சிறு வயது ” சோ ” “முரடன்…சில்மிஷக்காரன்…பந்தய விரும்பி….!” – எழுத்தாளர் சிவசங்கரி

cho-5

sivasankari

திருமதி சிவசங்கரி – ஒரு அருமையான எழுத்தாளர்… புனைவுக்கதைகளை விட அவரது அனுபவக்கட்டுரைகள் அதிகம் விரும்பப்படுபவை.. துக்ளக் ஆசிரியர் சோ அவர்களுடன் நீண்ட காலமாக தோழமையுடன் பழகியவர்…. அந்த உரிமையில் ‘சோ’ அவர்களைப்பற்றி தன் மனதில் இருப்பவற்றை யெல்லாம் வெளிப்படையாகச் சொல்கிறார் இங்கே – வெகு சுவாரஸ்யமான கட்டுரை…..

…………………………………………………………………………..

சோ

சோ…

இவரை நான் முதன்முதலில் எப்போது பார்த்தேன்? எப்போது இவரோடு முதலில் பேசினேன்?

ம்ஹூம், சொல்லத் தெரியவில்லை.

ரொம்ப வருஷங்களாகப் பார்த்து, பேசி, பழகிவரும் உணர்வுதான் மனசில் வியாபிக்கிறதே தவிரவும், திட்டவட்டமாய் என்று சந்தித்தேனென்று ஆணியடிக்கத் தெரியவில்லை.

‘இஃப் ஐ கெட் இட்’ (If I Get It) நாடகம்… கல்லூரிப் படிப்பை சிலர் முடித்தும், சிலர் முடிக்காமலும் இருந்துகொண்டே, விவேகா ஃபைன் ஆர்ட்ஸை உருவாக்கி, சின்னச்சின்னப் பசங்களாக சோவும் அவர் நண்பர்களும் மேடையில் லூட்டியடித்த நாட்கள் அவை. அவர்களைவிட ரொம்பச் சின்னப் பெண்ணாக, ஆர்.ஆர். சபாவின் முதல் வரிசையில் அப்பா, அம்மா, கூடப்பிறந்தவர்களோடு உட்கார்ந்து நான் சிரித்து ரசித்த நாட்கள் அவை.

ப்பா… என்ன அட்டகாசம், என்ன வால்தனம்! மேடை என்ற உணர்வே இல்லாமல், டயலாக்கை மறந்துவிட்டுச் சிரிப்பார்கள்… அன்றைய பேப்பரில் வெளியான செய்தியை வைத்து சுடச்சுட வசனம் பேசுவார்கள்… இஷ்டத்துக்கு இட்டுக்கட்டி, சமயோஜிதமாகச் சமாளிப்பார்கள்… மொத்தத்தில், ரொம்பவும்தான் கூத்துக்கட்டி அடிப்பார்கள்!

நாடகம் முடிந்ததும், சித்தப்பா சபாவின் செக்ரட்டரி என்ற ஹோதாவில் நாங்கள் மேடைக்குப் போவோம். கலைஞர்களைப் பாராட்டுவோம். வீட்டுக்கு வந்து, ஆளாளுக்கு நாடகத்தின் டயலாக்குகளைப் பேசி சந்தோஷிப்போம்.

இப்படி, ‘ஹலோ, சௌக்கியமா?’ ‘நாடகம் படு அமர்க்களம்!’ என்னும் சம்பாஷணைகளுடன் நின்றிருந்த எங்கள் நட்பு, நான் பேனா பிடிக்கத் தொடங்கியதும் தீவிரமாகப்போகும் அறிகுறியைக் காட்டியது.

1969-ல் ஆனந்த விகடனில் ‘காத்திருக்கிறேன்’ என்ற மாதத் தொடர்கதை வெளியான சமயம்…

அதே ஆர்.ஆர். சபா…

நடுவரிசையில் உட்கார்ந்திருந்த என்னிடம் சோ வந்தார். தன் முட்டைக் கண்களை இன்னும் அகல விரித்தார்.

“ஆனந்த விகடன்ல எழுதறது நீங்களா?” என்றார்.

ஆமாமென்று தலையாட்டினேன்.

முகத்தில் ஆச்சர்யக்குறி மாறாமலேயே, “நிஜம்மாவா?” என்றார்.

திரும்பத் தலையாட்டினேன்.

ஒரு கணம் யோசித்தார்… அப்புறம், “இல்ல… ரொம்ப நன்னா இருக்கு, அதான் கேட்டேன்!” என்று சிரிக்காமல் பேசிவிட்டு நகர்ந்துவிட்டார்!

அவருக்கு நான் சளைத்தவளா, என்ன!

அந்தப் புத்தகத்தை வானதி பதிப்பகம் வெளியிட்ட பிறகு, ‘டு சோ – தி மேன் ஹூம் ஐ அட்மையர் (அன்ஃபார்ச்சுனேட்லி)!’ (‘To Cho – the man whom I admire (unfortunately)!’ என்று எழுதி அவருக்குக் கொடுத்தேன்!

அன்றிலிருந்து இன்றுவரை, அவருடைய அத்தனை நாடகங்களையும் நான் ஓசியில்தான் பார்த்திருக்கிறேன். பேப்பர் மூலம் மாலையில் சோ நாடகம் இருப்பதைத் தெரிந்துகொண்டு, அவருக்கு போன் செய்து, “சாயங்காலம் நாடகம் பாக்கணுமே…” என்பேன்.

“எத்தனை டிக்கெட் வேணும்?” என்பார்.

“நாலு… ரெண்டாவது வரிசையில, மத்தியில இருக்கணும்…” என்று நான் உரிமையுடன் கண்டிஷன் போடுவேன்.

என்னுடைய இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற ரங்காச்சாரியை அழைத்து, “சிவசங்கரி அவங்க குடும்பத்தோட வரணுமாம்… பெஸ்ட் சீட் வேணுங்கறாங்க… சென்டர்ல ஒரு ஊஞ்சல் கட்டி ஜோடிக்க ஏற்பாடு பண்ணிடு!” என்று என் காதில் விழுகிறார்போலவே சொல்லி, என்னை நையாண்டி செய்த நாட்களும் உண்டுதான்.

நடிகர் சோ, பத்திரிகையாசிரியர் சோ, எழுத்தாளர் சோ, அரசியல்வாதி சோ, நண்பர் சோ – என்று பல கோணங்களிலிருந்து அவரைப் புரிந்துகொள்ளும் சந்தர்ப்பங்கள் எனக்கு அமைந்திருக்கின்றன.

எல்லோரையும்விட, நண்பர் சோவாக அவர் என்னைக் கவர்ந்திருப்பதே எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சி தருகிற சமாச்சாரம்.

சின்ன வயசில் சோ முரடனாக, சில்விஷமக்காரனாக, பந்தயத்துக்காக எதையும் செய்யும் பேர்வழியாக இருந்தாராம்.

‘ரிக்ஷாவில் போகும் நபரின் முதுகில், பின் ஃப்ளாப்பை (flap) தூக்கி, குத்திவிட்டு வரவேண்டும்’ என்று ஒரு பையன் பந்தயம் கட்டினான் என்பதற்காக, முன்பின் தெரியாத மனிதரின் பின்னால் ஒங்கிக் குத்திவிட்டு ஓடிவந்ததுண்டாம்!

“வாட்! நிஜம்மாவா? அப்பறம் என்னாச்சு?”

“என்னாச்சு? அங்க நின்னா புடிச்சு அடிப்பான்னு தெரியும்… ஓடிப் போயிட்டேன்!” சோவுக்கு அடக்கமாட்டாமல் சிரிப்பு.

இதே குறும்புத்தனத்தை நான் எப்போதும் அவரிடம் கண்டிருக்கிறேன்.

ஒருமுறை விழுப்புரத்திலிருந்து சென்னைக்குப் போயிருந்த சமயத்தில் சோவுக்கு போன் பண்ணி, “உங்களுக்கு நா பத்து தரம் போன் பண்ணியாச்சு… பதிலுக்கு ஒருதரம் நீங்க செஞ்சா என்னவாம்?” என்று கேட்டதும், “ம்… அப்படியா?” என்று மௌனமாயிருந்தார். பிறகு, “ஓகே… கவுண்ட்!” என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.

மறு நிமிஷம் போன் அடித்தது. எடுத்தேன். “ஒண்ணு…” என்றவர், தொடர்பைத் துண்டித்துவிட்டார். அரை நிமிஷத்தில் இன்னொரு கால். “ரெண்டு.” துண்டிப்பு. திரும்ப “மூணு.” “நாலு.” “அஞ்சு.” …

நான் “ஹலோ…” என்றோ, வேறு எதுவோ சொல்வதற்கு முன், தொடர்பைத் துண்டித்துவிடுவார்.

ஆறு முடிந்து ஏழு ஆவதற்குள், எதிரில் அமர்ந்திருந்த என் மாமனார் மாமியார் அனைவருக்கும், சிரித்துச்சிரித்து வயிறு வலிக்கத் தொடங்கிவிட்டது!

எட்டாவதை எடுக்கும்போதே, “ஸாரி… ஸாரி… சொன்னது தப்புதான்! போதும்…” என்று நான் கூற, “அப்படி வாங்க வழிக்கு!” என்று சோவும் தன் விளையாட்டை நிறுத்திக்கொண்டார்!

ஒழிந்தபோது ‘துக்ளக்’ ஆபீஸுக்குப் போய் உட்கார்ந்துவிடுவேன். மணி போவது தெரியாமல் நாங்கள் அரட்டையடிப்போம்.

ஒருநாள், பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தை ‘நன்றி கெட்ட விதுரா’ விலிருந்து படித்துக் காண்பிப்பார்.

இன்னொரு நாள், அரசியலைப் பற்றின என் சந்தேகங்களுக்குக் கடுகத்தனை வேடிக்கை கலக்காமல் தீவிரமாகப் பதில் சொல்லுவார்.

இன்னும் ஒரு நாள், “நீங்க ஒரு மேல் ஷாவனிஸ்ட்!” என்று நான் குற்றம் சாட்ட, “ஆமா, பொம்பளைங்களுக்குப் பேசறதைத் தவிர என்ன தெரியும்?” என்று பதில் சொல்லுவார்.

தான் பிடித்த முயலுக்கு மூணே கால் என்று பிடிவாதமாகச் சாதிக்கும் அவர் குணம் எனக்குப் பிடிக்காத ஒன்று.

அலுக்காமல் சலிக்காமல் சண்டை போடுவோம். அவர் பாயிண்ட்டை அவர் விட்டுக்கொடுக்க மாட்டார், என் கட்சியை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன்.

ஆனால் ஒருதரம், “எதுக்காகப் பெண்களை சதா உங்க நாடகங்கள்ல மட்டம் தட்டறீங்க? உண்மையாவே அவங்க உங்க மதிப்பைப் பெறாதவங்களா, சோ?” என்று நான் கேட்டபோது, முகம் சிரிப்பை மறந்து தீவிரமாக, “நீங்ககூட இப்படிக் கேட்டா எப்படி? பெண்களை சுலபமா கேலி பண்ண வர்றது, தட்ஸ் ஆல்!” என்று அவர் பதில் சொல்லியிருக்கிறார்.

பல வருஷங்களுக்கு முன் திடுமென்று ஒருநாள் எனக்கு போன் செய்து, “துக்ளக்குக்கு அதிகமா பெண் வாசகர்கள் இல்லேங்கறதை மாத்தலாமோன்னு தோண்றது… தொடர்ந்து ‘துக்ளக்’ல ரெண்டு பக்கம் நீங்க எழுத முடியுமா? I will give you total freedom as to what you should write…” என்றார்.

குறிப்பிட்ட சில காரணங்களால் என்னால் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள முடியாதுபோனாலும், நிஜமாகச் சொல்கிறேன், சோ இப்படி என்னைக் கேட்டதை எனக்குக் கிடைத்த பெரிய பாராட்டுகளில் ஒன்றாகவே நினைக்கிறேன்.

“உங்களையே நீங்க விமர்சிக்க முடியுமா, சோ?” என்று நான் அவரிடம் ஒரு தடவை கேட்டேன்.

பைப்பினுள் ஒரு குட்டி ப்ரஷ்ஷை விட்டு அதை சுத்தம் பண்ணி, தலைகீழாய் டொக்டொக்கென்று தட்டி, அதில் புகையிலையை நான்கு சிட்டிகை திணித்து, நெருப்புக்குச்சியின் பின்பக்கத்தால் கெட்டித்து, பற்றவைத்து, இரண்டு இழுப்பு இழுத்து, அது அணைந்துபோனதும் திரும்ப அதைப் பற்றவைத்த பின், சோ தலை நிமிர்ந்தார்.

“என்னோட மைனஸ் பாயிண்ட்டுகளை முதல்ல சொல்லிடறேன்… கோவம்… எஸ், திஸ் ஈஸ் மை வொர்ஸ்ட் எனிமி! பத்து வருஷம் முன்னால, நாடகம் நடக்கறப்போ ஒரு ஆள் முன்வரிசைல உக்காந்து, ‘பேசாதீங்க’ன்னு நா சொல்லச் சொல்ல லொடலொடன்னு பேசினப்ப, கோவம் தாங்காம நா அவரை அடிச்சிட்டேன்! ஒரு கணம்தான்… தென் ஐ ஃபெல்ட் எக்ஸ்ட்ரீம்லி பேட்! இந்தக் கோவத்தை அடக்கணும்னு நா அன்னிக்குதான் முடிவெடுத்தேன்! வாஸ்தவமாவே இப்ப நா நிறைய மாறியிருக்கேன். பழைய கோவம் இப்ப இல்ல. ஆனா, இன்னும் குறையணும். அப்பறம்… என் பிடிவாத குணம்… ‘எத்தனை க்ரிடிசைஸ் பண்ணாலும் எடுத்துக்கறே, ஆனா, அதன்படி எவ்வளவு தூரம் நடைமுறைல உன்னை மாத்திக்க நீ தயாரா இருக்கே?’ன்னு என் ஃப்ரெண்ட்ஸ் அடிக்கடி கேக்கறது வழக்கம்…”

பேச்சை நிறுத்தி, திரும்ப தன் பைப்புக்கு ஷோடஸ உபசாரங்களைச் செய்தபின், சோ தொடர்ந்தார்.

“நேர்மையாவும், வேஷம் போடாமயும் நா இருக்கறது என்னோட ப்ளஸ் பாயிண்ட்ஸ். ஒரு நல்ல, உண்மையான நண்பனா நா இருக்கறது, என்கிட்டயே எனக்குப் பிடிச்ச விஷயம். அதனாலதான், இருவத்தியஞ்சு வருஷத்துக்கும் மேலா என்னோட சினேகிதமா இருக்கற ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்கன்னு நினைக்கறேன். எனக்கு அமைஞ்ச சினேகிதங்க மாதிரி, எத்தனை பேருக்கு அமைவாங்கன்னு எனக்குத் தெரியாது! மை ஃப்ரெண்ட்ஸ் ஆர் மை அசெட்ஸ்!”

பேசிக்கொண்டேபோகும் சோ முகத்தில், சட்டென்று ஒரு சந்தோஷம், பூரிப்பு.

நண்பர்களை நினைத்துவிட்டால் அவர் மனசு சிலிர்த்துப்போகிற மாதிரிதான் எனக்குத் தோன்றுகிறது. சோவின் சினேகிதர்களுக்கும் இப்படியொரு உணர்வுதான் அவரைப் பொறுத்தவரை எழும் என்பதையும் என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்.

பல வருஷங்களாக இந்த நட்பை ஓரளவுக்கு அனுபவித்து, அதன் மூலம் அறிவு வளர்ச்சியும், அப்பழுக்கில்லாத நிம்மதியையும் உணர்ந்தவள் என்ற ரீதியில், இப்போது ஒன்று சொல்ல விரும்புகிறேன்… ‘சோ பெண்களை மட்டமாகக் கருதுபவர், தான் ஒரு புத்திசாலியான ஆண் என்ற அகந்தை கொண்டவர்’ என்று அவரைப்பற்றி பலர் எண்ணிக்கொண்டிருக்கலாம்… ஆனால், இது சரியில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

வாஸ்தவத்திலேயே ஒரு பெண்ணுக்குக் கேடு உண்டானால், அல்லது அவள் பெண்மை களங்கப்படுத்தப்பட்டால், அதைத் தடுத்து நிறுத்த மனசாலும் செயலாலும் தன்னால் இயன்றதைச் செய்ய முன்வருபவர்களில் சோ முதல் ஸ்தானம் வகிப்பார் என்பதே என் அபிப்ராயம்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to சிறு வயது ” சோ ” “முரடன்…சில்மிஷக்காரன்…பந்தய விரும்பி….!” – எழுத்தாளர் சிவசங்கரி

  1. புதியவன் சொல்கிறார்:

    //புனைவுக்கதைகளை விட அவரது அனுபவக்கட்டுரைகள் அதிகம் விரும்பப்படுபவை..// – அப்படி இல்லை கா.மை. சார். அவரது சின்ன நூற்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது நல்ல நூல்தான். இருந்தாலும் அவரது 47 நாட்கள், மெள்ள மெள்ள மெள்ள, ஒரு மனிதனின் கதை, நண்டு, பாலங்கள் போன்ற பல தொடர்கதைகள் வாசகர்களைக் கட்டிப்போட்டவை . புனைவுக் கதைகளானாலும், அவ்வளவு அருமையாக எழுதும் எழுத்தாளர். விகடன் ஒரு காலத்தில் அவரது பல தொடர்கதைகளைச் சுமந்தது. இந்திரா காந்தியைச் சந்திக்கவும் அவரை விகடன் நிர்வாகம் அனுப்பியது என்று நினைக்கிறேன் (பேட்டிக்காக, அவருடன் ஒரு நாள் இருந்து, அதைப் பற்றி எழுத). சமீபத்தில் அவர் நிறைய நற்செயல்கள் செய்துகொண்டிருப்பதாகப் படித்தேன். அவர் ஆரோக்கியமாக இருக்கப் ப்ரார்த்திக்கிறேன்.

    சோ – அவரைச் சந்திக்காத வாசகர்கள் ஆயிரக்கணக்கில் உண்டு. ஆனால் அவர் தங்களுக்கு நெருக்கமானவர், அவர் பொய் சொல்ல மாட்டார், அவரது நேர்மையைச் சந்தேகிக்கவே முடியாது என்றெல்லாம் எண்ணும் வாசகர்கள் அனேகம். அதில் நானும் ஒருவன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.