சுஜாதா’வின் இரண்டு நிமிட சஸ்பென்ஸ் – ” பின் தொடர்ந்த கார் “….!!!

புத்தர், யேசு பிறந்த நாள் என்றால் மனித சரித்திரம் மாறியது…
கொண்டாடலாம்.

என் போன்றவர்கள் பிறந்த நாள்
கொண்டாடுவதில் ஏதும் பிரயோஜனம் இல்லை. எனவே, பிறந்த நாள்
ஞாபகம் இருந்தால் கோயிலுக்கு போவேன்.
பெருமாள் பெயரில் ஓர் அர்ச்சனை பண்ணுவாள் என் மனைவி.
அவ்வளவுதான்.

இந்த அளவுக்கு மேல் எந்த ஊரிலும் எந்த வயதிலும்கொண்டாடியதில்லை. காரணம், ஒரு வருஷம் சாகாமல் தொடர்ந்து
வாழ்ந்தது, இந்த நவீன மருத்துவ யுகத்தில் அவ்வளவு பெரிய
சாதனையாக எனக்குப் படவில்லை. வியாதிகளை மனசுக்குள் வைத்திராமல்வெளிப்படையாக சொல்லிவிட்டால் பரிகாரங்கள்
அலோபதியில் ஏராளமாக உள்ளன.

ஆதிமனிதனாக இருந்தாலோ, காட்டு மிருகங்கள் தின்னாமல்,
அண்டை மனிதருடன் சண்டையில் மண்டை உடையாமல் –
ஒரு வருஷம் உயிர் வாழ்ந்ததைப் பெரிய சாதனையாகச்
சொல்லலாம். நாம் என்ன செய்தோம்..?

ஆபிஸ் போனோம், சினிமா பார்த்தோம், எழுனோம், படித்தோம்,
முதுகு சொரிந்து கொண்டோம், பேசினோம், பழகினோம், பிளாட்பாரம் ஓரமாகஜாக்கிரதையாக நடந்தோம்.
அவ்வளவு தானே…
இது என்ன பெரிய சாதனை. இதை என்னவோ, உலகை
அசைக்கும் தினமாக கொண்டாடுவது அபத்தமாகப் படுகிறது.
பிறந்த நாள் என்பது மற்றொரு நாள்.

‘உண்டதே உண்டு, உடுத்ததே உடுத்து, அடுத்தடுத்து
உரைத்ததே உரைத்து, கண்டதே கண்டு கழிந்தன கடவுள் நாட்கள்…’

பெங்களூரில் ஒரே ஒரு பிறந்த நாள் மட்டும் எனக்குத் தெளிவாக
ஞாபகம் இருக்கிறது.

கமர்ஷியல் ஸ்ட்ரீட்டில் காரைப் பார்க் செய்து,
கொஞ்ச தூரம் நடந்து நான், மனைவி,மகன்கள் நால்வரும் ஒரு
உட்லண்ட்ஸ் ஓட்டலில் அடை நன்றாக இருக்கும்…
சாப்பிட்டுவிட்டு அவர்களை வாசலிலேயே நிற்க வைத்துவிட்டு
காரைக் கொண்டுவர மெள்ள நான் மட்டும் அதை நிறுத்தியிருந்த
இடத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தேன்.

எனக்குப் பின்னால் ஒரு கார் என்னையே மந்த கதியில்
தொடர்ந்தது. நான் நின்றால்,அது நின்றது. நடந்தால், அது

கல்யாண ஊர்வலம் போலத் தொடர்ந்தது.
எனக்குப் புரியவில்லை. ஏதாவது தப்பு செய்து விட்டேனா.?
என்ன குற்றம் செய்தேன்.?ஒரு அடை மட்டும் தானே
சாப்பிட்டேன். மஃப்டியில் இருக்கும் போலிஸ்காரா என்று
என்னென்னவோ யோசித்தேன்.

மீண்டும் வேகமாக நடந்து பார்த்தேன். வேகமாகத் தொடர்ந்தது.
‘என்ன இது,பெங்களூர் எப்போது ஹாலிவுட் டாகியது’
என்று வியப்புடன் நான் நின்றேன். அந்தக் காரும் நின்றது.
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அணுகி,”எக்ஸ்க்யூஸ் மீ”
என்று அதன் கறுப்பேறிய ஜன்னலை மணிக்கட்டால் தட்டினேன். கண்ணாடிஇறங்கியது. கறுப்பு கண்ணாடி அணிந்து,
கறுப்புச் சட்டை போட்டிருந்தார்.

“எதற்கு இவ்வளவு பெரிய காரை வைத்துக் கொண்டு
நடைபயிலும் என்னைத் தொடர்கிறீர்கள்” என்று கேட்டு விட்டேன்.

அவர் தன் பைக்குள் கைவிட்டு ……ஒரு துப்பாக்கியை எடுப்பார்
என்று எதிர் பார்த்தேன். ……………சிகரெட் எடுத்து பற்ற வைத்துக்
கொண்டார். “நீங்கள் உங்கள் காரை எடுத்ததும் உடனே அங்கே
பார்க் செய்யத்தான்!” என்று பதில் வந்தது.

( பெங்களூரில், குறிப்பாக கமர்ஷியல் ஸ்ட்ரீட்டில்,
பார்க்கிங் கிடைப்பது அவ்வளவு கஷ்டம்….!!!! )

.
………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

1 Response to சுஜாதா’வின் இரண்டு நிமிட சஸ்பென்ஸ் – ” பின் தொடர்ந்த கார் “….!!!

  1. கந்தவேல் சொல்கிறார்:

    எழுத்தினூடே, நக்கல் , நையாண்டியை கையாள்வதில் , சுஜாதா அவர்களுக்கு நிகர் இல்லை. அற்புதமான பகிர்வு ..
    நன்றி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.