சூப்பர் “ஜனநாயகம்” – ….!!!”வொண்டர்ஃபுல்” – தேர்தல் கமிஷன்…!!!

உலகத்திலேயே பெரிய ஜனநாயக நாடு இந்தியா…
சந்தேகமே இல்லை. ஆனால் –
அந்த “ஜனநாயகம்” இந்தியாவில் எந்த லட்சணத்தில்
இருக்கிறது…?

கடந்த மே மாதம் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின்போது,
ஜனநாயகம் இங்கே எவ்வளவு “சூப்பராக” செயல்பட்டது…
அதை செயல்படுத்தும் பொறுப்பில் இருந்த தேர்தல் கமிஷன்
எத்தனை “சிறப்பாக” கண்காணித்து செயலாற்றியது என்பதை
உணர்ந்து கொள்வதற்கு – வலையிலிருந்து திரட்டப்பட
சில “சாம்பிள்” கள் கீழே – !!!

…………………………..

சட்டமன்றத் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள், ஒரு சட்டமன்ற
தொகுதிக்கு, அதிகபட்சமாக 30.8 லட்ச ரூபாய் வரைதான் செலவு
செய்ய முடியும் என்று சட்டபூர்வமாக வரையறுக்கப்பட்டிருக்கிறது….

பூத் கமிட்டிக்கு ஒரு தொகை,
பிரசார வாகனத்துக்கு ஒரு தொகை,
வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு தொகை,
போஸ்டர் மற்றும் நோட்டீஸுக்கு ஒரு தொகை,
பிரசாரத்துக்கு வருபவர்களுக்கு சாப்பாடு, டாஸ்மாக்,
தவிர ஓட்டுக்கு 500 முதல் 2,000 வரை என்று தொகுதிக்கு
தகுந்தாற்போல் – நடைமுறையில் எவ்வளவு தேவைப்படும்
என்பதை ஓரளவு நாமே யூகிக்க முடியும்; முடியாதவர்களுக்கு
பின்னால் தனியே தருகிறேன்…

சராசரியாக ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 6 லட்சம் வாக்காளர்கள்
உள்ள நிலையில் – தேர்தல் கமிஷனின் 30.8 லட்சம் எந்த மூலைக்கு –
நடைமுறை சாத்தியம் என்பது ஒரு பக்கம்….

கடந்த சட்டமன்ற தேர்தலில், சில தொகுதிகளில்
நின்ற வேட்பாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட கட்சிகள் கொடுத்த
நிதிஉதவி மற்றும் வேட்பாளர்களுக்கு “வெளி”-யிலிருந்து
கிடைத்த நன்கொடைகள் ப்ளஸ் வேட்பாளர்கள் தங்கள் “சொந்த”
நிதியிலிருந்து செலவழித்த தொகை -ஆகிய விவரங்கள்
தேர்தல் கமிஷனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டு விட்டனவாம்….

அதிலிருந்து “கொஞ்சம்” துளிகள் –

………………
தி.மு.க –

கட்சித் தலைமையிலிருந்து அனைத்து வேட்பாளர்களுக்கும்
தலா 25 லட்சம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

சில வேட்பாளர்களின் தகவல்கள் மட்டுமே வெளியாகியுள்ளன –

பி.டி.ஆர். அவர்களுக்கு – கட்சி -25 லட்சம். “வெளி”
நன்கொடை -1 லட்சம்.மொத்த செலவே 16.9 லட்சம் தானாம்…
அதாவது கிடைத்த பணமே செலவாகவில்லை;
சொந்தப்பணம் எதுவுமே போடவில்லை;
லாபம் -9.1 லட்சம் + எம்.எல்.ஏ.பதவி, அமைச்சர் பதவி…..!!!

திருச்சி கே.என்.நேரு அவர்களுக்கு கட்சி 25 லட்சம் +
“வெளி”யிலிருந்து நன்கொடை 10 லட்சம் ….
(வெளி =அவரது சொந்த சகோதரர் ரவிச்சந்திரன் அவர்கள்…!)

சைதை மா.சுப்ரமணியன் அவர்களுக்கு கட்சி 25 லட்சம் +
சொந்தப்பணம் 7.26 லட்சம்….

கூட்டணியான த.வா.க. பண்ருட்டி வேல்முருகன் அவர்களுக்கு
திமுக-விலிருந்து 25.25 லட்சம்…

பாஜக –

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட பாஜக
வேட்பாளர் திருமதி வானதி சீனிவாசன் அவர்களுக்கு
கட்சியிலிருந்து கொடுக்கப்பட்ட உதவி – 15 லட்சம்.
வெளியிலிருந்து வந்த நன்கொடை -18.44 லட்சம்,
சொந்தப்பணம் 60,000 (ஆமாம் – வெறும் அறுபது ஆயிரமே…)
ஆக மொத்தம் 34.4 லட்சம்.
தொகுதிக்கான வேட்பாளர் செலவு மொத்தம் 27.2 லட்சம்
மட்டுமே என்று கணக்கு தரப்பட்டுள்ளதாம்.

ஆக மொத்தம் லாபம் 7.2 லட்சம்+ MLA பதவி….!!!

கரூர் சட்டமன்ற தொகுதியில் நின்ற பாஜக அண்ணா’வுக்கு –
கட்சி கொடுத்தது – 15 லட்சம். வெளியேயிருந்து தனிப்பட
கிடைத்த நன்கொடை -25 லட்சம். ஆக மொத்தம்
வரவு 40 லட்சம்…

செலவு என்று காட்டப்பட்டிருப்பது 19.5 லட்சம் மட்டுமேயாம்.
ஆக இந்த வேட்பாளருக்கு தேர்தலில் நின்றதன் மூலம்
கிடைத்திருக்கும் லாபம் – 20.5 லட்சம்.

தாராபுரம் சட்டமன்ற தேர்தலில் நின்ற எல்.முருகன் அவர்களுக்கு
கட்சியிலிருந்து கிடைத்தது 19 லட்சம்…! சொந்தப்பணம்
49,000 ரூபாய் போட்டிருக்கிறாராம். ஆக மொத்தம் செலவு
19.49 லட்சம். லாபம் – எதுவும் இல்லை;
எம்.எல்.ஏ. பதவியும் கிட்டவில்லை.

ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் நின்ற திருமதி
குஷ்பு’வுக்கு கட்சி கொடுத்த நிதி – 15 லட்சம். சொந்தப்பணம்
2 லட்சம். மேலும், தனது சொந்த திரைப்பட கம்பெனியான
அவ்னி’யிலிருந்து – 5 லட்சம் கடன் வாங்கினாராம்….!!!
ஆக மொத்த செலவு -22 லட்சம்.
லாபம் எதுவும் இல்லை…!!!
எம்.எல்.ஏ. பதவியும் கிடைக்கவில்லை.

அதிமுக –

எடப்பாடியார் – சொந்தப்பணம் – கையிலிருந்து மூவாயிரம்
ரூபாய் (மட்டுமே…!!!) ப்ளஸ் விஜயகுமார் என்பவரிடமிருந்து
வாங்கிய கடன் -29 லட்சம்.

ஓபிஎஸ் அவர்கள் – மொத்தச் செலவு 17.35 லட்சம்..
அத்தனையும் சொந்தப்பணமாம்…!!!

விழுப்புரம் தொகுதியில் நின்ற சி.வி.ஷண்முகம் அவர்கள்
சொந்தப்பணம் 6.15 லட்சமும், மொத்த நன்கொடையாக
வந்த 15.8 லட்சமும் ( இதில் 29 பேரிடமிருந்து தலா
20,000 அன்பளிப்பாம் ) செலவழிக்கப்பட்டிருக்கிறதாம்.

ம.நீ.ம –

ம.நீ.ம. கட்சி சார்பாக நின்ற அனைத்து வேட்பாளர்களுக்கும்,
கட்சியிலிருந்து தலா 30.8 லட்சம் கொடுக்கப்பட்டதாக
கணக்கு காட்டப்பட்டிருக்கிறது.

தினகரனின் அ.ம.மு.க – கட்சி –

கோவில்பட்டியில போட்டியிட்ட அ.ம.மு.க டி.டி.வி. தினகரன்,
சொந்தப்பணம் 75,878 போக மனைவி அனுராதா
அவர்களிடமிருந்து இருந்து 30 லட்சம் கடன் வாங்கினதாக
கணக்கு கொடுத்திருக்கிறாராம்…!!! பெர்ஃபெக்ட் அக்கவுண்ட்…!!!

சீமான் அவர்களின் நா.த.கட்சி –

கட்சியிலிருந்து வேட்பாளர்கள் அனைவருக்கும்
ஆளுக்கு 10,000 (பத்தாயிரம் ரூபாய்) கொடுக்கப்பட்டதாம்.

காங்கிரஸ் மற்றும் வி.சி. கட்சி –

அவரவர் கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு
தலா 5 லட்சம் மட்டும் கட்சியிலிருந்து கொடுக்கப்பட்டதாம்.

தே.மு.தி.க. –

ஒவ்வொரு வேட்பாளருக்கும், கட்சியிலிருந்து தலா –
3 லட்சம் கொடுக்கப்பட்டதாம்.

…………………………………..

தேர்தல் கமிஷனைப் பொருத்தவரையில் ஒவ்வொரு
வேட்பாளரின் செலவுக் கணக்கும் 30.8 லட்சத்தை தாண்டக்கூடாது.
அத்தனை வேட்பாளர்களும் – கனகச்சிதமாக இந்த மார்ஜினுக்குள்
தங்கள் தங்கள் செலவினங்களை காட்டி விட்டார்கள்….

அப்படியானால் – உண்மையிலேயே சட்டமன்ற தேர்தலில்
புரண்டது இவ்வளவு பணம் தானா….?
எக்கச்சக்கமாக “எல்லாமே” பெருக்கெடுத்தோடியதே
என்று நினைக்கிறீர்களா…..?

அது தான் “காந்தி” கணக்கு…. படாதபாடுபட்டு, சுதந்திரம்
வாங்கிக்கொடுத்த காந்திஜிக்கு – இந்த அரசியல்வாதிகள்
காட்டியுள்ள “மரியாதை” – “காணிக்கை” ….!!!

மேலே போட்டோவைப் பாருங்களேன் – காந்திஜி எவ்வளவு
மகிழ்ச்சியோடு இவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்…!!!

………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to சூப்பர் “ஜனநாயகம்” – ….!!!”வொண்டர்ஃபுல்” – தேர்தல் கமிஷன்…!!!

  1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நமது விமரிசனம் தளத்தில் வந்திருக்கும்
    இந்த இடுகை புகைப்படத்தை இவர் பார்த்திருக்க
    வாய்ப்பில்லை; இருந்தாலும் –

    ———————————————–

    ரூபாய் நோட்டுகளிலிருந்து மஹாத்மா காந்தி
    படத்தை நீக்குங்கள் –

    பிரதமருக்கு, ராஜஸ்தான் எம்.எல்.ஏ. பரத் சிங்
    ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்…. அதில் –
    நாட்டில் அனைத்து துறைகளிலும்
    ஊழல் தலைவிரித்தாடுகிறது.
    லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது
    என்ற நிலை நாடு முழுதும் உள்ளது. மக்களும்
    லஞ்சம் கொடுத்து காரியங்கள் நிறைவேற்ற
    பழகிவிட்டனர். கடந்த 2019 ஜன.1ம் தேதி முதல்,
    2020 டிச.31 வரை 616 ஊழல் வழக்குகள் பதிவு
    செய்யப்பட்டுள்ளன. அதாவது தினமும் இரண்டு
    ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    லஞ்சமாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் தான்
    அதிகளவில் கொடுக்கப்படுகின்றன; இது, ரூபாய்
    நோட்டுகளில் உள்ள மஹாத்மா காந்தி படத்துக்கு
    செய்யும் அவமரியாதை என்று தான் கூற வேண்டும்.
    அதனால் 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளில்
    மஹாத்மா காந்தி படத்தை நீக்க வேண்டும்.

    ஏழைகள் அதிகமாக பயன்படுத்தும் 5, 10, 20, 50, 100
    மற்றும் 200 ரூபாய் நோட்டுகளில் மட்டும்
    மஹாத்மா காந்தி படத்தை அச்சடித்தால் போதும்.
    இது தான் மஹாத்மாவுக்கு நாம் செய்யும் சிறந்த
    மரியாதையாக இருக்கும்…என்று அவர் கூறியுள்ளார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.