களில் படமும் பிடித்தார். கூடவே,
30 ஆண்டுகளில், 100 கேமராக்காரர்கள் படம் பிடித்த
50,000 அடி நீளப் படச் சுருள்களைக் கண்டெடுத்தார்.
அதன் பின் அப்படத்தை ஹாலிவுட்டில் படத்தொகுப்பு செய்து
சுருக்கி அதற்கு ஆங்கில விளக்கவுரையை இணைத்தார்.

‘மகாத்மா காந்தி: அவரது வாழ்க்கையின் சம்பவங்கள்’
என்ற பெயரில் இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய படம் ஆகஸ்ட்
1940-ல் வெளிவந்தது.

காந்தியைப் பற்றிய முதல் முழு நீளப் படம் என்ற பெருமை
இதற்கு உண்டு. தமிழ் வடிவம் வெளிவந்த சில மாதங்களில்,
அப்படம் தெலுங்கு மொழி பெயர்ப்புடன் வெளி வந்தது.
‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் சூடுபிடித்த வேளையில்,
சில ஆண்டுகள் அதன் படச்சுருள்கள் தலைமறைவாயின.

மீண்டும் – சுதந்திரக் கொண்டாட்டம் கோலாகலமாக அரங்கேறிக்கொண்டிருந்த வேளையில், 14 ஆகஸ்ட் 1947
இரவு புது டெல்லியில் இப்படம், அரசியல் நிர்ணய சபையின்
தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் உட்பட – பல முக்கியஸ்தர்கள்
முன்னிலையில் திரையிடப்பட்டது.

(காந்திஜியின் மறைவு குறித்த சில காட்சிகள் பின்னர் இதில் இணைக்கப்பட்டன…)

அப்படத்தில் மகாத்மாவுடன் பழகிய பலரும் இடம்
பெற்றுள்ளனர். அந்த ஆவணப்படத்தைப் பலர் அதிகத்
தொகைக்குக் கேட்டும் அவர் தரவில்லை. அப்படத்தை
இந்திய அரசிடமே ஒப்படைத்துவிட்டார் … !!!

( அந்த வரலாற்றுப் படத்தை இங்கே கீழே பதிந்திருக்கிறேன்… பார்க்கும்போது, இது, 1930- வாக்கில் துண்டு துண்டாக எடுக்கப்பட்ட பல காட்சிகளால் உருவாக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்…)

…….

…….,.

இதழாளராக, எழுத்தாளராக, புகைப்படக் கலைஞராக,
ஆவணப்படத் தயாரிப்பாளராக விளங்கி, தமிழகத்துக்குப்
பெருமைச் சேர்த்த ஏ.கே.செட்டியார், தமது எழுபத்திரெண்டாவது
வயதில், 10.09.1983 -ல், சென்னையில் காலமானார்.

ஏ.கே.செட்டியார் எழுதிய பல பயண அனுபவங்கள் அவராலேயே
தொகுக்கப்பட்டு, புத்தகங்களாக வெளிவந்துள்ளன. இப்போதும்
அவற்றில் பல – நூல் உலக’த்தில் விற்பனைக்கு கிடைக்கின்றன என்று அறிகிறேன்.

ஏ.கே.செட்டியார் அவர்கள் எழுதி அந்தக் காலத்தில் சில வார
இதழ்களில் வெளிவந்த மிகச்சில பயணக்கட்டுரைகளை
நான் தேடிப்பிடித்து படிக்க முடிந்தது…

வாசக நண்பர்கள், 1940-களில் எழுதப்பட்ட அவற்றின் சுவையை
அறிய, ரசிக்க – அடுத்த சில நாட்களில் அவற்றையும் இங்கே
பதிப்பிக்கிறேன்….

.

……………………………………………………………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.