

மத்திய அரசு செய்யும் சில உதவிகள் வெளியே தெரிவதில்லை;
தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் டமாரம் அடித்து
பெருமை பேசும் அரசியல்வாதிகள் மக்களுக்கு பயனுள்ள
இந்த மாதிரி திட்டங்களைப்பற்றி பேசினால், அவற்றுக்கு
உரிய விளம்பரம் கிடைத்து, பலருக்கு நல்ல வேலை வாய்ப்பும்
உருவாகும்…
பரம்பரை மீனவர்கள் மட்டும் தான் என்றில்லாமல்,
வெளியாருக்கும் வேலை வாய்ப்பை உண்டாக்கித் தரும்
ஒரு நல்ல திட்டத்தைப்பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
10 வருடங்களாக நடந்துவரும் இந்த திட்டத்தைப்பற்றி,
வெளியே எத்தனை பேருக்கு தெரியும்….?
…………………….
கீழேயுள்ள தகவல் விகடன் தளத்திலிருந்து –
மீன் பிடித்தொழில் பல நெருக்கடிகளுக்கு உள்ளாகி வரும்
காலகட்டத்தில், கடலில் மிதவைக் கூண்டு அமைத்து
மீன் வளர்ப்பில் நல்ல லாபம் பார்த்து வருகிறார்கள்
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள்.
மீனவர்கள் குடியிருக்கும் கடற்கரைப் பகுதியிலேயே
மிதவைக் கூண்டு மீன் வளர்ப்பு முறையைச் செயல்படுத்தி
வருகிறார்கள். ‘படகில் சென்று மீன்பிடிப்பதில் உள்ள
சிரமங்களிலிருந்து மீள்வது மட்டுமல்லாமல் அரசின்
தொழில்நுட்ப உதவி, நிதி உதவிகளையும் பெற இந்த
மீன் வளர்ப்பு முறை உதவுகிறது’ என்கிறார்கள் மீனவர்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும்
மீனவர்கள் பல்வேறு பிரச்னைகளைப் பல காலமாகச்
சந்தித்து வருகிறார்கள். பாக் ஜலசந்திப் பகுதியில் ஏர்வாடி,
மூக்கையூர், மாரியூர், வாலிநோக்கம், கீழக்கரை,
பெரியப்பட்டினம், புதுமடம், வேதாளை, மண்டபம், பாம்பன்,
குந்துகால், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, தேவிபட்டினம்,
திருப்பாலைக்குடி, நம்புதாளை, தொண்டி என மாவட்டத்தில்
2,000 விசைப்படகுகள், 2,500 சிறு படகுகள் மற்றும்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மூலம்
மீன்கள் பிடிக்கப்படுகின்றன.
அறுவடையான மீன்கள்
மீன்பிடித்தொழிலை நேரடியாகவும் மறைமுகமாகவும்
லட்சக் கணக்கான மக்கள் நம்பியிருக்கிறார்கள்.
வெளிமாவட்ட மீனவர்களும் இங்கு வந்து மீன் பிடிக்கிறார்கள்.
இதனால் கடலில் மீன்வளம் மிகவும் குறைந்துள்ளது.
இது மட்டுமல்லாமல் எல்லை கடந்து செல்வதால்
சிறைபிடிப்பு, துப்பாக்கிச் சூடு எனப் பல துயரங்களுக்கும்
ஆளாகிறார்கள்.
இந்நிலையில், கடலில் மீன் பிடிப்பதைத் தவிர,
வேறெந்தத் தொழிலும் தெரியாத மீனவர்கள், இருக்கிற
பகுதியிலேயே நிம்மதியாக மீன் தொழில் செய்ய வேண்டும்
என்ற நோக்கில் மண்டபத்தில் உள்ள மத்திய
மீன் ஆராய்ச்சி நிலையத்தினர் மிதவைக் கூண்டுகள் மூலம்
மீன்கள் வளர்க்கும் முறையைக் கண்டுபிடித்துச் சில
வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்தார்கள்.
இதன் மூலம் நல்ல பலன் கிடைத்ததால் தற்போது
மாவட்டத்தில் பல இடங்களில் மிதவைக் கூண்டு மூலம்
மீனவர்கள், மீன்களை வளர்த்து வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் கடலோரங்களில் 150 மிதவைக்
கூண்டுகள் அமைத்துள்ள நிலையில், ராமநாதபுரம்
மாவட்டம், ராமேஸ்வரம் வட்டாரத்தில் முனைக்காடு,
நாலுபனை, தங்கச்சிமடம், மரைக்கார்பட்டினம், குந்துகால்,
சின்னப்பாலம் பகுதியில் 60 கூண்டுகள் மூலம்
தற்போது மீன் வளர்க்கப்பட்டு வருகிறது.
மிதவைக் கூண்டுகள்
இதுகுறித்து, மண்டபம் அருகேயுள்ள முனைக்காடு
கடற்கரையில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள முகம்மது
நூகுவிடம் பேசினோம். ‘‘பல ஆண்டுகளாகப்
பாரம்பர்யமான முறையில் மீன் பிடிச்சுட்டு வந்தோம்.
வர வர கடல்ல ‘பாடு’ (மீன்களின் அளவு) சரியா
கெடைக்க மாட்டேங்குது. கடலுக்குப் போறச் செலவுகளும்
அதிகமாகிட்டே போகுது. ஒவ்வொரு தடவையும்
கடலுக்குப் போகும்போது வருமானத்துக்கும் உயிருக்கும்
உத்தரவாதமில்லை. இது பெரிய கவலையா இருந்துச்சு.
அப்பத்தான் இப்படிக் கூண்டு மூலம் மீன் வளர்க்குற
முறையைப் பத்தி, மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி
நிலைய (சி.எம்.எஃப்.ஆர்.ஐ) அதிகாரிங்க சொன்னாங்க.
‘கரைக்குப் பக்கத்துலயே கடலுக்குள் இரும்புக் குழாய்
மூலம் உருவாக்கிய பாதுகாப்பான மிதக்கும் கூண்டை
கடற்கரையில இருந்து கொஞ்சம் தள்ளி ஆழமான பகுதியில
அமைக்கணும். அதுல நல்லா வேகமா வளர்ற, நல்ல
விலைக்குப் போற குறிப்பிட்ட சில மீன் குஞ்சுகளை
விடணும். பிறகு, அதுக்கு உணவு போட்டுட்டு வந்தா போதும்.
ஆறேழு மாசத்தில மீன் குஞ்சுகள் 2 கிலோ முதல் 6 கிலோ
வரை வளர்ந்துடும்’னு சொன்னாங்க.
மீன்
அவங்க சொன்னபடி, சிலபேர் சேர்ந்து ஆளுக்குக் கொஞ்சம்
பணம் போட்டு ஆரம்பிச்சோம். ஆரம்பகட்டத்துல 2 லட்சம்
ரூபாய் செலவாச்சு. மீன் குஞ்சுகளும், அப்பப்ப தேவைப்படும்
ஆலோசனைகளையும் ‘சி.எம்.எப்.ஆர்.ஐ’ அதிகாரிங்க
கொடுத்தாங்க. கடல்ல மிதவைக் கூண்டு அமைச்சு,
மீன் குஞ்சுகளை விட்டோம். தினமும் அதுங்களுக்கு
உணவுக்காகச் ‘சாளை’ மாதிரியான விலை குறைவான
சின்ன வகை மீன்களைக் கொண்டு்போய்க் கூண்டுக்குள்ள
போடுவோம். அதைச் சாப்பிட்டு, மீன் குஞ்சுகள் வளர
ஆரம்பிச்சுடும். கூண்டுல வளர்ற மீன்களைக் கடலில்
உள்ள பெரிய மீன்கள் சாப்பிட்டுடாம இருக்க, கீழே
பாதுகாப்பா ஒரு வலை இருக்கும். அதே மாதிரி
கடல் பறவைகள் தூக்கிடாத வகையில பாதுகாப்பா
வலை போட்டுக் கூண்டை மூடிடுவோம்.
‘‘8 மாதங்களில் 2 கிலோ முதல் 6 கிலோ வரை
வளர்ந்துவிடும். சராசரி 2 கிலோன்னு வெச்சுக்கிட்டாலும்
800 மீன்கள் மூலம் சராசரியா 1,600 கிலோ கிடைக்கும்.’’
இந்தக் கூண்டு வளர்ப்பில் ‘கோபியா’ன்னு சொல்லுற
கடல் விரால், சேவனிப் பாறை, கொடுவா, சிங்கி இறால்
வளர்க்கலாம். நாங்க கோபியா மீன்தான் வளர்க்கிறோம்.
ஆறு மாசம் கழிச்சு மீன் நல்லா வளர்ந்ததும்
வியாபாரிங்ககிட்டே கொடுத்துருவோம். கிலோ 300 இருந்து
350 வரைக்கும் போகும்’’ என்றவர் வருமானக்
கணக்கைச் சொல்லத் தொடங்கினார்.
சராசரி 2 கிலோன்னு வெச்சுக்கிட்டாலும் 800 மீன்கள்
மூலம் சராசரியா 1,600 கிலோ கிடைக்கும். ஒரு கிலோ
சராசரியா 300 ரூபாய் விலை போகும். அந்த வகையில
4,80,000 ரூபாய் லாபம் கிடைக்கும். இதுல சரிபாதி
செலவானாலும் 2,40,000 ரூபாய் லாபமா கிடைக்கும்.
அது மட்டுமல்லாமா நாம செலவு செஞ்சதுல 40
சதவிகிதத்தை மத்திய அரசாங்கம்
மானியமா தருது. அதை நாங்க பிரிச்சுக்குவோம்.
ஒரு கூண்டுன்னு இல்லை, நாலஞ்சு கூண்டுகளும்
அமைச்சுக்கலாம். அதுக்கு தமிழ்நாடு மீன்வளத்துறை
அலுவலகத்தில் மட்டும் அனுமதி வாங்கிக்கணும்.
இந்தத் தொழில் நல்லபடியா போகுது. இங்க மட்டும்
5 குழுக்கள் மூலம் மீன் வளர்க்குறோம்.
மீன் அறுவடையில்
10 வருஷமா இதைப் பண்ணிட்டுருக்கோம். நல்லா
லாபம் வருது. வளர்ப்பு மீனாக இருந்தாலும் கடல்
மீனைப்போலவே சுவையாகவும் தரமாகவும் இருக்கும்.
குடும்பத்தை விட்டுப் பிரிஞ்சிருக்கத் தேவையில்லை.
கடலுக்குப் போகும்போது குடும்பத்துல உள்ளவங்களுக்கு
இருந்த பதற்றம் இப்ப இல்லை. இது மட்டுமல்லாம
கடலோரத்துல ‘அகர் பாசி’ வளர்க்குற முறையிலும்
சம்பாதிக்கலாம். அதையும் நாங்க பண்றோம். அதுக்கும்
அதிகாரிங்க பயிற்சி கொடுத்து ஏற்பாடு பண்ணித் தர்றாங்க’’
என்று மகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார்.
தொடர்புக்கு,
முகம்மது நூகு,
செல்போன்: 98948 40382.
மானியம் 40 சதவிகிதம்!
மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள்
ஜெயக்குமார், தமிழ்மணி, ஜான்சன் ஆகியோர்
மீனவர்களுக்குக் கூண்டு மூலம் மீன் வளர்க்க
ஆலோசனைகளும் ஏற்பாடுகளும் செய்து கொடுக்கிறார்கள்.
மிதவைக் கூண்டு முறை மீன் வளர்ப்பு குறித்துப் பேசிய
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மத்திய கடல்மீன்
ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி ஜெயக்குமார்,
“மீனவர்களின் கஷ்டத்தைக் குறைக்க வேண்டும்.
அதே நேரம் கடலில் மீன்வளத்தை அதிகரித்து மீனவர்கள்
அதிக லாபம் பெற வேண்டும் என்ற நோக்கில் பல
திட்டங்களை மண்டபம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி
நிலையம் செய்து வருகிறது.
பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தில், கடலோரத்தில்
உணவுப்பாசி வளர்ப்பது, அலங்கார மீன்கள் வளர்ப்பது,
மிதவைக் கூண்டு மூலம் மீன்கள் வளர்ப்பது போன்ற
திட்டங்களுக்குப் பயிற்சி அளித்துச் செயல்படுத்தி
வருகிறோம். தற்போது இந்த வட்டாரத்தில் கோபியா மீன்
வளர்ப்பு வெற்றிகரமாக நடந்துவருகிறது. இதன் நோக்கம்
குறைந்த முதலீடு, எளிய வளர்ப்பு முறை, சுலபமான
முறையில் அறுவடை, அதிகமான லாபம், தரமான
புரத உணவை உற்பத்தி செய்தல் என்பதுதான்.
மிதவைக் கூண்டுகள்
2 முதல் 3 ஆண்டுகள் ஆயுட்காலம் உள்ள இரும்பால்
செய்யப்பட்ட மிதவைக்கூண்டுகள் அல்லது 10 முதல் 15
ஆண்டுகள் தாங்குகின்ற பலமான பாலித்தீன் மூலம்
உருவாக்கப்பட்ட 6 மீட்டர் விட்டமுடைய மிதவைக்
கூண்டுகளில், 3 வலைப்பைகள் அமைக்கப்படும். உள்ளே
20 முதல் 30 மில்லி மீட்டர் அளவுள்ள மீன் குஞ்சுகள்
விடப்படும். கடலில் பிற மீன்களிடமிருந்தும் காக்க
கூண்டின் வெளிப்புறத்தில் ஒரு வலையும், மேற்பரப்பில்
பறவைகளிடமிருந்து மீன்களைப் பாதுகாக்க ஒரு வலையும்
அமைக்கப்பட்டுள்ளன. கரையில் உள்ள இக்கூண்டுகளை
5 முதல் 6 மீட்டர் ஆழமுள்ள கடல்பகுதிக்குக் கொண்டு
சென்று நங்கூரம் மூலம் நிலை நிறுத்த வேண்டும்.
மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையம்
6 மீட்டர் விட்டமுள்ள ஒரு கூண்டு கோபியா மீன் வளர்ப்பு
மூலம் ரூ.3 லட்சம் வரை லாபம் கிடைக்கும்.
செலவுத்தொகையில் 40 சதவிகிதத்தை மத்திய அரசு
மானியமாக வழங்குகிறது. அதிலும் இத்தொழிலில்
ஈடுபட்டுள்ளவர்கள் பட்டியலினத்தவர்களாகவும்,
பெண்களாகவும் இருந்தால் 60 சதவிகிதம் மானியம்
பெறலாம். தனிநபர்கள் 5 கூண்டுகள் வரையும்,
குழுவாக வளர்த்தால் 50 கூண்டுகள் வரையும் மானியம் பெறலாம்.
கூண்டு மீன் வளர்ப்பில் ஈடுபட நினைப்பவர்கள் முதலில்
தமிழ்நாடு மீன்வளத் துறை அலுவலகத்தில் அனுமதி
பெற வேண்டும். இத்திட்டம் பற்றித் தொழில்நுட்ப பயிற்சிக்கு
எங்களை அணுகலாம். இது ஆபத்து இல்லாத சூழலுக்குக்
கேடு செய்யாத நல்ல லாபமான தொழில். மீனவர்கள்
மட்டுமில்லாமல் மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்களும்
ஈடுபடலாம்” என்றார்.
தொடர்புக்கு, மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையம்,
மண்டபம், ராமநாதபுரம் மாவட்டம்.
செல்போன்: 94890 36516, தொலைபேசி: 04573 241443

ஆண்டுக்கு 700 கோடி ரூபாய்
தமிழகத்தில் தற்போது 150 கூண்டுகள் மூலம் கோபியா மீன்
வளர்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 135 டன் மீன்கள் உற்பத்தியாகி
4.5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாடு
முழுவதும் 1,500 கூண்டுகள் மூலம் பலவிதமான மீன்கள்
10,000 டன் உற்பத்தி செய்யப்பட்டு 700 கோடி ரூபாய்க்கு
ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளது.
(நன்றி – விகடன் தளம் )
.
…………………………………………..