மதம், மரபு, அரசியல் – மாற்றங்கள்….!!!

மதங்களின் தற்போதைய தேவைகள் – மாற்றங்கள் குறித்து
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ஒரு அருமையான கட்டுரையை
எழுதி இருக்கிறார். ஜெ.மோ. எப்போதுமே, எதையுமே ஆழ்ந்து
சிந்தித்து தீர்க்கமாக எழுதக்கூடியவர்.

மதவாதிகளால் ஆளப்படும் ஒரு நாட்டில், மதங்களின்
நிலை என்ன என்பது யோசிக்கப்பட வேண்டிய விஷயம்…


கண்களை (சிந்தனையையும்) மூடிக்கொண்டு, பிடிவாதமாக
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட ஆசார, அனுஷ்டானுங்களை
இன்றும் தொடர்வதில் – எனக்கு நிச்சயமாக உடன்பாடு இல்லை.

நான் அவற்றிலிருந்து நீண்டகாலம் முன்பாகவே வெளியே
வந்து விட்டேன் – ஜெயமோகன் இப்போது சொல்லும் கருத்துகள்,
எப்போதோ என்னிடம் செயல்முறையில் வந்து விட்டன ….இன்றைய நிலைக்கு பொருந்தாது – தேவையில்லை என்று கருதுபவற்றை நான் எப்போதோ கைவிட்டு விட்டேன்.

ஆனால் -மற்றவர்கள் யாரையும் மாறும்படி வலியுறுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை; ஆனால், அவர்களை யோசிக்கத் தூண்டலாம்.

இதெல்லாம் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள்… எனவே, ஒவ்வொருவரும் அவர்களாகவே, இந்த மாதிரியான சிந்தனைகளை, யோசித்துப்பார்த்து கட்டாயத்திற்கென்றில்லாமல், முழு மனதோடு முடிவெடுக்க வேண்டும்….

அந்த மாதிரி யோசிக்கத் தூண்டும் ஜெயமோகனின் கட்டுரையிலிருந்து
கொஞ்சம் கீழே –

மாற – மாற்றங்களை ஏற்றுக்கொள்ள விரும்பாதவர்களை
கொஞ்சம் யோசிக்க வைக்கும் கட்டுரை இது ….!!!

இந்த சிந்தனைகள் – ஹிந்து மதத்திற்கு மட்டும் தான் என்றில்லை;
எல்லா மதங்களுக்கும் பொருந்தும் என்பது என் கருத்து….


வாசகரின் கேள்வி –

“மதங்கள் – முற்றிலும் மாற்றமே இல்லாமல் நீடிக்கலாமா?

இல்லை;
“அடிப்படை மானுட அறத்துக்கு எதிரானவை, மற்றும்
மாறும் காலத்தின் மாறிய அறத்துக்கு ஒவ்வாதவை,
மாற்றப்படவேண்டும்.

ஆனால் – அறம் ஒன்றின்பொருட்டு மட்டுமே
அந்த மாற்றங்கள் நிகழவேண்டும்”

மாறாமல் நீடிக்கும் எந்த அமைப்பும் பழமைகொண்டு
அழியும். மாறும் காலத்தில் தன்னை தக்கவைக்கவே அது
மாற்றமில்லாமல் இருக்கவேண்டியிருக்கிறது.

அதேசமயம் சில மாற்றங்களைச் செய்துகொள்ளாவிட்டால்
அது முழுமையாக அழியநேரிடும்.

அந்த மாற்றங்களை அது செய்துகொண்டே ஆகவேண்டும்.
அடிப்படை மானுட அறத்துக்கு எதிரானவை,
மாறும் காலத்தின் மாறிய அறத்துக்கு ஒவ்வாதவை,
மாற்றப்படவேண்டும். அறம் ஒன்றின்பொருட்டு
மட்டுமே அந்த மாற்றங்கள் நிகழவேண்டும்”

மரபான ஒரு மதம் இன்றைய மானுட அறத்தை நோக்க வேண்டிய
விதம் எப்படி இருக்க வேண்டும் என விழைகிறீர்கள்…?


ஜெயமோகன் விளக்கம் –

நாம் வாழும் சூழலில் இருந்து பின்னகர்ந்து வரலாற்றை,
மானுடப்பரிணாமத்தை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால்
மிக எளிதில் விளங்குவது இது.

மானுடம் விலங்குநிலை வாழ்க்கையில் இருந்து உருவானது.
அது தனக்கான அறங்களையும், அவ்வறங்களைப் பேணும்
நெறிகளையும் உருவாக்கிக்கொண்டு முன்னகர்ந்து
வந்திருக்கிறது. ஒரு காலத்தில் வெறும் தசைவல்லமையும்,
குழுவல்லமையுமே அனைத்தையும் தீர்மானித்திருக்கும்.

அன்று அதுவே அறம்

அதன்பின்னர் கூட்டுவாழ்க்கைக்கான அறங்கள் உருவாகி
வந்தன. பிறரையும் வாழவிடுவது, பிறருடன் ஒத்திசைவது
போன்றவை தோன்றின. கருணை, இரக்கம், நீதியுணர்வு
என நாம் சொல்வன அனைத்தும் அவ்வாறு உருவானவை.

அவை தன்னியல்பாக உருவானவை அல்ல. தகுதி வாய்ந்த
மானுடர்களால் கண்டடையப்பட்டு சொல்லிச் சொல்லி
நிலைநிறுத்தப்பட்டவை.

சொல்லிக்கொண்டே இருக்கவேண்டிய தேவை கொண்டவை.
ஏனென்றால் அவை மானுடனின் அடிப்படை இயல்புகளான
தன்னலம், வன்முறை ஆகியவற்றுக்கு நேர் எதிரானவை.

அவ்வாறு அறங்களை கண்டடைந்து சொன்னவர்கள்,
அறங்களை புதுப்பிப்பவர்கள் – அனைவரையும் ஒட்டுமொத்தமாக
நாம் ரிஷி என்னும் சொல்லால் குறிப்பிடுகிறோம்.
அவர்களுக்கிடையே முரண்பாடுகள் இருக்கலாம். ஏனென்றால்
அறம் என்பது விவாதங்கள் வழியாக, ஓரு கருத்தின் இடைவெளியை
இன்னொரு கருத்து நிரப்புவதன் வழியாக, ஒரு கருத்தை
இன்னொன்று எதிர்க்கும் முரணியக்கம் வழியாகவே
செயல்படமுடியும், மேம்பட முடியும்.

ஆனால் அனைவரும் இணைந்து ஒன்றைத்தான் செய்து
கொண்டிருக்கிறார்கள். பரத்வாஜரும் ரிஷிதான், பிருஹஸ்பதியும்
ரிஷிதான், துர்வாசரும் ரிஷிதான், ஜாபாலியும் ரிஷிதான்.

இன்றைய யுகத்தை நிர்மாணித்தவர்கள் அனைவருமே ரிஷிதான்.

மார்க்ஸை ஒரு ரிஷி என முன்பு ஜமதக்னி என்னும் மார்க்ஸிய
அறிஞர் எழுதினார். முனிவர் என்று கோவை ஞானியும்
சொல்வதுண்டு. ஃப்ராய்டும் தல்ஸ்தோயும் ரிஷிகள்தான்.
ஷோப்பனோவரும் நீட்சேயும் ரிஷிகளே. அவர்கள் இந்த
நூற்றாண்டை சமைத்து நமக்கு அளித்திருக்கிறார்கள்.

அறங்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மானுடத்தை முன்னகர்த்தியிருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும்
அவர்களுக்கான பங்களிப்பு உண்டு.

மானுடத்தின் பரிணாமத்தில் சென்ற முந்நூறாண்டுகளில்
படிப்படியாக சில அறங்கள் மேம்பட்டிருக்கின்றன.
அவற்றிலொன்று மானுடசமத்துவம்.

பிறப்பால் எவரும் இழிந்தோரோ மேலோரோ அல்ல என்னும் அறம்.
வாழ்வுரிமை, ஆன்மிக நிறைவுக்கான உரிமை அனைவருக்கும்
நிகராகவே இருக்கவேண்டும் என்னும் அறம். முந்தைய ரிஷிகள்
உருவாக்கிய அறங்களுக்கு மேலதிகமாக அடுத்தகட்ட ரிஷிகள்
மானுடத்திற்கு அளித்தது அது.

அதிலிருந்தே அதிகாரத்தில், ஆட்சியில் அனைவருக்கும்
பங்கிருக்கவேண்டும் என்னும் ஜனநாயகப்பார்வை உருவாகி
வந்தது. அவையே இருபதாம் நூற்றாண்டை உருவாக்கிய
அடிப்படைகள். அவற்றின் மேல்தான் நம் சமூகவாழ்க்கை கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

அவை முன்பு இல்லாதவை…..

மாபெரும் தத்துவங்களை, மெய்ஞானங்களை முன்வைத்த
ரிஷிகள் கூட மானுட சமத்துவம், சாமானியனுக்கும் அதிகாரம்
என்னும் அடிப்படைகளை முன்வைத்தவர்கள் அல்ல.
அந்தக் காரணத்தைச் சுட்டிக்காட்டி இன்று அவர்களை
ஒட்டுமொத்தமாக மறுப்பவர்கள் உண்டு. அது அறிவின்மை.

அப்படி நோக்கினால் அடிமைமுறையை ஆதரித்த
பிளேட்டோவில் இருந்து ஒட்டுமொத்த மானுட ஞானத்தையும் நிராகரிக்கவேண்டியிருக்கும். மார்க்ஸ் கூட அதைச் செய்யவில்லை.

மறுபக்கம், அந்த கடந்தகால ரிஷிகள் சொல்லவில்லை என்பதனால்
இன்றைய அடிப்படை அறங்களை ஏற்க மறுக்கும் மனநிலை
உள்ளது. அது மேலும் அறிவின்மை. அதை அறிவுத்தேக்கம்
என்று மட்டுமே சொல்வேன். அறிவு விவேகத்துக்கு எதிரான
விசையாக ஆகும் நிலை அது.

யோசித்துப் பாருங்கள், பிளேட்டோவின் அதிதீவிர பக்தர் ஒருவர்
பிளேட்டோ சொல்லியிருப்பதனால் இன்றும் அடிமைமுறை தேவை
என்று சொல்லிக்கொண்டு அலைந்தால் அவரை நாம் எப்படி
எடுத்துக்கொள்வோம்? அதற்காக பிளேட்டோவை தூக்கி
வீசிவிட முடியுமா? அவர் இல்லாமல் மானுடச் சிந்தனை உண்டா?

நேற்றைய ரிஷிகளிடமிருந்து அவர்களின் மெய்ஞானத்தை,
சிந்தனையை, கலையை பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஒட்டுமொத்தமாக ரிஷிகுலத்தால் உருவாக்கப்பட்டு இன்று நமக்கு அளிக்கப்பட்டுள்ள —–
———— இன்றைய அறத்தின் மேல் நின்றுகொண்டு
அவற்றைப் பரிசீலிக்கவேண்டும்.ஆகவே இன்றைய அறத்துடன்
முரண்படும் என்றால் நேற்றைய சிந்தனைகள் எவையானாலும் நிராகரிக்கப்படவேண்டியவையே.

ஆனால் உண்மையில் அடிப்படைச் சிந்தனைகள், மெய்யறிதல்கள்,
கலையழகுகள் அவ்வண்ணம் முரண்படுவதில்லை. ஏனென்றால்
பெரும்பாலும் அவை நன்று-தீது என்பதற்கு
அப்பாலுள்ளவையாகவே இருக்கும். நேற்றைய அறவியல் [Ethics]
மட்டுமே இன்றைய அறவியலுடன் முரண்படும்.

உதாரணமாக, அத்வைதசாரம் இன்றைய அறவியலுடன்
முரண்படாது.

ஏனென்றால் அது நேற்றைய அறவியலைச் சார்ந்து உருவானது அல்ல.
அது ஒரு பிரபஞ்ச தரிசனம் மட்டுமே. ஆனால் அத்வைதத்தை ஒட்டி
ஓர் அமைப்போ ஆசாரமோ உருவாக்கப்பட்டிருக்கும் என்றால்
அது நேற்றைய அறவியலைச் சார்ந்தே அமைந்திருக்கும்.
இன்று அது இன்றைய அறவியலுடன் முரண்படும். அந்த அமைப்பு
அல்லது ஆசாரம் மாற்றப்பட வேண்டும். அத்வைதம் மாற்றமில்லாதது,
ஆகவே அந்த அமைப்பு அல்லது ஆசாரமும் மாற்றமில்லாததே எ
ன நினைப்பது மாபெரும் அறியாமை.

இதையே இன்றைய சிந்தனையிலும் காணலாம். மானுட
விடுதலையை, மானுட சமத்துவத்தை முன்வைத்த பத்தொன்பது,
இருபதாம் நூற்றாண்டு நவீன ரிஷிகள் எவரும் பிற உயிர்களின்
வாழ்வுரிமையை, இயற்கை என்னும் பேருயியிரியின்
இருப்புரிமையை கருத்தில்கொண்டவர்கள் அல்ல. இன்று அந்த
அறம் இன்றைய ரிஷிகளால் முன்வைக்கப்படுகிறது.

காந்தி முதல் மசானபு ஃபுகுவேகா வரை ஒரு பட்டியலையே
நாம் போடமுடியும். அவர்கள் கூட்டாக உருவாக்கிய அறம் அது.

உதாரணமாக, வளர்ப்பு யானைக்கும் தன் வாழ்க்கையை
தீர்மானிக்கும் உரிமை உண்டு என இப்போது ஓர் உயர்நீதிமன்றத்
தீர்ப்பு வந்துள்ளது.[லலிதா என்ற யானை] இந்தத் தீர்ப்பு
இருபதாண்டுகளுக்கு முன்புகூட வந்திருக்க முடியாது.
ஏனென்றால் சென்ற ஐம்பதாண்டுகளில் உருவான அறம் அது.
சிம்பன்ஸிகளைப் பற்றி ஆய்வுசெய்து அவற்றின் வாழ்க்கையை,
உளவியலை மானுடத்தின் முன்பு வைத்த ஜேன்குடால் முதல்
தொடங்கி பல நவீன ரிஷிகளின் கொடையாக உருவாகி வந்தது.

இன்று ஒரு பெருமாள் கோயிலில் சாமியை தன்மேல் ஏற்ற
பிடிவாதமாக மறுக்கும் ஓர் யானையை அடித்து, துரட்டியால்
நகங்களையும் செவிகளையும் பிய்த்து, கட்டாயப்படுத்தும்
பாகனையும் விழாக்குழுவினரையும் பார்த்தால் அவர்களை ஒடுக்குமுறையாளர்கள், அறமிலிகள் என்று ஒருவர் எண்ணுவார்
என்றால்தான் அவர் அறத்தில் நிற்பவர்.

ராமானுஜர் காலத்தில் அவ்வண்ணம் எண்ணியிருக்க மாட்டார்கள்.
ராமானுஜரே அவ்வாறு எண்ணாமலிருந்திருக்கவும் வாய்ப்புண்டு.
ஆனால் இன்று அவ்வண்ணம் எண்ணாதவர் ராமானுஜருக்கு
அணுக்கமானவர் அல்ல.

ராமானுஜர் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் அவ்வாறே
கடைப்பிடிப்பவர் ராமானுஜருக்கு அணுக்கமானவர் அல்ல.
அவர் எளிய பிடிவாதக்காரர் மட்டுமே. ராமானுஜ தரிசனத்தை
அவர் அறியவில்லை, அவர் அறிந்தது உலகியல் ஆசாரங்களை
மட்டுமே.

ராமானுஜரை இன்றைய அடிப்படை அறத்துக்கு எதிராக
நிறுத்துவதன் வழியாக அவர் ராமானுஜ மெய்ஞானத்துக்கு
மாபெரும் தீங்கையும் இழைக்கிறார் என்றும் சொல்வேன்.
ராமானுஜரின் மெய்ஞானத்தை இன்றைய அறத்துடன்
இணைப்பவரே ராமானுஜருக்கு நெருக்கமானவர்.
நாளை உருவாகும் புதிய அறங்களுடன் அதை இணைப்பவரே
ராமானுஜரை முன்னெடுத்துச் செல்பவர்.

.
………………………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to மதம், மரபு, அரசியல் – மாற்றங்கள்….!!!

  1. Tamil சொல்கிறார்:

    அற்புதமான கட்டுரை.

    ஜெயமோகன் அவர்களின் அறம் என்ற நூலும் இது போல் தான்

  2. புதியவன் சொல்கிறார்:

    பதிவுக்கு சம்பந்தமில்லாத ஒரு செய்தி.

    ஸ்டாலின் செய்த (இதுவரை) ஒரே ஒரு நல்ல காரியம். போட்டித் தேர்வுகளுக்கு தமிழ் தேர்வும் கட்டாயம் என்று அரசாணை பிறப்பித்திருப்பது. நம் தமிழக வேலை, வெளி மாநிலத்திலிருந்து இங்கு வந்து, போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து (அதாவது 10 வருடங்கள் தமிழகத்தில் இருந்ததுபோல) மற்றவர்கள் இதுவரை பெற்றுவந்தார்கள். தமிழகத்தில் வசிக்கும், தமிழ் படித்தவர்களுக்குத்தான் போட்டித் தேர்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பு என்று சொல்லியிருப்பது பாராட்டத் தக்கது.

  3. புதியவன் சொல்கிறார்:

    //ராமானுஜரின் மெய்ஞானத்தை இன்றைய அறத்துடன் இணைப்பவரே ராமானுஜருக்கு நெருக்கமானவர். நாளை உருவாகும் புதிய அறங்களுடன் அதை இணைப்பவரே ராமானுஜரை முன்னெடுத்துச் செல்பவர்.//

    மிகச் சரியான பாயிண்ட். மொத்த பதிவுமே (அவர் எழுத்து) மிகவும் நன்று.

    காலத்துக்கு ஏற்றபடி அறத்துடன் இணைக்கவேண்டும். உண்மை.

    உதாரணமாக, ஆங்கில காய்கறிகள் (தக்காளி, மிளகாய் முதற்கொண்டு),, காபி போன்ற போதை பானங்கள் (ஹாஹா) இரும்புடன் சம்பந்தப்பட்ட தண்ணீர் (Pipe water), மின்சார வாகனங்கள், கடல் கடப்பது போன்று பல, ஆயிரம் ஆண்டு முந்தைய நிலைமையில் விலக்கப்பட்டவை. Soap, Machine washing என்று ஏகப்பட்ட மாறுதல்கள் வந்துவிட்டன. நிறைய மாறுதல்களை நாம் ஏற்றுக்கொண்டுவிட்டோம். நம் உடல் சுத்தம் (கடன்கள்) போன்றவற்றிலும் நிறைய மாறுதல்களை இயல்பாக ஏற்றுக்கொண்டுவிட்டோம்.

    கால மாறுதல்களுக்கு ஏற்றவாறு அறம் சம்பந்தப்பட்ட மாறுதல்களை ஏற்றுக்கொள்வதிலும் ஏன் தயங்கவேண்டும்?

    ஆயிரம் வருடங்களுக்கு முன்பு எந்தவிதமான electrical equipments, communication devices இல்லை என்பதால் அவற்றை உபயோகிக்காமல் இருக்கிறோமா? அறத்தில் காலத்திற்கேற்ற மாறுதல் அவசியம்தான். (without disturbing the basic concept)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.