போகிற போக்கில் ……. ( 2 )

இந்த 2-வது இடுகையில் நான் சில வித்தியாசமான விஷயங்களை
சொல்வதை படிக்கும்போது – என்ன இது – இப்படியெல்லாம் கூடவா
யோசிப்பார்கள் என்று தோன்றலாம்…. நான் இதை, இங்கு எழுதுவதன்
முக்கிய காரணம் – இந்த மாதிரி விஷயங்களில் நமது நண்பர்கள்
யாருக்காவது ஆர்வம் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளத்தான்….

……………

நிகழ்காலத்தில் பேசுவதை, ஒலியலைகளாகவும்,
ஒளியலைகளாகவும் மாற்றி அடுத்தவர் கேட்க உதவுவது
தானே அலைக்கற்றைகள்….?வரிசையாக 2ஜி, 3ஜி,4ஜி, 5ஜி என்றெல்லாம்…

இவ்வாறு நிகழ்காலத்தில் பேசும் பேச்சையும், காட்சியையும்,
அலைகளாக மாற்றவும்,
மீண்டும் – தேவைப்படும் இடத்தில் அவற்றை ஒலியாக,
ஒளியாக திரும்ப மீட்கவும் முடியுமென்றால் –

படைக்கப்பட்ட எதுவுமே அழிவதில்லை;
வேறு வடிவம் கொள்கின்றன என்கிற தியரியும் சரியென்றால் –

எப்போதோ முன்னொரு காலத்தில் பலர் பேசியதை அலை வடிவத்தில்
இப்போது மீட்கவும் முடிய வேண்டுமே….!!!

நிச்சயம் அதற்கான சாத்தியக்கூறும் இருக்கும். ஆனால், யாரும்
இதுவரை இந்த கோணத்தில் முயற்சித்துப் பார்க்கவில்லை என்று
நினைக்கிறேன்.

இந்த தொழில் நுணுக்கத்தை கண்டுபிடிப்பதில் மட்டும் நாம்
வெற்றி பெற்றால் – 100 ஆண்டுகளுக்கு முன்னர் நம் தாத்தா,
பாட்டி பேசியதை – ஏன், 1000 ஆண்டுகளுக்கு முன்னர்
ராஜராஜ சோழன் பேசியதைக்கூட மீட்டெடுக்க முடியும் என்பதை
நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது அல்லவா…?

என்ன – ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சேர்ந்து அண்டத்தில்
கொட்டிக்கிடக்கும் ஒலி அலைக் கூட்டத்திலிருந்து – இது இது
இன்னார் பேசியது என்று பிரித்தெடுக்க முடியாமல் போகலாம்…!

இப்படியெல்லாம் யாராவது யோசிக்க ஆரம்பித்தால்
அவர்களை பைத்தியக்காரர் என்று கூட உலகம் நினைக்கக்கூடும்….
ஆனால் விஞ்ஞான உண்மைகள் அனைத்துமே ஒரு காலத்தில்
நடக்க முடியாது என்று கருதப்பட்டவை தானே….? இதைப்பற்றி
எல்லாம் யோசிப்பதிலோ, விவாதிப்பதிலோ என்ன தவறு
இருக்க முடியும்…?

  • 44 வருடங்களுக்கு முன், என் அம்மா இறந்துபோனபோது -பாண்டிச்சேரியிலிருந்த நான் –
  • புனா’வில் இருந்த என் அண்ணாவிற்கு தகவலைச்சொல்லி,
  • அவர் ஆலோசனையைக் கேட்க பட்டபாடு….?
  • பாண்டிச்சேரி ஹெட்போஸ்ட் ஆபீசிலிலிருந்து புனாவிற்கு பேச ஒரு
  • (P.P.) TRUNK call புக் செய்துவிட்டு, மூன்றரை மணிநேரத்திற்கும்
  • காத்துக் கிடந்தபிறகு தான் அவருடன் 3 நிமிடம் பேச முடிந்தது….

ஆனால் இன்று – ? ….. நினைத்த அடுத்த நொடியே, என் கையில்
இருக்கும் மொபைலில் இருந்து லண்டனோ, டொரொன்டோவோ,கலிபோர்னியோவோ -உலகில் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் வீடியோ கால் போட்டு நேரடியாகவே, அவர்களைப் பார்த்துக்கொண்டே பேச முடிகிறது…..

இந்த வசதி வருமென்று அன்று கனவிலாவது நினைத்திருப்போமா…?

  • 200 வருடங்களுக்கு முன்னால், மனிதனால்
    ஆகாயத்தில் (விமானத்தில்) பறக்க முடியுமென்றோ,
  • 7000 மைல்களுக்கு அப்பால் இருப்பவரை
    இங்கிருந்தே பார்க்கவும், அவர் பேசுவதை கேட்கவும் முடியும்
    என்றோ சொல்லி இருந்தால், அவரையும் பைத்தியக்காரர் என்று
    தானே சொல்லி இருப்பார்கள்….!!!

உயிர்கள் அனைத்திற்கும் உடம்பு உண்டு .
உடம்பை சம்ஸ்க்ருதத்தில் சரீரம் என்பர்.
உடம்பை காண முடியாமல் வெறும் குரல் மட்டும் ஒலித்தால்
அந்த குரலை அ-சரீரி (அதாவது சரீரம் இல்லாதவர்களிடம்
இருந்து கிளம்பும் வரும் ஒலி என்று எடுத்துக்கொள்ளலாம்
அல்லவா …?) இந்த மாதிரி அசரீரி ஒலிகள் குறித்து புராண
இதிகாசங்களில் நிறைய இடங்களில் வருகின்றன…

உன் சகோதரிக்கு பிறக்கப்போகும் எட்டாவது குழந்தை
உன் உயிரைப் பறிக்கும் என்று கம்சனுக்கு அசரீரி
சொன்னதாக கண்ணன் பிறப்பை குறித்த கதைகள்
சொல்கின்றன.

கிறிஸ்தவத்தில் கூட பத்து கட்டளைகள்
ஒலிக்கும் இடத்தில் அசரீரிக்கு இடம் கிடைக்கிறது….

இந்து மதத்தில் – வேதங்கள் யாராலும் படைக்கப்படவில்லை;
வானத்தில் ஒலிக்கப்பட்ட அவற்றை ஆதிகாலத்தில் மூத்த ரிஷிகள்,
கிரகித்து, எழுதினார்கள் என்று சொல்லப்படுகிறது.

என்றைக்கோ யாராவதாலோ பேசப்பட்டவை ஒலி அலைகளாக,
இன்னமும் பிரபஞ்சத்தில் உலவிக் கொண்டுதான் இருக்கும்
என்பதற்கும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன அல்லவா..?

அவற்றை மட்டும் நம்மால் இனம்காண முடிந்து மீட்டெடுக்க
முடியுமென்றால் அது எப்பேற்பட்ட அதிசயமாகவும்
சுவாரஸ்யமான விஷயமாகவும் இருக்கும்… ???
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்…!!!

.
………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல். Bookmark the permalink.

2 Responses to போகிற போக்கில் ……. ( 2 )

  1. Tamil சொல்கிறார்:

    What eventually happens to sound waves?
    Sound ultimately transforms into heat energy. You can not reproduce all the useful and useless sounds from history. In general all energy is ultimately converted to heat energy and heat energy flows from an object at higher temperature to an object at lower temperature in order to attain thermal equilibrium.

    //படைக்கப்பட்ட எதுவுமே அழிவதில்லை;
    வேறு வடிவம் கொள்கின்றன//

    இது சரி.

    ஆனால் வேறு வடிவம் பெற்ற ஒன்றை மீண்டும் மறு உருவாக்கம் செய்கின்ற தொழில்நுட்பம் இதுவரை இல்லை.

    மேலும் மேலே கொடுக்கப்பட்டுள்ள பதிலில் வெப்பமாக மாற்றமடைகிறது என்று சொல்கிறது.

    தாங்கள் சொல்கின்ற மற்ற தொழில் நுட்பங்கள் அவற்றை வெப்பமாக மாறுவதற்கு முன்பே மின்காந்த அலைகளாக (electro magnet) மாற்றி அல்லது மின் அலைகளாக (digital signals) மாற்றி சேமித்து வைக்கின்றன எனவே அவற்றை நாம் மீண்டும் பெற முடிகிறது

  2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    தமிழ்,

    அற்புதம்…

    சரியான பதிலை கண்டுபிடிக்க நல்ல முயற்சியை மேற்கொண்ட
    உங்களை மனதார பாராட்டுகிறேன். உங்களைப் போன்றவர்களின்
    பின்னூட்டங்களால், இந்த வலைத்தளம் மேலும் வலுப்பெறுகிறது.

    இந்த கோணத்தில் நான் முன்னதாக யோசித்ததில்லை.
    இது சரியான விளக்கம் தானென்று இப்போது நானும்
    நினைக்கிறேன்.

    நன்றி.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.