
ஒரு பாடலின் மூலம் ஆடியன்ஸ் அத்தனை பேரையும்,
பல நிமிடங்களுக்கு தொடர்ந்து – விழுந்து விழுந்து சிரிக்க வைத்த
காட்சி, எனக்குத் தெரிந்து தமிழில் – அநேகமாக இது ஒன்று தான்…!!!
“பலே பாண்டியா” திரைப்படத்தில் எம்.ஆர்.ராதாவும்,
சிவாஜியும் (கூடவே பாலாஜியும்) அதகளப்படுத்தும்
“நீயே உனக்கு என்றும் நிகரானவன்” பாடல் காட்சியை
ஒருமுறை பார்த்தவர்கள் யாரும் வாழ்நாள் முழுவதும்,
அந்தக் காட்சியைப்பற்றிய நினைப்பு வந்தால் கூட
சிரிப்பை வரவழைக்கக்கூடிய அவ்வளவு சிறப்பான ஒரு சீன்….!!!
அந்தக்காட்சி, பாடலை இடுகையின் கடைசியில்
இணைத்திருக்கிறேன்.
அந்தப்பாடல் படமாக எடுக்கப்பட்டபோது (ஷூட்டிங் சமயத்தில்)
நடந்த தமாஷான பின்னணியை அழகாக விவரித்திருக்கிறார்
எழுத்தாளர் முகில் அவர்கள்…. அவருக்கு நன்றியுடன் –
அந்த வர்ணனை கீழே –
…………………………………………
‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
மாமா… மாப்ளே…’
பாடலை முதன் முதலில் செட்டில் கேட்டார் ராதா.
அவரது குரல் போலவே இருந்தது அது.
‘அட யாருப்பா இது? நான் பாடுன மாதிரியே இருக்குது?’
– ஆச்சரியமாகக் கேட்டார். விவரம் சொன்னார்கள்.
பாடலைப் பாடிய எம். ராஜூவை உடனே பார்க்க வேண்டும் என்று விருப்பப்பட்டார் ராதா. அவர் எம்.எஸ்.
விஸ்வநாதன் குழுவிலிருந்தவர். வரவழைக்கப்பட்டார்.
ஒல்லியாக, சிவப்பாக இருப்பார் அவர். ராதா முன் சென்று
நின்றார். ‘என்னப்பா பாடகரை அழைச்சுட்டு வரலையா?’
கேட்டார் ராதா. இவர்தான் என்றார்கள்.
‘பாடுனது நீங்களா?’ – ராதாவுக்கு ஆச்சரியம்.
‘ஆமாண்ணே’ என்றார் ராஜூ. மென்மையான குரல்.
‘எனக்கு அதிசயமா இருக்கு. பேசறப்போ இவ்வளவு மெதுவா
பேசறீங்க. என் குரல்லயே பாடியிருக்கீங்க. உங்களை எப்படிப்
பாராட்டறதுன்னே தெரியலை. நான் உன்னை மறக்கவே
மாட்டேன் தம்பி. யாருப்பா அங்க? தம்பிக்கு காப்பி கொடுங்க’ உபசரித்து அனுப்பினார் ராதா.
அந்தப் பாடலில் நடிப்பதற்காக சிவாஜி பலமாக பயிற்சி
எடுத்துக் கொண்டிருந்தார். பாடலில் கிட்டத்தட்ட இரண்டு, மூன்று
நிமிடங்களுக்கு ஆலாபனை வருமே. அதற்காகத்தான்
அவ்வளவு பயிற்சி.
‘அண்ணே, நீங்க மாட்டிக்கிட்டீங்க’ என்ற போகிற போக்கில்
ராதாவையும் கலாட்டா செய்துவிட்டுப் போனார் சிவாஜி.
உண்மையிலேயே அவ்வளவு பெரிய ஆலாபனைக்கு
உதடசைப்பதெல்லாம் ராதாவுக்குக் கடினமான காரியமாகத்தான் தோன்றியது.
நேராக டைரக்டரிடம் வந்தார்.
‘இங்க பாரு பந்தலு. கணேசன் மாதிரில்லாம் நம்மளால
முடியாது. கேமராவை வைச்சுக்கோ. நான் பாட்டுக்கு ஆக்ட்
பண்ணுவேன். எங்க எனக்கு உதடசைக்கிறது கரெக்டா
வருதுன்னு தெரியுதோ, அந்த இடத்துல கேமாராவுக்கு
முகத்தைக் காட்டுவேன்.
மத்த இடத்துல குனிஞ்சுகிட்டுதான் இருப்பேன். வேற
வழியில்லப்பா. நீ பாட்டுக்கு டைட் குளோஸ் அப்பெல்லாம்
வைச்சிடாதே. அப்பப்ப கட் சொல்லிடாதே. சரியா?’
சொல்லிவிட்டு ராதா ஷாட்டுக்குச் சென்றார்.
பாடல் படப்பிடிப்பு ஆரம்பமானது. பாதி பாடல் வரை
ஒழுங்காகப் போனது. ஆலாபனைக் காட்சிகள் வரும்போது,
ராதா தன் உதடசைவுகளை அட்ஜெஸ்ட் செய்ய –
உட்கார்ந்திருக்கும் சோபாவிலிருந்து குதியோ குதியென்று
குதிக்க ஆரம்பித்தார். ஏகப்பட்ட சேஷ்டைகள் செய்தார்.
செட்டில் டைரக்டர், கேமராமேன், லைட் பாய் உள்பட
எல்லோராலும் சிரிப்பை அடக்கமுடியவில்லை. சில ரீடேக்குகள் ஆகத்தான் செய்தன.
ஒரு கட்டத்தில் ராதா திடீரென பெரிய பாடகர் போல காதருகே
தன் இடது கையை வைத்து, வலது கையை நீட்டி
பயங்கர ஆக்ஷன் கொடுப்பதை பாடலில் காணலாம். ஆனால் அது ஆக்ஷன் அல்ல. நடந்த விஷயமே வேறு.
ஏகத்துக்கும் குதித்ததில் ராதாவின் விக் லூஸாகி
விட்டிருந்தது. அந்த ஷாட் முடியப் போகும் நேரம் அது.
விக் கழண்டு விட்டால், இன்னொரு முறை நடிக்க வேண்டியது வருமே. அந்தச் சமயத்தில்தான் பெரிய
பாடகர் போல ஆக்ஷன் செய்து, விக்கைக் காப்பாற்றிக்
கொண்டார் ராதா.
அந்தப்பாடல் காட்சி கீழே –
(சிரிக்காமல் இருந்து தான் பாருங்களேன் – பார்க்கலாம்….!!!)
…………………………..