
இன்றைய தினம், சில பழைய நாட்களை நினைவிற்கு கொண்டு வருகிறது….
1965-ல் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போரின்போது
நான் ஜபல்பூரில் ராணுவத் தொழிற்சாலையில் பணியாற்றி
வந்தேன்… அந்தப் போர் இரண்டு நாடுகளுக்கும் வெற்றி-தோல்வி
இன்றி சமரசத்தில் முடிந்தது.
1971-ல் நடந்த போரில் – இந்தியா அற்புதமான வெற்றியை
பெற்று, கிழக்கு பாகிஸ்தான் தனியே பிரிந்து “பங்களா தேஷ்”
என்கிற புதிய நாடாக உருவாக வழி செய்து, பாகிஸ்தான்
ராணுவத்தினர் சுமார் 93,000 பேரை போர்க்கைதிகளாக இந்தியாவுக்கு
கொண்டு வந்து, மத்திய பிரதேசத்தில் முகாமில் வைத்தது.
அதன் பிறகு இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி- மற்றும்
அன்றைய பாகிஸ்தான் ஜனாதிபதி ஜுல்ஃபிகார் அலி புட்டோ ஆகியோரிடையே
நடந்த பேச்சு வார்த்தைகளின் முடிவாக, சிம்லா உடன்படிக்கை
கையெழுத்திடப்பட்டு,
அந்த 93,000 பாகிஸ்தான் ராணுவக்கைதிகளும் விடுதலை
செய்யப்பட்டு பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கிழக்கு பாகிஸ்தான் தனியே பிரிவதற்கான சூழ்நிலை
எப்படி உருவானது…. ?
சுதந்திரத்தின்போது, பிரிவினைக்கு பின், இன்றைய பாகிஸ்தான்
மேற்கு பாகிஸ்தான் என்றும், இன்று தனி நாடாக உள்ள
வங்கதேசம் கிழக்கு பாகிஸ்தான் என்றும் அழைக்கப்பட்டன.
பாகிஸ்தானில், வங்காள மொழி பேசிய மக்கள் மிக மோசமாக
நடத்தப்பட்டதோடு, தேர்தல் முடிவுகளிலும் குளறுபடி
செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால்
ஆத்திரமடைந்த கிழக்கு பாகிஸ்தான் மக்கள், மேற்கு
பாகிஸ்தானுக்கு எதிராக விடுதலைப் போரை
தொடங்கினார்கள்.
மார்ச் 26, 1971 அன்று, கிழக்கு பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாகபாகிஸ்தானிடமிருந்து பிரிய வேண்டுமென்ற கோரிக்கையை அறிவித்தது.
அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி, கிழக்கு பாகிஸ்தான்
மக்களுடைய விடுதலைப் போருக்கு முழு ஆதரவு கொடுத்தார்.
ஏப்ரல் மாதத்தில், அவர் அப்போதைய இந்திய ராணுவத் தளபதி
சாம் மானெக்க்ஷாவிடம் பாகிஸ்தானோடு போருக்குச் செல்ல நாம்
ரெடி’யாக இருக்கிறோமா என்று கேட்டார்.
இந்தப்போரில், தமிழர்கள் அடங்கிய மெட்ராஸ் ரெஜிமெண்ட்
பிரிவு மிக முக்கிய பணி ஆற்றியது… அப்போதைய
கிழக்கு பாகிஸ்தானுக்குள் இந்திய தரைப்படை மெட்ராஸ்
ரெஜிமெண்ட் நுழைந்து தீவிர தரைவழி தாக்குதல்களில்
ஈடுபட்டது… இந்திய ராணுவத்தோடு, வங்க தேச விடுதலை
வீரர்களும் சேர்ந்து கொண்டு பாகிஸ்தான் ராணுவத்தை
எதிர்த்து தாக்குதல்கள் நடத்தினார்கள்.
இந்நிலையில், 1971-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியன்று, ஆபரேஷன்
செங்கிஸ் கான் என்ற பெயரில் பாகிஸ்தான் படைகள் இந்தியாவின்
11 விமானப் படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தின.
இந்திய நாட்டு மக்களிடம் வானொலி வாயிலாகப் பேசிய
பிரதமர் இந்திரா காந்தி, பாகிஸ்தானின் இந்தத் தாக்குதல்
போருக்கான ஓர் அறிவிப்புக்குச் சமம்….
அதற்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்துள்ளது என்று
கூறினார். மேலும், முழு வீச்சில் போரைத் தொடங்குமாறும்
உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் போர்
தொடங்கியது.
ராணுவம், கடற்படை, விமானப்படை அனைத்தையும் களமிறக்கி,
தரைவழித் தாக்குதல், வான் வழித் தாக்குதல், கடல்வழித் தாக்குதல்
என்று மும்முனைத் தாக்குதலை பாகிஸ்தான் மீது இந்தியா
மேற்கொண்டது.
மேற்கே இந்தியாவிற்குள் பாகிஸ்தான் படைகள் நுழைந்து
விடாமல் தடுப்பதும் கிழக்கே டாக்காவை கைப்பற்றுவதும் இந்திய
படைகளின் குறிக்கோளாக இருந்தது.
பாகிஸ்தானின் கடற்படை இந்திய கடற்படையை ஆழ்கடல் போரில்
எதிர்க்கும் அளவுக்கு மட்டுமின்றி, தற்காப்புப் போர் புரியும்
அளவுக்குக்கூட வலிமையான நிலையில் அப்போது இல்லை.
டிரைடென்ட், பைத்தான் என்ற குறியீட்டுப் பெயர்களின் கீழ்,
இந்திய கடற்படை கராச்சி துறைமுகத்தை டிசம்பர் 4, 5 மற்றும்
8,9 ஆகிய தேதிகளில் தாக்கியது. அதற்கு பதிலடி கொடுக்கும்
விதமாக, டிசம்பர் 9-ம் தேதியன்று பாகிஸ்தானுடைய ஹேங்கோர்
நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில், இந்தியாவுக்குச் சொந்தமானஐ.என்.எஸ் குக்ரி என்ற போர்க் கப்பல் மூழ்கியது.
டிசம்பர் 3-ம் தேதியன்று பாகிஸ்தான் விமானப்படை நடத்திய
தாக்குதலுக்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தபிறகு,
பாகிஸ்தான் விமானப்படை தற்காப்புத் தாக்குதலில் ஈடுபடத்
தொடங்கியது.
மேற்கு பாகிஸ்தானில், டிசம்பர் 8-ம் தேதியன்று இந்தியா
வெற்றிகரமான வான்வழித் தாக்குதலை, விமானப்படை தளம்
ஒன்றை இலக்கு வைத்து நடத்தியது. இந்தப் போரில் நடைபெற்ற
வான்வழித் தாக்குதல்களில், பாகிஸ்தான் விமானப் படை சுமார்
60 சதவீத விமானங்களை இழக்க நேர்ந்தது.
தரைவழித் தாக்குதலில் பாகிஸ்தான் படைகளில் 8,000 பேர்
கொல்லப்பட்டனர். 25,000 பேர் காயமடைந்தனர். இந்தியப் படைகளில்
3,000 பேர் கொல்லப்பட்டனர். 12,000 பேர் காயமடைந்தனர்.
ஆயுதம் தாங்கிய வாகனங்களின் இழப்பும் பாகிஸ்தான் தரப்பிலேயே
அதிகமாக இருந்தது.
13 நாட்களுக்கு நடந்த இந்தப் போரில், டிசம்பர் 15-ம் தேதியன்று
இந்தப் போர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியது. அடுத்த நாளான
டிசம்பர் 16-ம் தேதியில், பாகிஸ்தான் ராணுவ ஜெனரல்
அமீர் அப்துல்லா கான் நியாஸி (Amir Abdulla Khan Niazi),
இந்திய ராணுவத்திடம் 93,000 படைவீரர்களோடு சரணடைந்தார்.

இந்தப் போருக்குப் பிறகு கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசமாகவும்
மேற்கு பாகிஸ்தான் இன்றைய பாகிஸ்தானாகவும் பிரிந்தன.
லடாக் யூனியன் பிரதேசத்தில் வடக்குப் பகுதியில் வெகு தூரத்தில் –
டுர்டுக், டியாக்சி, சாலுன்கா, தாங் – ஆகிய நான்கு கிராமங்கள்
உள்ளன. போரின்போது இந்திய ஆளுகையின்கீழ் இவை வந்தன.
இந்தியாவின் வடக்கில் லடாக்கின் எல்லையில் இந்த குக்கிராமங்கள்,
ஷியோக் நதியை ஒட்டி, காரகோரம் மலைச்சிகர பாதுகாப்புப்
பிரிவினரின் காவலுக்கு உட்பட்ட பகுதிகளாக இருந்தன.
லடாக் பகுதி புத்த மதத்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதி.
இந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் பால்ட்டி மொழி பேசும்முஸ்லிம்களாக இருந்தனர்.
1971 வரையில், இந்த நான்கு கிராமங்களும் பாகிஸ்தானின்
பகுதிகளாக இருந்தன. ஆனால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும்
இடையில் போர் ஏற்பட்டதை அடுத்து அவற்றின் அடையாளம்
மாறியது.
2010 வரையில் சுற்றுலாப் பயணிகள் இங்கு செல்ல
அனுமதிக்கப்படவில்லை. 2010ல் டுர்டுக் கிராமத்துக்கு சுற்றுலாப்
பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்தக் கிராமங்களிலிருந்து
சுமார் 250 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் போரின்போது
பிரிந்து போனதாக கிராமத்தினர் சொல்கிறார்கள்.
டிசம்பர் 16, 1971 அன்று பாகிஸ்தான் படைகள் இந்திய
ராணுவத்திடம் சரணடைந்த நாளில், கிழக்கு பாகிஸ்தானிலிருந்து
வங்கதேசம் என்ற தனி நாடு பிறந்தது. அன்றிலிருந்து வங்கதேசம்
சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டு, ஷேக் முஜிபுர் ரஹ்மான்
தலைமையிலான புது அரசாங்கத்தை இந்தியா அங்கீகரித்தது.
அதிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் வங்கதேசம், டிசம்பர் 16-ம்
தேதியை சுதந்திர தினமாகக் கொண்டாடுகிறது. இந்தியா-பாகிஸ்தான்
போரில் உயிரிழந்த வீரர்களைப் போற்றும் வகையில் அந்த நாள்,
“விஜய் திவஸ்” என்ற பெயரில் இந்தியாவில் ‘வெற்றி தின’மாக அனுசரிக்கப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் வெற்றி தினமான டிசம்பர் 16 அன்று, இந்த
விடுதலைப் போரில் பங்கேற்றவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
இன்று காலை, சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அவர்களும், டெல்லியில் பிரதமர் மோடிஜி அவர்களும் இந்த
அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்….
( இங்கே அதிகாரபூர்வமான வரலாற்றை மட்டும் தான் சொல்லி இருக்கிறேன்.
இந்த போர் சம்பந்தமான சுவாரஸ்யமான அதிகாரபூர்வமற்ற கதைகள் நிறைய இருக்கின்றன…மெட்ராஸ் ரெஜிமெண்டைச் சேர்ந்த தமிழ் வீரர்கள் நிறைய பேர் லுங்கி கட்டிக்கொண்டு, கிழக்கு பாகிஸ்தானுக்குள் நுழைந்து – வங்க விடுதலைப்படையான “முக்தி பாஹினி”யுடன் இணைந்து பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து போரிட்டார்கள்… அவர்களில் சிலரை, பிற்காலத்தில் நான் படைக்கல தொழிற்சாலையில் பணிபுரிந்த சமயத்தில் நண்பர்களாகப்பெற்று, நிறைய கதைத்திருக்கிறோம்… பின்னர் வேறோரு சமயத்தில் அவற்றைப் பற்றி எழுதுகிறேன்….)
.
…………………………………………………………………………………………………………………………..…
During the war, City turned off lights for a brief periods of time around 10:00 at night with siren blaring. This was a rehearsal . There is a Central Government research station in the area. Probably anticipating enemy war planes. There was talk of Seventh Fleet arriving close to Bay of Bengal area close to Visakapattinam. Thankfully the war of over soon. Nixon had some choice words for Mrs.Gandhi.
Peace,
எனக்கும் அத்தகைய அனுபவங்கள் உண்டு.
நான் பணிபுரிந்து வந்தது ராணுவ சாதனங்களின் உற்பத்தி இடம்
என்பதால், உச்சபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
அமலில் இருந்தன….(பாகிஸ்தான் விமான ஓடுதளங்களின் மீது
இந்திய போர் விமானங்களால் வீசப்பட்ட 1000 பவுண்டு குண்டுகள்
அப்போது நான் பணிபுரிந்து வந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது
தான்….
தொழிற்சாலைக்குள் பதுங்குகுழிகள் வெட்டப்பட்டன.
கண்ணாடி ஜன்னல்கள் கருப்பு காகிதங்களால் மறைக்கப்பட்டன.
லைட் போடுவதில் கட்டுப்பாடுகள் இருந்தன.
அடிக்கடி ஏஆர்பி ( Air Raid Precaution ) சைரன்கள் எழுப்பப்பட்டன.
சங்கு ஓசை கிளம்பினால், அனைவரும் பணியிடத்தைவிட்டு
ஓடிப்போய் பதுங்கு குழிகளில் அமர வேண்டும்….
இங்கேயே இப்படி என்றால், போர் முனைகள் எவ்வளவு
பரபரப்பாக இருந்திருக்கும்…. அங்கே உள்ள ராணுவ வீரர்கள்
எந்த மனோ நிலையில் இருந்திருப்பார்கள்…. ராணுவத்தின் அவசியம்
முன்னெப்போதையும் விட, அப்போது தான் அதிகம் உணரப்பட்டது.
ஜெய் ஜவான் என்கிற வார்த்தையும் இந்தியா-பாகிஸ்தான் போரின்போது
தான் ஏற்பட்டது.
பதட்டம் இருந்தாலும், அனைவரும் உற்சாகத்தோடு இருந்தோம்.
அரசிடமிருந்து எத்தகைய அழைப்பு வந்தாலும் ஆரவாரத்தோடு
ஏற்கும் மன நிலையில் இருந்தோம்.
அதெல்லாம் ஒரு காலம்…. ஒரு அனுபவம்…!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Thanks for the post. Interesting and scary times!
https://swarajyamag.com/amp/story/world%2Fdecember-1971-when-the-us-sent-its-naval-ships-into-bay-of-bengal-and-ussr-responded