சந்நியாசியும் தீவிர அரசியலும் – எப்படி பொருந்தும் …..?

பொதுவாக சந்நியாசிகளின் குணங்களாக, இயல்புகளாக –
பார்க்கப்படுபவை, எதிர்பார்க்கப்படுபவை என்னென்ன….?

கர்மங்களினால் கிடைக்கும் நல்லுலகங்கள் கூடத்
துயரத்தைத் தரும் என்ற பேருண்மையை உணர்ந்து,
செயல்களைத் துறந்து சந்நியாச தர்மத்தை ஏற்க வேண்டும்.

பந்த பாசங்களினின்று விடுபட்டு
தன்னை வருத்தி துறவு மேற்கொள்ளுதல்,

நிலையாக ஒரே இடத்தில் தொடர்ந்து
வசிக்காமல், இடம் விட்டு இடம் நகர்ந்து சென்று,
உடல் சுகத்தைத் துறந்து கடவுளை தியானிப்பதும்,

தான் அறிந்த உண்மைகளையும் நீதிகளையும் மக்களுக்கு
கூறுதலும் ஆகும். சமய வாழ்வில் மக்களை ஈடுபடச் செய்தல்
மற்றும் ‘முற்றும் துறந்த நிலையே’ சந்நியாசமாகும்.. ….

காவி உடை தரிப்பதாலோ, வெறும் மூங்கில் தடியைச்
சுமப்பதாலோ மட்டும் ஒருவர் சந்நியாசியாகி விட மாட்டார்….
நான்கு வர்ணத்தவர்களின் வீடுகளில் மட்டுமே சமைத்த உணவை
பிட்சை எடுத்து, அதில் கிடைப்பதில் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.
துறவி என்பவன், உரிய காலத்தில் பிட்சை உணவு கிடைக்கா
விட்டாலும் வருத்தப்பட மாட்டான். அதேபோல், நல்ல உணவு
கிடைத்தாலும் மகிழ்ச்சி அடையமாட்டான்.

துறவி எதனிடத்திலும் பற்றுக் கொள்ளாமல், புலன்களை அடக்கி,
எல்லா ஜீவராசிகளையும் சமமாகப் பார்த்து,
தனியாகப் பூவுலகில் ஒரிடத்தில் தொடர்ந்து தங்காமல்,
நிலையின்றி திரிந்து வாழவேண்டும்.

துறவி –
தன்னை யார் தூற்றினாலும் பொறுத்துக் கொள்வான்;
எவரையும் அவமதிக்க மாட்டான்;
மற்றவர்களிடம் விரோதம் கொள்ள மாட்டான்.
அன்பும், கருணையும், இரக்கமும் – அவன் குணங்களாக இருக்கும்.

ஞானத்தில் நிலை பெற்ற துறவியிடம்- இன்ப- துன்பம்,
மான-அவமானம், குளிர்-வெப்பம் – போன்ற இருமை உணர்வுகளை
காண முடியாது.

எந்தத் துறவியிடம், ஞானமும் வைராக்கியமும் இல்லையோ,
அவன் வெறுமனே காவி உடையோடு, மூங்கில் தண்டத்தை சுமந்து வயிற்றை நிரப்பிக் கொள்பவனாக இருப்பானே தவிர,
உண்மையான துறவியாக மாட்டான்.

துறவியின் முதன்மையான தர்மம் – அமைதியும், அகிம்சைமே….

ஒரு சந்நியாசிக்கான மேற்படி விளக்கத்தை தருபவர் –
சுவாமி குருபரானந்தா அவர்கள்….

சரி- ஒரு சந்நியாசி, ஒரு மடாதிபதியாகவும் இருக்க நேர்ந்தால்,
அவர் பணி எத்தகையதாக இருக்கும் …?

தான் நிர்வகிக்கும் மடத்தின் மூலம் –

 • துன்பப்படும் ஏழைகளுக்கும், முதியோர்களுக்கும்,
  ஆதரவற்ற பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் –
  பசியாலும், பிணியாலும் வாடுவோர்க்கும் –
  தன்னாலியன்ற அனைத்து உதவிகளையும் செய்வது;

இலவச மருத்துவமனைகளையும், பள்ளிகளையும் நிறுவுவது,
ஆதரவற்றோர் இல்லங்களை உருவாக்கி, பராமரிப்பது –

மக்களுக்கு அற விஷயங்களை போதிப்பது,
நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுப்பது,
இதிகாச, புராணங்கள் சொல்லும் நல்ல செய்திகளை
எடுத்துச் சொல்வது ……


சரி – இந்தக் காலங்களில் ஒரு அரசியல்வாதியிடம்
நாம் காணும் குணாதிசயங்கள் என்னென்ன ….?

முதலில் – கட்சியில், முன்னேறி – முக்கியமான இடத்தை பிடித்துக் கொள்ள
வேண்டும். தனது முன்னேற்றம் கருதி, தேவைப்படுமேயானால்,
அதற்காக – எதையும் – செய்யத் துணிய வேண்டும்.
சொந்த கட்சியையோ, உயிராகக் கருதிய நண்பர்களையோ –
விட்டு விலகவும், அடுத்த கட்சிக்கு தாவவும் தயாராக
இருக்க வேண்டும்.

அடுத்து – தேர்தல்களில் நிற்க வேண்டும்… நின்றால் போதாது,
ஜெயிப்பதற்கான அத்தனை வழிகளையும் மேற்கொள்ள
வேண்டும்… இங்கே சாம, பேத, தான, தண்டங்களும்,
லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணம் செலவழித்தலும்
முக்கியம்….

தேர்தலில் ஜெயித்த பிறகு…..?
ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்….
அது அவ்வளவு சுலபமான காரியமா…?
எனவே, அதற்காக எதையும் செய்யத் துணிய வேண்டும்…

ஆட்சி, அதிகாரத்தில் அமர்ந்த பிறகு….?
அந்த அதிகாரத்தை நிரந்தரமாக தன்னிடமே தக்க வைத்துக் கொள்ள –
எதெதை செய்ய வேண்டுமோ- அவை அனைத்தையும் எந்தவித
தயக்கமும் இல்லாமல், (மனசாட்சியைத் தூக்கி எறிந்து விட்டு )
செய்ய வேண்டும்….

கட்சியிலும், ஆட்சியிலும் – நிரந்தரமாக இடத்தை தக்க வைத்துக்
கொள்ள வேண்டுமானால், சக -கட்சிக்காரர்கள் எந்தவித
அட்டூழியங்களில் ஈடுபட்டாலும், கண்டுகொள்ளக் கூடாது…


(ரவுடித்தனம், ஆட்கடத்தல், கொலை, பலாத்காரம் அத்தனையும்
இதில் அடக்கம்….) அவர்கள் மீது எந்தவித சட்டபூர்வ நடவடிக்கைகளும்
எடுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை
நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், அதை
வெறும் கண்துடைப்பிற்காக செய்ய வேண்டும்…. எக்காரணத்தை
முன்னிட்டும், கட்சி முக்கியஸ்தர்களை – தன் அதிகாரம் நீடித்திருக்க
காரணமானவர்களை – காட்டிக்கொடுத்து விடக்கூடாது.

சரி – ஒரு சந்நியாசிக்கு ஏன் யந்திரத்துப்பாக்கிகள் ஏந்திய கமாண்டோக்களின் பாதுகாப்பு…….?

வகிக்கும் பதவி காரணம் காரணமாகவும்,
எடுக்கும் நடவடிக்கைகள் காரணமாகவும்,
கூட இருக்கும் அயோக்கியர்களின் சகவாசம் காரணமாகவும் –
எந்த நேரத்திலும் – உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்பதாலேயே –

சந்நியாசியாக இருந்தாலும் கூட, காவியுடையில் இருந்தாலும் கூட –
24 மணிநேரமும், யந்திர துப்பாக்கியுடன் கூடிய ஒரு டஜன்
கமாண்டோக்களின் பாதுகாப்பிலேயே வலம் வர வேண்டியிருக்கும்….!!!

கட்சியில் தலைமையை பிடிக்கவும், பின் அதனை
தக்க வைத்துக்கொள்ளவும்,

பிறகு ஆட்சியை பிடிக்கவும், அதனை தக்க வைத்துக் கொள்ளவும்,


தேர்தலில் வெற்றியை உறுதி செய்யவும் –
பல கோடி பணம் வேண்டும் என்பதாலும் –
உண்மை, வாய்மை, அறம், தர்மம் என்பதையெல்லாம்
சுத்தமாக மறந்து விட்டு – 24 மணிநேரமும் பொய்யிலேயே
ஊறித்திளைக்க வேண்டும்….!!!


இப்படி – சந்நியாசம் என்பதும், அரசியல் என்பதும் –
ஒன்றுக்கு ஒன்று முற்றிலும் எதிரான நிலையில் இருக்கையில்,
ஒருவர் எப்படி தொடர்ந்து 30 வருடங்களுக்கும் மேலான
காலத்திற்கு –

சந்நியாசியாகவும்
அரசியல்வாதியாகவும் –
இரட்டை உருவங்களில் இருக்க முடியும்….?

இந்த இரண்டில் எது உண்மை ….?

இந்த இரண்டில் ஒன்றை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு,

 • மற்றொன்றை விட்டு விடலாமே….?
  அதைச் செய்யத் துணியாததற்கு என்ன காரணம்…..?

அரசியல்வாதி வேடம் – ஆட்சி, அதிகாரத்தை தருகிறது….

சந்நியாசி வேடம் – மரியாதையை பெற்றுத் தருகிறது
என்பதாலா…..?

இந்து தர்மம் – இத்தகைய இரட்டை வேடங்களை
ஏற்றுக் கொள்ளுமா…..?

இந்து தர்மத்தில் உண்மையான பற்று கொண்டோர்
இந்த ஒன்றுக்கொன்று முற்றிலும் எதிரான –
இரட்டை பாத்திரங்களை ஏற்றுக்கொள்வார்களா….?

நீங்களே சொல்லுங்கள் நண்பர்களே….

.
………………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to சந்நியாசியும் தீவிர அரசியலும் – எப்படி பொருந்தும் …..?

 1. புதியவன் சொல்கிறார்:

  ரிஷி, துறவிகளிலும் பல்வேறு பணிகளைச் செய்தவர்கள் உண்டு.

  பொதுவாக அரசியலில் நல்லவர்களாக இருப்பது அல்லது நல்ல மனிதனாக நேர்மையாக இருப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று (எப்போதும் தோல்வியைத் தழுவும் வேட்பாளர்களில் ஒருவேளை சாத்தியம்). எப்போது வேட்பாளராக நிற்கிறார்களோ அப்போதே நேர்மை அடிபட்டுப்போய்விடுகிறது

  ஆதித்யநாத் கோரக்நாத் கோவிலைப் பார்த்துக்கொள்பவர். அவர் அரசியலில் இருந்தாலும் யோகி என்ற பட்டத்தை அதனாலேயே தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். அவ்ளவுதான்.

  யோகி என்ற பட்டம் வைத்துக்கொண்டிருப்பதாலேயோ இல்லை, மடாதிபதிகளையோ உடனே நாம் பரமாச்சார்யாவுடன் ஒப்பீடு செய்வது அர்த்தமில்லாதது. ஒவ்வொரு மனிதனும் அவனது குணம், ஒழுக்கம் அறிவு என்பதால் தானே உயர் நிலையை அடைகிறானே ஒழிய பட்டம் பதவிகளால் அல்ல.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.