“அம்மா ஒரு கொலை செய்தாள்”– சாஹித்ய அகாடமி விருது பெற்ற – அம்பையின் சிறுகதை …

…….

கடந்த மாதம் தமிழ் எழுத்தாளர் “அம்பை” என்கிற
டாக்டர் C.S.லக்ஷ்மி – அவர்களுக்கு சாஹித்ய அகாடமி
விருது கிடைத்தது நினைவிருக்கலாம்…..

“சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை” என்கிற
தலைப்பிலான சிறுகதைத் தொகுப்பிற்காக அவருக்கு
சாஹித்ய அகாடமி விருது அளிக்கப்பட்டது…

அம்பை அவர்களின் சில சிறுகதைகள் ஏற்கெனவே
இந்த தளத்தில் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன….
இன்று, இங்கே – ” அம்மா ஒரு கொலை செய்தாள்” சிறுகதை….

……………………………………………

அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை

…………………………………….

அம்மா என்றதும் பளிச் பளிச்சென்று சில நிகழ்ச்சிகள்
மட்டுமே நெஞ்சைக் குத்துகின்றன. அக்கா கல்யாணி அடிக்கடி
மயக்கம் போட்டு விழுந்து கொண்டிருந்தாள்.
புரிந்து கொள்ளும் வயதில்லை எனக்கு. நான்கு வயது.

விடிகாலையில் கண் விழிக்கிறேன். ஏதோ தமுக்கு மாதிரி
சத்தம் கேட்கிறது. கதவருகே சென்று பார்க்கிறேன்.
கல்யாணியைப் பலகையில் உட்கார்த்தி இருக்கிறார்கள். எதிரே
எவனோ கொத்து இலையோட நிற்கிறான். ஆ ஊ வென்று
சில மாதங்கள் மட்டுமே சிரிப்புக் காட்டிய தம்பிப் பாப்பா நான்
இருந்த அறையிலேயே தொட்டிலில் இருக்கிறான்.

“நீரஜாட்சீ, போய்க் கொண்டு வா” என்கிறார்கள் யாரோ.

நான் அம்மாவைப் பார்க்கிறேன்.

கருநீலப் புடவை நினைவில் இருக்கிறது. தலைமயிரை முடிந்து கொண்டிருக்கிறாள். என் அறையை ஒட்டிய சின்ன அறையில்
அம்மா நுழைகிறாள். தலைப்பை நீக்குகிறாள். கையில் இருந்த
சிறு கிண்ணியில் மெல்ல தன் மார்பிலிருந்து பால் எடுக்கிறாள்.
கண்களில் நீர் கொட்டுகிறது.

விடிகாலை இருட்டோடு புதைக்கப்பட்டிருக்கும் தவலைக்கு அடியில்
விறகு வைத்து வெந்நீர் காய்ச்ச அம்மா எழுந்திருக்கிறாள் தினமும்.

ஒருநாள் நான் அவளைப் பார்க்கிறேன். அம்மாவின் தலைமயிர் முடிச்சவிழ்ந்து தொங்குகிறது. குந்தி உட்கார்ந்திருக்கிறாள் அம்மா.
கூந்தல் பாதி கன்னத்திலும் பாதி காதின் மேலும் விரிந்து
கிடக்கிறது. அடுப்பு பற்றிக் கொண்டதும் குனிந்து பார்த்த
அம்மாவின் பாதி முகத்தில் தீயின் செம்மை வீசுகிறது.

அன்று அம்மா சிவப்புப் புடவை வேறு உடுத்தியிருக்கிறாள். உற்றுப் பார்த்துக் கொண்டே இருக்கையில் ‘டக்’கென்று அவள் எழுந்து
நிற்கிறாள். கூந்தல் முட்டுவரை தொங்குகிறது.

விலகியிருந்த தலைப்பினூடே ஊக்குகள் அவிழ்ந்த ரவிக்கை
அடியே பச்சை நரம்போடிய வெளேரென்ற மார்பகங்கள்
தெரிகின்றன. எங்கிருந்தோ பறந்து வந்து அங்கே நின்ற
அக்கினியின் பெண்ணாய் அவள் தோன்றுகிறாள்.
அவள் அம்மாவா? அம்மா தானா?

“காளி காளி மகா காளி பத்ர காளி நமோஸ்துதே” என்ற
ஸ்லோகம் ஏன் நினைவிற்கு வருகிறது?

“அம்மா..”

அம்மா தலையைத் திருப்பிப் பார்க்கிறாள்.

“இங்கே என்ன செய்யறாயடீ?”

பேச முடியவில்லை. உடம்பு வியர்க்கிறது.

வீட்டில் ஹோமம் நடக்கிறது. அம்மாவின் உதட்டின் சிவப்பாலோ, குங்குமத்தின் தீட்சண்யத்தாலோ கொழுந்து விட்டெரியும்
ஜ்வாலையின் பிம்பம் அவளாகப் படுகிறது.

“அக்னியே ஸ்வாஆஆஹா..” என்று ஸ்வாஹாவை நீட்டி முழக்கி
நெருப்பில் நெய்யை ஊற்றுகிறார்கள். அந்த “ஸ்வாஹாஆ..” வின்
போது பார்வை நெருப்பின் மீதும் அம்மாவின் மீதும் போகிறது.

எண்ணை தேய்த்துக் குளிப்பாட்டுகிறாள் அம்மா. புடவையைத்
தூக்கிச் செருகியிருக்கிறாள். வெளுப்பாய், வழவழவென்று துடை தெரிகிறது. குனிந்து நிமிரும்போது பச்சை நரம்போடுகிறது.

“அம்மா நீ மாத்திரம் ஏம்மா இவ்வளவு வெளுப்பு?
நான் ஏம்மா கருப்பு?”

சிரிப்பு.

“போடி உன் அழகு யாருக்கு வரும்?”

நிகழ்ச்சிகளில் ஒரு சம்பந்தமுமில்லை. அம்மா தான் அவற்றின்
ராணி. அசுத்தங்களை எரித்துச் சுத்திகரிக்கும் நெருப்பு அவள்.
ஒரு சிரிப்பில் மனத்தில் கோடானுகோடி அழகுகளைத் தோரணமாட வைப்பவள் அவள். சிருஷ்டி கர்த்தா. அவள் மடியில் தலை வைத்துப் படுக்கும் போது நீண்ட மெல்லிய தண்ணென்ற விரல்களால் தடவி,
“உனக்கு டான்ஸ் கத்துத் தரப் போறென். நல்ல வாகான உடம்பு”
என்றோ, “என்ன அடர்த்தியடி மயிர்” என்றோ சர்வ சாதாரணமான
ஒன்றைத் தான் சொல்வாள். ஆனால் மனத்தில் குல்லென்று
எதுவோ மலரும்.

அம்மாவைப் பற்றிய இத்தகைய உணர்வுகளை அம்மாவே
ஊட்டினாளா, நானே நினைத்தேனா தெரியவில்லை. என்னுள்
பல அழகுகளுக்கு விதை ஊன்றியபோது தன்னுள் அவள் எதை
ஸ்தாபித்துக் கொண்டாளோ தெரியவில்லை.

அப்போது பதிமூன்று வயது. பாவாடைகள் குட்டையாகப் போக
ஆரம்பித்து விட்டன. அம்மா எல்லாவற்றையும் நீளமாக்குகிறாள்.

அம்மா மடியில் படுக்கும் மாலை வேளை ஒன்றில் எங்கோ படித்த
வரிகள் திடீரென்று நினைவுவர அம்மாவைக் கேட்கிறேன்.

“அம்மா பருவம்னா என்னம்மா?”

மெளனம்.

நீண்டநேர மெளனம்.

திடீரென்று சொல்கிறாள்.

“நீ இப்படியே இருடீம்மா பாவாடைய அலைய விட்டுண்டு
ஓடி ஆடிண்டு…”

சித்தி பெண் ராதுவைப் பெண் பார்க்க வருகிறார்களாம்.
அம்மா போய் விடுகிறாள் அங்கே. அந்த முக்கியமான நாளில் அம்மா இல்லை. கல்யாணி தான் தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துத்
தலை மயிரை அலசி விடுகிறாள். குளியலறையின் ஜன்னல் வழியாக
இருள் கலையாத வானம் தெரிகிறது.

“கல்லுஸ்.. ரொம்ப சீக்கிரம் எழுப்பிட்டேடீ, பட்டாசு சத்தமே
கேக்கலயே இன்னும்”

“உனக்கு எண்ணை தேய்ச்சுட்டு நானும் தேய்ச்சுக்க வேண்டாமா?
வயசு பதிமூணு ஆறது. எண்ணை தேய்ச்சுக்க வராது உனக்கு.
குனிடீ”

கல்யாணிக்கு பொறுமை கிடையாது. தேங்காய் நாரை உரிப்பது
போல் தலையை வலிக்க வலிக்கத் தேய்க்கிறாள் கல்யாணி.

கத்தரிப்பூ ஸாடின் துணியில் அம்மா எனக்குப் பாவாடை
தைத்திருக்கிறாள் அந்த தீபாவளிக்கு. வழுக்கிக் கொண்டு
தையல் மிஷினில் ஓடும்போதே மனம் ஆசைப்பட்டது.
அந்த முறை அளவு எடுத்து பாவாடை தைத்தாள் அம்மா.

“அளவு எடுக்கணும் வாடீ.. ஒசந்து போய்ட்டே நீ” அளவு
எடுத்துவிட்டு நிமிர்கிறாள்.

“ரெண்டு இஞ்ச் பெரிசாய்டுத்து இந்தப் பொண்ணு”

கத்தரிப்பூ ஸாடின் பாவாடை மற்ற பாவாடைகள் மாதிரி
குட்டையாக இருக்காது. வழுக்கிக் கொண்டு தரையை எட்டும்.

உலுக்கென்று எழுப்பி நிற்க வைத்துத் தலையத் துவட்டுகிறாள்
கல்யாணி. ஷிம்மீஸை மாட்டிக் கொண்டு பூஜை அறைக்கு ஓட்டம்.
பலகை மேல் அடுக்கியிருந்த புதுத்துணிகளில் அப்பா
என்னுடையதைத் தருகிறார்.

“இந்தாடி கறுப்பி…” அப்பா அப்படித் தான் கூப்பிடுவார்.

அப்பா அப்படிச் சொல்லும் போது சில சமயம் கூடத்தில்
ஹா வென்று தொங்கும் கண்ணாடி முன் நின்றுகொண்டு
பார்ப்பேன். அம்மா, காதில் “எத்தனை அழகு நீ” என்று
கிசுகிசுப்பதைப் போல் இருக்கும்.

சரளா வீட்டில் உள்ள கண்ணாடிப் பெட்டியில் உள்ள மீன் மாதிரி
வழுக்கிக் கொண்டு போகிறது பாவாடை. வெல்வெட் சட்டை.
பொட்டு இட்டுக் கொண்டு அப்பா முன் போகிறேன்.

“அட பரவாயில்லையே!” என்கிறார் அப்பா.

பட்டாஸை எடுத்து முன் அறையில் வைத்து விட்டு சண்பக
மரத்தில் ஏற ஓடுகிறேன். நித்தியம் காலையில் சண்பக மரத்தில்
ஏறிப் பூப்பறிப்பது ஒரு வேலை. பூக்குடலையில் பூ நிரப்பி
அம்மாவிடம் தந்தால், “கொள்ளை பூ” என்று கண்களை விரித்து
அம்மா தன் விரல்களை அதில் அளைய விடுவாள். விரல்களே
தெரியாது.

ஸாடின் பாவாடை வழுக்குகிறது. உச்சாணிக் கொம்பில் ஏற
முடியவில்லை. இருட்டு வேறு. இறங்கும் தறுவாயில் படேர் என்று வெடிக்கிறது யார் வீட்டிலோ ஒரு பட்டாஸ். உடம்பு நடுங்க
மரத்திலிருந்து ஒரு குதி. வீட்டினுள் ஓட்டம். மூச்சு வாங்குகிறது.

ஆசுவாசப்படுத்திக் கொண்டு முன் அறைக்கு ஓடி என் பங்குப்
பட்டாஸை வெடிக்கிறேன். அப்புறம் தான் பூக்குடலை நினைவு
வருகிறது. விடிந்திருக்கிறது. பாவாடையைத் தூக்கிப்
பிடித்தவாறே மரத்தினடியில் கிடந்த பூக்குடலையை எடுக்கக்
குனிகிறேன். பூக்கள் சில சிதறியிருக்கின்றன. நன்றாகக்
குனிந்து எடுக்கும்போது பாவாடை தரையில் விரிகிறது.
புதுப்பாவாடையில் அங்கும் இங்கும் கறைகள்.
மரம் ஏறியதாலோ?

“கல்லூஸ்..” என்று அழைத்தவாறே உள்ளே வந்து “பாவாடை
எல்லாம் அழுக்காக்கியுட்டேண்டி. அம்மா வைவாளா?” என்று
கேட்டுக் கொண்டு பூக்குடலையுடன் அவள் முன் நிற்கிறேன்.
கல்யாணி ஒரு நிமிடம் வெறிக்கப் பார்த்துவிட்டு “அப்பா”
என்று கூவிக் கொண்டே போகிறாள்.

கல்யாணியின் பார்வை, பூக்குடலையைக் கூட வாங்காமல்
அவள் உள்ளே ஓடியது எல்லாமாக மனத்தில் கம்பளிப் பூச்சி
நெளிகிறது. ஸாடின் பாவாடையைப் பார்க்கிறேன். வெல்வெட்
சட்டையைத் தடவிப் பார்க்கிறேன். ஒன்றும் ஆகவில்லையே?

பகவானே, எனக்கு ஒன்றும் ஆகவில்லையே? என்னை நானே
கேட்டுக் கொள்ளும் போதே தெரிகிறது ஏதோ ஆகிவிட்டதென்று.

எங்கும் பட்டாஸ் ஒலிகள் கேட்டவாறிருக்கின்றன. கையில் பிடித்த பூக்குடலையுடன் வேகமாக மூச்சு விட்டவாறு உடம்பு பதற உதடுகள்
துடிக்க நிற்கிறேன். ஹோ வென்று அழுகை வருகிறது.

அம்மாவைப் பார்க்க வேண்டும். சின்னாளப்பட்டு உடுத்திய
தோளில் தலையை அழுத்திப் பதித்துக் கொள்ள வேண்டும்.
“பயமா இருக்கே” என்று வெட்கமில்லாமல் சொல்லி அழ வேண்டும்.
அம்மா தலையைத் தடவித் தருவாள். என்னவோ ஆகிவிட்டதே பயங்கரமாக…

முறுக்குப் பிழிய வரும் மொட்டைப் பாட்டியை எங்கிருந்தோ
கூட்டிக் கொண்டு வருகிறாள் கல்யாணி. பாட்டி அருகில் வந்தாள்.

“என்னடீம்மா அழறே? என்னாய்டுத்து இப்போ? லோகத்துலே
இல்லாதது ஆய்டுத்தா?”

பாட்டி சொன்னது ஒன்றும் புரியவில்லை. என் உணர்வு தான்
எதையோ புரிந்து கொண்டு பயத்தில் சில்லிட்டதே ஒழிய
அறிவுக்கு ஒன்றும் எட்டவில்லை. மனத்தின் ஆழத்திலிருந்து
ஆறாத தாகமாய்க் கிளம்பிய ஒரே ஒரு அழைப்பு… “அம்மா”..

ஐந்து வயதில் ஒருமுறை காணாமல் போய் விட்டதை மீண்டும் நினைக்கிறேன். பெரிய பூங்கா ஒன்றில் நீள் இருள் கவிவது
தெரியாமல் நடக்கிறேன். திடீரென்று இருளும், மரங்களும்,
ஓசைகளும், அமைதியும் மனத்தில் பயத்தை உண்டாக்குகின்றன.
அப்பா தான் தேடிப் பிடிக்கிறார். ஆனால் அம்மாவைப்
பார்த்ததும் தான் அழுகை பீறிடுகிறது.

அம்மா பக்கத்தில் போட்டுக் கொள்கிறாள். தடவித் தருகிறாள்.
ஒன்னும் ஆகலியே. எல்லாம் சரியாப் போயிடுத்தே” என்று
மெல்லப் பேசுகிறாள். சிவந்த உதடுகள் நெருப்புக் கீற்றாய்
ஜ்வலிக்க தன் முகத்தை என் முகத்தின் மீது வைக்கிறாள்.

இப்போதும் எங்கேயோ காணாமல் போய் விட்டதைப் போல
அடித்துக் கொள்கிறது. கீழே உட்கார்ந்து முட்டங்காலில் தலை
பதித்து அழுகிறேன். எதுவோ முடிந்து விட்டது போல்
தோன்றுகிறது.

தியேட்டரில் ‘சுபம்’ காட்டிய பிறகு எழுந்து வெளியே
வருவதைப்போல், எதையோ விட்டுவிட்டு வந்தாற் போல்
தோன்றுகிறது. அந்தச் சமயத்தில் உலக சரித்திரத்தில் எனக்கு
ஒருத்திக்கு மட்டுமே அந்த துக்கம் சம்பவித்தது போல்
படுகிறது. அத்தனை துக்கங்களையும் வெல்வெட் சட்டை
அணிந்த மெல்லிய தோள்கள் மேல் சுமையாய்த் தாங்குவது
போல் அழுகிறேன்.

இருவருமாக இருந்த மாலை வேளைகளில் அம்மா இது பற்றி
ஏன் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். மனத்தை வியாபித்த
உணர்வு பயம் மட்டுமே. புதுச் சூழ்நிலையில் புது
மனிதர்களிடையே உண்டாகும் சாதாரண பயம் அல்ல.
பாம்பைக் கண்டு அலறும் மிரளலில் அரண்டு போய்
வாயடைத்துப் போகும் பதைப்பு. மன மூலைகளிலெல்லாம்
பயம் சிலந்தி வலைகளாகத் தொங்குகிறது.

வெளுத்த உதடுகள் பிளந்து கிடக்கப் பார்த்த உருவம் மனத்தில் தோன்றுகிறது. மண்டை கல்லில் மோதிவிட்டது. என் முன்னே
மென் சிவப்பாய் வழுக்கையாய் நடந்து கொண்டிருந்த தலை
திடீரென்று குகை வாயாய்த் திறந்து கரும்சிவப்பாய் ரத்தம்
பீறிட்டு வந்தது. நிமிடத்தில் ரத்தம் தலையில் கொட்டியது.
ரத்தத்தையே வெறித்துப் பார்த்தேன். சிவப்பு எங்கும் படந்து
கண்களிலேயே பாய்ந்து ஓடுவது போல் தோன்றியது. மனம்
மீண்டும் மீண்டும் அரற்றியது. “ஐயோ எத்தனை ரத்தம்,
எத்தனை ரத்தம்” வாயில் ஓசையே பிறக்கவில்லை.
ரத்தப் படுக்கை. கிழவன் வாய் திறந்தது, கண்கள் வெறித்துப்
போனது, நெஞ்சில் துருத்திக் கொண்டு நிற்கிறது.

ரத்தம் எத்தனை பயங்கரமானது… உதடுகள் வெளூக்க..
கை கால்கள் அசைவற்றுப் போக..

அம்மா தேவை. இருட்டைக் கண்டு பயந்ததும் அணைத்து
ஆறுதல் சொல்வது போல், இந்த பயத்திலிருந்து மீள அம்மா
வேண்டும் என்று மனம் ஏங்குகிறது. அம்மா ஜில்லென்று
கரத்தைத் தோளில் வைத்து, “இதுவும் ஒரு அழகுதான்”
என்கக் கூடாதா?

“எழுந்திரேண்டீ ப்ளீஸ்.. எத்தனை நாழிடீ அழுவாய்?” என்னுடன்
கூட உட்கார்ந்து தானும் ஒரு குரல் அழுத கல்யாணி கெஞ்சுகிறாள்.

“அம்மா..”

“அம்மாதான் அடுத்த வாரம் வராளே. இப்போ தான் இதைப் பற்றி
லெட்டர் போட்டேன். ராதுவுக்குப் பெண் பார்க்கிறது எல்லாம்
முடிஞ்சப்புறம் வருவா. இப்போ நீ எழுந்திருடீ. சுத்த
தலைவேதனை.” கல்யாணிக்கு கோபம் வர ஆரம்பிக்கிறது.

“எனக்கு என்னடீ ஆய்டுத்து?”

“உன் தலை மண்டை ஆய்டுத்து, எத்தனை தடவை சொல்லறது?

“இனிமே எல்லாம் நான் மரத்துலே ஏறக் கூடாதா?”

‘நறுக்’ என்று குட்டுகிறாள் கல்யாணி.

“தடிச்சி! அரை மணியா எழுந்திரு, பாவாடையை மாத்தறேன்னு கெஞ்சறேன். நீ கேள்வி வேற கேக்கறியா? அப்பா இவள் ரொம்பப் படுத்தறாப்பா” என்று அப்பாவுக்கு குரல் கொடுக்கிறாள்.

அப்பா வந்து “அசட்டுத்தனம் பண்ணக் கூடாது. கல்யாணி
சொல்றபடி கேக்கனும்” என்கிறார்.

முறுக்குப் பாட்டி வேறு, “என்ன அடம்பிடிக்கிறாள்? எல்லாருக்கும்
வர தலைவிதி தானே” என்கிறாள், அப்பா போன பிறகு.

ஏழுநாட்கள். அம்மா வர இன்னும் ஏழு நாட்கள்.ராதுவைப்
பெண் பார்த்த பிறகு. இருட்டில் தடுமாறுவதைப் போல்
ஏழு நாட்கள். அடுத்தகத்து மாமி, எதிர்வீட்டு மாமி
எல்லோரும் வருகிறார்கள் ஒருநாள்.

“தாவணி போடலயாடி கல்யாணி?”

“எல்லாம் அம்மா வந்தப்புறம் தான் மாமி. இது அடங்காப் பிடாரி.
அம்மா சொன்னால் தான் கேட்கும்”

“இனிமே எல்லாம் சரியாப் போய்டுவா.
இனிமே அடக்க ஒடுக்கம் வந்துடும்”

“ஏன்?” இனிமேல் என்ன ஆகிவிடும்?

தாவணி ஏன் போட்டுக் கொள்ள வேண்டும்? அம்மா
சொன்னாளே.. ‘இப்டியே இருடீம்மா.. பாவாடைய அலைய
விட்டுண்டு..’ நான் ஏன் மாற வேண்டும்?
யாருமே விளக்குவதில்லை.

பொம்மை போல் என்னை உட்கார்த்தி வைத்துப் பேசுகிறார்கள்.
அப்பா வந்தால் தலைப்பைப் போர்த்திக் கொண்டு மெதுவாகப் பேசுகிறார்கள்.

ஐந்தாம் நாள் “நீயே எண்ணெய் தேய்ச்சிக்கோடி” என்னிடம்
சுடச் சுட எண்ணையைக் கிண்ணியில் ஊற்றிக் கொடுக்கிறாள்
கல்யாணி.

இடுப்பின் கீழ் நீண்ட கூந்தலுடன் அழுதவாறே போராடிவிட்டு
ஷிம்மீஸுடன் கூடத்துக் கண்ணாடி முன் நிற்கிறேன்.

“இனிமே பாத்ரூமிலேயே டிரெஸ் பண்ணிக்கனும் தெரிஞ்சுதா”
என்கிறார் அப்பா.

அப்பா போன பிறகு கதவைச் சாத்துகிறேன். ஷிம்மீஸைக்
கழற்றிப் போடுகிறேன். கறுப்பு உடம்பை கண்ணாடி
பிரதிபலிக்கிறது. முகத்தை விடச் சற்றே நிறம் மட்டமான
தோள்கள், கைகள், மார்பு, இடை, மென்மையான துடைகளின்
மேல் கை ஓடுகிறது. நான் அதே பெண் இல்லையா?
அம்மா என்ன சொல்லப் போகிறாள்?

ஸ்கூல் யூனிபார்ம் போட்டுக் கொள்கிறேன். கதவைத்
திறந்ததும் கல்யாணி வருகிறாள்.
“ஸ்கூல்லே ஏன் வரல்லேன்னு கேட்டா என்னடீ சொல்வே?”

கல்யாணியை வெறித்துப் பார்க்கிறேன். கூண்டிலிருந்து
விடுபட்ட பட்சி போல் குதூகலத்துடன் ஸ்கூலுக்கு கிளம்ம்பிக்
கொண்டிருந்த வேகம் குறைகிறது.

“ஒன்னும் சொல்லவேண்டாம். சும்மா இரு”

அன்று கேம்ஸ் பீரியடில் விளையாடவில்லை. அகன்ற மரம்
ஒன்றின் பின் மறைந்து கொள்கிறேன். முன்பு ஒரு முறை அப்படி விளையாடாமல் இருந்திருக்கிறேன். மறுநாள் காலை
மிஸ். லீலா மேனன் வகுப்பில் “நேற்று விளையாடாத முட்டாள்கள்
யார்?” என்றாள். நான் எழுந்திருக்கவில்லை.

“நீ ஏன் எழுந்திருக்கவில்லை?” என்றாள்.

“நான் முட்டாள் இல்லையே மிஸ்” என்றேன். ப்ரோக்ரஸ்
ரிப்போர்ட்டில் எழுதி விட்டாள் இம்பர்டினண்ட் என்று.

அன்று மிஸ்.லீலா மேனன் திட்டு பற்றிக் கூட மனம்
பயப்படவில்லை. இப்போது எனக்கு ஆகியிருக்கும் ஒன்றைவிட
வேறு எதுவும் எப்போதும் என்னை பாதிக்காது என்று படுகிறது.
மரத்தடியே உட்கார்ந்து வழக்கம் போல எனிட் ப்ளைடன்
படிப்பதில்லை. கீழே வெட்டப்பட்டிருந்த குழியில்
உதிர்ந்தவாறிருக்கும் பழுத்த இலைகளிடம் நான் கேட்கிறேன்.
“எனக்கு என்ன தான் ஆகித் தொலைந்து விட்டது?”

கூண்டிலிருக்கும் கைதி நீதிபதியின் வாயைப் பார்ப்பது போல்
அம்மாவின் சொல் ஒன்றுக்காக மட்டுமே மனம் எதிர்பார்க்கிறது. கண்களைத் தாழ்த்தி என்னைப் பார்த்தவாறே, “உனக்கு
ஆகியிருக்கும் இதுவும் அழகு தான்” என்பாளா அம்மா?

பயமுறுத்திய முறுக்குப் பாட்டி, கல்யாணி எல்லோரையும்
புன்னகையின் ஒரு தீப்பொறியில் அவள் ஒதுக்கித் தள்ளி
விடுவாள். அம்மா வித்தியாசமானவள். அவள் நிற்கும் இடத்தில் வேண்டாதவை அழிந்து வெறும் அழகு மட்டுமே ஆட்சி செலுத்தும்.
அவளுக்கு எல்லாமே அழகு தான்.

அம்மா ரொம்பத் தேவையாக இருக்கிறாள். ஏதோ ஒன்று
விளக்கப்பட வேண்டும். கத்தரிப்பூ ஸாடின் பாவாடையை
நினைத்தாலே உடம்பு வியர்த்துப் போய் நடுங்குகிறதே.
நாக்கு தடித்துப் போய் மரக்கட்டையாய் வாயில் லொட்டென்று
படுத்து விடுகிறதே. திடீரென்று இருட்டு கவிந்து கொள்கிற
மாதிரியும் திரும்பிப் பார்ப்பதற்குள் ‘ணங்’கென்ற சத்தமும்,
ரத்தப் பெருக்கும் நீண்டு கட்டையாய்ப் போன உடலும்
அந்த இருட்டில் தோன்றுவது போல இருக்கிறதே, அதை
மென்மையான வார்த்தைகளால் யாராவது விளக்க வேண்டும்.

நான் யாருமே இல்லாமல் இருப்பது போல் உணர்கிறேன்.
தோட்டக்காரன் எழுப்பியபின் மெல்ல வீட்டுக்குப் போகிறேன்.

“ஏண்டீ இவ்ளோ லேட்? எங்கே போனே?”

“எங்கேயும் போகல.. மரத்தடியிலே உட்கார்ந்திருந்தேன்”

“தனியாவா?”

“உம்”

“ஏண்டீ நீ என்ன இன்னும் சின்னப் பொண்ணா?
ஏதாவது ஆகிவைத்தால்?”

ஸ்கூல் பையை விட்டெறிகிறேன். முகம் எல்லாம் சூடேறுகிறது.
செவிகளைக் கையால் மூடிக் கொண்டு வீறிட்டுக் கத்துகிறேன்.

“நான் அப்படித்தான் உட்காருவேன். எனக்கு ஒன்னும் ஆகலை”

ஒவ்வொரு வார்த்தையையும் நீட்டி, அழுத்தி வெறிக்கத்தலாய்க் கத்துகிறேன். அப்பாவும் கல்யாணியும் அதிர்ந்து போய்
நிற்கின்றனர். நான் கோபித்துக் கொண்டு மொட்டை மாடிக்குப்
போய் உட்காருகிறேன். சண்பக மரத்தின் வாசனையோடு அங்கேயே இருக்கலாம்.

கல்யாணியும் அப்பாவும் இங்கே வரக் கூடாது. நானும் சண்பக
மர வாசனையும் மட்டுமே. ஒன்றும் பேசாத, தொடாத அந்த
வாசனை வீட்டு மனிதர்களை விட நெருங்கிய ஒன்றாகப்
படுகிறது. இவர்கள் பேசாமல் இருந்தால் எவ்வளவு நன்றாக
இருக்கும். அம்மா மாதிரி விழிகளை விரித்துச் சிரிப்பு.

அம்மா அப்படி பார்த்தால் நெஞ்சினுள் ஏதோ செய்யும்.
வாய்விட்டு சிரிக்கத் தோன்றும். பாடத் தோன்றும். அம்மா
சிருஷ்டிப்பவள். ஆனந்தத்தை, உத்ஸாகத்தை,
அழகை எல்லாம் தலையைத் திருப்பி ஒரு புன்னகையால்
ஜாலம் செய்து வரவழைப்பவள்.

கல்யாணி மேலே வருகிறாள்.

“சாப்பிட வாடீம்மா சின்ன ராணி, அம்மா உன்னைச்
செல்லம் கொடுத்து குட்டிச் சுவராக்கிட்டா”

அலட்சியமாக உதட்டைப் பிதுக்கியவாறே எழுந்து கொள்கிறேன்.

மறுநாள் காலை அம்மா வருகிறாள். டாக்ஸியின் கதவைத்
திறந்து கரும்பச்சைப் பட்டுபுடவை கசங்கியிருக்க, அம்மா
வீட்டிற்குள் வருகிறாள்.

“என்ன ஆச்சு?” என்கிறார் அப்பா.

“பொண்ணு கறுப்பாம். வேண்டாம்னுட்டான் கடங்காரன்”

“உன் தங்கை என்ன சொல்றா”

“வருத்தப்படறா பாவம்”

“நமக்கும் ஒரு கறுப்புப் பொண்ணு உண்டு”

மொட்டென்று அம்மா முன் போய் நிற்கிறேன். கல்யாணி
லெட்டரில் எழுதியதை விட விளக்கமாய் நானே சொல்ல
வேண்டும் என்று தோன்றுகிறது. மெல்ல அவள் கழுத்துப்
பதிவில் உதடுகள் நடுங்க மென்குரலில் எல்லாவற்றையும்
அரற்ற வேண்டும் போல் படுகிறது. நெஞ்சில் நெளியும்
பயத்தைக் கூற வேண்டும் என்று அடித்துக் கொள்கிறது.

ஏதோ மர்மமான ஒன்றை – இரவு படுத்துக் கொண்டதும்
தொண்டையை அடைத்துக் கொள்ள வைக்கும் உணர்வை,
என் உடம்பே எனக்கு மாறுதலாகப் படும் தவிப்பை –
அம்மா விளக்கப் போகிறாள் மெல்ல என்று அவள் முகத்தையே பார்க்கிறேன். வாழைத்தண்டு போல் நீண்ட கரங்களால்
அவள் என்னை அணைக்கப் போகிறாள். நான் அழப் போகிறேன்
உரக்க. அம்மாவின் கூந்தலில் விரல்களைத் துளைத்துப் பெருத்த கேவல்களுடன் அழப் போகிறேன்.

அம்மா என்னைப் பார்க்கிறாள். நான் ஒரு கணம் அவள் கண்முன்
ராதுவாய் மாறுகிறேனா என்று தெரியவில்லை.

“உனக்கு இந்த இழவுக்கு என்னடீ அவசரம்?
இதுவேற இனிமே ஒரு பாரம்” சுளீரென்று கேள்வி.

யாரைக் குற்றம் சாட்டுகிறாள்?

ஒலியில்லாக் கேவல்கள் நெஞ்சை முட்டுகின்றன.

அம்மாவின் உதடுகளும், நாசியும், நெற்றிக் குங்குமமும்,
மூக்குப் பொட்டும், கண்களும் ரத்த நிற ஜ்வாலையை
உமிழ்வது போல் தோன்றுகிறது. அந்த நெருப்பில் அவள் மேல் போர்த்தியிருந்த தேவ ஸ்வரூபம் அவிழ்ந்து விழ நிர்வாணமான
வெறும் மனித அம்மாவாய் அவள் படுகிறாள்.

அந்த ஈரமில்லாச் சொற்கள் பட்டாக் கத்தியாய் எழுந்து முன்பு முளைவிட்டிருந்த அத்தனை அழகுகளையும் குருட்டுத் தனமாக
ஹதம் செய்கிறது. தீராத பயங்கள் கரும் சித்திரங்களாய்
நெஞ்சில் ஒட்டிக் கொள்கின்றன.

அக்னியே ஸ்வாஆஆஹா… அசுத்தங்கள் மட்டும் எரிக்கப்
படவில்லை. மொட்டுக்களும் மலர்களும் கூட கருகிப் போயின.

( 50 ஆண்டுகளுக்கு முன்னர் 1971-ல் எழுதப்பட்ட, அதற்கும் முற்பட்ட காலங்களின் அனுபவம் இது….!!!)

.
…………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.