வழக்குகள் இழுத்தடிக்கப்படுவதன் மூலம்அரசுக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் செயல்படுகிறதுஎன்கிற எண்ணம் உருவாகிறதோ….?

அடிப்படை உரிமைகளை அரசு மீறுகிறது என்கிற
குற்றச்சாட்டுடன் ஒரு வழக்கு விசாரணைக்கு வருமானால்,
அதை ஒரு மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்
என்கிற ஒரு சட்ட விதி இருந்தால், இந்த இடுகைக்கான
தேவையே இருந்திருக்காது என்று நினைக்கிறேன்.

இத்தகைய ஒரு யோசனை இந்திய அரசமைப்புச் சட்டம்
இயற்றப்பட்டபோதே, அந்த அவையில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அரசமைப்புச் சட்டம் இறுதி வடிவம் பெறும்போது
அந்த யோசனை அதில் இடம்பெறவில்லை என்பது
பரிதாபமான விஷயம்.

நமது இன்றைய பெரும்பாலான பிரச்சினைகளுக்கு
அதுவே காரணம் என்று கூடச் சொல்லலாம்.

முக்கியமான சில அம்சங்களைக் கொண்டது
அந்த யோசனை:

அரசுக்கும் தனி நபருக்கும் இடையில் அடிப்படை உரிமைகள்
தொடர்பாக வழக்கு வருமானால், அது சம பலமற்ற
இரு தரப்புகள் தொடர்பானது. நிர்வாக ஆணை மூலமாகவோ,
சட்டம் இயற்றியோ தனிநபரின் அடிப்படை உரிமையைக்
குறைப்பது, கட்டுப்படுத்துவது, நீக்குவது போன்ற செயல்களில்
அரசு ஈடுபடும்போது – அரசுக்கு அதனால் இழப்பு ஏதுமில்லை.
தனி நபரோ அல்லது நபர்களோ அதனால் கடும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதன் பிறகு, அரசமைப்புச் சட்டம்
தங்களுக்கு வழங்கியிருக்கும் உரிமையை நிலைநாட்டிக்
கொள்ள அவர்கள் வெவ்வேறு நீதியமைப்புகளை நாடி
முறையிட வேண்டியிருக்கிறது.

அடிப்படை உரிமையை நீக்கும் நிலைமை நீடிக்க
அனுமதிக்கப்பட்டால் அல்லது மாதக்கணக்கில் அல்லது ஆண்டுக்கணக்கில் நீடிக்கும் நிலை ஏற்பட்டால் அரசமைப்புச்
சட்டம் – இறுதித் தீர்ப்பு வரும்வரையில் – அந்த நபர் அல்லது நபர்களைப் பொருத்தவரை செயலிழந்துவிடுகிறது
(பெரும்பாலான தருணங்களில் அடிப்படை உரிமைகள் நிலைநாட்டப்படும்போது காலதாமதமாகி விடுவதால்,
அதற்குரிய முக்கியத்துவத்தையே இழந்துவிடுகிறது).

இது அடிப்படை உரிமைகளை மீறும் நடவடிக்கைகளுக்கு
மட்டுமல்ல, சர்ச்சைக்குரிய வகையில் அரசு எடுக்கும்
அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொருந்துவதாகும்.

கூட்டாட்சி அமைப்பு, தேர்தல்கள் இவை போன்ற பல
பிரச்சினைகளும் அரசின் அதிகாரம், பொறுப்பேற்கும்
தன்மை ஆகியவை பற்றிய கேள்விகளாகவே இருக்கின்றன.
இவற்றைத் தீர்க்க நீதிமன்றங்கள் எடுத்துக்கொள்ளும்
நீண்ட அவகாசத்தால், அரசின் பொறுப்பேற்கும்தன்மை
என்ற நிலையிலிருந்து – தீர்ப்பு வரும்வரை தண்டனையிலிருந்து
அரசு தப்பிக்கவும் முடிகிறது.

இந்தப் பின்னணியில், 2021-ம் ஆண்டு முடிந்து 2022
தொடங்கியுள்ள காலகட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின்
விசாரணைப் பட்டியலில் இருக்கும் வழக்குகளை ஆராய்ந்தால், அரசமைப்புச் சட்டம் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த
வழக்குகள் 2021 தொடக்கத்திலிருந்து இடம் பெற்றிருந்தும்
ஆண்டு முடிவுறும் தறுவாயில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான
எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் அதே நிலையிலேயே
இருப்பதைக் காண முடிகிறது.

இந்த வழக்குகள் அனைத்துமே அரசின் அதிகாரம்,
பொறுப்பேற்பு, தண்டிக்கப்படாமல் தப்பிக்கும் நிலை
பற்றியவை. இப்படி முடிவில்லாமல் இந்த வழக்குகள் நீடிக்கும் சூழலானது, சட்டப்படியான ஆட்சி என்ற நம்முடைய
அரசமைப்புச் சட்டம் வகுத்தளித்த ஜனநாயகத்துக்கு அதிக சேதங்களையே ஏற்படுத்துகிறது.

காஷ்மீர் 370: கூட்டாட்சி தத்துவத்தைத் தீர்மானிக்கும்
முக்கியமான முடிவு

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை
நீர்த்துப்போகச் செய்யும் வகையில் குடியரசுத் தலைவரின்
நிர்வாக ஆணை மூலம் 2019 ஆகஸ்ட் 5-ல் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்; ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டாகப்
பிரிக்கப்பட்டு, இரண்டும் ‘மத்திய ஆட்சிக்குள்பட்ட நேரடி
பகுதிகளாக’ அந்தஸ்து குறைக்கப்பட்டதாகும். காஷ்மீர்
பிரச்சினை இப்போது ‘ஒருவாறாக தீர்க்கப்பட்டுவிட்டதாக’ பெரும்பாலானவர்களின் கண்ணோட்டம் இருக்கிறது;
2019-க்கு முந்தைய நிலைக்கு இனி திரும்புவது அரசியல்
ரீதியாக முடியாது என்றும் கருதப்படுகிறது.

இந்தப் பிரச்சினைக்கு நீதிமன்றத்தின் மூலம் விரைவான
ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்குமேயானால், அது எத்தகையதாக
இருந்தாலும் சரி – சட்டபூர்வமாக ஒரு விஷயம் தெளிவுபடுத்தப்பட்டு விட்டது என்று பெரும்பாலானோரை திருப்திப்படுத்தி இருக்கும்.

இந்த போக்கு நீதித் துறைக்கும் ஏற்பட்டு விட்டதைப் போலவே,
அது இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளை இடைவிடாமல் தவிர்த்து, முடிவெடுப்பதை ஒத்திப்போட்டுக்கொண்டேவருவது வருத்தத்திற்குரியது. இதன் பின்னால் உள்ள அரசியலுக்கு அப்பாற்பட்டு, அரசமைப்புச் சட்டம் அளிக்கும் அதிகாரம் – பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ள தன்மை ஆகியவை தொடர்பாக சில அடிப்படைக் கேள்விகளை இந்த வழக்கு எழுப்புகிறது.

முதலாவதாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசோ –
சட்டப் பேரவையோ இல்லாத நிலையில், அரசமைப்புச்
சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசு
கலைக்கப்பட்ட பிறகு – மாநிலத்தின் அமைப்பையும்
அடிப்படைத் தன்மையையும் மாற்றக்கூடிய, மீண்டும்
திரும்ப ஏற்படுத்த முடியாத மாற்றங்களைச் செய்யும்
முடிவுகளை ஒன்றிய அரசு எடுக்கலாமா, எடுக்க சட்டம்
இடம் தருகிறதா என்ற கேள்வி எழுகிறது.

இதற்கான பதிலானது, ஜம்மு-காஷ்மீருக்கு மட்டுமல்லாது
முழு கூட்டாட்சி அமைப்புக்குமே முக்கிய விளைவுகளை ஏற்படுத்தவல்லது. தங்களுக்கு ஏற்புடையதாக இல்லாத
மாநில அரசுகளைப் பதவியிலிருந்து அகற்றும் அரசமைப்புச்
சட்டத்தின் 356-வது பிரிவை தவறாகப் பயன்படுத்தும்
நெடிய வரலாறு நமக்கு இருக்கிறது. மத்திய அரசுக்கிருக்கும்
இந்த அதிகாரத்தை மேலும் இந்த வகைகளில் விரிவுபடுத்துவது ஏற்கெனவே ஒருபக்கமாக சாய்ந்திருக்கும் கூட்டாட்சி
வலுநிலையை மேலும் தீவிரப்படுத்துவதாகவே அமைந்துவிடும்.

இரண்டாவதாக, மாநிலங்களின் நில எல்லைகளை மத்திய நாடாளுமன்றம் மாற்றியமைக்கலாம் என்று அரசமைப்புச்
சட்டத்தின் 3-வது கூறு அளிக்கும் அதிகாரம், அதை மட்டுமே வழங்குகிறது; அதனுடன் மாநிலத்தை மத்திய ஆட்சிக்குள்பட்ட பகுதியாக அந்தஸ்து குறைக்கும் அதிகாரத்தையும் சேர்த்தே வழங்கியிருக்கிறதா என்ற கேள்விக்கும் விடை காணப்பட
வேண்டும். காரணம், இதுவரையில் இப்படியொரு நடவடிக்கை எடுக்கப்பட்டதே இல்லை.

ஒன்றிய அரசுக்கு அப்படியொரு அதிகாரம் இருக்கிறது என்று
தீர்ப்பு வருமேயானால், இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு என்பது நாடாளுமன்றத்தின் கருணையையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்றாகிவிடும்.

நாடாளுமன்றம் விரும்பினால் – ஒரு தீர்மானம் மூலம் முழு இந்தியாவையுமே, ‘ஒன்றிய அரசின் ஆட்சிக்குள்பட்ட நேரடி நிலப்பகுதிகளின் கூட்டமைப்பாகக்கூட மாற்றியமைத்துவிடக்
கூடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் குறிப்பிடத்தக்க அளவில் அதிகாரங்கள் ஒன்றிய அரசிடமே குவிக்கப்பட்டுவிடும்.

இவ்விரு கேள்விகளுக்குத் தீர்ப்பின் மூலம் பதில் கிடைக்கும்
வரையில், ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக ஒன்றிய அரசு எடுத்த
நடவடிக்கை சட்டப்படி செல்லத்தக்கதாகவே அனுமானிக்கப்பட்டு, நாட்டின் வேறு பகுதிகளுக்கும்கூட விரிவுபடுத்தப்படலாம்.

இந்த ஒரு காரணத்துக்காகவே, உச்ச நீதிமன்றம் இரண்டரை ஆண்டுகளாக இந்த வழக்கைத் தொடர்ந்து விசாரிக்காமல், கேள்விகளுக்கு விடை காணாமல் இருப்பது, மனசாட்சியற்ற செயலாகவே கருதப்பட நேரும்.

சமநிலையைக் குலைக்கும் தேர்தல் நன்கொடை –

நீண்ட காலமாக விசாரணையிலேயே இருக்கும் இன்னொரு
முக்கிய வழக்கு, தேர்தல் செலவுகளுக்காக அரசியல் கட்சிகள் பெறப்படும் நன்கொடைப் பத்திரங்கள் தொடர்பானது.

இந்த வழக்கு தொடரப்பட்டு நான்கு ஆண்டுகளாகிவிட்டன.
இந்த நன்கொடைப் பத்திரங்கள், எந்தவித வரம்பும் இல்லாமல்
அரசியல் கட்சிகளுக்கு பெரும் தொழில் நிறுவனங்கள்
நன்கொடைகள் தர அனுமதிக்கிறது. யார், எவ்வளவு,
எந்த அரசியல் கட்சிக்குத் தருகிறார்கள் என்பது மக்கள்
அறியாதபடிக்கு ரகசியமாகவே காக்கப்படுகிறது.

இந்த நன்கொடைப் பத்திர அமைப்பானது பெரும்பாலும்
மத்தியில் ஆட்சி செய்யும் கட்சிக்கே சாதகமாக இருக்கிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசுக்கும் மாநில
அரசுகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க
நடந்த பல்வேறு தேர்தல்களில் அரசியல் நன்கொடையாக ஆயிரக்கணக்கான கோடிகள் பெருநிறுவனங்களால்
தரப்பட்டுள்ளன.

தேர்தலில் போட்டியிட அனைவருக்கும் சமவாய்ப்பு என்ற
அம்சத்தைக் கடுமையாக நீர்த்துப்போக வைப்பதுடன், தேர்தல் தொடர்பான அனைத்து அம்சங்களும் மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் அரசியல் சட்ட உரிமையை, நடைமுறையில்
மறுப்பதாக இருக்கிறது.

இரண்டு இடைக்கால ஆணைகளைத் தவிர, இந்த வழக்கை
முழுமையாக விசாரிப்பதற்கான உரிமைகளைத் தரவில்லை
உச்ச நீதிமன்றம். இன்னும் சில மாதங்களில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகிவிடும்,
அதற்குள் மத்திய, மாநில அரசுகளுக்கான தேர்தல்களும்
ஒரு முழு வட்டத்தைப் பூர்த்தி செய்திருக்கும். உச்ச
நீதிமன்றத்தின் ஏட்டில் இது ஒரு கரும்புள்ளியே.

இந்த வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் நிலை எந்தப் பக்கமும்
சாராத நடுநிலையாக இல்லை; இதே நிலை நீடிப்பதால் யாருக்குச் சாதகமோ அவர்களுக்கு ஆதரவாகவே இருக்கிறது.

இன்னொரு வகையில் சொல்வதென்றால், இதில்
முடிவெடுக்காததன் மூலம் உச்ச நீதிமன்றம்
முடிவெடுத்திருக்கிறது – ஒரு தரப்புக்கு ஆதரவாக –
ஆனால் அந்த நிலையை நியாயப்படுத்தும் தீர்ப்பை
வழங்காமலேயே!

இதர முக்கிய வழக்குகள்

இதர முக்கிய வழக்குகள் விஷயத்திலும் இதுதான் உண்மை.
’மத்தியப் புலனாய்வுக் கழகம்’ (சிபிஐ) நாட்டின் எந்த
அரசியல் சட்டப்படியும் உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல
என்று குவாஹாட்டி உயர் நீதிமன்றம் 2013-ல் தீர்ப்பு
வழங்கியது. உச்ச நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்புக்கு எதிராக
மனு தாக்கல் செய்யப்பட்டவுடனேயே தீர்ப்புக்கு இடைக்காலத்
தடை விதிக்கப்பட்டது, ஆனால் இந்த இடைக்காலத்தில்
இந்த வழக்கு மீது விசாரணையே நடக்கவில்லை.

சிபிஐ என்ற அமைப்பே சட்ட விரோதம் என்று அரசமைப்புச்
சட்டம் மூலம் ஏற்படுத்தப்பட்ட ஒரு நீதிமன்றம் தீர்ப்பளித்த
பிறகும், சிபிஐ தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

மிகச் சமீபமாக, குடியுரிமை (திருத்த) சட்டம் (சிஏஏ) செல்லாது
என்று அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கும் விசாரிக்கப்படாமலேயே நீடிக்கிறது.

சட்ட விரோதச் செயல்கள் (தடை) சட்டத்தின் சர்ச்சைக்குரிய
பிரிவு 43 (டி) (5) பிரிவு, குற்றஞ்சாட்டப்பட்டவர் ஜாமீன் பெறுவது
மிகவும் கடினம் என்ற நிலையை ஏற்படுத்துகிறது. இதனால்
சிலர் ஆண்டுக்கணக்கில்கூட சிறையிலேயே வாட நேர்கிறது.

இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கானது மக்களுடைய அடிப்படையான (சிவில்) உரிமைகள் தொடர்பானது.
இந்தப் பிரிவின் கீழ் வழக்கு தொடரப்படுவது அடிக்கடி
நிகழ்கிறது. பீமா கோரேகாவோன் வழக்கு சமீபத்திய
உதாரணம். இப்படிப்பட்ட வழக்குகள் ஒன்றல்ல, ஏராளம்.

நீதித்துறையையே காயப்படுத்துகிறது

வழக்கு தொடுக்கப்பட்ட பிறகும், அது விசாரிக்கப்படாததால்
நீடிக்கும் ‘பழைய நிலை’ காரணமாக ஒரு தரப்புக்கு –
பெரும்பாலும் அரசுத்தரப்பு – சாதகம் ஏற்படுகிறது.

சட்டப்படியான தீர்ப்பு வெளியாகாததால் அரசுத் தரப்பு
தப்பிக்கும் அதே வேளையில், தனக்குப் பொறுப்பில்லை என்பதைப்போல நடந்துகொள்வதால் நீதித்துறையே
கடுமையாக காயப்படுகிறது.

ஒரு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால், எந்த
அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படுகிறது என்பதை அது தெளிவுபடுத்திவிடும். அந்தத் தீர்ப்பு சரியா என்பதைப்
பொதுவெளியில் அலசி ஆராயவும் வாய்ப்பு ஏற்படும்.
அவசியப்படும் வேளையில், அந்தத் தீர்ப்பு ஆய்வுக்கும்
உட்படுத்தப்படும்.

ஒரு முடிவே எடுக்கப்படாதநிலையில், நீதிமன்றத்தின்
அல்லது நீதித் துறையின் செயலற்றதன்மையே களத்தில்
முக்கிய வினையாற்றிவிடுகிறது. அதன் தீர்ப்பு
வெளியானால் எப்படி எதிர்வினைகள் இருக்குமோ
அதைப் போல, தீர்ப்பு கூறப்படாத நிலையிலும் சில வினைகள் ஏற்படுகின்றன. இது ‘சட்டப்படியான ஆட்சி’ என்ற
கொள்கைக்குப் பெரும்பாலும் ஊறு ஏற்படுத்திவிடுகின்றன.

வழக்குகளை விசாரிக்க நீதிபதிகளைக் கொண்ட அமர்வுகளை உருவாக்குவதும், முக்கியமான வழக்கென்றால் அதிக
நீதிபதிகளைக் கொண்ட பெரிய அமர்வை ஏற்படுத்துவதும், வழக்குகளை அவர்களுக்கு ஒதுக்குவதும் உச்ச நீதிமன்றத்
தலைமை நீதிபதியின் பொறுப்பாகும். இதற்கு முன்பு
பதவி வகித்த மூன்று தலைமை நீதிபதிகளும் அரசுத்
தரப்பின் விருப்பத்துக்கேற்ப செயல்பட்டதாக
விமர்சிக்கப்பட்டனர். இப்போதைய தலைமை நீதிபதி
சட்டப்படியான ஆட்சி, நீதித்துறையின் சுதந்திரம் ஆகியவை
குறித்து வலியுறுத்திவருகிறார். இதை நிரூபிக்கும் ஒரே வழி, அரசமைப்புச் சட்டம் தொடர்பான நிலுவை வழக்குகளை
விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்குவதுதான்.

JUSTICE DELAYED IS – JUSTICE DENIED அதாவது,

தாமதிக்கப்படும் தீர்ப்பு என்பது மறுக்கப்படும் நியாயம் என்பது நமது நீதிமன்றங்களுக்கும், நீதியரசர்களுக்கும் நன்கு தெரிந்தது தானே….

.

…………………………………………………………………………………………………………………………………………………

நன்றி –
ஆங்கிலத்தில் – கௌதம் பாட்டியா
தமிழில்: வ.ரங்காசாரி – ஆகியோரின் கட்டுரைகளை
அடிப்படையாக கொண்டது….

(கௌதம் பாட்டியா டெல்லி சார்ந்த வழக்கறிஞர்.
அரசமைப்புச் சட்டம் சார்ந்து ‘தி இந்து’,
‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ உள்ளிட்ட பல்வேறு
பத்திரிகைகளிலும் தொடந்து எழுதிவருபவர்.

.
……………………………………………………………………………………………………………………………..…..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.