
நடப்புக் கூட்டத் தொடரில் பொதுத் துறை வங்கிகளில்
அரசின் பங்கைக் குறைப்பதற்கான திருத்தச் சட்டங்கள் கொண்டு
வரப்படுவதை வங்கி ஊழியர் சங்கங்கள் கடுமையாக எதிர்த்து
வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் வேலை நிறுத்தம்
செய்கின்றன…
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஐ.டி.பி.ஐ. வங்கி தவிர மேலும்
இரண்டு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என தற்போது
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில்அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 26 சட்டங்களில் இதற்கான
திருத்தச் சட்டங்களும் அடங்கும்.
இந்தத் திருத்தச் சட்டங்களின் மூலம் Banking Companies
Act 1970, Banking Companies Act 1980,
Banking Regulation Act 1949 ஆகிய மூன்று
சட்டங்களிலும் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது.
1969ல் – 14 பெரிய தனியார் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன.
அதற்கான சட்டம்தான் 1970-ல் கொண்டுவரப்பட்டது. 1980ல்
கொண்டுவரப்பட்ட சட்டத்தின் மூலம் மேலும் ஆறு தனியார்
வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன.
ஆக மொத்தம் 20 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட நிலையில்,
அவற்றில் பல ஒன்றோன்று இணைக்கப்பட்டு, தற்போது
12 வங்கிகளாக இயங்கி வருகின்றன. இதில் இந்திய ஸ்டேட் வங்கி
தவிர்த்த பிற 11 வங்கிகளும் இந்த இரண்டு சட்டங்களுக்குள்
கொண்டு வரப்படுகின்றன….
ஏற்கெனவே, இந்த வங்கிகளில் தனியார் முதலீடு இருக்கவே
செய்கிறது…..ஆனால் –
“தற்போதுள்ள சட்டப்படி இந்த வங்கிகளில் மத்திய அரசின்
முதலீடானது 51 சதவீதமாக இருக்க வேண்டும். சட்டத்தைத்
திருத்தாமல் அதைக் குறைக்க முடியாது.
இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின்
இணைச் செயலாளர் சி.பி. கிருஷ்ணன் – சொல்கிறார்….
” இந்த முதலீட்டு சதவீதத்தை குறைப்பதற்காகத்தான் தற்போது
திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இரண்டு வங்கிகளைப் பற்றித்தான்
தற்போதைக்கு அரசு சொல்கிறது என்றாலும் 11 வங்கிகளையும்
தனியார் மயமாக்குவதற்கான சட்ட அதிகாரத்தைத்தான் இந்தத்
திருத்தத்தின் மூலம் அவர்கள் கையில் எடுக்கப் போகிறார்கள்.
அப்படிச் செய்துவிட்டால் எந்த வங்கியை வேண்டுமானாலும்
எப்போது வேண்டுமானாலும் – தனியார் மயமாக்கலாம்.
LIC (ஆயுள் காப்பீட்டு நிறுவன) விவகாரத்தில் இப்படித்தான்
செய்யப்பட்டது. முதலில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின்
பங்குகளை மட்டும் விற்கப்போவதாகச் சொன்னார்கள். ஆனால்,
சட்டத்திருத்தம் வந்தபோது இந்தியாவில் அரசின் வசமுள்ள
ஐந்து காப்பீட்டு நிறுவனங்களையும் எப்போது வேண்டுமானாலும்
தனியார் மயமாக்கும்வகையில் திருத்தம் கொண்டுவரப்பட்டது”
1947ல் இருந்து 1969 வரை 558 தனியார் வங்கிகள் திவாலாயின.
69-க்குப் பிறகு இப்போதுவரை 38 தனியார் வங்கிகள் திவாலாகி
இருக்கின்றன. 1991-க்குப் பிறகு புதிதாக பத்து வங்கிகள்
திறக்கப்பட்டன.
அதில் குளோபல் டிரஸ்ட் பேங்க், செஞ்சூரியன் வங்கி,
டைம்ஸ் வங்கி, பேங்க் ஆஃப் பஞ்சாப் ஆகிய நான்கு வங்கிகள்
இடையில் காணாமல் போய்விட்டன என்று சுட்டிக்காட்டும்
கிருஷ்ணன், தனியார் வங்கிகளிலும் வராக் கடன்கள்
இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
தவிர, பொதுத் துறை வங்கிகள் செய்யும் அத்தனை சமூகக்
கடமைகளையும் தனியார் வங்கிகளும் செய்கின்றனவா என்றும்
கேள்வி எழுப்புகிறார்.
“பொதுத் துறை வங்கிகள் தாங்கள் அளிக்கும் கடனில்
18 சதவீதத்தை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டுமென சட்டம்
இருக்கிறது. இதன் மூலம்தான் உணவு தன்னிறைவு
எட்டப்பட்டது. சிறு, குறு கடனாளிகளுக்கு கடன் கொடுப்பதில்
பொதுத் துறை வங்கிகள்தான் முன்னணியில் உள்ளன.
தற்போது பொதுத் துறை வங்கிகள் 75 சதவீத வியாபாரத்தைக்கொண்டிருந்தாலும் –
மொத்த வாடிக்கையாளர்களில் 94 சதவீதம் பேர் பொதுத் துறைவங்கிகளைத்தான் சார்ந்திருக்கிறார்கள்.
தற்போது சுமார் 44 கோடி ஜன் – தன் கணக்குகள் கணக்குகள்
உள்ளன. அதில் 43 கோடி கணக்குகள் பொதுத் துறை வங்கிகளால் அளிக்கப்பட்டவை.
வெறும் ஒரு கோடி கணக்குகளை மட்டுமே தனியார் வங்கிகள்
அளித்துள்ளன. பொதுத் துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்டால்,
அதில் உள்ள ஜன் தன் வங்கிக் கணக்குகள் மூடப்படும் அபாயம்
இருக்கிறது” என்கிறார் கிருஷ்ணன்.
மேலும் – சி.பி. கிருஷ்ணன், கடந்த 7 ஆண்டுகால
பா.ஜ.க. ஆட்சியில் மட்டும் இந்த வங்கிகள் 11 லட்சம் கோடி
ரூபாயை நிகர லாபமாக ஈட்டியதாகக் குறிப்பிடுகிறார்.
“ஆனால், அந்த லாபம் அரசுக்குக் கிடைக்கவில்லை….
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெரும் தொகையைக் கடனாகக்
கொடுத்து, அவை தள்ளுபடி செய்யப்பட்டன. அந்த வராக் கடன்கள்
இந்த லாபத்தில் கழிக்கப்பட்டன. ஆகவேதான் நிகர இழப்பு
ஒரு கோடி ரூபாய் என்று கணக்குக் காட்டப்பட்டது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிகளிடம் பெற்ற கடனை
திரும்பச் செலுத்த வலியுறுத்தாமல் வங்கிகளின் லாபத்தை
அதற்கென ஒதுக்கிவைப்பது எவ்விதத்தில் சரி?” என்றும்
கேள்வியழுப்புகிறார் கிருஷ்ணன்.
2008-ல் உலக பொருளாதார நெருக்கடி வந்தபோது, இந்தியாவில்
பெரும்பாலான வங்கிகள் பொதுத் துறையில் இருந்ததால் தான்
பொருளாதாரம் காப்பாற்றப்பட்டது என்பதை அனைவருமே ஒப்புக்கொள்கிறார்கள். 100 நாள் வேலைத் திட்டத்திற்காக மட்டும்
பொதுத் துறை நிறுவனங்களில் 6 கோடிப் பேர் கணக்கு
வைத்திருப்பதையும் கிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார்…
இந்த தலைப்பில் விவாதிக்கும்போது –
பலருக்கும் மறந்துபோன ஒரு உண்மையை இங்கே அவசியம்
நினைவுபடுத்த வேண்டும்… 1969-ல் வங்கிகள் தேசியமயமாக்கப்படும்
முன்னர் சாதாரண மனிதருக்கும், வங்கிகளுக்கும் எந்தவித
சம்பந்தமும் இருந்ததே இல்லை. வங்கிகளுக்குள் சாதாரண
மனிதர் சென்றதே இல்லை; அதற்கான சாத்தியக்கூறுகளும்
சுத்தமாக இல்லை; வங்கிகளின் பயனை – பெரும்
தொழிலதிபர்களும், வர்த்தகர்களும் மட்டுமே அடைந்து வந்தார்கள்.
சாதாரண மக்களுக்கும் – வீட்டுக்கடன், வாகனம் வாங்க கடன்,
அடமான வசதிகள், பெர்சனல் லோன் – எல்லாமே ஏற்பட்டது
வங்கிகள் பொதுத்துறையில் வந்த பிறகு தான்.
இந்த வங்கிகள் மீண்டும் முற்றிலுமாக தனியார் வசம் சென்றால்
என்ன நடக்கும் என்பது எவரும் யூகிக்கக்கூடியவையே…
வங்கிகளை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று – முன்பு,
1960 முதல் 1969 வரை பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இறுதியாக 1969-ல் இந்திரா காந்தி கொண்டு வந்த ஒரு அவசர
சட்டத்தின் மூலம் வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டன….
52 ஆண்டுகளுக்குப் பின், இப்போது மீண்டும் நிலைமை
தலைகீழாகிறது… அரசு வங்கிகளை தனியார் மயமாக்க அரசு
தீவிரமாக முயற்சித்து வருகிறது…. வங்கி ஊழியர்கள் அதனை
கடுமையாக எதிர்த்து போராடி வருகின்றனர்….
இந்த போராட்டம் வங்கி ஊழியர்களால் நடத்தப்பட்டாலும் –
அதன் காரணங்கள் – அவர்களுக்கானது மட்டும் தானா…?
பொதுமக்களுக்கு அதில் எதுவுமில்லையா….?
பொது மக்களுக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசு
என்ன பதில் வைத்திருக்கிறது…? தனியார் வங்கிகளால்
கையாளப்படும் பொது மக்களின் பணத்துக்கு அரசு எத்தகைய
உத்திரவாதத்தை தரப்போகிறது….?
பொதுவாக மக்கள் மனதில் எழும் ஒரு கேள்வி –
பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்க
அரசு இவ்வளவு ஆர்வம் காட்டுவது ஏன்…? அரசின் நண்பர்களுக்கு –
வங்கித்துறையிலும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு
ஏற்படுத்திக்கொடுக்கவா….?
அரசுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், இந்த சட்டங்கள்
நிச்சயமாக நிறைவேறி விடும்… அமலுக்கும் வந்து விடும்…
ஆனால் – இந்த சட்டங்களின் பின்னால் இருக்கும்
அரசின் உண்மையான நோக்கம் என்னவாக இருந்தது என்பதை
எதிர்காலம் வெட்டவெளிச்சமாக்கும்…. அனைவருக்கும் உணர்த்தும்….!!!
ஆனால் – that will be too late to rectify…!!!
.
…………………………………………………………………………………………………………..….
ஒரு காலத்தில் அரசு வங்கிகள் தேவையாக இருந்தது. அது அரசியல் காரணங்களுக்காம மிகவும் உபயோகப்படுத்தப்பட்டது. வங்கி ஊழியர்களும் கவலையில்லாமல் சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்தார்கள்.
யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். தனியார் வங்கிகள் நன்கு செயல்படும். ஊழியர்கள் நன்றாக வேலைபார்ப்பார்கள். அரசு வங்கி ஊழியர்களுக்கும் வேலை செய்வதற்கும் சம்பந்தம் இல்லை. ஏன்..மிகச் சமீபத்தில் ஒரு அரசு வங்கியில் அக்கவுண்ட் ஆரம்பிக்க பல்வேறு தடைகளைத் தாண்டி லீவு போட்டு முயன்றபோது சர்வர் வேலை செய்யலை, அது சரியில்லை இது சரியில்லை இரண்டு வாரம் கழித்து வாங்க என்று அலைக்கழித்தனர். உடனே என் மகன் தனியார் வங்கிக்கு ஆன்லைனில் அப்ளை செய்து இரண்டு நாளில் பாஸ்புக் வந்துவிட்டது.
//அதன் காரணங்கள் – அவர்களுக்கானது மட்டும் தானா…?// – ஹா ஹா ஹா .. இந்த வங்கி ஊழியர்கள், பொதுமக்களுக்காக எவ்வளவு உழைக்கிறார்கள் என்று அதன் வாடிக்கையாளர்களுக்குத்தானே தெரியும். இதுல இவங்களுக்கு பொதுமக்கள் மீது அக்கறையாம்.
உங்களுக்கே தெரியும் அரசுப்பள்ளிகள், அதன் ஆசிரியர்கள் செயல்படும் விதம், தனியார் பள்ளி கல்லூரிகள் செயல்படும்விதம். அரசு பேருந்து, தனியார் பேருந்துகள் செயல்படும் விதம்… என்று எதை எடுத்தாலும் அரசு என்றாலே ஊழல், வேலை செய்யாமல் இருப்பது, சம்பளம் கிம்பளம் பென்ஷன் வாங்கித் திளைப்பது என்றே இருக்கிறது.
இதில் உள்நோக்கமெல்லாம் பார்க்க ஆரம்பித்தால் அதற்கு முடிவே கிடையாது. என்னைக்கேட்டால் ஒரு வங்கி, மிக மிகக் குறைந்த ஊழியர்கள் என்று அரசு வைத்துக்கொண்டு மற்ற எல்லாவற்றையும் தனியார் மயமாக்கிவிட வேண்டும்.
//தனியார் வங்கிகளால் கையாளப்படும் பொது மக்களின் பணத்துக்கு அரசு எத்தகைய உத்திரவாதத்தை தரப்போகிறது….?// – அரசு வங்கிகளில் நீங்கள் கோடி ரூபாய் FD போட்டிருந்தாலும் வங்கி திவால் என அறிவிக்கப்பட்டால், 2 லட்ச ரூபாய்தான் கிடைக்கும். அது பாஜக அரசால் சமீபத்தில் 5 லட்சம் என்று உயர்த்தப்பட்டிருக்கிறது. ஏன் தனியார் மருத்துவமனைகள் வேண்டும், எல்லாமே அரசு மருத்துவமனைகளாக இருந்து, அங்கயும் சம்பளம் பென்ஷன், 6 மணிக்கு மேல் தன்னுடைய கிளினிக் என்று இருக்கட்டும் எனச் சொல்லவேண்டியதுதானே
how many nationalized banks gone bankrupt? here the question is not about
the work culture. It is not easy to open a SB account in good private
banks such as ICICI MAB required is really high nearly 5K and penalties are heavy.
புதியவன்,
உங்கள் பின்னூட்டத்தின் மீது யாராவது
மேல் கேள்விகள், விளக்கங்கள் கேட்டால்
பதிலே வராது. உங்கள் பின்னூட்டத்திற்கு
விளக்கம் சொல்ல உங்களாலேயே முடியாது…
காணாமல் போய் விடுவீர்கள்….
இது தான் உங்கள் வழக்கம் என்பதை
தொடர்ந்து பார்த்து வருகிறேன்…
இதுவரை நான் கேட்ட பல கேள்விகளுக்கு
பதில் சொல்வதை தவிர்த்திருக்கிறீர்கள் ….
கடைசியாக – ஈஷாவில் நான் எழுப்பிய
கேள்விகள்…..?
இருந்தாலும் பரவாயில்லை; என் கடமையை
நான் செய்கிறேன்….
——————————
இடுகையை முழுவதுமாக படித்து விட்டுத்தான்
பின்னூட்டம் எழுதி இருப்பீர்கள்… அந்த
இடுகையிலிருந்தே சில கேள்விகள் –
// தவிர, பொதுத் துறை வங்கிகள் செய்யும்
அத்தனை சமூகக்கடமைகளையும் தனியார்
வங்கிகளும் செய்கின்றனவா….?
// “பொதுத் துறை வங்கிகள் தாங்கள் அளிக்கும்
கடனில் 18 சதவீதத்தை விவசாயிகளுக்கு அளிக்க
வேண்டுமென சட்டம் இருக்கிறது. இதன் மூலம்தான்
உணவு தன்னிறைவு எட்டப்பட்டது. சிறு, குறு
கடனாளிகளுக்கு கடன் கொடுப்பதில்
பொதுத் துறை வங்கிகள்தான் முன்னணியில் உள்ளன.
// தற்போது பொதுத் துறை வங்கிகள் 75 சதவீத வியாபாரத்தைக்கொண்டிருந்தாலும் –
மொத்த வாடிக்கையாளர்களில் 94 சதவீதம் பேர்
பொதுத் துறைவங்கிகளைத்தான் சார்ந்திருக்கிறார்கள்.//
ஏன் … ??????????????????????????
// தற்போது சுமார் 44 கோடி ஜன் – தன்
கணக்குகள் கணக்குகள் உள்ளன. அதில் 43 கோடி
கணக்குகள் பொதுத் துறை வங்கிகளால்
அளிக்கப்பட்டவை.
வெறும் ஒரு கோடி கணக்குகளை மட்டுமே
தனியார் வங்கிகள் அளித்துள்ளன. //
ஏன் … ?????????????????????????????
// 2008-ல் உலக பொருளாதார நெருக்கடி
வந்தபோது, இந்தியாவில் பெரும்பாலான வங்கிகள்
பொதுத் துறையில் இருந்ததால் தான்
பொருளாதாரம் காப்பாற்றப்பட்டது என்பதை
அனைவருமே ஒப்புக்கொள்கிறார்கள்.//
நீங்கள்…..???????????????????????????
// பொதுவாக மக்கள் மனதில் எழும் ஒரு கேள்வி –
பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு
விற்க அரசு இவ்வளவு ஆர்வம் காட்டுவது ஏன்…? //
// அரசின் நண்பர்களுக்கு – வங்கித்துறையிலும்
ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கவா….?//
சுதந்திரம் பெற்ற பிறகு கடந்த 70 ஆண்டுகளில்
இந்த நாடு முந்தைய அரசாங்கங்களால்
(வாஜ்பாய் அரசு உட்பட…!!! )
சேர்த்து வைக்கப்பட்ட சொத்துகள், நிறுவனங்கள் –
அனைத்தையும் வேண்டப்பட்ட ஒரு சில
தனிப்பட்ட தொழிலதிபர்களுக்கு
விற்றுத் தீர்ப்பது ஒரு உயர்ந்த செயலா …?
பாராட்டப்பட வேண்டிய கொள்கையா…?
மத்தியில் ஆளும் கட்சியின் செயல்பாடுகளை
விமரிசித்தால், உடனே துள்ளி குதித்துக்கொண்டு
ஓடி வந்து மறுக்கும் உங்களுக்கு, உங்களை
மறு கேள்வி கேட்டால், அவற்றிற்கு பதில் சொல்லும்
நேர்மையும் இருக்க வேண்டும்….
இல்லையேல் – சென்ற இடுகையில் ஒரு நண்பர்
(Manivannan Kamaraj) சொன்னது போல்,
மற்ற வாசக நண்பர்களிடமிருந்து –
“ஜால்ரா” என்ற சொல் வருவது தவிர்க்க முடியாதது….
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
முந்தைய மறுமொழியின் தொடர்ச்சி –
பண மதிப்பிழப்பு (Demonetisation) சமயத்தில் பல வங்கிகளில்
மிகப்பெரிய அளவில் ஊழல்கள் நடந்ததாக செய்திகள்
வெளியாயினவே…. அவற்றின் மீது என்ன நடவடிக்கை
எடுக்கப்பட்டது….?
இது வரை, ஒரு வங்கி மேலாளர் –
எதாவது ஒரே ஒரு வங்கி மேலாளர் – மீதாவது
கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டதா…?
முறைகேடுகளில் ஈடுபட்ட எத்தனை பேரை அரசு இதுவரை
தண்டித்திருக்கிறது….?
அனாமத்து ஜன்-தன் கணக்குகளில் எல்லாம்
லட்சக்கணக்கான ரூபாய்கள் டெபாசிட் செய்யப்பட்டனவே…
அவை குறித்த வழக்குகள்
எல்லாம் எங்கே போயின ….?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கா.மை. சார்… பலவற்றை விவரித்து இங்கு விவாதிக்க முடியாது. என் கருத்து என்ன என்பதைத்தான் எழுதுகிறேன். அதில் நிச்சயம் நியாயமும் சொந்த அனுபவமும் உண்டு.
அதனால யாரையாவது ஆதரித்து எழுதணும் என்றெல்லாம் எனக்கு எந்தவித நிர்பந்தங்களும் கிடையாது.
அது சரி… அம்பானி, டாட்டா போன்ற பலர் அரசாங்க சலுகைகளைப் பெற்றபோது, இது மாதிரி ஏன் கேள்விகள் வரவில்லை? ஏன் உள்நோக்கம் கற்பிக்கப்படவில்லை? ஏன் கேடி பிரதர்ஸும் டெண்டர்களுக்கு போட்டி போடவில்லையா? (அவ்வளவு பணம் அவங்களுக்கு எப்படி வந்தது என்ற கேள்வியே எழவில்லையே). ஜெகத்ரட்சகன், இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீநிவாசன், திமுக பிரமுகர்கள் அனேகமாக பலர்… என்ன எப்படி சம்பாதித்தார்கள்?
இன்னொன்று.. வழக்கு என்பது ஒரு பெரிய பாதை. அதில் நுழைந்தால் இந்திய ஜனநாயகத்தில் தீர்வுகள் கிடைப்பதில்லை. அதனால் அரசு முழுமையாக அதின் தன் எனெர்ஜியைச் செலவழிக்கவில்லை என்று தோன்றுகிறது. சாதாரணர்களான நமக்கு ஓசி டிக்கெட் எப்படி லட்சம் கோடி சொத்துக்கள் சேர்த்தார்கள், சாதாரண ராசா எப்படி பல்லாயிரம் கோடிக்கு அதிபதியானார்கள் (இதுக்கெல்லாம் முடிவேயில்லை). கண் முன்னால், அதிகாரியின் ஆசையை (வேலுசாமி?) உபயோகித்து பிஎஸென்னில் திருடிய அமைச்சர்… இவங்கள்லாம் தப்பிவிடுகிறார்கள். லட்சக்கணக்கான கோடிகளை கடனாகக் கொடுத்த அதிகாரிகளுக்கு பங்கில்லையா?
என்னைக்கேட்டால், பேசாமல் வட கொரிய நீதி விசாரணைக்கு நம் இந்திய ஊழல் வழக்குகள் அனைத்தையும் கொடுத்துவிடலாம். ஒரே நாளில் தீர்ப்பு வந்துவிடும். அரசின்மீதும் நமக்கு அதிருப்தி இருக்காது.
திரும்பவும் திசை திருப்பல்….
நான் எழுப்பிய எந்த கேள்விக்கும் விளக்கம் இல்லை.
நீங்கள் எழுதும் பின்னூட்டங்களின்
அடிப்படையில், எதாவது கேள்விகள் எழுப்பப்பட்டால் –
அதற்கான விளக்கம் கூறுவது உங்கள் பொறுப்பு என்பதை
நீங்கள் அறியாதவர் இல்லை; மீண்டும் மீண்டும் அதில்
வழுக்குவதிலேயே குறியாக இருக்கிறீர்கள்.
உங்கள் பின்னூட்டங்கள் குறித்து கேள்வி கேட்டால்,
இனியாவது பதில் சொல்கிறேன் என்று commit செய்து கொள்ளுங்கள்.
இந்த மாதிரி விவாதங்களை தொடர்வதில் எனக்கு விருப்பமில்லை;
நான் முடித்துக் கொள்கிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
இந்த குழப்பம் எல்லாம் லாபம் இல்லையேல் தொழில் நடத்தக்கூடாது என்ற அடிப்படை கொள்கையின் படி நடக்க முயற்சிப்பதால். தனியார் என்றால் இது சரி. அரசு துறை என்றால் சமூக கடமை 51 சதவிகிதம் என்றால் லாப நோக்கம் 49 சதவிகிதம் என்று இருக்கவேண்டும்.
அரசு நடத்தவேண்டும். லாபம் மட்டுமே குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றால் இது போன்ற பிரச்சனைகள் வரத்தான் செய்யும். தனியார் மயமாக்கப் படுவதால் கொஞ்சம் கொஞ்சமாக வங்கிகளில் ஊழியர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். எந்த தொழிலிலும் அதிக செலவு ஊழியர்களுக்கு செய்யப்படும் செலவுதான். கிட்ட தட்ட 9 லட்சம் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இருப்பதாக கூகிள் சொல்கிறது. எல்லாம் தனியார் மயமாகிவிட்டால் இது குறைந்து 4 லட்சம் ஆகிவிடும். லாபமில்லாத கிராம வங்கிகள் மூடப்படும். அதிக லாபமில்லாத நகைக்கடன், விவசாயிகளுக்கு குறைந்த வட்டி என்பதெல்லாம் குறைந்துவிடும்
இத்தனை பிரச்சனைகள் இருக்கும்போது, ஊழியர்கள் வேலை செய்வதில்லை, சேவை சரியில்லை என்பதற்காக தனியார் மயமாக்குவது எலிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது போன்றது!
//பண மதிப்பிழப்பு (Demonetisation) சமயத்தில் பல வங்கிகளில்
மிகப்பெரிய அளவில் ஊழல்கள் நடந்ததாக செய்திகள்
வெளியாயினவே…. அவற்றின் மீது என்ன நடவடிக்கை
எடுக்கப்பட்டது….?
//
பணமதிப்பிழப்பு என்பது ஒரு நல்ல திட்டம் ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதற்கு எந்தவித முன்னெடுப்பும் இல்லாமல் தான்தோன்றித்தனமாக தொலைக்காட்சியில் தோன்றி அதனை அறிவித்துவிட்டு அதை தோல்வி திட்டம் ஆக்கி கொடுத்த பாரத பிரதமர் மாண்புமிகு மோடி அவர்கள் அதைக் கொண்டு வந்ததே கருப்பு பணங்களை வெள்ளை பணமாக மாற்றுவதற்கு என்கின்ற சந்தேகம் இப்போது எழுகிறது.
இதில் வங்கி ஊழியர்கள் மீது வேறு நபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்.