
சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 7-ஆம் தேதி அற்புதமான
ஒரு உத்திரவை பிறப்பித்து இருக்கிறது..
அரக்கோணம் தாலுக்கா, கோனுர் கண்டிகை கிராமத்தில் உள்ள
மேய்கால் புறம்போக்கு நிலத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப்
பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனுமதி
பெறாமல் சிலை வைக்கப்பட்டுள்ளதால், சிலையை அகற்ற
தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து, அந்த
கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வீரராகவன் சென்னை
உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு அக்டோபர்
7-ந்தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, நெடுஞ்சாலைகளில் சிலைகள் வைக்கக் கூடாது என
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால்,
சிலையை அகற்றியதில் எந்தத் தவறும் இல்லை என,
அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
( நுணலும் தன் வாயால் கெடும்…!!!)
இதையடுத்து, சட்ட விதிகள் மற்றும் உச்ச நீதிமன்றத்
தீர்ப்புகளைப் பின்பற்ற வேண்டியது மிக அவசியம் எனத்
தெரிவித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம்,
தமிழகம் முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலைகள்,
அரசு நிலங்கள், பொதுச் சாலைகள், மேய்க்கால் புறம்போக்கு
ஆகிய இடங்களில் உள்ள சிலைகளை 3 மாதங்களில்
அடையாளம் கண்டு அகற்ற வேண்டும். இது தொடர்பாக
விரிவான விதிகளையும் வகுக்க வேண்டும் என தமிழக
அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதைவிட பிரமாதம் –
தமிழகத்தில் “தலைவர் பூங்கா” க்களை உருவாக்கி சாலைகள்
மற்றும் பொது இடங்களில் இருக்கும் தலைவர் சிலைகளை –
- அத்தகைய பூங்காவில் வைத்துப் பராமரிக்க வேண்டும் என
உத்தரவிட்ட நீதிபதி,
( இது அதைவிட பிரமாதம்…!!! )
- அந்தச் சிலைகளை பராமரிப்பதற்கான செலவுகளைச்
சிலை வைக்க அனுமதி பெற்றவர்களிடமிருந்தே வசூலிக்க
வேண்டும்.
- சிலைகள் பராமரிப்புத் தொகை செலுத்தாதவர்களிடம் இருந்து,
அத்தொகையை வசூலிக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
– இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக,
3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டார்.
இந்த சந்தர்ப்பத்தில் நீதிமன்றம் மேலும் கூறி இருப்பது –
அரசியல் கட்சிகள், மதம், சாதி, மொழி சார்ந்த அமைப்புகள்
தங்கள் விருப்பப்படி சிலைகளை அமைக்கின்றனர். தலைவர்கள்
சிலைகளை வைக்க அனைவருக்கும் உரிமை உண்டு,
அதேசமயம் பொது இடங்களில் சிலைகள் வைக்கக்கூடாது.
சமுதாயத்துக்காகத் தியாகம் செய்த தலைவர்களை எந்த ஒரு
தருணத்திலும் சாதி ரீதியாக அடையாளப்படுத்தவும் கூடாது.
ஆட்சி அதிகாரத்துக்கு வரும் கட்சி, தங்கள் தலைவர்களின்
சிலைகளை வைக்கின்றனர். பொது இடங்கள், சாலைகளில்
சிலைகள் வைப்பதைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்…!!!
……………….
ஒருவிதத்தில் – தமிழக அரசு வக்கீல்,
தானாக முன்வந்து விளைவைப்பற்றி யோசிக்காமல் வாதாடி
மாட்டிக்கொண்டாலும்,
பார்க்கும் இடங்களில் எல்லாம் சிலைகளைப் பார்க்கும்
சாபக்கேட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்த வகையில் –
சமூகத்திற்கு பெரும் தொண்டாற்றியவராகிறார்.
……………….
ஆனால், இது குறித்து – ஒன்றிரண்டு சந்தேகங்கள் –
- இனியும் அந்த வக்கீல், அரசு வக்கீலாக
தொடர்வாரா…? - தமிழக அரசு இந்த உத்திரவை ஏற்று செயல்படுமா…?
அல்லது அப்பீலுக்குச் செல்லுமா…? - (அதாவது தன்னுடைய வாதத்திற்கு எதிராக – தானே…!!!)
.
…………………………………………………………………………………………….…..