ஒரு முன்னணி திரைத்துறை பிரமுகரின் சுவாரஸ்யமான பின்னணி …..

சென்னை வாழ்மக்கள் அநேகம் பேர் “அபிராமி” ராமநாதன்
அவர்களைக் குறித்து ஓரளவு அறிந்திருப்பார்கள். அவரது
வெற்றிக்கதையின் பின்னணியை முழுவதுமாக தெரிந்துகொள்ளவும்,
தமிழ் நாட்டின் மற்ற பகுதியில் உள்ளவர்கள் ஒரு வெற்றிகரமான
மனிதரை அறிந்துகொள்ளவும் இந்த இடுகை ….

மெக்கானிகல் எஞ்ஜினீரிங்கில் பட்டம் பெற்று விட்டு-
அதற்கு சற்றும் சம்பந்தமில்லாத திரைத்துறையில் ஈடுபட்ட
வெற்றி பெற்ற மனிதர் இவர்.

திரைப்படத்துறை குறித்த தனது சுவாரஸ்யமான அனுபவங்களை
அபிராமி ராமநாதன் அவர்கள் விவரிக்கிறார் –

“தியேட்டர் நிர்வாகம் தான் எனக்கும் சினிமாவுக்குமான தொடர்பை நிலைப்படுத்தியது.

அப்போது மவுண்ட் ரோட்டில் இருந்த “சாந்தி”, “தேவி”,
“சபையர்”, “ஆனந்த்” தியேட்டர்களில் மட்டுமே ஏர்கண்டிஷன்
வசதி இருந்தது. புரசைவாக்கத்தில் நாங்கள் கட்டிய அபிராமியும்,
பாலஅபிராமியும் ஏர்கண்டிஷன் தியேட்டர்கள். இதன் காரணமாக,
தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

அபிராமி தியேட்டரைச் சுற்றி நிறைய இடம் இருந்தது.
அங்கு அன்னை அபிராமி, சக்தி அபிராமி என்று 2 தியேட்டர்கள்
உருவாக்கப்பட்டன.

“டிவி”யில் சினிமா படங்கள் ஒளிபரப்பத் தொடங்கிய
காலகட்டத்தில் குடும்பத்துடன் படம் பார்க்க வருவோர்
எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இதனால், தியேட்டருக்கு
ரசிகர்களை வரச்செய்ய ஒரு புது உத்தியைக் கையாண்டேன்.
“போன் செய்தால் போதும். டிக்கெட் உங்கள் வீடு தேடிவரும்”
என்று ஒரு திட்டம் தொடங்கினோம். அது பெரிய வெற்றி.
புதிய படங்களை பார்க்க விரும்புகிறவர்கள், டிக்கெட் வீடு தேடி
வந்ததால், தியேட்டர்களுக்கு குடும்பம் குடும்பமாக
வரத்தொடங்கினார்கள்.

எனக்கு, புதிய தொழில் நுட்பம் மீது எப்போதுமே ஆர்வம் அதிகம்.
வெளிநாடுகளில் “டி.டி.எஸ்” என்னும் சிறப்பு ஒலி, படம்
பார்க்கும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தருவதாக அறிந்தேன்.
உடனே நானும் எங்கள் தியேட்டர்களுக்கு “டி.டி.எஸ்” ஒலியைக்
கொண்டு வந்தேன். இந்த வகையில் இந்தியாவில் முதல்
“டி.டி.எஸ்” தியேட்டர் எங்களுடையதுதான்.

டி.டி.எஸ். சிறப்பு ஒலியுடன் கூடிய படம் வந்தால்தானே இந்த
புதிய அனுபவத்தை ரசிகர்கள் உணர முடியும்? அதுமாதிரியான
படங்கள் அதிகம் வரவில்லை. இதுபற்றி ஒரு முறை
கமலஹாசனிடம் என் மனக்குறையை வெளியிட்டேன்.
“தெரியாத்தனமாக 3 1/2 லட்சம் செலவில் டி.டி.எஸ். ஒலி வசதி
பண்ணிவிட்டேன். ஆனால் படம்தான் கிடைக்கவில்லை”
என்றேன்.

கமல் அப்போது “குருதிப்புனல்” படத்தை தயாரித்துக்
கொண்டிருந்தார். கமலுக்கும் எப்போதுமே புதிய தொழில்
நுட்பத்தில் ஆர்வம் உண்டு. உடனே குருதிப்புனல்’ படத்தில் “டி.டி.எஸ்” சிறப்பு ஒலி சேர்க்க முடிவு செய்தார். அதற்காக, படத்தை ரிலீஸ் செய்வதை 3 மாதம் தள்ளி வைத்தார். இப்படி எங்கள் தியேட்டரில் திரையிடப்பட்ட முதல் “டி.டி.எஸ்” படம் குருதிப்புனல்.’

இதுமாதிரி டிஜிட்டல் முறையில் படம் திரையிடும் வசதி
வந்தபோது, ஏவி.எம். சரவணன் அப்போது அவர் தயாரித்த
“பேரழகன்” படத்தை எங்களுக்கு டிஜிட்டல் முறையில் தந்தார்.
அதுபோல டால்பி சவுண்ட் சிஸ்டத்தை திரையரங்கில்
முதலில் புகுத்தியதும் நாங்கள்தான்.

1984-ல் மலேசியா போயிருந்தபோது அங்கிருந்த 4 தியேட்டர்களில்
“ஷாப்பிங் மால்” கொண்டு வந்திருந்ததை பார்த்தேன்.
படம் பார்க்க வருகிறவர்கள் பலவித பொழுது போக்குகளில்
ஈடுபடவும், பலவித ரெஸ்டாரெண்டுகளில் உணவு அருந்தவும்,
விரும்பிய பொருட்களை வாங்கவும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இதனால் தியேட்டருக்கு வருகிறவர்கள் எண்ணிக்கை
அதிகரித்திருப்பதாக அறிந்தேன்.

இதனால் “அபிராமி” தியேட்டர்கள், அபிராமி மால் என்ற
பெயருடன் 2003-ம் ஆண்டு நவீன வடிவமைப்புடன் மாற்றி
அமைத்தேன். தென்னிந்தியாவில் அமைக்கப்பட்ட தியேட்டர்களுடன்
கூடிய முதலாவது ஷாப்பிங் மால் அபிராமிதான்.

எங்கள் மாலில் உள்ள “சொர்ண சக்தி அபிராமி”
(பழைய சக்தி அபிராமி) இப்போது ஐந்து நட்சத்திர அந்தஸ்துக்கு
மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, படுத்துக்கொண்டே
சினிமா பார்க்கலாம்! பாத்ரூம் கூட, ஏர்கண்டிஷன் செய்யப்பட்டுள்ளது.

புதிய படங்களை எங்கள் தியேட்டர்களில் திரையிடும் நோக்கில்
அதை பார்ப்பதுண்டு. அப்படிப் பார்க்கும்போது அது சரியாக
ஓடுமா என்பது தெரிந்து விடும். இப்படி படங்களை பார்த்துப் பார்த்து,
நாமும் ஒரு படத்தை தயாரிக்கலாமே’ என்ற எண்ணம் ஏற்பட்டது. 1994-ல் இப்படி நான் தயாரித்த படம்தான்அடிமைச்சங்கிலி.’
அர்ஜுன், ரம்பா, ரோஜா நடித்த இந்தப் படத்தை டைரக்டர்
ஆர்.கே.செல்வமணி இயக்கினார்.

அந்தக் காலக்கட்டத்திலேயே 3 1/2 கோடி ரூபாய் செலவாயிற்று.
படத்தயாரிப்பு 10 மாதம் வரை நீடித்தது. படம் ரிலீசான போது
நஷ்டம் ஏற்பட்டது. என்றாலும் என் படத்தை நம்பி வாங்கி
நஷ்டப்பட்ட வினியோகஸ்தர்களின் நஷ்டத்தை நானே
ஏற்றுக்கொண்டேன். இந்த வகையில் தியேட்டர் அதிபரான
என் முதல் சினிமா தயாரிப்பு அனுபவம் “இக்கரைக்கு
அக்கரைப் பச்சை” கதைதான்.

ரஜினி நடித்த ஒரு ஆலிவுட் படம் “பிளட் ஸ்டோன்.”
மெட்ரோ பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்த இந்த படத்துக்கு
நான்தான் “பைனான்ஸ்” பண்ணினேன்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் 25 நாள் நடந்தது.
ரஜினியுடன் நானும் இருந்தேன்.

ரஜினி “சூப்பர் ஸ்டார்” ஆக உயர்ந்ததற்கு காரணம், அவரது
`நடிப்பு பாதி; குணம் பாதி’ என்றுதான் சொல்ல வேண்டும்.
காலை 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் நாங்கள் தங்கியிருந்த
இடத்துக்கு சரியாக 8-40 மணிக்கு ரஜினியிடம் இருந்து போன்
வரும். “நான் ரெடி. கார் ரெடியா?” என்று கேட்பார்.
தொழில் மீது அதிக பக்தி.

சினிமாத்துறையோடு சம்பந்தப்பட்டிருந்ததால், நடிகர் திலகம்
சிவாஜியின் அன்புக்கும் உரியவராக இருந்தேன். என் மகள்
திருமணத்தின்போது முழு நாளும் கூடவே இருந்து எங்கள்
குடும்பத்தை சந்தோஷப்படுத்தினார். அவரை பார்க்க வருவது
தள்ளிப்போனால், உரிமையுடன் கோபித்துக் கொண்டு,
“ஏண்டா! ஏதாவது விஷயம் இருந்தால்தான் வருவியா?”
என்று கேட்பார்.

பட உலகில் என்னை வியக்க வைத்த இன்னொருவர்
சின்னப்ப தேவர். ஒரு சினிமா எப்படி இருந்தால் வெற்றி பெறும்
என்ற `லாஜிக்’ தெரிந்தவர். அவர் தயாரித்த “ஆட்டுக்கார
அலமேலு” படம், எங்கள் தியேட்டரில் ஓடியபோது படம்
பார்க்க வந்திருக்கிறார். பால்கனியில் அவருடன் நானும்
படம் பார்த்தேன்.

அப்போது அவரிடம் “படத்துக்கு கேமரா ஆங்கிள் இன்னும்
கொஞ்சம் கவனமாக வைத்திருக்கலாம்” என்றேன். அவரோ,
“இந்தப் படத்தோட கதாநாயகன் ஆடுதான். ஆடு ஒழுங்காக
நடிக்குதா என்று பாருங்க” என்று சொல்லிவிட்டார்.

“படம் பார்க்கிறவர்களை ஒரு கதைக்குள் முழுமையாகக்
கொண்டு வந்திட்டால், படம் நிச்சயமாக ஜெயிக்கும்.
சின்னச்சின்ன குறைகள் இருந்தால்கூட, ரசிகர்கள் அதை பெரிசா

எடுத்துக்கொள்ளமாட்டார்கள்” என்று அவர் சொன்னபோது,
சினிமா பற்றிய அவரது ஞானம் வெளிப்படையாகத் தெரிந்தது.

படத்தின் தயாரிப்பாளர் என்ற நிலைக்கு வந்தபிறகு எனக்கு
தமிழ்நாடு காவல்துறை கொடுத்த கவுரவம் மறக்க முடியாதது.
போலீஸ் கமிஷனராக இருந்த லத்திகா சரண் என்னிடம்,
“காவல்துறை பொதுமக்களின் நண்பன்” என்கிற மாதிரியான
கதைப் பின்னணியில் ஒரு குறும்படம் எடுத்துத்தர வேண்டும்
என்று கேட்டுக்கொண்டார்.

உடனே ஐந்தாறு குட்டிக் கதைகளுடன் அரை மணி நேரப்படமாக
எடுத்துக் கொடுத்தேன். ஐந்து லட்சம் செலவாயிற்று. இந்தப்
படத்தில் போலீஸ் அதிகாரியாக நிஜ போலீஸ் அதிகாரிகளே
நடித்தார்கள்.

சினிமாவில் அப்பா வினியோகத் துறையில் இருந்ததால்,
அப்பா வழியில் நாமும் முயன்று பார்க்கலாமே என்று
தோன்றியது. அதற்காக 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்வது,
லாபம் வந்தால் வினியோகத்தைத் தொடர்வது, நஷ்டம் வந்தால்
அத்தோடு நிறுத்திக்கொள்வது என்று முடிவு செய்தேன்.

மொத்தம் 45 படங்கள் வரை வினியோகம் செய்தேன்.
அதில் 22 படங்கள் 100 நாள் ஓடின. 6 படங்கள் வெள்ளி விழா
கொண்டாடின. என்றாலும் பின்னால் வினியோகம் செய்த
படங்களில், போட்ட பணம் திரும்ப வராததால் முதல் குறையத்
தொடங்கியது. அத்தோடு நிறுத்திக்கொண்டேன்.

பத்து வருடம் கழித்து, ரஜினி நடித்த “சிவாஜி” படத்துக்கு
சென்னை நகர வினியோக உரிமை பெற்றேன். அதில் நான்
எதிர்பார்த்த லாபம் கிடைத்தது.

எதிர்பார்ப்புக்குரிய புதிய படங்கள் ரிலீசாகும்போது திருட்டு விசிடி
எடுப்பதை தொழிலாகக் கொண்டவர்கள்தான் அதிக லாபம்
பார்க்கும் நிலை சமீப காலங்களில் இருந்து வந்தது. மும்பையில்
ஒரு இந்திப் படம் ரிலீசானால் உடனடி கலெக்ஷன் பார்ப்பதற்காக
அதிக தியேட்டர்களில் திரையிடுவார்கள். பக்கத்து பக்கத்து
தியேட்டர்களில் கூட திரையிடுவார்கள். இதனால் புதிய படம்
பார்க்கும் ஆவல் கொண்ட ரசிகர்கள் இம்முறையில் தாமதமின்றி
படம் பார்த்து விட முடிகிறது. இதனால் `திருட்டு விசிடி’
பார்ப்பதற்கான வாய்ப்பு தவிர்க்கப்பட்டு விடுகிறது.

`சிவாஜி’ படத்தின் சென்னை வினியோக உரிமையை ஏவி.எம்.
சரவணனிடம் நான் கேட்டபோது, மும்பை நிலவரத்தை சொல்லி
அதுபோல் சென்னையிலும் பல தியேட்டர்களில் திரையிட்டால்
சரியாக இருக்கும் என்று கூறினேன். என் கருத்தை அவரும்
ஏற்றுக்கொண்டார்.

சென்னையில் ஒரே நேரத்தில் 18 தியேட்டர்களில் `சிவாஜி’
ரிலீசாகி வினியோகஸ்தர்களுக்கு முதலீடு செய்த தொகையையும்
தாண்டி வசூலித்துக் கொடுத்தது.

சினிமாவில் முதல் பட தயாரிப்பு அனுபவம் அத்தனை
திருப்திகரமாக இல்லை என்பதால், முதல் தயாரிப்பில் ஏற்பட்ட
மைனஸ் பாயிண்டுகளை பிளஸ் ஆக்கி மறுபடியும் ஒரு
படத்தை தயாரிக்க இருக்கிறேன். நிச்சயமாக, வெற்றிகரமான
தயாரிப்பாளர் என்ற நிலையை எட்டுவேன்.”

……………………………………………………………………………………..

அபிராமி ராமநாதன் சின்னத்திரையிலும் சில
தொடர்களைத் தயாரித்தவர்.

அபிராமி ராமநாதனின் மனைவி நல்லம்மை “எம்.பி.ஏ” முடித்தவர்.
அபிராமி தியேட்டரின் `மால்’ இவரது கற்பனையில் உதித்ததுதான்.

பிள்ளைகள் – ஒரு மகனும், மகளும். மகன் சிவலிங்கம் “பி.பி.ஏ”
முடித்தவர். இவர் மனைவி ஜமுனா. ராமநாதனின் மகள் பெயர்
மீனாட்சி. இவர் கணவர் பெரியகருப்பன்.

இவர் வட்டத்தைச் சேர்ந்த – கவிஞர் கண்ணதாசன் பாடிய,

” கொடுத்ததெல்லாம் கொடுத்தான்… அதை யாருக்காகக்
கொடுத்தான், ஒருத்தருக்கா கொடுத்தான் – இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்” –

 • என்பதை உணர்ந்து
  செயல்படுத்துகிறார் அபிராமி ராமநாதன்.

தனது சொந்த ஊரை ( சிவகங்கை மாவட்டத்தில் உள்ள
பூலாங்குறிச்சி ) தத்து எடுத்துள்ள அபிராமி ராமநாதன்,
அந்த ஊரை கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் முன்னேறச் செய்து
கிராம மக்களின் நலனுக்கு உழைக்கிறார்…

.
…………………………………………………………………………………………………….……….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to ஒரு முன்னணி திரைத்துறை பிரமுகரின் சுவாரஸ்யமான பின்னணி …..

 1. புதியவன் சொல்கிறார்:

  //தனது சொந்த ஊரை ( சிவகங்கை மாவட்டத்தில் உள்ள
  பூலாங்குறிச்சி ) தத்து எடுத்துள்ள அபிராமி ராமநாதன்,// – பூலாங்குறிச்சியா? இங்குதான் நான் 4-6ம் வகுப்பு படித்தேன். அனேகமா அங்க உள்ளவங்க தெரியும். ஆனால் இவர் எந்த வீட்டைச் சேர்ந்தவர்?

  பூலாங்குறிச்சியில் நிறைய நகரத்தார்கள் வசித்தனர் (அவங்களோட பங்களா.. நெடூக இருக்கும்). அதில் கணக்குப்பிள்ளை, சமையல்காரர்கள் எல்லாம் உண்டு. அந்த ஊர்ல எங்க அப்பா ஹெட்மாஸ்டராக வேலைபார்த்தார் அந்தச் சமயத்தில்.

  நகரத்தார் சிவன் கோவில்களுக்கு ஏகப்பட்ட பணம் செலவழிப்பாங்க (நாங்க அப்போ இவர்களை நாட்டுக்கோட்டை செட்டியார்கள் என்போம்)

 2. புதியவன் சொல்கிறார்:

  //ஆகியவற்றில் முன்னேறச் செய்து கிராம மக்களின் நலனுக்கு // – 75களில் அந்த ஊரை கிராமமாக என்னால் நினைத்துப்பார்க்க முடிந்ததில்லை. அருமையான பெரிய ஊரணி (நாலு பக்கமும் பெரிய படித்துறைகள்), பெரிய பெரிய அழகான வீடுகளோடு கூடிய பலப் பல தெருக்கள், அக்ரஹாரம் (இது செட்டியார்களே அமைத்தது), பெரிய கோவில் (இதில் அடிக்கடி பட்டிமன்றங்கள் நடைபெறும். முனைவர் சரஸ்வதி ராமநாதன் கலந்துகொள்வார்), புது 5ம் வகுப்பு வரையான பள்ளி, உயர்நிலைப் பள்ளி (ஆரம்பத்தில் அழகான ஆனால் பழைய கட்டிடம்.. பிறகு புது உயர்நிலைப் பள்ளி. இரண்டிலும் படித்திருக்கிறேன்), ஒரு கல்லூரி, அரசு மருத்துவமனை, போலீஸ் ஸ்டேஷன், தனியார் மருத்துவமனை… இவையெல்லாம் 75ல் இருந்தது. ஊரிலிருந்து நடந்துசெல்லும் தூரத்தில் பெரிய மலை.. அதில் சுனை.. பூலாங்குறிச்சி, பொன்னமராவதியை அடுத்த ஊர். பூலாங்குறிச்சியில் அப்போது இல்லாதது திரைப்பட அரங்குகள் மட்டும்தான். படம் பார்க்க பேருந்தில் அல்லது வண்டி கட்டிக்கொண்டு பொன்னமராவதி செல்வார்கள். இப்போது அதனை கிராமம் என்று சொல்கிறாரே.. ஆச்சர்யம்தான்.

  நான் வசித்த அந்த ஊருக்குச் சென்று பார்க்கவேண்டும் என்று பல வருடங்களாக நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s