சமயபுரம் மாரியம்மன் கோவில் பற்றி ஒரு முழுமையான கட்டுரை ….

சமயபுரம் மாரியம்மன் கோவில் வரலாறு பற்றிய ஒரு
முழுமையான கட்டுரையைப் பார்த்தேன்….
( நன்றி -கவிஞர் நந்தலாலா, மற்றும் என்.ஜி.மணிகண்டன் )

எங்கள் ஊர் கோவில் என்பதால், இதனைப்பற்றிய முழுமையான தகவல்கள் அனைவரையும் சென்றடைய வேண்டுமென்கிற ஆர்வத்தில் கீழே
பதிப்பிக்கிறேன்…

……………………….

திருச்சி – சமயபுரம் மாரியம்மன் கோவில் ….

தமிழ்நாட்டு மாரியம்மன் கோயில்களில் தலைமைக் கோயிலாக
சமயபுரம் சொல்லப்படுகிறது. இங்கு திருவிழா தொடங்கிய
பின்னால்தான் மற்ற மாரியம்மன் கோயில்களில் திருவிழா
தொடங்குவது ஐதிகமாம்.

மஞ்சள் உடையும் மனசெல்லாம் பக்தியுமாக எளிய மக்கள்
கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். திருச்சியின் எல்லா
திசைகளிலிருந்தும் வெறுங்காலில் நடந்தே வருகிறார்கள்.
வேண்டியது வேண்டியபடி கிடைக்க வருகிறார்கள். நேர்த்திக் கடன் தீர்க்கவருகிறார்கள். லட்சம் பிள்ளைகளை அரவணைக்க
ஒரு தாய் இருக்கிறாள் என்கிற நம்பிக்கையில் வருகிறார்கள்.
வட்டாரத் தமிழால் காற்றையும் சொக்கவைத்து,

“சமயபுரத்தாளே சாம்பிராணி வாசகியே
கண்ணபுரத்தாளே காரண சௌந்தரியே
ஆயிரம் கண்ணுடைய அலங்காரி வாருமம்மா”

என்று பாடிவரும் தன் பிள்ளைகளுக்காக தாயான மாரியம்மன்
காத்திருக்கும் இடம்தான் ’சமயபுரம்.’

கரிகால் பெருவளத்தான் என்னும் திருமாவளவனால் வெட்டப்பட்ட
’பெருவள வாய்க்காலின்’ வடகரையில் அமைந்துள்ளது
சமயபுரம் மாரியம்மன் கோயில்.
இது கொள்ளிடம நதிக்கு வடக்கே 11 கி.மீ தொலைவில் உள்ளது.

பிச்சாண்டார்கோயில் ரயிலடியிலிருந்து 5 கி.மீ பயணித்தால்
கோயிலை அடையலாம். மாகாளிகுடி, நரசிம்ம மங்கலம் கள்ளிக்குடி,
கண்ணனூர் ஆகியவை சமயபுரத்தைச் சேர்ந்த சிற்றூர்கள்.

கருவறையில் உள்ள ’மாரியம்மன்’ முற்றிலும் சுதையாலான
உருவமாகும். அதனால் அதற்கு அபிஷேகம் கிடையாது.
அபிஷேகத்தால் ஏற்படும் சிதைவுகளைத் தவிர்ப்பதற்காகவே,
உலோகத்தால் ஆன உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
மற்ற சில கோயில்களைப்போல், ’கோப முகமாக’ இல்லாமல் அன்பும் அருளும்துலங்கும் முகத்தோடு சமயபுரம் மாரியம்மன்
பக்தர்களுக்குக் காட்சிதருகிறார்.

இத்தகைய வடிவத்தில் அமைந்த அம்மன் சிலை எப்படி சமயபுரம்
வந்தது என்பதற்கான மரபுவழிக் கதை இது…

ஶ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் மாரியம்மன் வைணவியாய்
இருந்தார். அவளின் உக்கிரம் அதிகமிருந்ததால் தாங்க முடியாத
அன்றைய ஜீயர் அவளை அப்புறப்படுத்தினார். எடுத்துச்
சென்றவர்கள் முதலில் ஓர் இடத்தில் வைத்து இளைப்பாறினர்.
அந்த இடம்தான் இப்போது ’இனாம் சமயபுரம்’ என்று அழைக்கப்படுகிறது.

அதனால்தான் இப்போதும் திருவிழாவின்
எட்டாம் நாள், ஓர் இரவு மாரியம்மன் அங்கு தங்குகிறது.
மீண்டும் எடுத்துப்போய் கண்ணனூர் அரண்மனை மேட்டில்
வைத்தார்கள். அந்த இடம்தான் இன்றுள்ள கோயில் அமைந்த இடம்.

இந்தத் தொன்மக் கதைக்கு மாறாக விஜயநகரத்து மன்னர்களால்
அம்மன் உருவச்சிலை இங்கு கொண்டுவரப்பட்டது என்ற
நம்பிக்கையும் உண்டு.

தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த விஜயநகர மன்னர்,
வரும் வழியிலிருந்த கண்ணனூர் மாரியம்மனிடம், வெற்றி
பெற்றால் கோயில் கட்டுவதாக வேண்டிக்கொண்டார்.
வெற்றிபெற்ற மன்னர் சொன்னபடியே கோயில் கட்டி, நிர்வாகத்தையும் பூஜை

முறைகளையும் திருவானைக்காவல்
கோயிலிடம் ஒப்படைத்தார். அதன் தொடர்ச்சியாகவே இன்றும்
சமயபுரத்துத் தேரின்போது அகிலாண்டேஸ்வரி கோயில் பிரசாதம்
அங்கிருந்து கொண்டுவரப்படுகிறது.
பிரிட்டிஷ் ஆட்சியின் போதுதான் ஶ்ரீரங்கமும் சமயபுரமும்
ஒரே நிர்வாகத்தின் கீழ் வந்தன.

தாய் தெய்வ வழிபாட்டோடு தொடர்புடையதாகவே மாரியம்மன்
வழிபாடும் இருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் கூறப்படும்
கானமர்ச்செல்வி, காடமர்ச்செல்வி முதலியவை
பழங்குடி மக்கள் தொழுத ஒரு தெய்வமாகும். இந்தத்
தாய் தெய்வத்தை ஆரியர் துர்கை என்றனர். பழந்தமிழர் கொற்றவை
என்றனர். இந்தத் தாய் தெய்வம் மிகப் பழைமையான
குடிகளிடமிருந்து நாம் பெற்றது. அதனால்தான் “பழையோள்”
என்றும் ”மூத்த அம்மா… முத்தம்மா… ஆத்தாள்” என்றெல்லாம் ஆதிநினைவுகளின் தொடர்ச்சியாய் மாரியம்மனை அழைக்கிறோம்.

ஆண் கடவுளரான ஐயனார், வீரனார், பதினெட்டாம் படி கருப்பன்,
முன்னடியான், காத்தவராயன், இருளன், சங்கிலிக் கருப்பன்,
மதுரை வீரன் போன்ற சாமிகளையும்; பெண் கடவுளரான மாரியம்மன்,

காளியம்மன், காட்டேரி, பொம்மி,
செல்லாயி, குழுமாயி போன்ற தெய்வங்களையும் பொதுவாக
சிறு தெய்வம் என்றும் நாட்டார் தெய்வமென்றும் அழைக்கும்
பழக்கம் நம்மிடம் உள்ளது.

“துடியுள்ள சாமி” என்று மக்கள் இவற்றிடம் அஞ்சுவார்கள்.
எல்லா சாதிக்குள்ளும் இந்த சாமிகளுக்கு பூசாரிகள் உண்டு.
தாங்கள் சாப்பிட்ட எல்லாவற்றையும் சாமிக்கும் படையலிட்டார்கள்.
அவற்றைக் கும்பிட்ட மக்களுக்குக் கூரை இல்லாததைப் போலவே சாமிகளுக்கும்

சமயத்தில் கூரை இருக்காது. இப்படி
ஒண்ணடி மண்ணடியாக சாமியோடு இவர்கள் கலந்து கிடப்பார்கள்.

அதனால்தான் தங்கள் எல்லா கஷ்டங்களையும் கொட்டுவதற்காக
அவரகள் நாட்டார் தெய்வங்களிடம் வந்தார்கள். வரும்போதே
தாய் வீட்டுக்கு வரும் மகள்போல வந்தார்கள்.

அலகு குத்தி, காவடி எடுத்து, பட்டினி கிடந்து, தீச்சட்டி ஏந்தி
“என் கஷ்டத்தை நீ பார்” என்று ஆவேசத்தோடு வந்தார்கள்.
“எனக்கும் உனக்கும் இடையில் யாருமில்லை, நீ வா” என்று
வாரி அணைக்கும் தாயாக சமயபுரத்தாள் இருப்பதான உணர்வுதான்
மக்களை வெள்ளம்போல் கூட்டுகிறது. இது நாட்டார்
தெய்வங்களுக்கே உரிய ஈர்ப்பு.

கால ஓட்டத்தில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட பெரும் தெய்வமாக
மாறிய பின்னும் நாட்டார் மரபின் கூறுகளைத் தொடர்வதுதான்
மகமாயியின் மகிமை. அதனால்தான் மாவிளக்கு போடுவது
தொடங்கி குழந்தைக்கு நோய் நீங்கியதும் பச்சை மூங்கிலில் மஞ்சள் துணியைத்

தூளியாகக் கட்டி அதில் குழந்தையை அமர்த்தி
அன்னை முன்னே போடுவது வரை நடக்கிறது.

அதுபோலவே சுட்ட மண்ணாலான உருவாரங்களை குழந்தைகளே
கொண்டுவந்து கொடிமரத்தடியில் வைத்து வணங்குகிறார்கள்.
பெரியம்மை நோயால் கொத்து கொத்தாக மக்கள் செத்தார்கள். அப்போதெல்லாம்

தன் விருட்சமான வேம்பால் நோய் தீர்த்தவள்
மாரியம்மாள் என்ற நம்பிக்கையோடுதான் “வேப்பில்லை மாரி”
என்றும் வணங்குகிறார்கள்.

வட மாநிலங்களில் அம்மை நோய்க்கு அதிபதியாக சீதளாதேவியைவணங்குவார்கள். சீதளம் என்றால் குளிர்ச்சி என்று பொருள்.
இங்கு நாம் திருச்சி தென்னூரில் உள்ள குளுமாயி அம்மனை
நினைப்பது நல்லது. குளிர்மாயி என்பதே கால ஓட்டத்தில் குளுமாயி
என்று மாறியிருக்கலாம்.

மாரியம்மன் வழிபாடு பழைமையானது மட்டுமல்ல, பரவலானது.
உதாரணமாக திருவேற்காடு கருமாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர்
மாரியம்மன், நார்த்தாமலை முத்துமாரியம்மன், நாகை நெல்லுக்கடை
மாரியம்மன், பன்னாரி மாரியம்மன் என்று தொன்மையான தாய் தெய்வவழிபாட்டின் தொடர்ச்சியாகவே மாரியம்மன் வழிபாடு பார்க்கப்படுகிறது.

இதனால்தான் முத்துமாரியைப் பாடவந்த பாரதியும்…

“தேடிஉன்னைச் சரணடைந்தேன்
தேசமுத்து மாரி

கேடு அதனை நீக்கிடுவாய்
கேட்டவரம் தருவாய்”

என்று சரணடைகிறார்.

எளிய மக்களின் இந்தக் கோயில் அமைந்த வரலாறும் சுவையானது.
போசள வம்சத்து அரசர்கள் கண்ணனூரை தங்கள் ஆட்சியின்
தென்பகுதிக்குத் தலைநகரமாக வைத்து 13 ஆம் நூற்றாண்டில்
ஆட்சி செய்தனர். அங்கு வாழ்ந்த வாணிபக்குழு சில கோட்பாடுகளைப்
பின்பற்றி வாழ்ந்தது. அப்படியான குழுக்களை “சமயம்” என்று
அழைக்கும் மரபிருந்தது. அதனால் அந்த வாணிபக்குழு வாழ்ந்த ஊரை, அவர்களை

முன்வைத்து “சமயபுரம்” என்று அழைக்கும்பழக்கம் வந்தது.
போசளர்கள் நலிந்து திருவண்ணாமலை சென்றபின்னால், இந்த
வாணிக சமூகமே மேலோங்கியது. இதனால் கண்ணனூர்புரம்
என்பது போய் ”சமயபுரம்” வரலாற்றில் நிலைத்துவிட்டது.
இப்போதுள்ள மாரியம்மன் கோயில் 18 ஆம் நூற்றாண்டில்
ராணி மங்கம்மாவின் பேரன் விஜய ரங்க சொக்கநாதனால் கட்டப்பட்டது. பிற்காலப் பாண்டியனான மாறவர்மன் குலசேகரன்
இப்பகுதியை ஆண்டுள்ளான். இக்கோயில் குறித்துப் பழந்தமிழ்
இலக்கியங்களில் குறிப்பு இல்லை. அதனாலேயே இக்கோயில்
பிற்காலத்துக் கோயில் என வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.

நீண்ட நெடிய வரலாறு கொண்ட ஒரு மொழியில் தொன்மங்கள்
நிறைய இருக்கும்.
அதுவும் கடவுளோடு இணையும்போது அவை புனைவுகள்
என்பதையும் தாண்டி நம்பிக்கைகளாகவும் மாறிவிடும்.

மகமாயியின் தோற்றம் தொன்மத்தில் பெரும் தெய்வமான கிருஷ்ணனோடுஇணைக்கப்படுகிறது. அந்தக் கதை
இப்படிச் சொல்கிறது; மதுராவில் தேவகிக்கும் வசுதேவனுக்கும்
திருமணம். வசுதேவன் தன் மனைவி தேவகியை அழைத்துச்
செல்லும் தேரை தேவகியின் அண்ணன் கம்சன் ஓட்டிச்சென்றான். தேவகியின்எட்டாவது பிள்ளையால்
கம்சனுக்கு மரணம் என அசரீரி சொல்கிறது.

தேவகியைக் கொல்ல முயன்ற கம்சனைத் தடுத்த வசுதேவன், பிள்ளைகள் பிறந்தவுடன் கம்சனிடம் தருவதற்கு ஒப்புக்கொண்டான்.

அப்படியே ஏழு குழந்தைகளையும் கம்சன் கொன்றான். ஆயர்பாடியில்நந்தகோபனும் யசோதையும் குழந்தை வேண்டி கடவுளிடம் வந்தனர்.

மகாமாயையை அழைத்த கடவுள் யசோதையின் கர்ப்பத்திற்குள்
போகச்சொன்னார். யசோதைக்குப் பிறக்கும் பெண் குழந்தையை
தேவகியிடமும் தேவகியின் ஆண் குழந்தையை யசோதையிடமும் மாற்றிவிடும்படி நந்தகோபனுக்குக் கட்டளையிட்டார்.
அப்படியே நடந்தது.

கம்சன் இதுதான் தேவகியின் எட்டாவது குழந்தை என எண்ணி,
கொல்வதற்காகத் தூக்கும்போது நழுவிய பெண் குழந்தை
வில் அம்பு வாள் ஏந்திய காளியாக மாறினாள்.

அந்தக் காளியே மாரியம்மனாகத் தோன்றி அரக்கர்களையும், தீவினைகளையும், நோய்களையும் போக்கி கண்கண்ட கடவுளாக
விளங்குகிறாள் என்று அந்தத் தொன்மக்கதை பேசுகிறது.

ஆதித் தமிழ் மரபின் எச்சமான மாரியம்மா சமயபுரத்தில்
ஊரின் நடுவே அமர்ந்துள்ளார். கோயில் மூன்று சுற்றுகளை
உடையது. கோயிலின் நீளம் கிழக்கு மேற்காக 280 அடி.
அகலமோ தெற்கு வடக்காக 150 அடி. கோயில் மரம் வேப்ப மரம்.
அம்மன் கீழ் திசை நோக்கியும்; கருப்பண்ண சாமி தெற்குப்
பார்த்தும் அமர்ந்துள்ளனர். கருவறையில் அம்மனைச் சுற்றி
நீரைத் தேக்கிவைத்து, கோபம் தணிப்பதாக நம்புகிறார்கள்.

இக்கோயிலின் நிர்வாகத்தை ஆங்கிலேயர்கள் ஒழுங்குபடுத்தினர்.
நவம்பர், 1842-ல் ஶ்ரீரங்கம் கோயிலுக்கு தர்மகர்த்தாக்களை
நியமிக்கும்போது அவர்களிடமே சமயபுரம் நிர்வாகத்தையும்
ஒப்படைத்தனர். கால ஓட்டத்தில் உள்ளூர் மக்கள் சமயபுரம் கோயிலைத் தனியாக நிர்வகிக்க வலியுறுத்தி
நீதிமன்றத்தையும் அரசையும் நாடினர். ஒரு சமரசத் திட்டத்தின்
அடிப்படையில் 1-7-1984 ஆம் தேதி சமயபுரம் கோயில்
தனி நிர்வாகமாக இயங்க ஆரம்பித்தது.

உலகம் முழுவதும் “வலியும்-வேதனையும்-வழிபாடும்” பிரிக்க
முடியாதவை என்பது மானுடவியல் கோட்பாடு. அதாவது,
வலியும் வழிபாடும் எப்படி பிரிக்க முடியாதவையோ,
அப்படித்தான் வழிபாடும் சடங்குகளும் பிரிக்க முடியாதவை.
நிலப்பரப்பின் தன்மைக்கு ஏற்ப வாழ்க்கை மாறுபடும். இதற்கு
ஏற்பவே வழிபாடும் சடங்குகளும் மாறும். நடைமுறையில் உள்ள
சடங்குகளைப் பின்தொடர்ந்தால் அது நம்மை அச்சமூகத்தின்
கடந்த காலங்களுக்கு அழைத்துப்போகும்.

சமயபுரத்தில் நடக்கும் சடங்குகளில் முக்கியமானது
‘முடி இறக்குதல்’. இதற்கான உரிமை பெற்ற 16 குடும்பங்களைச்
சேர்ந்த 40க்கும் அதிகமானோர் முடி இறக்கும் வேலை
செய்கின்றனர். நேர்த்திக் கடனாக முடியைக் காணிக்கையாகத்
தரும் இந்தச் சடங்கைப் பின்தொடர்ந்தால் அது சங்க காலத்தில்
போய் முடியும்.

கொற்றவையின் முன் மண்டியிட்டு, தன் தலைமுடியை
இடக்கையால் தூக்கிப் பிடித்து வலது கையில் உள்ள வாளால்
தன் தலையைத் தானே வெட்டி பலிபீடத்தில் வைத்துத் தன்
நேர்த்திக் கடனை முடிப்பவர்களை அந்தக்கால இலக்கியங்கள்
பேசுகின்றன. “கடன் இறுத்தல்”, “சூர்தல்” என்று இதனை சிலப்பதிகாரம்பதிந்துள்ளது.

மாமல்லபுரத்தில் உள்ள “திரௌபதி ரதத்தில்” இதேபோல பலி கொடுக்கும் காட்சி சிற்பமாக உள்ளது.
காலப்போக்கில் இதுவே தலை முடியை மழித்துக்
காணிக்கையாக்குவது என்ற சடங்காக மாறியதைத்தான் நாம் சமயபுரத்தில் பார்க்கிறோம்.

இதுபோலவே உடல் உறுப்புகளை வெட்டிக் காணிக்கையாகத்
தருவதற்கு பதிலாக, உடல் தசைக்கு வலியும் துன்பமும் தரும் அலகு குத்துதல்,சிலாகை குத்துதல், முதுகில் கொக்கி மாட்டித்
தேர் இழுத்தல் போன்ற சடங்குகள் நடைமுறையில்
உள்ளதைப் பார்க்கிறோம்.

குழந்தைப் பேறு இல்லாத பலர் முழு நம்பிக்கையோடு
மாரியம்மனிடம் வந்து…

“இருசி வயித்திலேயும் எம்காளி பொறந்திடுவே
மலடி வயித்திலேயும் மாகாளி பொறந்திடுவே
எத்தனை நாளா ஏங்கித் தவம் இருக்கேன்
என் வயித்துல எப்பொ நீ பொறக்கப் போறே”

  • என்று குழந்தைக்காக அழுகிறார்கள்.

எளிய மக்களின் இவ்வளவு நம்பிக்கையைப் பெற்றுள்ள
இந்தக் கோயில் காலை 5-30 க்குத் திறந்தால் இரவு 9-30 க்குத்தான்
நடை அடைக்கப்படுகிறது. மாரியம்மனுக்கு நான்கு வேளை
பூஜை நடக்கிறது.

உளவியலின்படி கொண்டாட்டங்கள் மனிதர்களைப் புதுப்பிக்கின்றன.

வறண்ட வாழ்க்கையில், கொட்டும் கும்மியும் பாட்டும் நிறைந்த
திருவிழாக்கள் அவர்களை சலிப்பிலிருந்து காப்பாற்றி, சமூகத்தோடு
உறவாட வைக்கின்றன. சமயபுரம் திருவிழாக்களின் ஊர்.

பொதுவாக பக்தர்கள் பட்டினி கிடந்து விரதம் இருப்பதுதான் வழக்கம். இங்கோதாய் மாரியம்மா தன் குழந்தைகளுக்காக
மாசி மாதம் கடைசி ஞாயிறு தொடங்கி பங்குனி கடைசி ஞாயிறு
வரை 28 நாள்கள் “பச்சைப் பட்டினி விரதம்” இருக்கிறார்.

சமயபுரம் மாரியம்மன், பச்சைப் பட்டினி விரதம் தொடங்கும்
நாளான மாசி மாதத்தின் கடைசி ஞாயிறுதான் “பூச்சொரிதல் விழா”
நடைபெறும். இந்த விழா திருச்சி மாவட்ட மக்களால் கோலாகலமாகக்கொண்டாடப்படும். எல்லா ஆட்டோ ஸ்டாண்டும் களைகட்டும்.

’காந்தி சந்தை’ சுமைதூக்கும் தொழிலாளி முதல் எல்லாப் பகுதி மக்களும் பலவகையான பூக்களைப் பல்லக்கிலும்
தட்டிலும் எடுத்துக்கொண்டு மேள தாளத்துடன் தாரை முழங்க
தப்பட்டை அடிக்க ஆடியும் பாடியும் சமயபுரம் போய் தங்கள்
மாரியம்மனுக்குப் பூவை அவள் கழுத்துவரை நிரப்புகின்றனர்.
எட்டுக் கரங்களுடன் சிங்க வாகனத்தில் வந்து, மகிசாசுரனை வதைத்த ஆத்தாளின்

கோபம் தணியவே இந்தப் பூச்சொரிதல்
என்கிறது கோயில் வரலாறு.

பல லட்சக்கணக்கான மக்கள் கூடும் ஒரு திருவிழா, சமயபுரம்
சித்திரைத் தேர் திருவிழா. சித்திரை மாதத்தின் முதல்
செவ்வாய்க் கிழமை அம்மன் தேர் ஏறி வீதி உலா வருவதே
இதன் சிறப்பு.

தை மாதம் நடக்கும் பூசத் திருவிழாவும் சிறப்பானது. 10 நாட்கள்
நடக்கும் விழா இது. 10 நாள் விழா விசேடமானது. காலையில் க
ண்ணாடி பல்லக்கில் புறப்படும் அம்மன், நொச்சியம் வழியாக
வட காவிரிக்கு மாலை வருவார். திருவரங்கம் அரங்கநாதரிடமிருந்து

மாரியம்மனுக்கு அலங்காரச்சீர் யானை மீது வரும்.
வாத்தியங்கள் முழங்க அதனை அம்மனுக்கு சமர்ப்பிப்பார்கள்.
அதாவது அண்ணன் ரங்கநாதன் தங்கை மாரியம்மனுக்கு சீர்
கொண்டு வந்ததாகப் பொருள்.
வாணவேடிக்கை முழங்க இரவு முழுதும் ஶ்ரீரங்கத்தை சுற்றியுள்ள
மக்கள் வருவார்கள். கட்டுச்சோறு கட்டி வந்து குடும்பத்தோடு
மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
அடுத்தநாள் அதிகாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்படும்
மாரியம்மன் காலை 10 மணிக்கு சமயபுரம் கோயில் வந்து சேர்வார்.

இப்படி திருச்சி மக்களின் பண்பாட்டு வரலாற்றோடு கலந்த
கோயில் சமயபுரம் மாரியம்மன் கோயில். அதனால்தான் மாரி,
மாரிமுத்து, மாரியாயி, முத்துமாரி, அங்கமுத்து, முத்தம்மா,
கண்ணாயிரம் என்ற பெயர்கள் அந்த பண்பாட்டின் தொடர்ச்சியாகவே நம்மோடுவாழ்கின்றன.

கோயில் நிர்வாகம், ஏழை அனாதைக் குழந்தைகள் தங்கி
கல்வி கற்பதற்கான “அன்பு இல்லம்” ஒன்றை நடத்துகிறது.
இங்கு இலவச உணவும் தங்குவதற்கான இடமும் வழங்கப்படுகிறது.
அதுபோலவே ஏழை தம்பதிகளுக்கு இலவச திருமணம் கோயிலால் நடத்திவைக்கப்படுகிறது.

ஒரு சித்த மருத்துவமனையை கோயில் நிர்வாகம் நடத்தி
வருகிறது. அதில் வசதியில்லாதவர்களுக்கு இலவச சிகிச்சை கிடைக்கிறது.

மேலும், டெல்லியில் உள்ள உணவு பாதுகாப்புத்துறை
ஆணையரகம், “உன்னதமான உணவை கடவுளுக்கு படைத்தலுக்கான”
(BHOG-Blissful Hygienic Offering God) சான்றிதழை
சமயபுரம் கோயிலுக்கு வழங்கியுள்ளது.

சிறு தெய்வங்களான நாட்டார் தெய்வங்களின் சமூக பங்களிப்பை
சமூகவியல் பேசுகிறது. எல்லா சமூக மக்களும் ஒருங்கிணைந்து
வேலை செய்ய வேண்டிய தேவையை இந்த தெய்வங்கள்
உருவாக்குகின்றன. சில கிராமங்களில் பிரச்சனைகள் இருந்தாலும்,
பல கிராமங்களில் சக மனிதனை நேசிக்கத் தூண்டுவதோடு,
சமூகங்களுக்கிடையே உறவை வலுப்படுத்தவும் இந்த விழாக்கள் பயன்படுகின்றன.

.

“காட்டு வழிதனிலே-அண்ணே
கள்ளர் பயம் இருந்தால்-எங்கள்

வீட்டுக் குல தெய்வம்-தம்பி
வீரம்மை காக்குமடா.

“நிறுத்து வண்டி என்றே-கள்ளர்
நெருக்கிக் கேட்கையிலே-எங்கள்

கறுத்த மாரியின் பேர்-சொன்னால்
காலனும் அஞ்சுமடா”

இது பாரதியின் “வண்டிக்காரன் பாட்டு.” இதில் கேட்கும்
பாரதியின் குரலைத்தான், எளிய மக்களின் குரலாக சமயபுரத்தில்
கேட்கிறோம். பாரதியின் வண்டிக்காரனை கள்வரிடமிருந்தும்
காலனிடமிருந்தும் காப்பாற்றும் கறுத்த மாரிதான் தங்களையும்
காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையோடு மக்கள் சமயபுரம்
வந்துகொண்டே இருக்கிறார்கள்.

.

………………………………………………………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to சமயபுரம் மாரியம்மன் கோவில் பற்றி ஒரு முழுமையான கட்டுரை ….

  1. sagam சொல்கிறார்:

    isn’t it Mari+Amma. Mother of rain.

  2. Tamil சொல்கிறார்:

    //கண்ணபுரத்தாளே காரண சௌந்தரியே

    எங்கள் சொந்த ஊர் காங்கயம் மற்றும் வெள்ளகோவில் இடையில் அமைந்துள்ள கண்ணபுரம்.

    இந்த பாடல் வரிகள் எங்கள் ஊரில் அமைந்துள்ள மாரியம்மனை பற்றியது.

    வருடம்தோறும் நடைபெறும் தேர்த்திருவிழா சிறப்புக்குரியது.

    தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து தமிழக மாடுகள் கொண்டு வரப்பட்டு மாட்டுச்சந்தை இந்த தேர் திருவிழாவையொட்டி நடைபெறுவது ஒரு தனிச்சிறப்பாகும்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.