
He used to sleep on the railway platform,
but today owns a Rs 100 crore turnover
travels company ….
வெற்றி பெற்ற மனிதர் ஒருவர் கடந்து வந்த பாதை தான்
எவ்வளவு திருப்பங்களும், சுவாரஸ்யங்களும் நிரம்பியதாக
இருக்கிறது….!!!
தென் தமிழ்நாட்டிலிருந்து சென்னைக்கு எதிர்காலத்தைப்பற்றிய
நம்பிக்கையோடு வந்தவர்கள் தமிழ் திரையுலகில் மட்டுமில்லை –
வேறு பல துறைகளிலும் இருக்கிறார்கள்.
1970-களில் திருச்செந்தூரிலிருந்து சென்னையை நோக்கி வந்த
பாலன் அவர்களுக்கு இந்த சென்னை மாநகரில் தெரிந்தவர்
என்று யாருமில்லை.
ஒதுங்கக் கூரையில்லாமல், கிடைத்த இடங்களிலெல்லாம் ஒதுங்கி
தன்னைப் பாதுகாத்துக்கொண்ட அந்த மனிதருக்கு எதிர்காலத்தின்
மீது அளப்பரிய நம்பிக்கையும் ஆசையுமிருந்தன. இந்த மாபெரும்
நகரில் தனக்கானதொரு கூரையில்லாத மனிதன் எதிர்கொள்ளும்
துயரமும் நெருக்கடிகளும் அசாதாரணமானவை. ஆதரிக்க
ஒருவருமில்லாத மனிதன் எதிர்கொள்ளும் மனநெருக்கடிகள்
அனுபவித்தர்களுக்கு மட்டுமே புரியும்….
ஒரு நாளிரவு, தன்னைப்போலவே ஒதுங்கக் கூரையில்லாத
மற்ற சிலரோடு,எழும்பூர் ரெயில் நிலைய ப்ளாட்பாரத்தில் உறங்கிக்
கொண்டிருந்தவரை தலையில் மடேலென்று தட்டி எழுப்பிய
காவல்துறையினர் அங்கே உறங்கிக் கொண்டிருந்த பலரையும்
சந்தேக கேஸில் உள்ளே போடுவதற்காக தங்களோடு
காவல் நிலையத்துக்கு வரச் சொல்கிறார்கள்.
குழப்பத்தோடு அவர் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே
அருகிலிருந்த இளைஞர் அங்கிருந்து ஓடத் தொடங்குகிறார்.
பாலனும் அந்த இளைஞனைத் தொடர்ந்து ஓடத் தொடங்குகிறார்.
போலீஸ்காரர்களும் விடமாட்டோம் என்று துரத்த,
மூச்சுமுட்ட ஓடிக்கொண்டெ இருந்தார் பாலன்… ஒரு நிலையில்
போலீஸ்காரர்கள் அலுத்துப்போய், அவரைத் துரத்துவதை
நிறுத்தி விட, ஓய்ந்துபோன பாலனும், நடு இரவில் அதற்கு மேல்
வேறு எங்கும் சொல்லத் தோன்றாமல்,
சிறிது தொலைவில் ரோட்டின் ஓரத்தில், நடைபாதையில் சிலர்
வரிசையாக படுத்துறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து, இவரும்
அவர்களோடு படுத்து உறங்கி விடுகிறார்.
அதிகாலையில் அவரை ஒருவர் எழுப்பி `இந்த இடத்தை
எனக்குக் குடு தம்பி. ரெண்டு ரூவா தர்றேன்…’
என்று சொல்ல அவர் குழப்பத்தோடு சுற்றும் முற்றும் பார்க்கிறார்.
அவர் படுத்திருந்தது அண்ணா மேம்பாலத்தின் அருகாமையில்
இருக்கும் அமெரிக்க தூதரகத்தின் வாசலை ஒட்டிய நடைபாதை.
அமெரிக்க விசாவுக்காக வருகிறவர்கள் நீண்ட வரிசையில்
காத்திருப்பதைத் தவிர்க்கவேண்டி முந்தைய நாள் இரவே,
இதுபோல் வந்து படுத்துக்கொள்வார்கள். அப்படி வர
முடியாதவர்களுக்கு இடம் பிடித்துக் கொடுத்து, பணம் சம்பாதிப்பது
என்று ஒரு தொழில் வாய்ப்பு இருப்பது பாலனுக்கு அப்போது
தான் தெரிந்தது.
அந்த விடிகாலையில் தற்செயலாகத் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கிய அவர் அதன் பிறகு தனது
அன்றாட வேலைகளில் ஒன்றாக அதை மாற்றிக்கொள்கிறார்.
நிறைய டிராவல் கம்பெனிகளைச் சேர்ந்தவர்களும்
அந்த இடத்திற்கு வந்து செல்வார்கள். பாலன் அவர்களோடு
இணங்கிப் பழகுவார்… அந்தத் தொழிலில் இருந்த பல நெளிவு-
சுளுவுகளை நாளடைவில் அவர்களோடு பழகி புரிந்து கொண்டார்.
ட்ராவல்ஸ் தொழில் அவருக்கு பிடித்திருந்தது. அந்தத் துறையைச்
சேர்ந்த பலரை நண்பர்களாக்கிக் கொண்டார். அவர்களுக்காக,
சிறு சிறு பணிகளைச் செய்து கொடுத்து, அவர்களின்
நம்பிக்கையையும், ஆதரவையும் பெற்றார்.
பாலனிடம் கண்ட உற்சாகத்தையும் துடிப்பையும் கவனித்த
ஒரு டிராவல்ஸ் நிறுவன முதலாளி பாலனை, தன்னிடம் வேலைக்கு
வரச்சொல்லிக் கேட்கிறார். `நீ செய்ற இதே வேலையையும்
செய்யலாம். அஞ்சு ரூவா தர்றேன்… பகல் நேரத்துல என்
டிராவல்ஸுக்கு வேலைக்கு வா…’ என்று அவர் பாலன்
அவர்களுக்குப் புதிய வாய்ப்பைத் தர, தனக்கான வெளிச்சம்
கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் ஒப்புக்கொள்கிறார்.
மற்ற துறைகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமான
சுற்றுலாத்துறையிலும், டிராவல்ஸிலும் – நட்பும் நம்பிக்கையும்
இருந்தால் மட்டுமே – நிலைத்து நின்று வெற்றியும் பெற முடியும்…
வேலைக்குச் சேர்ந்த டிராவல்ஸில் கடுமையாக உழைக்கத்
தொடங்குகிறவர் அந்தத் தொழிலில் இருக்கும் நுட்பங்களை,
சக மனிதர்களை அணுகும் விதத்தையெல்லாம் கற்றுக்கொள்கிறார்.
அதோடு, வெவ்வேறு அலுவலகங்களில் சிறு சிறு வேலைகளைப்
பார்க்கத் தொடங்க சென்னை வாழ்வு அவருக்கு மெல்ல மெல்ல
பிடிபடத் தொடங்குகிறது.
சில மாதகால சென்னை வாழ்க்கை அவருக்கு டிராவல்ஸ்
தொழிலில் உள்ள நிறையபேரை அறிமுகப்படுத்தியிருந்தது.
வெவ்வேறு வேலைகளில் கிடைத்த சிறு வருமானங்களைக்
கொண்டு தனக்கான கூரையைத் தேடத் தொடங்குகிறார்.
ஐம்பது ரூபாய் வாடகையில் அழுக்கும் தூசியும் நிறைந்த
பழைய அறை. ஆனால் அங்கிருந்து அவரை யாரும் துரத்த
முடியாதென்பது பெரிய ஆறுதல்…
இன்றைக்கும் தமிழ்நாட்டின் ஏதேதோ ஊர்களிலிருந்து
கனவுகளோடு சென்னை நகர் நோக்கி வருகிறவர்களில்
எங்கு தங்கப் போகிறோமென்கிற உறுதியில்லாமல்
வருகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
( அங்காடித் தெரு திரைப்படம் இத்தகைய பலரின்
வாழ்க்கையை அறிமுகம் செய்து வைத்தது
நினைவிருக்கலாம்…!!!)
வி.கே.டி.பாலன் தனியாக டிராவல்ஸ் தொடங்குவதற்குக்
காரணமாக அமைந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார் அவர்.
80-களில் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து
நடந்துகொண்டிருந்தது. குருவிகள் ஏராளமாகச் சென்றுவருவார்கள்.
அந்தக் காலகட்டத்தில் அந்தப் பகுதியில் நிகழ்ந்த வணிகம்
மிகப்பெரியது. இந்தக் குருவிகளை ஒருங்கிணைத்து அனுப்பி
வைப்பதற்கென்றே நிறைய பயண முகவர்கள் உண்டு.
அப்படியான ஒரு பயணத்துக்காக 100 பேரின் பாஸ்போர்ட்டுகளை
பாலனின் கையில் கொடுத்து ஒரு முதலாளி சென்னையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைக்கிறார். ராமேஸ்வரத்துக்கு
முன்பாகவே அதிகாலையில் ரயில் நின்றுவிட, இவர் இறங்கி
விசாரிக்கிறார். பாலத்தில் பழுது ஏற்பட்டிருப்பதால் ரயில்
பிற்பகலுக்கு மேல்தான் செல்லும் என்கிற தகவல் கிடைக்கிறது.
காலை 9 மணிக்குள் துறைமுகத்திற்கு சென்று பாஸ்போர்ட்டைக்
கொடுக்காவிட்டால் குருவிகள் பயணிக்க முடியாது, பயண
முகவருக்கு பெரும் நஷ்டமாகிவிடும்.
அவ்வளவு பதற்றத்திலும் துணிந்து ரயில்வே ட்ராக்கில் நடக்கத் தொடங்கிவிடுகிறார். விடிந்தும் விடியாத காலையில், கடுமையான
கடற்காற்றுக்கு நடுவே நடந்து செல்கிறவரை அலைகளின்
பேரிரைச்சல் அச்சுறுத்துகிறது.
போதாக்குறைக்கு ட்ராக் முழுக்க கிரீஸ் ஆயில் வழிந்து வழுக்கிக்கொண்டிருந்ததால் காலை அழுத்தமாக ஊன்றி நடக்க
முடியாத நிலை. மெல்ல தவழ்ந்து தவழ்ந்து அந்த இரண்டு
கிலோமீட்டர் ரயில்வே பாதையை இரண்டு மணி நேரங்களில்
கடந்து சென்று விடுகிறார்.
குறிப்பிட்ட நேரத்துக்குள் துறைமுகத்தில் பாஸ்போர்ட்டுகளை
சேர்த்துவிட்டதால் முதலாளிக்கு பெரும் நிம்மதி. அங்கு
பயணத்துக்காகக் காத்திருந்த மற்ற ஆட்களும் இவர் செய்த
காரியத்தைக் கேட்டு வியப்போடு பேசியிருக்கிறார்கள்.
அதன் பிறகு ஏராளமான பயண முகவர்கள் அவரிடம்
நம்பிக்கையோடு பாஸ்போர்ட்டுகளையும் விசாவையும்
ஒப்படைக்கத் தொடங்கிவிட்டார்கள்.
பாலன் அவர்களிடமிருந்த மிகப்பெரிய இரண்டு முதலீடுகள்
கடும் உழைப்பும் நம்பிக்கையும் தான். அந்த முதலீடு தான்
எக்மோர் ரயில் நிலைய நடைமேடையிலிருந்து இன்று இவ்வளவு
பெரிய உயரத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது.
அவரிடமிருக்கும் வாசிப்புப் பழக்கம், இலக்கிய ஆர்வம்,
பொதுக் காரியங்களில் தொடர்ச்சியான ஈடுபாடு இவை
எல்லாமுமே அவரை தனித்துவமான மனிதராக எப்போதும்
நினைக்கச் செய்யும்… பிற்காலத்தில், அவரை, ஒரு எழுத்தாளராகவும்,
பேச்சாளராகவும், தூர்தர்ஷனில் தொலைக்காட்சி நிகழ்ச்சி
தயாரிப்பாளராகவும் இந்த குணங்களே உயர்த்தியது.
சில திரைப்படங்களிலும் கூட அவர் தலை காட்டி இருக்கிறார்.
யாரிடமும் தனது பின்புலத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல்
அங்கு நடிக்க வந்திருக்கும் இன்னொரு நடிகராக மட்டுமே தன்னை வெளிப்படுத்திக்கொள்வார்.
மனிதன் பொருளை எளிதில் சம்பாதித்துவிடலாம்.
நிதானத்தையும் பக்குவத்தையும் சம்பாதிப்பது கடினம்.
இன்றைக்குத் தென்னிந்தியாவின் மிக முக்கியமான
பயண முகவர்களில் ஒன்றாக வி.கே.டி.பாலன்
அவர்களின் மதுரா ட்ராவல்ஸ் நிறுவனம் இருக்கிறதென்றால்
அதற்கு அவரது உழைப்பும், நேர்மையும், சக மனிதர்களின்
மீதான கரிசனமுமே காரணம்…
கீழே இருப்பது டைம்ஸ் ஆஃப் இந்தியா அவரைப் பற்றி
வெளியிட்ட கட்டுரைக்கு போட்ட தலைப்பு –
He used to sleep on the railway platform,
but today owns a Rs 100 crore turnover
travels company ….
.
………………………………………………………..