உலகிலேயே மிக மிக மலிவான போக்குவரத்து – “தீதி” வாழ்க …..!!!!

எப்போதாவது கொல்கத்தா போயிருக்கிறீர்களா….. ?
கொல்கத்தா டிராமில் பயணம் செய்திருக்கிறீர்களா…?

“இல்லை “என்பது உங்கள் பதிலானால்,
நீங்கள் இந்தியராகப் பிறந்ததன் பயனை இதுவரை
அனுபவிக்காமலே இருந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்….

இந்த போக்குவரத்தின் விசேஷம் என்னவென்றால்,
உங்களை டிக்கெட் வாங்குங்கள் என்று யாரும் சொல்ல
மாட்டார்கள். கண்டக்டர் பார்த்துக்கொண்டே இருந்தாலும்,
கடைசி வரை வாங்காமலேயிருந்து, கீழே இறங்கிச் சென்றாலும்
அப்போதும் அவர் உங்களிடம் எதுவும் சொல்ல மாட்டார்…
கேட்க மாட்டார்…. ஏமாந்தால் – அவரை டிக்கெட் கேட்டு,
தொந்தரவு செய்யாமல் இருந்ததற்காக நன்றி கூட சொன்னாலும் சொல்வார்…. ஒரு தடவை நான் பணம் கொடுத்து டிக்கெட்
கேட்டபோது அவர் என்னை பார்த்த பாரவை இருக்கிறதே….!!! அப்பேற்பட்ட புண்ணியாத்மாக்கள்….!!!

கடைசியாக நான் கொல்கத்தா போய் – சுமார் 25 ஆண்டுகள்
ஆயிற்று. ஆனால், அப்போது நான் பயணம் செய்த
அந்த டிராமும் – அந்த டிராம் ரூட்டும் கூட …. இன்னமும்
அப்படியே தான் இருக்கின்றன என்பது தான் அதிசயமான
விஷயம்.

உங்களுக்காக, அந்த டிராம் அனுபவத்தை வீடியோ வடிவில்
கீழே தந்திருக்கிறேன்….

அதற்கு முன்னர் டிராம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் –

தார் ரோட்டின் நடுவில் அமைக்கப்பட்ட தண்டவாளத்தில் ஓடக்கூடிய டிராம் வண்டியை, இன்று இந்தியாவில், கொல்கத்தாவில் மட்டும் தான்
காண முடியும்.

1873ல், ரிப்பன் பிரபுவால் கொல்கட்டாவில் அறிமுகப்படுத்தப்பட்டு இயங்கத் தொடங்கியது. பிறகு படிப்படியாக சென்னை, மும்பை, பரோடா, நாசிக், கான்பூர் மற்றும் பாவ்நகர் ஆகிய இடங்களிலும் டிராம்கள் ஓடத் தொடங்கின.

முதன்முதலாக மின்சாரத்தில் இயங்கும் டிராம்,
சென்னையில் தான் இயக்கப்பட்டது. ஆரம்பத்தில் குதிரைகளால் இழுத்துச் செல்லப்பட்டபோது, மணிக்கு 3 கி.மீ., வேகத்தில் தான் சென்றது. ( இப்போதும் ஒன்றும் வாழ்ந்து விடவில்லை;
மிஞ்சிப் போனால் மணிக்கு 10 கி.மீ. வேகம் இருக்கலாம்…
வண்டி ஓடிக்கொண்டு இருக்கும்போதே நீங்கள் எங்கு
வேண்டுமானாலும் இறங்கிக் கொள்ளலாம்… முயன்றால்,
ஏறவும் முடியும்…. )

நாளடைவில் நாடு முழுதும் டிராம் நிறுத்தப்பட்ட போதும்,
இன்று வரை கொல்கத்தாவில் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது.

……………

.
…………………………………………..

டிராம்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக அண்மையில் மேற்கு வங்க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது….

விரைவில் இவை நடைமுறைக்கு வந்தால், கொல்கத்தா ட்ராம் அனுபவம் பாராட்டுதல்களுக்கு உரியதாகும்…..”தீதி”யும் – உருப்படியான ஒரு செயல் (ஆவது… ? ) புரிந்ததாக கருதப்படுவார்…!!!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.