சிபிஐ, அமலாக்கத் துறை இயக்குநா்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் வரை நீடிக்கப்படுவது யார் நலனுக்காக ….?

“தினமணி ” நாளிதழின் ஆசிரியர் எழுதுகிறார் –

சுருக்கமாக –

 • இதனால், பதவி உயா்வு மறுக்கப்படும்
  பல திறமையான அதிகாரிகள் பாதிக்கப்படுவாா்கள்.
 • அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் பதவி நீட்டிப்புக் கிடைக்கும்
  என்பதால் தங்களது கடமையை அதிகாரிகள் ஒழுங்காக
  நிறைவேற்ற மாட்டாா்கள்.
 • தனது பதவிக்கால நீட்டிப்புக்காக அதிகாரிகள் அரசின்
  ஏவலா்களாக மாறமாட்டாா்கள் என்பதற்கு எந்தவித
  உத்தரவாதமும் கிடையாது.

……………………………………………………………………………………………………………

மத்திய புலன் விசாரணை அமைப்புகளான சிபிஐ,
அமலாக்கத் துறை ஆகியவற்றின் தலைமைப் பொறுப்பு வகிக்கும்
இயக்குநா்களின் பதவிக்காலத்தை தற்போதைய இரண்டு
ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகளாக நீட்டிக்க வழிவகுக்கும்
அவசரச் சட்டங்கள் மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்டு, குடியரசுத்
தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

அவை, நாடாளுமன்றத்தின் குளிா்காலக் கூட்டத் தொடா் நவம்பா்
29-ஆம் தேதி கூட இருக்கும் நிலையில் கொண்டுவரப்பட்டிருப்பது
தான் விவாதத்துக்கும், விமா்சனத்துக்கும் வழிகோலி இருக்கிறது.

அமலாக்கத் துறை இயக்குநா் எஸ்.கே. மிஸ்ராவின் பதவிக்காலம்
ஏற்கெனவே நிறைவடைந்து மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்
பட்டிருக்கிறது. நவம்பா் 17-ஆம் தேதி நிறைவடைய இருந்த அவரது பதவிக்காலத்தை மேலும் நீட்டிக்கக் கூடாது என்கிற
உச்சநீதிமன்றத் தீா்ப்பை எதிா்கொள்வதற்காகத்தான்
நவம்பா் 14-ஆம் தேதி அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது
என்றாலும்கூட, அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எந்த ஒரு தனிப்பட்ட அதிகாரியையும் பதவிக்காலம் முடிந்த
பிறகும் நீட்டிப்பு மூலம் தொடரச் செய்வது என்பது சரியான
நிா்வாக நடைமுறை அல்ல. இதனால், பதவி உயா்வு மறுக்கப்படும்
பல திறமையான அதிகாரிகள் பாதிக்கப்படுவாா்கள்.

அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் பதவி நீட்டிப்புக் கிடைக்கும்
என்பதால் தங்களது கடமையை அதிகாரிகள் ஒழுங்காக
நிறைவேற்ற மாட்டாா்கள்.

பொதுநலன் கருதி சிபிஐ இயக்குநரின் பதவிக்காலத்தை ஒவ்வொரு
முறையும் ஓராண்டுக்குத்தான் நீட்டிக்க முடியும் என்றாலும்,
அதுபோல ஐந்து தடவை நீட்டிப்பு வழங்க அவசரச் சட்டம்
வழிகோலுகிறது. அரசு கொண்டு வந்திருக்கும் தில்லி சிறப்பு
போலீஸ் (திருத்தம்) அவசரச் சட்டத்தின் மூலம் ஒருவரின்
பதவிக்காலத்தை ஒவ்வோா் ஆண்டாக ஐந்தாண்டுகளுக்கு
நீட்டிக்க முடியும். ஒவ்வொரு முறை நீட்டிக்கும்போதும், அதை
நீட்டிப்பதற்கான காரணத்தை அவரை நியமிக்கும் குழு
எழுத்துபூா்வமாக வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும்,
அது வெறும் சம்பிரதாயச் சடங்காகத்தான் இருக்கப் போகிறது.

தனது பதவிக்கால நீட்டிப்புக்காக அதிகாரிகள் அரசின்
ஏவலா்களாக மாறமாட்டாா்கள் என்பதற்கு எந்தவித
உத்தரவாதமும் கிடையாது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடா் நடைபெறாத வேளையில் ஏற்படும்
எதிா்பாராத சூழல்களை எதிா்கொள்ள அரசமைப்புச் சட்டத்தின்
123-ஆவது பிரிவு, அவசரச் சட்டம் பிறப்பிக்கும் அதிகாரத்தை
மத்திய – மாநில அரசுகளுக்கு வழங்கி இருப்பது உண்மை.
அப்படிப் பிறப்பிக்கப்படும் அவசரச் சட்டங்கள் அடுத்த முறை
அவை கூடிய ஆறு வார காலத்துக்குள், அவையின் ஒப்புதலைப்
பெற வேண்டும் என்கிறது அரசியல் சாசனம்.

அரசு நினைத்திருந்தால், இதே அவசரச் சட்டத்தை முன்பே
கொண்டு வந்திருக்கலாம்; கடந்த மழைக்காலக் கூட்டத் தொடரில்
மசோதாவாகத் தாக்கல் செய்து நிறைவேற்றி இருக்கலாம்.
கடைசி நிமிடம் வரை காத்திருந்து, அடுத்த கூட்டத் தொடா்
தொடங்க இருக்கும் வேளையில் கொண்டு வந்திருப்பதுதான்
அரசின் நோக்கத்தை சந்தேகிக்க வைக்கிறது.

அவசரச் சட்டம் என்பது அவசரக்காலச் சூழலை
எதிா்கொள்வதற்காக அரசமைப்புச் சட்டத்தில் சோ்க்கப்பட்ட
விதிமுறை. எந்தவொரு தீா்மானமோ அரசின் நடவடிக்கையோ
அவையில் விவாதிக்கப்பட்டு, பெரும்பான்மை உறுப்பினா்களின்
ஒப்புதலுடன் நிறைவேற்றப்படுவதற்குப் பெயா்தான் நாடாளுமன்ற
ஜனநாயகம்.

ஆனால், 2019-இல் 16 அவசரச் சட்டங்களும், 2020-இல் 15 அவசரச்
சட்டங்களும் நரேந்திர மோடி அரசால் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன.

1861 முதல், பிரிட்டிஷ் காலனிய ஆட்சியிலிருந்து பயன்படுத்தப்பட்டு
வரும் அவசரச் சட்ட வழிமுறை, சுதந்திரத்திற்கு முன்னால்
‘அடிமைத்தனத்தின் அடையாளம்’ என்று பண்டித ஜவாஹா்லால்
நேருவால் வா்ணிக்கப்பட்டது.

ஆனால், சுதந்திர இந்தியாவில் அவா் தலைமையில் ஆட்சி
அமைந்தபோது, பிரதமா் ஜவாஹா்லால் நேருவும், அவரது
அமைச்சரையில் சட்ட அமைச்சராக இருந்த பி.ஆா். அம்பேத்கரும்
அரசியல் நிா்ணய சபையில் அவசரச் சட்ட வழிமுறையை
அரசியல் சாசனத்தில் இணைக்க வேண்டும் என்று வாதாடி
வெற்றியும் பெற்றனா் என்பதுதான் வேடிக்கை.

1952 முதல் 1964 வரையிலான பண்டித நேருவின் ஆட்சியில்
66 அவசரச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ..!!!

எதிா்க்கட்சியில் இருக்கும்போது பாஜக, காங்கிரஸ், மாநிலக்
கட்சிகள் உள்பட எல்லாக் கட்சியினரும் அவசரச் சட்டத்தை
‘சா்வாதிகாரம்’ என்று விமா்சிப்பதும், ஆட்சிக்கு வந்தால்
அதைத் தயங்காமல் பயன்படுத்துவதும் வாடிக்கையாகி விட்டது.

ஜனதா கட்சி (1991 – 80) 28 முறையும், தேசிய முன்னணி (1989 – 91)
16 முறையும், ஐக்கிய முன்னணி (1996 – 98) 17 முறையும்,
வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி
அரசுகள் (1998 – 2004) 58 முறையும் அவசரச் சட்டங்களைப்
பிறப்பித்திருக்கின்றன.

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்
கூட்டணி அரசின் பத்தாண்டு ஆட்சியில் 61 அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டபோது, அதை ‘அவசரச் சட்ட அரசு’ என்று
விமா்சித்த பாஜக, இப்போது கொஞ்சங்கூடக் கூசாமல்
அதே வழிமுறையைக் கையாள்கிறது –
என்பதுதான் வேதனையை ஏற்படுத்துகிறது.

ஒருசில அவசரச் சட்டங்கள் தவிரப் பெரும்பான்மையானவை
அவையில் ஒப்புதலைப் பெறும் நிலையில், எதற்காக இந்த
ஜனநாயக விரோத வழிமுறையைக் கையாள வேண்டும்
என்பதுதான் கேள்வி.

விவாதத்தைத் தவிா்ப்பதற்கா? விமா்சனத்துக்கு வழிகோலி
கவனத்தை திசை திருப்புவதற்கா? எதுவாக இருந்தாலும்
கண்டிக்கத்தக்கது…….!
( – 19-ந்தேதியிட்ட தினமணி நாளிதழின் தலையங்கம்…!!! )

.

……………………………………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.

7 Responses to சிபிஐ, அமலாக்கத் துறை இயக்குநா்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் வரை நீடிக்கப்படுவது யார் நலனுக்காக ….?

 1. Shan சொல்கிறார்:

  நல்ல நீதிபதிகள் 10 மாதங்களில் தூக்கி அடிக்கப்படுகிறார்கள் எனவே நல்ல இயக்குனர்கள் இங்க 5 ஆண்டுகாலம் முழுமையாக பணி செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

  தாங்கள் நினைப்பதை செயலில் செயல்படுத்துகின்ற இயக்குனர்களுக்கு மட்டும் ஐந்து ஆண்டு காலம், இல்லையெனில் அவர்கள் தண்ணியில்லா காட்டுக்கு அனுப்பப்படுவார்கள் அல்லது அகால மரணம் அடைவார்கள்.

 2. புதியவன் சொல்கிறார்:

  //இதனால், பதவி உயா்வு மறுக்கப்படும் பல திறமையான அதிகாரிகள் பாதிக்கப்படுவாா்கள்.
  அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் பதவி நீட்டிப்புக் கிடைக்கும் என்பதால் தங்களது கடமையை அதிகாரிகள் ஒழுங்காக நிறைவேற்ற மாட்டாா்கள்.
  தனது பதவிக்கால நீட்டிப்புக்காக அதிகாரிகள் அரசின் ஏவலா்களாக மாறமாட்டாா்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது.//

  எனக்கு இத்தகைய வாதங்களில் எந்தவித அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. தாங்கள் சொல்வதைச் செய்யும் நீதிபதிகளுக்கு ஓய்வு பெற்ற பிறகு விசாரணைக் கமிஷனின் தலைவர்களாகப் போடுவது, அதிகாரிகளுக்கு கவர்னர் போஸ்ட் போடுவது என்று எல்லா அரசாங்கங்களும் செய்கின்றன. ஓய்வு காலம் வந்தபிறகும் பலவித அரசாங்கப் பணியில் இருப்பவர்களுக்கு ஓய்வுகாலம் நீட்டிக்கப்படுவதையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். புது அரசாங்கம் வந்ததும் பழைய அதிகாரிகளையெல்லாம் ஏன் தூக்கியடிக்கிறார்கள், புதிய தலைமைச் செயலாளர், டிஜிபி என்றெல்லாம் போட்டுக்கொள்கிறார்கள்? அத்தகைய நிகழ்வுகளுக்கு என்ன நியாயங்கள் உண்டோ அவையெல்லாம் இந்தச் சட்டத்திற்கும் உண்டு.

  நீதிபதிகளிலும் ‘நல்ல’ நீதிபதி என்று சொல்பவர்கள், ‘கட்சி சார்பான நீதிபதி’ என்று வெளிப்படையாகச் சொல்வதற்கு அஞ்சுகிறார்களோ?

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  புதியவன்,

  ஆக – தினமணி ஆசிரியர் அறிவில்லாமல்,
  அர்த்தமற்று எழுதுகிறார் என்கிறீர்கள்….!!!

  ஒரு வேளை மத்தியில் காங்கிரஸ் அரசு
  இருந்திருந்தால் …..

  அப்போதும் உங்கள் பதில் இதுவேயாக
  இருந்திருக்குமா….?

  .
  -வாழ்த்துகளூடன்,
  காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   அதைத்தானே எல்லா அரசுகளும் செய்தன, செய்கின்றன. முதல் முதல்ல காங்கிரஸ் அரசுல அப்படி நடந்தபோது எனக்குத் தோன்றியது. அதேபோல மாவட்டச் செயலாளர் ஒருவரை அரசியல் அழுத்தம் கொடுத்து நீதிபதியாக்கி, …. அந்தக் கதையெல்லாம் நீங்க மறந்திருக்கமாட்டீங்க.

   முன்னொரு காலத்துல, ஒருத்தன் குடிக்கிறான், சிகரெட் பிடிக்கிறான் என்றால் ஒரு மாதிரி எல்லோரும் பார்ப்பாங்க. இப்போ குடிக்கலை, சிகரெட் பிடிப்பதில்லை என்றால், ஒரு மாதிரி பார்க்கிறாங்க. கால மாற்றம் அப்படி

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    நீங்கள் நேரடியாக பதில் சொல்வதை
    தவிர்க்கிறீர்கள்….

    இப்போது ஆதரிததது
    அதை செய்திருப்பது பாஜக அரசு என்பதால் …..

    இதையே காங்கிரஸ் செய்திருந்தால் ஆதரித்து
    இருப்பீர்களா என்பது தான் கேள்வி….

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • அருண் சேகர் சொல்கிறார்:

     ஐயா,

     அருமையான கேள்வி.

     புதியவன் போன்றவர்களுக்கெல்லாம் ஆறாவது அறிவு என்று ஒன்று கிடையாது. கட்சி என்ன செய்தாலும் வெட்கமே இல்லாமல், மனசாட்சி இல்லாமல் ஆதரிப்பார்கள்.

     இவரைப்போன்ற அடிமைகள் இருக்கிறவரை சம்மந்தப்பட்ட கட்சியும் திருந்தப்போவது கிடையாது.

     இது எல்லா கட்சி அடிமைகளுக்கும் பொருந்தும்.

   • Tamil சொல்கிறார்:

    புதியவன் – அற்புதமான விளக்கம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.