விவசாயிகளின் – தொடரும் போராட்டத்தில்நியாயம் இருக்கிறதா ….?

மிகுந்த எதிர்ப்புக்கு உள்ளான 3 விவசாய சட்டங்களையும்
மத்திய அரசு வாபஸ் பெற்று விட்டது…. ஆனாலும்,
ஒரு வருடத்திற்கும் மேலாக டெல்லி அருகே நடைபெறும்
விவசாயிகளின் போராட்டம் நின்றபாடில்லை….

சட்டபூர்வமான MSP-க்கான (Minimum Support Price –
குறைந்தபட்ச ஆதரவு விலை) உத்திரவாதத்தை அளிக்கும்
விதத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும்…. அதுவரை
எங்கள் போராட்டம் தொடரும்… மத்திய அரசுடன் 11 முறை
பேச்சுவார்த்தை நடத்தியும் மத்திய அரசு இதற்கு இதுவரை
இணங்கவில்லை. நாங்கள் நடத்தி வரும் போராட்டத்தின்
லட்சியங்களில் முக்கியமானது MSP-க்கான சட்டம்
இயற்றப்பட வேண்டும் என்பது….

முக்கிய கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை என்பதால்,
நாங்கள் போராட்டத்தை நிறுத்துவதில் அர்த்தமில்லை…
என்கிறார்கள் போராடும் விவசாயிகள் சங்கத்தினர்.

போராட்டம் தொடர்வதில் நியாயம் இருக்கிறதா ….?

உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகள் அதிக விளைச்சல்
உள்ளிட்ட காரணங்களால், நஷ்டம் அடையக் கூடாது
என்பதற்காக முன் பருவம் மற்றும் பின் பருவ கால பயிர்களுக்கு
ஏற்ப குறைந்தபட்ச விலையை அவ்வப்போது நிர்ணயம் செய்து
மத்திய அரசு அறிவிக்கிறது.

இதன்படி நெல், கோதுமை, பயிறு வகைகள், எண்ணெய்
வித்துக்கள் என 23 வகையான விளைபொருள்களுக்கு
விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இத்துடன், தமிழ்நாடு
போன்ற மாநிலங்கள் கூடுதல் ஊக்கத் தொகை அளித்து
வருகின்றன. இருந்தாலும் இவற்றிற்கு ஆதாரபூர்வமான
சட்ட பாதுகாப்பு எதுவும் இல்லை.

வேளாண் துறையில் உள்ள நடைமுறைச் சிக்கல்களுக்கு
தீர்வு காணவும், மேம்பாட்டுத் திட்டங்களை எடுத்துச் சொல்லும்
வகையிலும் , வேளாண் நிபுணர் எம்.எஸ்.சுவாமிநாதன்
தலைமையிலான தேசிய வேளாண் குழு தனது பரிந்துரையை
2007ஆம் ஆண்டு மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

அதில், வேளாண் உற்பத்திக்கான அடிப்படை செலவு,
உரம், இடு பொருட்கள் விலை – உள்ளிட்ட மொத்த செலவினத்தை
கணக்கிட்டு, மொத்த உற்பத்தி செலவை விட 50 சதவீதம்
கூடுதலாக வேளாண் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம்
செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகள்
வழங்கப்பட்டன. ஆனால், 14 ஆண்டுகளாகியும் அந்த
பரிந்துரைகள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

மக்களவை தேர்தலின் போது விவசாய விளை பொருள்களுக்கு
இரு மடங்கு விலை வழங்கப்படும் என்று மோடிஜி
கூறினார். ஆனால், அவர் பிரதமராகி 7 ஆண்டுகளுக்கு மேலான
பிறகும் தமது வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை என்று
விவசாயிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டுகிறார்கள்.

இது குறித்து விவசாயிகள் சங்கத்தினர் சொல்வது –

”கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு 12 மரக்கால் (58 கிலோ) கொண்ட
நெல் மூட்டை ரூ. 40க்கு விற்பனை செய்யப்பட்டது.

அப்போது எம்.எல்.ஏவிற்கு மாத ஊதியம் ரூ. 250, வங்கி அதிகாரிக்கு
ரூ 150. ஒரு பவுன் தங்கம் ரூ. 150க்கு விற்றது.

ஆனால், இன்றைக்கு 60 கிலோ நெல் மூட்டை ரூ. 1,600க்கு
கொள்முதல் செய்யப்படுகிறது. மற்றவர்களின் ஊதியம்
எவ்வளவு உயர்ந்துள்ளது என்று நீங்களே ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.

விவசாய விளைபொருட்களுக்கு மட்டும் உரிய விலை
உயர்த்தப்படவில்லை. அதனால் தான், குறைந்தபட்ச ஆதார
விலையை சட்டபூர்வமாக்குமாறு கோருகிறோம் என்கின்றனர்.

இது குறித்து எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின்
மூத்த விஞ்ஞானி கோபிநாத் ஒரு பேட்டியில் கூறுவதாவது –

”விவசாய விளைபொருட்களில் நெல் பெரும்பங்கு வகிக்கிறது.
தமிழ்நாட்டில் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல்
கொள்முதல் செய்யப்படுகிறது. நிலக்கடலை, தானியங்கள்
வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம்
செய்யப்படுகின்றன. இவ்வாறு நமது கொள்முதல் கட்டமைப்பு
வலுவாக உள்ளது. “

“தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நெல், மாநிலத்தின்
தேவையைப் பூர்த்தி செய்யவில்லை. அதனால் தேவைப்படும்
நெல் வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி
செய்யப்படுகிறது. குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா,
உத்தர பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் நெல் அதிகம்
உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, குறைந்தபட்ச விலை
நிர்ணயம் சட்டபூர்மாக்கப்பட்டால், அரசுகள் மாறினாலும்
குறைந்தபட்ச விலை நிர்ணயம் தொடரும். தனியார் ஆதிக்கம்
இருக்காது. ஆகையால், சட்டபூர்வ குறைந்தபட்ச விலை நிர்ணயம்
அவசியமானது தான் ” என்கிறார் கோபிநாத்.

”வேளாண் விளை பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம்
செய்யப்படுவதில்லை. மொத்த செலவினத்தோடு ஒப்பிடும்போது,
விலை நிர்ணயம் குறைவாகவே செய்யப்படுகிறது.
அரசு ஊழியர்களுக்கு ஊதியக்குழு அமைக்கப்பட்டு, அதன்
அடிப்படையில் ஊதியம் உயர்த்தப்படடுகிறது. ஆனால்,
விவசாயத்திற்காக, விவசாயிகளுக்காக அமைக்கட்ட
எம்.எஸ்.சுவாமிநாதன் குழு, அர்ஜுன் சென் குப்தா குழு,
வைத்தியநாதன் குழு, ரங்கநாதன் குழு உள்ளிட்ட வேளாண்
குழுக்களின் பரிந்துரைகளை மத்திய அரசு சரிவர
நிறைவேற்றவில்லை. ஆகையால்தான் தற்போது
விடாப்பிடியாக போராடுகிறோம்.” என்கிறது விவசாயிகள் சங்கம்.

மேலும் – “குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு நிர்ணயம்
செய்கிறது. ஆனால் தனியார் முதலாளிகள் அதை
பின்பற்றுவதில்லை.

எனவே குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டபூர்வ பாதுகாப்பு
வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.

மூன்று வேளாண் திருத்த சட்டங்களிலும் இது குறித்த அம்சங்கள்
வேண்டும் என்று வலியுறுத்தினோம். இந்த நாடாளுமன்றத்தின்
நடப்புக் கூட்டத்தொடரில், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம்
குறித்த தனி சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்,” என்கிறது சங்கம்.

இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் பரிந்துரை
அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் இருக்க
வேண்டும் என்பது விவசாயிககளின் கோரிக்கை…..

எம்எஸ்பி பொதுவாக பயிர் உற்பத்தி செய்யும் போது விவசாயிக்கு
ஆகும் செலவை விட ஒன்றரை மடங்கு அதிகமாக இருக்கும்
வகையில் பார்த்துக் கொள்ளப்படும். இந்த பயிர்களை வாங்கும் போது, நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையை விட
குறைவான தொகைக்கு யாரும் வாங்க முடியாது.

குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படவில்லை என்றால்
அடானி, அம்பானி போன்ற பெரும் முதலாளிகள்,
பணத்திற்கு தவித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு –
50 ஆயிரம், ஒரு லட்சம் என்று பெரிய தொகையை அட்வான்சாக
கொடுப்பதாக ஆசை காட்டி, விளைச்சலுக்கு முன்பே
விலையை அவர்களே நிர்ணயம் செய்யும் இடத்தில்
இருப்பார்கள்…… பெரிய தொகை முன்கூட்டியே கிடைக்கிறது
என்பதால், விவசாயிகளும் இதற்கு உடன்பட வேண்டியிருக்கும்.

அரசாங்கமே குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக
அறிவித்து விட்டால், இத்தகைய பெரும் முதலாளிகள்
அட்வான்ஸ் கொடுத்தாலும், தங்கள் விருப்பம்போல்,
அடிமாட்டு விலைக்கு நிர்ணயம் செய்ய முடியாது….
குறைந்தபட்ச ஆதார விலையை கொடுத்தேயாக வேண்டும்….

விவசாயிகளின் கோரிக்கையில் இருக்கும் நியாயத்தை
நம்மால் உணர முடிகிறது.

ஆனால், அரசு இதற்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை
அளிப்பதற்கு ஏன் தயங்குகிறது….? அதற்கான காரணங்களையும்
அரசு இதுவரை வெளிப்படையாகச் சொன்னதாகத்
தெரியவில்லை;

  • ஏன்…. ?

.
………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அடானி, அரசியல், இணைய தளம், குறைந்த விலை, தேர்தல். Bookmark the permalink.

2 Responses to விவசாயிகளின் – தொடரும் போராட்டத்தில்நியாயம் இருக்கிறதா ….?

  1. Tamil சொல்கிறார்:

    //According to an official release, the CCEA has approved increase in MSPs for six rabi crops for the 2021-22 crop year (July-June) and 2022-23 marketing season. Wheat MSP has been increased by Rs 40 to Rs 2,015 per quintal for this crop year from Rs 1,975 per quintal in the 2020-21 crop year.//

    this tells all

  2. புதியவன் சொல்கிறார்:

    //கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு 12 மரக்கால் (58 கிலோ) கொண்ட
    நெல் மூட்டை ரூ. 40க்கு விற்பனை செய்யப்பட்டது.

    அப்போது எம்.எல்.ஏவிற்கு மாத ஊதியம் ரூ. 250, வங்கி அதிகாரிக்கு
    ரூ 150. ஒரு பவுன் தங்கம் ரூ. 150க்கு விற்றது.

    ஆனால், இன்றைக்கு 60 கிலோ நெல் மூட்டை ரூ. 1,600க்கு
    கொள்முதல் செய்யப்படுகிறது.//
    இந்த மாதிரி விவாதங்களில் அர்த்தமே இல்லை. பொதுவாக உற்பத்தி செய்பவர்களைவிட விற்பவர்கள், அதற்குண்டான சங்கிலியில் உள்ளவர்கள்தாம் அதிகம் சம்பாதிப்பார்கள். விவசாயியால் உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகளை விட மற்றவர்கள் (இந்தச் சங்கிலியில்) அதிக வேலைவாய்ப்புகளையும், விற்பனையில் போட்டியையும் உருவாக்குகிறார்கள்.

    உடனே, விவசாயிதான் நாட்டின் முதுகெலும்பு என்றெல்லாம் சண்டைக்கு வராதீங்க. விளைநிலங்களை கூறுகட்டி வீட்டுமனை விற்பனைக்கு அனுமதிப்பது அரசாங்கம்தான். ஐந்து வழிச் சாலை, பத்து வழிச்சாலை என்று விளை நிலங்களை அழிப்பதும் அரசாங்கம்தான் (மாநில)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.