‘ நீட்’- டுக்கு இப்படி ஒரு சுலபமான தீர்வு இருப்பதை ஏன் எல்லாரும் மறைக்கிறார்கள் அல்லது மறக்கிறார்கள்…???

தமிழகத்தில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும்
இரண்டாகப் பிரிந்திருக்கிறார்கள்….

ஒன்று – நீட்டிற்கு எதிர்ப்பு
அல்லது – நீட்டுக்கு ஆதரவு

என்கிற எதாவது ஒரு நிலையிலேயே உறுதியாக நிற்கிறார்கள்…

தாங்கள் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு மாறாக அல்லது
மாற்றாக வேறு எதையும் யோசிக்கவோ, பேசவோ
மறுக்கிறார்கள்…

நீட்டிற்கு ஆதரவாக பேசும் கட்சிகள் தனியார் மருத்துவ
கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையை காரணமாக
காட்டுகிறார்கள்… ஆனால்,நீட் தேர்வுக்கு பயிற்சி தரும்
பிரைவேட் கோச்சிங் சென்டர்கள் அடிக்கும் கொள்ளையை
வசதியாக மறந்து விடுகிறார்கள் …

தனியார் கோச்சிங் சென்டரில் சேர்ந்து படிக்காமல் நீட் தேர்வை
சந்திப்பது மாணவர்களுக்கு கிட்டத்தட்ட இயலாத காரியமாகிவிட்டது…

இந்த கோச்சிங் சென்டர்கள், மாணவர்களின் பலவீனத்தை
பயன்படுத்திக் கொண்டு லட்சக்கணக்கில் சம்பாதிப்பதை
இந்த அரசியல்வாதிகள், சௌகரியமாக மறந்து விடுகிறார்கள்
அல்லது மறைத்து விடுகிறார்கள்.

12 வது வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும் கூட
பல மாணவர்களால் நீட்’டில் தேர்ச்சி பெற முடிவதில்லை என்பது மறுக்க முடியாத, மறைக்கமுடியாத ஒரு உண்மை.

நம் முன் இரண்டு வித
பிரச்சினைகள் இருக்கின்றன..

ஒன்று –

நீட் தேர்வை வலியுறுத்துவதன் மூலம் –

12 ஆண்டுகள் மிகுந்த சிரத்தையோடு, அக்கறையோடு,
உழைத்து, படித்து – பன்னிரண்டாம் வகுப்பு இறுதியில்
நல்ல மார்க்குகளுடன், ரேங்கில் தேர்ச்சி பெறும் மாணவர்களை,

அவர்களின் தன்னம்பிக்கையை சிதைத்து,
மீண்டும் நீட் என்ற பெயரில் ஒரு தேர்வு எழுத வைத்து,
அவர்களது 12 வருட உழைப்பிற்கு எந்த அர்த்தமோ மதிப்போ
இல்லாமல் செய்துவிடுவது …

இரண்டு –

அல்லது – நீட் தேர்வை ரத்து செய்வதன் மூலம் –

பழையபடி, தனியார் மருத்துவக் கல்லூரிகள், தகுதியற்ற,
திறமை குறைந்த, ஆனால் பண வசதி மிக்க மாணவர்களுக்கு
‘சீட்’ கொடுப்பதன் மூலம்,
அவர்கள் கோடிக்கணக்கில் கொள்ளை அடிப்பதற்கும்,
தகுதி குறைந்த மருத்துவர்கள் உருவாவதற்கும் காரணமாகி
விடுவதை தடுக்க இயலாமல் இருப்பது…..

நீட் தேர்வு இல்லையென்றால் –
தகுதி இருக்கிறதோ இல்லையோ,
பணம் இருந்தால் எவரும் மருத்துவராகி விடலாம் என்கிற
ஒரு ஆபத்தான நிலையை அது உருவாக்கி விடக்கூடும்
என்பதும் உண்மை தான் ….

ஆனால் – இந்த இரண்டு பிரச்சினைகளையும் எதிர்கொள்ள
இன்னுமொரு சுலபமான வழி இருப்பதை – எந்த காரணத்தினாலோ,
அரசியல்கட்சிகளோ, அரசியல்வாதிகளோ – பேசுவதே இல்லை.

அவர்களைப் பொருத்த வரை –
சிலருக்கு, சில கட்சிகளுக்கு – நீட் கூடாது;
வேறு சிலருக்கு நீட் அவசியம் தேவை…. அவ்வளவு தான்;

இதற்கு மேல் வேறு எந்த தீர்வைப்பற்றியும், பிறரையும்
யோசிக்க விடாமல் மூளைச்சலவை செய்து விடுகிறார்கள்.

12 வருடங்கள் பள்ளியில் கடுமையாக உழைத்து, படித்து,
நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை அநாவசியமாக
மீண்டும் நீட் என்கிற ஒரு தேர்வை எழுத வைத்து அவர்களின்
எதிர்கால கனவுகளை சிதைத்து விடாமல் –

பன்னிரண்டாம் வகுப்பில் அவர்கள் பெரும் ரேங்கை
அடிப்படையாகக் கொண்டே, இன்ஜினியரிங் மற்றும் பிற
படிப்புகளுக்கு அனுமதிப்பது போல் மருத்துவ படிப்பிற்கும்
அரசு மருத்துவ கல்லூரிகளில் – அனுமதி கொடுக்க வேண்டும்.

அதேசமயம் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தகுதிகுறைந்த
மாணவர்களை பணத்திற்காக சேர்த்துக்கொள்ளும் போக்கை
தடுக்கும் விதமாகவும், எதிர்காலத்தில் தரம் குறைந்த மருத்துவர்கள் உருவாவதை தடுக்கவும் –

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கு மட்டும் நீட் தேர்வை கட்டாயப்படுத்தி,
அவர்களது குறைந்த பட்ச தகுதியை உறுதி செய்ய வேண்டும்.

அதாவது – அரசு கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு,
12-வது வகுப்பில் பெறும் ரேங்கின் அடிப்படையில் அனுமதி….
(நீட் தேவையில்லை….)

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு,
நீட் தேர்வு அவசியம் தேவை.

இந்த யோசனையை ஏற்றுக் கொண்டால் –
அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும், 12-வது வகுப்பில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள்/ ரேங்க் அடிப்படையில் மாணவர்கள்
சேர்க்கப்படுவார்கள்…

12-வது வகுப்பில் நல்ல ரேங்க் பெற முடியாத, ஆனால் பணவசதி
உள்ள மாணவர்கள், அதற்கான ‘நீட்’ தேர்விற்கு படித்து,
தங்கள் தகுதியை நிரூபித்து விட்டு, தனியார் மருத்துவ கல்லூரிகளில்
சேர்ந்து படிக்கலாம்.

‘நீட்’ டை வைத்து அரசியல் பண்ணுவதிலேயே குறியாக இருக்கும்
நம் அரசியல்வாதிகள் –

உண்மையிலேயே –
யாருக்கும் விரோதமாக இல்லாத,
நடைமுறை சாத்தியமான – தீர்வினைத் தரும் –

இப்படி ஒரு திட்டத்தைப்பற்றி, தீவிரமாக – யோசிக்க வேண்டும்…..
செய்வார்களா….?

இதிலும் சில குறைகள் இருக்கக்கூடும்…. ஆனாலும் யோசித்தால் அவற்றிற்கும் நம்மளவிலேயே – தீர்வு காண நிச்சயம் இயலும்…

நீங்கள் என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே… ?

.
……………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

17 Responses to ‘ நீட்’- டுக்கு இப்படி ஒரு சுலபமான தீர்வு இருப்பதை ஏன் எல்லாரும் மறைக்கிறார்கள் அல்லது மறக்கிறார்கள்…???

 1. ஸ்ரீதர் சொல்கிறார்:

  ஐயா , நலமா.

  முழுமையாக ஆதரிக்கிறேன்

 2. புதியவன் சொல்கிறார்:

  1. நீட் தேர்வை நான் ஆதரிக்கிறேன். இந்த background உடன் இதனைப் படிக்கணும். அரசு வேலைகள் எல்லாவற்றிர்க்கும் தேர்வு இருக்கிறது. எதற்காக? அவரவர் டிகிரி, +2 மதிப்பெண்கள் போன்ற எத்தனையோ இருக்கிறதே. ஐ ஐ டிக்கு தேர்வு, ஐஏஎஸ், எம்பிஏ என்று பல்வேறு படிப்புகளுக்குத் தேர்வுகள் இருக்கிறதே.. ஏன் TNPSCக்கு தேர்வு என்றெல்லாம் கேட்கும் கேள்விகளுக்கு எல்லையும் இல்லை பதிலும் இல்லை.
  2. நாமக்கல் கோழிப்பள்ளிகள் போன்ற தனியார் பள்ளிகள் பெரும் கொடை வாங்கிக்கொண்டு, மதிப்பெண்களைப் பெற்றுத் தந்துவிடுகின்றன. இதற்கு வக்கில்லாத மற்ற கிராமப்புற மாணவர்கள் எந்த விதத்தில் நாமக்கல் கோழிப் பண்ணைகள்/பள்ளிகளுக்குப் போட்டிபோட முடியும்? நான் படிப்பில் என் அளவீடின்படி முதல் 2 ரேங்குகள் 8ம் வகுப்பு வரை. 8ம் வகுப்பில் மாவட்டத்தில் 2ம் ரேங்க் வாங்கினேன். ஆனால் பாளை சேவியர் பள்ளியில் சேர்ந்தபோது, என்னால் மற்றவர்களுடன் போட்டிபோட மிகவும் கஷ்டப்பட்டேன். காரணம் அவங்களோட எக்ஸ்போஷர். இவங்களை ஒப்பிட்டால் சென்னை எங்கேயோ இருக்கும் எக்ஸ்போஷரில். அதனால் பள்ளி மாணவர்களும் பணத்தைப் பொறுத்தும் இடத்தைப் பொறுத்தும் நிறைய எக்ஸ்போஷர் கிடைக்கிறது. படிப்பிலேயே இவ்வளவு வித்தியாசம் இருக்கிறது. இவங்க எல்லோரையும் மதிப்பெண் என்ற தராசில் எப்படி நிறுக்க முடியும்?
  3. ப்ளஸ் டூ மதிப்பெண் மட்டும் consider செய்தால் கிராமப்புறத்தில் முட்டாள்கள் மட்டும்தான் இருக்கிறார்கள், அவர்களில் எக்ஸெப்ஷன்கள் மட்டும் மருத்துவராக முடியும் மற்றபடி நாமக்கல் கோழிகள்தான் மருத்துவராக முடியும் என்று ஆகிவிடும். இதைத்தான் நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? இதற்குப் பதில், அரசுப்பள்ளி மாணவர்கள் 50 சதம் (+2 மதிப்பெண்கள் வரிசையில்), மீதி +2 மதிப்பெண்கள் வரிசையில் என்று அரசு மருத்துவக்கல்லூரி சம்பந்தமான எல்லா அட்மிஷன்களுக்கும் (மருத்துவம், பல் மருத்துவம், நர்சரி முதலிய எல்லாவற்றிர்க்கும்) என்று வைக்கலாம். இது எல்லா மாணவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.
  4. தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு (மட்டும்) 15 சதம் ஒதுக்கிவிட்டு இப்போதுள்ளதுபோல நீட் தேர்வு வைக்கலாம் என்பதை நான் ஆதரிக்கிறேன்.

  ஆனால் நீட்டை எதிர்ப்பவர்கள் யார் என்று பாருங்கள். அவங்களுக்குச் சொந்தமாக மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவர்கள் தனியார் கல்லூரிகளுக்காக அல்லது தங்கள் வரவுக்காக உழைக்கிறார்கள் என்றே பலர் சொல்கின்றனர்.

  உங்களிடமிருந்து பதிவு வந்ததில் மகிழ்ச்சி. நலமாகிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

 3. கார்த்திகேயன் சொல்கிறார்:

  பத்தாம் வகுப்பு முடிந்தவுடன் 12ம் வகுப்பு பாடங்களை 11ம் வகுப்பிலே நடத்தும் தனியார் பள்ளிகளை எவ்வாறு தடுப்பது

  • Elango சொல்கிறார்:

   All over india Maths, physics, chemistry and biology same syllabus with all education institutes run by only government. No private. Our politician do not have heart to treat people equally. The country which one is running by religion ,there is no equality. In the past this world lost so many genius because of religion. Do not think here why, where religion comes. Every one knew that all politics hidden power.(EDUCATION-KNOWLEDGE)

 4. arul சொல்கிறார்:

  நீட் தேர்வினால் தகுதி உள்ளவர்கள் மருத்துவம் படிக்க முடியும் என்பது மாயை. ஏனென்றால் நீட் தேர்வு பாசானாலும், தர (ரேங்கிங்) அடிப்படையில் ஒரு ஏழை மாணவியால் +2 1176 எடுத்த நீட் தேர்வில் 426 எடுத்த மாணவியால் தனியார் கல்லூரியில் பணம் கட்ட முடியாமல் மருத்துவம் படிக்க முடியவில்லை. அதே நேரத்தில் நீட் தேர்வு மட்டும் பாஸ் பண்ணி பணம் இருக்கும் ஒரே காரணத்தினால் மருத்துவ கல்லூரியில் மருத்துத்துவம் படிக்கிறர்கள் .. இதில் நீட் தேர்வினால் தரம் எங்கு உயர்கிறது?

  கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வுக்கு முன்னர் அதிக அளவில் மருத்துவர் ஆனார்கள் வெறும் +2 மதிப்பெண் அடிப்படையில் .. ஆனால் இன்று ?

  நீட் தேர்வினால் சில அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் கிடைத்ததும் 7 5 இட ஒதுக்கீட்டினால் மட்டுமே ..

  அடிப்படை கல்விக்கும் , வேலைக்கு நடத்தப்படும் தேர்வுக்கும் வித்தியாசத்தை புரிந்து கொள்ளாமல் சிலர் நீட் தேர்வை அதனுடன் ஒப்பீடுகிறார்கள் – இது thavaru

 5. bandhu சொல்கிறார்:

  இதில் இரண்டு விஷயங்கள்

  எந்த தகுதிப்படி மருத்துவப் படிப்பு படிக்கவேண்டும்? ஐ ஐ டிக்கு தேர்வு, ஐஏஎஸ், எம்பிஏ எல்லாவற்றிற்கும் தேர்வு இருக்கும்போது மருத்துவ படிப்புக்கும் தனி தேர்விருப்பது முக்கியம். அதே நேரத்தில் நுழைவுத் தேர்வு tutor கட்டணம் அதிகம் என்பதும் உண்மை. எவ்வளவோ குப்பை திட்டங்களுக்கு பணத்தை இறைக்கும் அரசு தேர்வு பயிற்சி மையங்கள் நடத்தலாம். அரசு விற்கும் மதுவில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் தேர்வு பயிற்சி மைய திட்ட செலவு என்று ரூபாய் ஐந்து விதிக்கலாம். அந்த வருவாயை வைத்து மையங்களை நடத்தலாம்.

  இரண்டாவது. கல்லூரிகள் அதிக கட்டணம் அதனால் ஏழைகள் சேரமுடியவில்லை என்பது. அதற்கும் நீட் தேர்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காசு இல்லையேல் எந்த கல்லூரியிலும் எந்த படிப்பும் படிக்க முடியாது!

 6. சிவா சொல்கிறார்:

  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும், எதிர்க்கட்சிகளின் பிராசரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது நீட் தேர்வு. இரண்டு தரப்பும் மாறி… மாறி இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள். அதன்பின்னணியும் உண்மையும் என்ன?

  “நீட் தேர்வை ரத்துசெய்வதற்குக் கடுமையான முயற்சி மேற்கொண்டோம். இருந்தாலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நீட் தேர்வு நடத்தவேண்டிய சூழ்நிலையில் அப்போது அ.தி.மு.க இருந்தது. இப்போதும் நீட் தேர்வு நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், இன்று நீட் தேர்வு தமிழகத்தில் நுழைந்ததற்கு முழுக்க முழுக்க காங்கிரஸும் தி.மு.க-வும்தான் காரணம்.” என அ.தி.மு.க தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பேசி வருகிறார்கள். “2010-ல் மத்திய காங்கிரஸ் அமைச்சரவையில் சுகாதாரத்துறை இணையமைச்சராக தி.மு.க-வைச் சேர்ந்த காந்திசெல்வன் இருந்த காலகட்டத்தில்தான் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. ‘நீட்’ என்ற சொல்லே அப்போதுதான் வந்தது. அப்போதே 2013-ல், அந்தந்த மாநிலங்கள் விருப்பப்பட்டால் நீட் தேர்வை அமல்படுத்திக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதே ஆண்டில் உச்ச நீதிமன்றத்தின், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில், நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிப்படைகிறார்கள், எனவே நீட் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என இரண்டு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள். இந்தத் தீர்ப்பு அப்படியே தொடர்ந்திருந்தால், இப்போது இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இதை முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசுகையில் குறிப்பிடவில்லை. அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸால் மறுசீராய்வு மனு போடப்பட்டதன் விளைவாகத்தான், 2017-ல் நீட் தேர்வு வந்தது. இதையெல்லாம் தடுத்து நிறுத்த அனைவரது ஒருமித்த கருத்தாக நீட் தேர்வு ரத்துசெய்யப்பட வேண்டும். இதைச் சட்டரீதியாக அணுகுவதற்கு அ.தி.மு.க துணை நிற்கும்.” என பா.ஜ.க தலைவர்களும், நீட் தேர்வுக்குக் காரணம் தி.மு.க – காங்கிரஸ் தான் எனத் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

  ( https://www.vikatan.com )

 7. சிவா சொல்கிறார்:

  நீட் தேர்வு கொண்டு வந்ததாக தி.மு.க மீது ஏன் குற்றம்சாட்டப்படுகிறது என அ.தி.மு.க சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர், இன்பதுரையிடம் கேட்டோம்.

  “தி.மு.க நீட் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது. கடந்த 2010-ஆம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்த தி.மு.க எம்.பி காந்திசெல்வன் நீட் மசோதாவைப் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது என்ன செய்து கொண்டிருந்தார் ஸ்டாலின்? தமிழக மக்களுடைய காதில் பூ சுற்ற எண்ணாதீர்கள். நீட் என்கிற விஷ விருட்சத்திற்கான விதை காங்கிரஸ் ஆட்சியிலிருந்த 2010-ம் ஆண்டில்தான் விதைக்கப்பட்டது. அன்றைய காங்கிரஸ் அரசில் அங்கம் வகித்தது திமுக! இதை மறுக்கமுடியுமா? மத்திய சுகாதாரத்துறையால் நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது சுகாதாரத்துறையின் இணை அமைச்சராக இருந்தவர் யார்? தி.மு.க-வைச் சேர்ந்த காந்திசெல்வன். 2010-ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட இந்த சட்டத்துக்கு முதலில் தடை விதித்தது உச்ச நீதிமன்றம். அப்போது ஓடோடி சென்று மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்து உச்ச நீதிமன்ற அனுமதியைப் பெற்றது காங்கிரஸ் அரசு. அப்போது காங்கிரஸ் அரசுக்கு முட்டு கொடுத்துக்கொண்டிருந்த தி.மு.க இதைத் தடுத்திருக்கலாம் அல்லவா? 2016-ல் தமிழ்நாட்டில் நீட் தேர்வு வந்தபோது தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து புரட்சித் தலைவி அம்மா ஓராண்டு விலக்குப் பெற்றார். அதற்கடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தர விலக்கு வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற அனுப்பி வைத்தது.

  சட்ட ரீதியிலும் நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்குப் பெறவும் அ.தி.மு.க அரசு முயற்சிகளை மேற்கொண்டது. அந்த வகையில் பிரதமர் மோடியுடன் ஆலோசனை செய்து, இந்தியாவின் தலைமை வழக்கறிஞரிடம் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்க அளிக்கலாம் எனச் சட்ட கருத்துரு பெறப்பட்டது. அதன்பின் மத்திய சுகாதாரத்துறையின் ஒப்புதலையும் பெற வேண்டும் என்ற நிலை. அவர்களும் ஒப்புதல் அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்தார்கள்.” என்றவர்..

  “காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நீட் தொடர்பான தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு எதிராக ஓர் உத்தரவைப் பெற்று நமது அனைத்து முயற்சிகளையும் சவப்பெட்டியில் போட்டு ஆணி அடித்துவிட்டார். இதனால் நீட் விலக்கு பெறுவதில் சட்ட ரீதியில் தீர்வு காண முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால்தான் தமிழ்நாட்டுக்குள் நீட் வந்தது. எனவேதான் நீட் தேர்வுகளுக்கு தி.மு.க மற்றும் காங்கிரஸ்தான் காரணம் என அடித்துச் சொல்கிறோம். அதுமட்டுமல்லாமல் நீட் தேர்வு மசோதா நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்த போது அதைக் கடுமையாக எதிர்த்து அ.தி.மு.க வெளிநடப்பு செய்தது. இது வரலாறு. மாநிலங்களவையில் விவாதத்துக்கு வந்த போது தி.மு.க உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நீட் தேர்வு மசோதா மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்புக்கு விட்ட போது செக்க்ஷன் வாக்கெடுப்புக்கு விடவேண்டும் என்று கேட்டாவது தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. ஆக வசம்பு வைத்துத் தேய்த்தாலும் கூட வாயே பேசமாட்டேன் என வாய்மூடி இருந்துவிட்டு இப்போது நீட் தேர்வு குறித்து தி.மு.க-வினர் முதலைக் கண்ணீர் வடித்து வருகிறார்கள். நாங்கள் தாக்கல் செய்தது மசோதாதான் சட்டமில்லை எனச் சொல்கிறார்கள். நீட் தேர்வு என்பது ஒரு விஷச்செடி என்பதை உணர்ந்து கொண்டு அப்போதே காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றுவிடுவோம் என்று தி.மு.க மிரட்டி காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேறிருப்பார்களேயானால் இப்போது இவ்வளவு சிக்கலுக்குத் தமிழக மாணவர்கள் ஆளாக வேண்டிய சூழல் வந்திருக்காதே!

  நீட் தேர்வு என்றால் என்ன என்றே தெரியாமல் அந்த மசோதாவைக் கொண்டு வந்து, அதை நிறைவேற்றக் காங்கிரஸ் கட்சிக்கு முட்டுக்கொடுத்துவிட்டு தமிழர் நலனை அடகு வைத்துவிட்டு இப்போது விலக்குப் பெறுகிறோம் என நாடகம் ஆடுகிறார்கள். அதைவிட மாணவர்களின் கல்லறையின் மீது நின்று தி.மு.க அரசியல் செய்வதைப் பார்க்கும்போது அருவெறுப்பாக இருக்கிறது” என்றார்.

  ( https://www.vikatan.com )

  • புதியவன் சொல்கிறார்:

   திமுக என்பதே எப்போதும் தமிழக நலனுக்கு எதிராகவும், அதைவிட தன் குடும்பத்திற்கு மாத்திரம் உழைக்கும் எண்ணம் உடையது. தமிழகத்திற்கு எதிரானது நாம் கருதும் எல்லாமே திமுகவால் அல்லது அது மத்திய அரசில் பதவி சுகம் அனுபவித்தபோது அல்லது தமிழகத்தில் தான் வெற்றி பெறுவதற்காக (இன்னொரு கட்சியுடன் கூட்டணி வேண்டும் என்ற) காரணத்திற்காகத்தான்.

   கச்சத்தீவு, கூடங்குளம், ஸ்டெர்லைட், சாராயம், சாராயத் தொழிற்சாலைகள், லாட்டரி, அப்புறம் ஸ்டாலின் முன்பு கையெழுத்திட்ட திட்டங்கள்., கர்நாடக காவிரி குறுக்கே உள்ள அணைகள், நீட், …. என்று மிகப் பெரிய லிஸ்ட்களை நாம் போட முடியும்.

   ஆனால் ஆட்சியை இழந்துவிட்டால், கூச்ச நாச்சம் இல்லாமல் இதே திட்டங்களை எதிர்க்கும், இன்னொரு கட்சியைக் குறை கூறும்.

   அதுபோல, திமுகவுடன் சேர்ந்துகொண்டு இவற்றையெல்லாம் எதிர்க்கும் so called அல்ல்க்கைகள் (சிகரெட் வியாபாரி வைகோ, திருமா, வீரபாண்டியன், போலிப் போராளிகள் திருமுருகன் காந்தி போன்ற ஏகப்பட்ட விலைபோன அல்லது தேசத்திற்கு எதிரானவர்கள் கூட்டம்), திமுக ஆட்சியில் இருக்கும்போது வாயைப் பொத்திக்கொண்டு, வாலைச்சுருட்டிக்கொண்டு இருப்பதையும் பார்க்கிறோம். இதற்காக எந்த நிலைக்கும் இவர்கள் செல்லத் துணிவார்கள்.

   இதுதான் தமிழக நிலைமை. எப்போதும்போல, தமிழக மக்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணைப்போட்டுக்கொள்கிறார்கள்.

  • arul சொல்கிறார்:

   I’m not the supporter of DMK. But you did not highlighted the other side:
   தி.மு.க மீது எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் கேட்டோம். “நீட் தேர்வு என்பது தி.மு.க இருந்த போது சட்டமாக இருக்கவில்லை. இந்த அறிவு அ.தி.மு.க-வில் யாருக்குமே இல்லை. இதற்கு முன் ஆல் இந்தியா ப்ரி மெடிக்கல் டெஸ்ட் இருந்தது. 1984-லிருந்து இருக்கிறது. அதையொட்டித்தான் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் இங்கே நுழைவுத் தேர்வு நடத்தினார்கள். இந்த தேர்வு ஒன்றிய அரசு நடத்தும் கல்லூரிகளுக்கும் ஒன்றிய அரசு இட ஒதுக்கீடான 15 சதவிகிதத்துக்கும் என இருந்தது. தனியார் மருத்துவக் கல்லூரிகள் வந்த பிறகு அவர்கள் தேவைக்கு ஏற்ப தேர்வு நடத்தினார்கள். எனவே உச்ச நீதிமன்றம் எல்லாவற்றுக்கும் ஒன்றாக ஒரே பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இதைப் பேரை மாற்றித்தான் மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா நீட் தேர்வு என்ற ஒன்றைக் கொண்டு வந்தது. இது சட்டமல்ல. மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா கொண்டு வந்த ஒரு நடைமுறை. அதைச் சட்டமாக்கியது பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வும் தான். தி.மு.க – காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட நடைமுறையிலும் மாநிலங்கள் தேவைப்பாட்டால் நீட் தேர்வில் இணைந்து கொள்ளலாம் என்றுதான் இருந்தது.

   016-ல் அரசியலமைப்பில் 10-டி என்ற பிரிவைச் சேர்த்து மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு இளங்கலை, முதுகலை மருத்துவப் படிப்பில் யாரைச் சேர்க்கலாம் என்ற அதிகாரம் கொடுக்கப்பட்டு அது சட்டமாக இயற்றப்பட்டது. இதன் பிறகுதான் நீட் சட்டமாக மாறியது.” என்றவர்…

   “தி.மு.க மத்தியில் அதிகாரத்தோடு இருந்தவரை எந்த இடத்திலும் தமிழ்நாட்டின் உரிமையைப் பாதிக்கும் வகையில் செயல்பட்டதே இல்லை. நீட் தேர்வை நடத்த வேண்டும் என்று சங்கல்ப் என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளை நிறுவனம் நீதிமன்றத்தை அணுகுகிறது. அதன்பின்னர் தான் நீட் தேர்வை இந்தியா முழுவதும் நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது. பா.ஜ.க உடன் கூட்டணியிலிருந்து கொண்டு எந்தக் கேள்வியும் கேட்காமல் அனுமதித்தது அ.தி.மு.க. 2016-இல் நீட் தேர்வைக் கொண்டு வரப்பட்ட போது அன்றைக்கு இருந்த அ.தி.மு.க அரசு ‘தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு இல்லை எனச் சட்டம் இயற்றியிருக்கிறோம். எனவே நீட் தேர்விலிருந்து எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ எனக் கேட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் ‘நீட் தேர்வை நடத்துவதற்குரிய பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ பாடங்களைப் பயிற்றுவிக்க ஓராண்டு மட்டும் எங்களுக்குக் கால அவகாசம் வேண்டும்’ என ஏன் கேட்டு வாங்கினார்கள்?

   சட்டம் இயற்ற விட்டது அ.தி.மு.க., உச்ச நீதிமன்றத்தில் நிரந்தர விலக்குக் கோரியிருக்க வேண்டும். அதைக் கேட்காமல் விட்டது அ.தி.மு.க. இப்படி பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வும் இணைந்து தமிழ்நாட்டு மக்களுக்கு பச்சை துரோகத்தைச் செய்துவிட்டு எங்கள் மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

   https://www.vikatan.com/government-and-politics/politics/is-it-okay-to-criticize-dmk-and-congress-alliance-in-neet-exam-issue

 8. Venkataramanan சொல்கிறார்:

  என்னுடைய தாழ்மையான கருத்துகள் கீழே.

  1. கா.மை. ஐயா சொன்னது போல் எல்லோர்க்கும் ஓரளவிற்கு ஏற்புடைய தீர்வு (middle ground solution) பற்றி யாரும் பேசவில்லை, அல்லது பேச விருப்பமில்லை.

  2. நீட்டை AIQ க்கு மட்டும் வைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு +2 மதிப்பெண்களையே வைத்து (quota based merit ) மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதிக்கலாம். ஆனால் தனியார் கல்லூரிகளுக்கும் அரசு மட்டுமே அனுமதிச்சீட்டு (நிர்ணயித்த கட்டணத்துடன், அதற்கு மேல் ஒரு பைசா கூடவே கூடாது) வழங்க வேண்டும். தனியார் கல்லூரிகளுக்கு தன்னிச்சையாய் இடங்களை நிரப்பிக்கொள்ள உரிமையே இருக்கக்கூடாது. அப்படி செய்தால் நல்ல மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் பயனடைவார்களே ?!

  3. இதை செய்வதில் உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் தவிர தமிழகத்தில் யாருக்கு என்ன பிரச்சனை இருக்கப்போகிறது ? ஆனால் அதற்கு நீட் விலக்கு கோருபவர்கள் ஒத்துக்கொள்வார்களா ?

 9. ஜானகிராமன் சொல்கிறார்:

  பாடத்திட்டங்களில் பல முறைகள் உள்ளன.சமசீர் கல்வி,மெட்ரிகுலேஷன்,cbse போன்றவை உள்ளன. இதில் எளிதான பாடத்திட்டம் சமசீர் கல்வியே, மற்றும் மிக மிக கடினமான பாடமுறை cbse .எனவே சமசீர் கல்வி முறையில் பயில்பவர்களே அதிக மதிப்பெண்களை எளிதாக பெற்று மருத்துவ படிப்பை எளிதாக கைப்பற்ற முடியும். cbse படிப்பவர்கள் 60% எடுப்பதே மிகவும் கஷ்டம் .இந்தநிலையில் அவர்களுக்கு +2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ படிப்பை வழங்கினால் , cbse , மெட்ரிகுலேஷன் மாணவர்கள் நிச்சயம் பின்தங்கும் நிலை தான் ஏற்படும் .எனவே தான் ஒரு பொதுவான தேர்வு முறை அவசியமாகிறது .

 10. tamilmani சொல்கிறார்:

  உயிர் காக்கும் மருத்துவர்கள் படிக்கும் படிப்பு தரமான மாணவர்களை
  கொண்டிருக்கவேண்டும். மற்ற கணினி துறை போல் அல்ல இது , தவறு செய்து பிறகு
  திருத்தி கொள்ள . அப்படி இருக்க இந்தியா முழுதும் நடைபெறும் இந்த தேர்வுக்கு
  கல்வியில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களான பீஹார் , உபி , ஜார்க்கண்ட் ,ம பி
  மாநிலங்களில் நீட் தேர்வு எதிர்ப்பு இல்லை. ஆனால் தமிழகத்தில் எதிர்ப்பு . இது அரசியலாக்க பட்டுவிட்டது .
  காரணம் 95 % மருத்துவ கல்லூரிகள் திமுக பிரமுகர்களால் நடத்த படுகிறது.
  நீட் கோட்டாவில் சீட்களை ஒதுக்கினால் அவர்கள் கல்வி வியாபாரம் செய்ய முடியாது. ஒவ்வொரு
  மேனேஜ்மென்ட் சீட்டும் கோடியில் விற்கப்படும்போது நீட் சீட்டுக்கள் இலவசம் போல்தான்.
  தங்களின் லாபம் குறைவதால்தான் இவ்வளவு எதிர்ப்பு. மாணவர்கள் இப்போது நீட் தேர்வுக்கு
  தயாராகி விட்டார்கள். ஆனால் படிக்காத அரசியல்வாதிகள் தயாராகவில்லை .

  • Tamil சொல்கிறார்:

   முழுவதும் தவறான வாதம்.

   நீட் தேர்வின் மூலம், பணம் இருந்தால் நூற்றுக்கு 16 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள் கூட மருத்துவப் படிப்பு முடித்து விடலாம் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று.

   //மேனேஜ்மென்ட் சீட்டும் கோடியில் விற்கப்படும்போது நீட் சீட்டுக்கள் இலவசம் போல்தான்.//
   உண்மையே இல்லாத ஒரு குற்றச்சாட்டு.
   பொத்தாம் பொதுவாக அரசியல்வாதிகளும் மீடியாக்களும் சொல்வதை வைத்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்ததன் அடிப்படையில் சொல்லப்படுகின்ற உண்மையில்லாத தகவல்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.