கலைஞரிடம் சிக்கியிருந்த ” அய்யோ பாவம் ” ஷண்முகநாதன் ….!

கலைஞர் கருணாநிதி அவர்களிடம், அவரது கடைசிக்காலம் வரை,
அவரது உதவியாளராக பணியாற்றி வந்த திரு.ஷண்முகநாதன்
அவர்கள் நேற்றைய தினம் மறைந்து விட்ட செய்தி வெளிவந்திருக்கிறது….

என்னைப் பொருத்த வரை, கடைசி வரை தன் தலைமைக்கு
விசுவாசத்தோடு, கடமை தவறாமல் உழைத்து வந்த ஒரு
சின்சியரான மனிதர் என்று தான் அவரைப்பற்றி நான் நினைக்கிறேன்…

அவரது குடும்பத்திற்கு இந்த தளத்தின் மூலம் நமது ஆழ்ந்த
அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்…

.

…………………………………………………………………………………………………………….

அவரைப்பற்றிய – என்று சொல்வதை விட –
அவருக்கும் கலைஞருக்குமான –
எந்தவித இலக்கணத்திற்கும் உட்படாத ஒரு நெருக்கம் குறித்து –
இன்றைய தலைமுறைக்கு அதிகம் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை….

இன்று வேறு இடுகை தான் எழுதுவதாக இருந்தேன்…
ஆனாலும், காலையில், டேஷ்போர்டை திறந்ததும், நிறைய
வாசக நண்பர்கள், 2014-ல் இதே விமரிசனம் தளத்தில் எழுதியிருந்த
ஒரு இடுகையை தேடி எடுத்துப் பார்த்திருப்பது தெரிந்தது…

நிஜத்தைப் பிரதிபலிக்கும், ஆனால், நகைச்சுவையான ஒரு இடுகை
அது.. இப்போது மீண்டும் ஒரு முறை அதை எடுத்துப் படித்துப்
பார்த்தேன்… மிகவும் நன்றாக வந்திருப்பதாகத் தோன்றியது…

அதைப் படிக்காத வாசக நண்பர்கள் படிக்கவும், ஏற்கெனவே
படித்தவர்கள் மீண்டும் ஒருமுறை படிக்கவும், அதை இப்போது
மீண்டும் பதிப்பித்தால் நல்லது என்று தோன்றியது….

இது திரு.ஷண்முகநாதனை எந்த விதத்திலும் அவமரியாதை
செய்வதாக யாரும் நினைக்க வேண்டாம். ஒரு விதத்தில் அவருக்கு பெருமை சேர்ப்பதாகவே அமையும்…

இது திரு.ஷண்முகநாதன் அவர்களின் sincerity -ஐயும்,
எப்பேற்பட்ட boss-இடம் அவர் வேலை பார்க்க வேண்டியிருந்தது
என்பதையும் விளக்கமாக தெளிவுபடுத்தும்….

கீழே –

……………………………………………………………………………………..


கருணாநிதியிடம் சிக்கிய “அய்யோ பாவம்” ஷண்முகநாதன் ….!
Posted on ஜூலை 2, 2014

…………………………………………………………………………………………………………………………………………………..



கலைஞர் கருணாநிதியிடம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக,
செயலாளராகப் பணியாற்றி வரும் திரு ஷண்முகநாதன் அவர்களின்
இல்லத் திருமணம், கடந்த ஞாயிறு அன்று கலைஞர் கருணாநிதி
தலைமையில் நடந்தது.

திருமணத்தில் கலைஞர் பேசிய பேச்சின் ஒரு பகுதி –

“சண்முகநாதனைப் பொறுத்த வரை, அவர் என்னுடைய
அலுவலகத்திலே வேலை பார்ப்பவர் என்பதைவிட,
என்னுடைய அகத்திலே இருந்து பணியாற்றுபவர்.
வெறும் சம்பளத்துக்காக வந்தவர் அல்ல. இந்த இயக்கத்திலே தன்னைஒப்படைத்துக்கொள்ளும் அளவுக்கு என்னோடு கலந்து விட்டவர்.”

தமிழுக்கு ஏற்றம் தருவோம் –

தொடர்ந்து கருணாநிதி பேசியபோது,
“நான் நடத்தி முடித்தது தமிழ்த் திருமணம்.
மணமக்கள் பெயர் விக்ரம், நிஷாந்தி.

முடிந்தவரை தமிழுக்கு ஏற்றம் தரும் அளவுக்கு நாம்
நடந்துகொள்ள வேண்டும். இப்போது விட்டுவிட்டால்
தமிழைக் காப்பாற்ற, தமிழுக்கு நேரும் ஆபத்துக்களை
தடுத்து நிறுத்த யாருமே இருக்க மாட்டார்கள். எதிர்காலத்திலே
தமிழ் இருக்குமா என்ற கேள்வியோடு, இன்றைக்கும்
நாம் இருக்கின்றோம்.

ஏனென்றால் அப்படிப்பட்ட புயல் இந்தியாவிலே வீசி,
அது தென்னகத்திலே தவழ்ந்து, தமிழகத்திலும் புயலாக
மாறியிருக்கிறது, அந்தப் புயலைத் தடுத்து நிறுத்த
சண்முகநாதனுக்கு ஒன்றைச் சொல்கிறேன்.
விக்ரம் என்ற மணமகன் பெயரையும்,
நிஷாந்தி என்ற மணமகள் பெயரையும், கூடுமான வரை
தமிழ்ப் பெயர்களாக மாற்றி, தமிழுக்குப் பெருமை
தேடித் தாருங்கள்” என்றார்.

இதையடுத்து, ‘நீங்களே தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்’ என்று
கருணாநிதியிடம் சண்முகநாதன் கூறினார்.

“நல்ல பெயர்களாக சிந்திப்பதற்கு எனக்கு சிறிது நேரம் வேண்டும்.
அந்தப் பெயர்களை வீட்டுக்குப் போன பிறகு நிச்சயமாகச்
சொல்வேன், அந்தப் பெயர் முரசொலியில் வெளிவரும்” என்று
கருணாநிதி தெரிவித்தார்

————————-

இந்த செய்தியைப் படித்தவுடன் என் மனதில்,
ஷண்முகநாதன் இடத்தில் வைகைப்புயல் வடிவேலுவை
வைத்துப் பார்த்தேன்….

ஒரு வேளை அது வடிவேலுவாக இருந்தால் –
அவர் தன் மனதுக்குள் இப்படிப் புலம்பி இருப்பாரோ ….?

“அய்யா – அம்பது வருஷமா ஒங்கூட குடுத்தனம் பண்றேன்.
அதுக்கு இப்படி ஒரு கைங்கரியம் நீங்க பண்ணுவீங்கன்னு
கனவுல கூட நான் நெனக்கல்லையே மவராசா….

ஊருல, ஒலகத்துல எவ்வளவோ பேர் இருக்காங்க ….
ஒங்க வூட்டுல இல்லாத மக்களா, ஆளுகளா – பேருகளா ….?

ஒங்க பேரன் உதயநிதி இருக்காக ….
அவங்க பொஞ்சாதி கிருத்திகா இருக்காக ….
அவங்க கம்பேனி “ரெட் ஜெயண்ட் ” இருக்கு…..

ஒங்க மக கனிமொழி அம்மாவோட மகன் “ஆதித்யா” இருக்காக…

ஒங்க பேரன் மாறன் கம்பேனிங்க –
” சன் பிக்சர்ஸ்” இருக்கு….
தொலைக்காட்சிக –
“சன் டிவி” இருக்கு –
“கே டிவி” இருக்கு –
“ஆதித்யா டிவி” இருக்கு –
“சன் ம்யூஸிக்” இருக்கு –
“சன் நியூஸ்” இருக்கு –

மதுரைப் பேரன் துரையோட –

“க்ளோவ்டு நைன்” சினிமா கம்பெனி இருக்கு –

ஒங்க எல்லைக்குள்ள இன்னும் என்னென்னவோ இருக்குக …
எல்லாத்தையும் விட்டூட்டு இப்படி எங்குடும்பத்துக்குள்ள பூந்து
இப்படி குத்து வெட்டு உண்டு பண்றீங்களே என் ராசா …..

அம்பது வருஷமா ஒங்ககூடவே இருக்கற
இந்த வெட்டிப்பயலுக்கு
இது தான் நீங்க செய்யற கைங்கறியமா ….என் ராசா……?”

………………………………………………………………………………………………………………………………….


இதோடு விட்டு விட்டால், இடுகை முழுமை பெறாது என்று
தோன்றியதால் – இந்த இடுகைக்கு வந்த பின்னூட்டங்களில்
இருந்து பொருத்தமானதை மட்டும் தேர்ந்தெடுத்து
கீழே தந்திருக்கிறேன்…

………………………………………………………………………………………………………………….


chollukireen சொல்கிறார்:
7:24 முப இல் ஜூலை 4, 2014

ஷண்முகத்தையே முதலில் மாற்றச் சொல்லவில்லையா ?

……………………………………..


வருக நண்பரே,

பாவம் -வயதானவர் என்று ஷண்முகநாதனை விட்டு
விட்டாரோ என்னவோ ….!
ஒரு வேளை சொன்னால் – எல்லாரும் ஓடிக்கொண்டிருக்கிற
நேரத்தில் -இருக்கிற ஒரே துணை ஷண்முகநாதனும்
ஓடி விட்டால் என்ன செய்வது என்றும் யோசித்திருக்கலாம்..!

-வாழ்த்துக்களுடன், காவிரிமைந்தன்

……………………………………………………………………………………….

reader சொல்கிறார்:
2:39 முப இல் ஜூலை 10, 2014

// எல்லாரும் ஓடிக்கொண்டிருக்கிற நேரத்தில் -இருக்கிற
ஒரே துணை ஷண்முகநாதனும்
ஓடி விட்டால் என்ன செய்வது என்றும் யோசித்திருக்கலாம்..! //

சில வருடங்களுக்கு முன்னால் இம்சை தாளாமல் அவரும்
ஓடினாரே. பத்து நாள் பொருத்துப் பார்த்த தலை,
‘அவன் வர்ரானா இல்லையானு கேளு. அரசு பைலை
தூக்கிட்டு போயிட்டானு கமிஷனர்கிட்ட கம்ப்ளைன்ட்
கொடுப்பேன்னு அவங்கிட்ட சொல்லு’ என்றதும் பதவிசா
பணிக்குத் திரும்பினாரே.

………………………………………………………………………..


vimarisanam – kavirimainthan சொல்கிறார்:
4:04 பிப இல் ஜூலை 10, 2014

நண்பரே ( ரீடர் ..)

திரு.ஷண்முகநாதன் கோபித்துக் கொண்டு போனதும்,
பின்னர் திரும்ப வந்ததும் –
உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்த பிறகு
ஞாபகத்திற்கு வந்தது.

ஆனால் நீங்கள் சொல்லி இருக்கும்
சுவையான பின்னணி கதை இதுவரை
எனக்குத் தெரியாது…..quite interesting…!!

-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்

.
………………………………………………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

4 Responses to கலைஞரிடம் சிக்கியிருந்த ” அய்யோ பாவம் ” ஷண்முகநாதன் ….!

  1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இன்று திமுக தலைவர், மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறி இருப்பது –

    சண்முகநாதனால் மட்டுமே சண்முகநாதனாக வாழ்ந்திட முடியும். “இந்தப் பிறவியே கலைஞருக்கானது” என்று சொல்லி, அரைநூற்றாண்டு காலம் தலைவரின் உதவியாளராக இருந்தார். தலைவர் கலைஞரின் அன்புக்குரியவர். அவருக்கு சுமைதாங்கியாக – இடிதாங்கியாக இருந்தவர்.

    தலைவரின் கோபத்திற்குள்ளானவர்….
    கோபித்துக் கொண்டும் சென்றவர். …
    ஆனால், நீரடித்து நீர் விலகாது என்பதுபோல, மேகக்கூட்டம் விலகி
    சூரியன் ஒளிர்வதுபோல, உடனடியாகத் திரும்பிவந்து, முன்பைவிட
    வேகமாகத் தன் பணிகளைத் தொடர்ந்தவர்.

    Read more at: https://tamil.oneindia.com/news/chennai/cm-mk-stalin-releases-a-condolence-letter-on-shanmuganathan/articlecontent-pf631778-442955.html?ref_source=articlepage-Slot1-9&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider

  2. bandhu சொல்கிறார்:

    ஸ்டாலின், ‘பேராசிரியர்’ அன்பழகனுக்கு அரசு செலவில் சிலை வைத்தது போல ஷண்முகநாதனுக்கும் அரசு செலவில் சிலை எடுப்பாரா என்னவோ!

    (ஏற்கனவே சூப்பர் ! நான் வேற ஐடியா கொடுக்கிறேன்!)

  3. Sanmath AK சொல்கிறார்:

    Dear KM Sir,

    Never expected such a hatred-filled article from you, especially the title !!!

  4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    Sanmath AK,

    அவசரப்பட்டு எழுதி விட்டீர்கள்….

    இடுகையை மீண்டும் ஒரு முறை நிதானமாக படித்துப்பார்த்து
    புரிந்துகொள்ள முயற்சியுங்கள்.

    உண்மையில், நான் திரு.சண்முகநாதன் அவர்களின் மீது
    அனுதாபப்பட்டு எழுதிய இடுகை அது….

    இன்னும் ஒரு விஷயத்தையும் நீங்கள் கவனிக்கவில்லை என்று
    தோன்றுகிறது.. .2014-ஆம் வருடம், கலைஞர் உயிருடன் இருந்தபோது
    எழுதப்பட்ட இடுகையின் மறு பதிப்பு என்பதையும் நீங்கள்
    கவனிக்கவில்லை;

    உண்மையில் உங்கள் அனுதாபம் யார் மீது…..?
    சண்முகநாதன் அவர்களின் மீதா….? அல்லது அவரது BOSS-ன் மீதா….?

    அதைச் சொன்னீர்கள் என்றால், என்னால் இன்னும் கொஞ்சம் கூட
    விளக்கம் தர முடியும்.

    .
    வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.