
நினைத்தபோதெல்லாம் கிளம்பி திருவண்ணாமலை
செல்கின்ற பழக்கம் கடந்த பல ஆண்டுகளாக எனக்கு உண்டு…
( கடந்த இரண்டு வருடங்களாக கொரொனா பிரச்சினை
மற்றும் உடல் நிலை இடம் கொடுக்காததால் முன்புபோல் நினைத்தவுடன் கிளம்ப முடிவதில்லை ).
கூட்டமான நேரங்களில் போவதை எப்போதுமே நான் தவிர்த்து விடுவேன்…. பவுர்ணமி அல்லாத, சனி, ஞாயிறு அல்லாத –
வார நாட்களில் போவது தான் என் வழக்கம்.
நான் எப்போது திருவண்ணாமலை சென்றாலும், ரமணாசிரமம்
சென்று விட்டு, அப்படியே மலையைச் சுற்றி வலம் வருவதும், கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு வருவதும் மட்டுமே என் வழக்கம்.,,,.
சுமார் 20 -22 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தடவை –
திருவண்ணாமலை சென்ற போது மலை மேல்,
ரமணர் தவம் செய்த விரூபாக்ஷி, கந்தாஸ்ரமம் போன்ற
குகைகளுக்குச் செல்ல வேண்டும் . அங்கே சில மணி நேரங்கள்
அமர்ந்திருந்து அந்த அனுபவத்தை உணர வேண்டும் என்று
தோன்றியது.
நான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து காலையில்
4 இட்லி பார்சல், ஒரு தண்ணீர் பாட்டில்,
விவேகானந்தர் எழுதிய ஒரு ஆன்மீகப் புத்தகம்,
ஆகியவற்றை ஒரு ஜோல்னா பையில் போட்டுக்கொண்டு
கோவிலுக்கு பின்புறம் இருந்த அரைகுறை மண்/பாறை பாதை
மூலம் மலைமேல் ஏற ஆரம்பித்தேன்…. சாதாரணமாக
குகைகளுக்கு போகிறவர்கள் இந்தப்பாதையில் போக
மாட்டார்கள்… ரமணாசிரமம் வழியாகவே செல்வார்கள்.
முதல் 500 அடிகள் வரை வீடுகள் ஆங்காங்கே இருந்தன..
அதன் பின்னர் அபூர்வமாக ஒன்றிரண்டு…
அதற்கும் மேலே சென்ற பிறகு ஆடு மேய்க்கும்
சில சிறுவர்களை மட்டும் பார்க்க முடிந்தது ….மனித
நடமாட்டமே இல்லை.
அதன்பின்னர் இன்னும் மேலே, மேலே சென்று –

கந்தாஸ்ரமம் என்று அழைக்கப்படும் குகையை அடைந்தேன்…
உள்ளே சென்று 16 வருடங்களுக்கு மேலாக ரமணர் அமர்ந்திருந்து,
தவம் செய்த இருக்கையை பார்த்து வியந்து வணங்கி விட்டு –
( சுமார் 23 ஆண்டுகளுக்கு ரமணருக்கு இருப்பிடமாக இருந்தது திருவண்ணாமலை மீது உயரே இருந்த இந்த கந்தாசிரமும், விரூபாக்ஷா குகையும் தான்…!!!)
வெளியே வந்து வாசலிலேயே ஒரு மரத்தடியில்
அமர்ந்து கொண்டு சிறிது நேரம் தியானத்தில் இருந்தேன்.
பின்னர், சுற்று இருந்த இடங்களை கொஞ்சம் பார்த்து விட்டு,
குகை வாசலில் இருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து,
கையிலிருந்த புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தேன்…அவ்வப்போது சுற்றிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டு –
முற்றிலுமான தனிமை … ஆட்கள் நடமாட்டமே இல்லை;
அபூர்வமாக ஆடு மேய்க்கும் சிறுவர்கள் யாராவது
வருவார்கள்…
(இப்போதெல்லாம், நிறைய பேர் அங்கு சென்று வருவதாக
அறிகிறேன்… இப்போது அங்கே இருக்கும் கட்டிடங்கள்
எல்லாம் அப்போது இல்லை… முற்றிலும் இயற்கைச் சூழ்நிலை …..
வாசலில் மரப்பந்தல் ….சில பூச்செடி வகைகள்…அவ்வளவு தான்…)
மிக மிக அமைதியான, நிம்மதியான சூழ்நிலை;
நல்ல வெய்யில் நேரம்…
ஆனால், அங்கு மெல்லியதாக காற்று வீசிக்கொண்டிருந்தது… அங்கேயிருந்து கோவிலின் அனைத்து கோபுரங்களும் அழகாகத் தோன்றின. மிக ரம்மியமான காட்சி.
காலை சுமார் பத்தரை மணியிலிருந்து, பிற்பகல் 3 மணி வரை அங்கேயே தான் அமர்ந்து கொண்டு, அந்த சூழ்நிலையை அனுபவிப்பதிலும், புத்தகம் படிப்பதிலுமாக இருந்தேன்.
மனதிற்கு மிகவும் பிடித்திருந்தது… ஆனந்தமான அனுபவம்.
பின்னர் திரும்ப கீழே இறங்கும்போது, ரமணாசிரமம் பின்புறத்தில்
சென்று முடிவடையும் இன்னொரு பாதை வழியே வந்தேன்.
ரமணாசிரமத்தின் பின்புற காம்பவுண்ட் சுவரிலிருந்து குகைக்கு
போகும் அந்தப் பாதை ஓரளவு நன்றாகவே இருந்தது.
அன்று கிடைத்தது ஒரு அபூர்வமான அனுபவம்…
அதன் பின், மேலே செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை;
அப்போதெல்லாம் அபூர்வமாகவே அங்கே மனிதர்களைப் பார்க்க
முடியும்…. இப்போதெல்லாம் நிறைய பேர் ரமணாசிரமம் வழியாக குகைக்கு சென்று வருகிறார்கள்….
ரமணர் ஆசிரமம், குகைகள் ஆகியவற்றை பற்றிய ஒரு
காணொளியை அண்மையில் பார்த்தேன்… அதைப் பார்த்தவுடன் ஏற்பட்ட சிந்தனைகளைத் தான் இங்கே எழுதுகிறேன்…அந்த காணொலியையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென்று தோன்றியது….
கீழே பதிந்திருக்கிறேன் ….
………….
ரமண மஹரிஷியின் வாழ்நாளில்
எடுக்கப்பட்ட காட்சிகள் நிறைந்த ஒரு காணொலி –
……..
………….
ரமணாஸ்ரமத்திலிருந்து –
கந்தாஸ்ரமம், விரூபாக்ஷி குகைகளுக்கான வழி –
….
………….
.
………………………………………………
” A wonderful full moon Girivalam Pradakshina
Video from Thiruvannaamalai, India ”
என்று தலைப்பிட்டு, ஒரு வெளிநாட்டுப்பெண்மணி
பதிவிட்டிருந்த ஒரு வித்தியாசமான காணொலியை
இன்று பார்த்தேன்.
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்….
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்