



” க்ரிப்டோ கரன்ஸி ” பற்றி உங்களுக்கு தெரியுமா…?
அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் உண்டா…?
இந்த இரண்டுக்கும் “இல்லை” என்பது உங்கள் பதிலானால்,
நீங்கள் கொடுத்து வைத்தவர்…. அப்படியே இருந்து விடுங்கள்.
ஓரளவு அதைப்பற்றி கேள்விப்பட்டு, தன்னிடம் இருக்கும்
சேமிப்பை அதில் போட்டு, பெருக்க முடியுமா என்று
நப்பாசையில் துடிப்பவர்கள், அந்த வலையில் வீழ்ந்து –
தங்களிடம் இருக்கும் கொஞ்ச பணத்தையும் இழந்து விடாமல்
காப்பாற்றிக் கொள்ள இந்த இடுகை தரும் தகவல்கள் ஓரளவு
உதவுமென்று நம்புகிறேன்.
……………………
கிரிப்டோகரன்சிகள் என்றால் என்ன?
அவற்றில் முதலீடு செய்யலாமா?
உலகில் இறையாண்மை பெற்றுள்ள நாடுகள்தான்
செலாவணிகளாக நோட்டுகளையும் காசுகளையும் அச்சிட
முடியும். ஆனால், அதற்கு மாற்றாக தனியார் உருவாக்கியுள்ள
செலாவணிதான் கிரிப்டோகரன்சி எனப்படுகிறது.
ரூபாய் நோட்டுகள் என்பவை வெறும் காகிதங்கள். ஆனால்,
அவற்றுக்கு மதிப்பு எப்படி வருகிறதென்றால், அரசு என்ற
அமைப்பின் மீது உள்ள நம்பிக்கையால்தான் வருகிறது.
புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளுக்கு இணையாக
ரிசர்வ் வங்கியில் தங்கம் இருக்கிறது என பெரும்பாலான
மக்கள் கருதுகிறார்கள்.
ஆனால் அவ்வாறில்லாமல் –
நாடுகள் தங்கள் விருப்பம்போல நோட்டுகளை அடிக்க
ஆரம்பித்துவிட்டன. அமெரிக்காவிலும் அதுதான் நடக்கிறது.
இந்த நிலையில்தான், சிலர் ஒன்று சேர்ந்து, கிரிப்டோ
கரன்சியை உருவாக்கினார்கள். நாடுகள் எந்த அடிப்படையான
ஆதாரமும் இல்லாமல் பொறுப்பற்ற வகையில் நோட்டுகளை
அடித்துத் தள்ளுவதால் அதற்கு மதிப்பில்லாமல் போவதாகக்
கூறி இந்த செலாவணியை உருவாக்கினார்கள். இதற்கு
பிளாக் செயின் என்ற கம்ப்யூட்டர் தொழில்நுட்பம்
பயன்படுத்தப்படுகிறது.
இந்த கிரிப்டோகரன்சியில் மிக முக்கியமான விஷயம்,
அது மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் இருக்கும். புதிய
கிரிப்டோகரன்சிகளை டேட்டா மைனிங் செய்து எடுப்பது
செல்லச்செல்ல கடினமாகிக்கொண்டே போகும்.
சென்னையில் ஒரு யூ டியூப் சேனலில் பணியாற்றியவர்கள்,
அதன் உரிமையாளருக்குத் தெரியாமல் மிக விலை உயர்ந்த
சக்திவாய்ந்த கம்ப்யூட்டர்களை வாங்கி, ஒரு பிட்காயினை
மைனிங் செய்துவிட்டார்கள்.
ஆனால், அடிப்படையில் பிட்காயின் போன்ற கிரிப்டோ
கரன்சிகளுக்கென எந்த மதிப்பும் கிடையாது. அவை மிகக்
குறைந்த எண்ணிக்கையில் இருக்கின்றன என்பதுதான்
அவற்றின் ஒரே மதிப்பு.
ஒரு நாள் கிரிப்டோ கரன்சிகள் தான் உலகை
ஆளப்போகின்றன என்று சொல்லி நம்மை நம்பவைக்கிறார்கள்.
அதானால் தான் இவற்றின் மதிப்பு ஏறிக்கொண்டே போகிறது.
( ஏமாறத் தயாராக இருக்கும் வரை –
ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்…)
பிட் காயினுக்குக் கிடைத்த வெற்றியால் பலரும் இது
போன்ற கிரிப்டோ கரன்சிகளை உருவாக்க ஆரம்பித்தார்கள்.
ஈதரம் என ஒரு கிரிப்டோகாயின் உருவாக்கப்பட்டது.
இதற்குப் பிறகு ஈலோன் மஸ்க் ஒரு கிரிப்டோவை
உருவாக்கினார். இப்போது ஆயிரக்கணக்கில் கிரிப்டோ
கரன்சிகள் வந்துவிட்டன.
இன்றைய தின – க்ரிப்டோ கரன்சிகளும் அவற்றின்
(பொய்) விலை மதிப்பும் –
பிட்காயின் – 42,212 டாலர்
எதிரியம் – 2,906.30 டாலர்
ரிப்பிள் – 0.9177 டாலர்
கார்டானோ – 2.09 டாலர்
போல்காடாட் – 27.45 டாலர்
டோஜ்காயின் – 0.199 டாலர்
( மேலே புகைப்படங்களில் இருக்கும் அத்தனையும்
ஏமாற்றுவேலை – பிட்காயின்’கள் எதற்குமே உண்மையாக
உருவம் என்று ஒன்றும் கிடையாது….(ஆண்டவன் மாதிரி –
அவரவரவருக்கு பிடித்த வடிவத்தில், உருவாக்குபவர்கள்
கவர்ச்சிகரமாக, வடித்துக் கொள்கிறார்கள்…!!!)
தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை நகரங்களில் பெயர்
தெரியாத கிரிப்டோ கரன்சிகளை வணிகம் செய்து
கொண்டிருக்கிறார்கள்.
இப்போது சீனா கிரிப்டோ கரன்சிக்கு தடை விதித்துவிட்டது.
இதனால், முதல் மூன்று – நான்கு இடங்களில் உள்ள
கிரிப்டோகரன்சிகள் பாதிக்கப்படாது.
ஆனால், மிகச் சிறிய அளவிலான கிரிப்டோ கரன்சிகள்
காணாமல் போகக்கூடும். நம் ஊரில் இந்த சிறிய
கரன்சிகளில்தான் வர்த்தகம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே நம் மக்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு மிக அதிகம்.
வேறு சில நிறுவனங்கள், ஒரு பிட் காயினை வாங்கி,
அதனை பிரித்து விற்கிறார்கள். ஆனால், உண்மையில்
அவர்களிடம் பிட்காயின் இருக்கிறதா என்பது தெரியாது.
இது யாராலும் கட்டுப்படுத்தப்படாத, கண்காணிக்கப்படாத
பரிவர்த்தனை என அவர்களே சொல்கிறார்கள்.
ஏமாற்றப்பட்டால் ஒன்றும் செய்ய முடியாது. இதில் அந்த
நிறுவனத்துக்கு உள்ளே தான் வர்த்தகம் நடக்கும்.
இப்படி கிரிப்டோ கரன்சிகளை வளர விடுவது தேசத்திற்கு
ஆபத்து என மெல்லமெல்ல நாடுகள் உணர
ஆரம்பித்திருக்கின்றன. சீனா முதலில் விழித்துக்
கொண்டுவிட்டது. அதைத் தடைசெய்துவிட்டது.
மற்ற நாடுகள் இதனை உணரும்போது, அவர்களும்
தடைசெய்வார்கள்.
( இந்தியாவில் இது குறித்து ஆராய – ரிசர்வ் வங்கி
ஒரு குழுவை அமைத்துள்ளது…. அதன் முடிவு அறிக்கை
நல்லபடியாக, உருப்படியாக – விரைவில் வெளிவந்து –
இந்திய அரசு நம் நாட்டில் க்ரிப்டோ கரன்சிக்கு
விரைவில் தடை விதிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல
அந்த இறைவனை வேண்டிக்கொள்வோமாக….!!!
( ஏனெனில், அரசியல்வாதிகள் யாரும் தாமாக இதைச்செய்ய முன்வரப்போவதில்லை….)
(சில தகவல்களுக்கு நன்றி – பிபிசி செய்திகள்….)
பின் குறிப்பு – இது குறித்து, என் கருத்துக்கு எதிரான கருத்துள்ள வாசக நண்பர்களும் இருக்கலாம்… அத்தகைய வாசக நண்பர்கள் தங்கள் கருத்துகளை பின்னூட்டம் மூலம் தெரிவிக்கலாம். “பிட் காய்ன்” அபிமானிகளின் தரப்பு வாதத்தையும் நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
…………………………………………………………………………………………………………………………………………………..
என்னுடைய பையன், பிட்காயினில் இன்வெஸ்ட் பண்ணச் சொல்லி, அவன் 9ம் வகுப்பு படிக்கும்போது எனக்கு அட்வைஸ், என் ஆபீசில் வைத்துத் தந்தான். அப்போது நான் நினைத்திருந்தால் பத்து பிட்காயின் அல்லது அதற்கு மேலும் வாங்கியிருக்கலாம். (without any concern) எனக்கென்னவோ காயின் சூதாட்டத்தில் (ஷேர் மேலும் எனக்கு அதே எண்ணம்தான்… அதில் ஈடுபட்டு அது சூதாட்டம் என்று கண்டுகொண்டேன்) விருப்பம் இல்லாததால் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது, இந்தப் பயல், அப்போவே நிறையத் தெரிந்துவைத்திருந்திருக்கிறானே என்ற எண்ணம்.
10 Bitcoin’s current value is 3 crores
ஆமாம். ஆனால் அப்போது நான் நினைத்திருந்தால் நூறோ அதற்கு மேலோ வாங்கக்கூடிய சக்தி சர்வசாதாரணமாக இருந்தது. ஆனால் வாழ்க்கையில் ஒன்றை நன்றாகப் புரிந்துவைத்திருக்கிறேன், என் சொந்த அனுபவத்தில்.
நமக்கு வாழ்க்கையில், கோடி ரூபாய் இருந்தாலும் ஐந்து ஜிலேபி, பத்து சரவணபவன் (90கள், இப்போ உள்ள ஹோட்டல் அல்ல) சாப்பாடு சாப்பிடணும்னு எழுதி வைத்திருந்தால் அதற்கு மேல் சாப்பிடவே சாத்தியமில்லை.
இது பற்றி ஒரு நாள் எழுதுகிறேன். இங்கு, இந்தியாவில் கிடைக்கும் பெரும்பாலான வெளிநாட்டு பிராண்டுகள் (சாக்லேட், கார்ன்ஃப்ளக்ஸ், ஐஸ்க்ரீம்…… ஏன் பெப்சி கோலா கூட), தரம் மிக மிக்க் குறைந்தது. வெளிநாட்டில் அதே உணவுப்பொருட்கள் தரமானவை. ஆனாலும் அவைகளை உண்ண எனக்குக் கொடுத்துவைக்கவில்லை.
புதியவன்,
வாங்கக்கூடிய “சக்தி” இருந்தபோது நீங்கள்
வாங்காததற்கான காரணம் என்ன…?
அப்போது -முழுமையான நம்பிக்கை வரவில்லை என்பது தானே… ?
பின்னர் இடையில் கொஞ்ச காலம் –
வாங்கி இருக்கலாமோ என்ற எண்ணமும்
இருந்திருக்கும் – அல்லவா…?
இப்போது வரும் செய்திகளைக் கேட்கும்போது –
அப்பாடி – தப்பித்தோம் என்றும் தோன்றக்கூடும்…
சரி தானே….?
நீங்கள் நஷ்டம் அடையக்கூடாது என்பது தான்
உங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் – விதி….
அதை நினைத்து நீங்கள் மகிழ வேண்டும்….
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
பதிலைப் படித்துப் புன்னகைத்தேன். நான் வாங்க விட்டுப்போன, வீடுகள், நிலங்களும் (ie ground) அதிகம். அதற்கு என் கொள்கை (எந்தக் காரணம் கொண்டும் வங்கிக் கடனோ இல்லை வேறு விதக் கடனோ வாங்க மாட்டேன், க்ரெடிட் கார்ட் வைத்துக்கொள்ள மாட்டேன்) முதல் காரணம். எத்தனையோ பேர் என்னிடம் சொல்லியும் கடன் வாங்கி நிலமோ இடமோ வாங்கவில்லை. இப்போது அவைகளை நினைத்துக்கொண்டு கொஞ்சம் வருத்தம் வரும். ஷேரிலும் நஷ்டம் அடைந்தேன் (அளவு உங்களுக்கு மயக்கம் வந்துவிடும்). பிறகு, சம்பளம் தவிர வேறு வகையில் பணத்தைப் பெருக்கக்கூடாது என்று முடிவு எடுத்துவிட்டேன்.
இருந்தாலும் பிட் காயின் என்பதெல்லாம் சூதாட்டத்தைவிட மோசமானது, ஏமாற்றுவேலை.
ஒவ்வொரு கரன்சிக்கு பின்னாலும் தங்கம் இல்லாவிட்டாலும் ஒரு நாடு இருக்கிறது. யூரோவுக்கு பல நாடுகளின் கூட்டமைப்பு. ஆனால் இந்த கிரிப்டோ கரன்சிக்கு பின்னால் தனியார் மட்டுமே. வேறு எந்த ஆதாரமும் இல்லை. கனடாவின் தனியார் நிறுவனமான Quadriga வின் நிறுவனர்களில் ஒருவரான Gerald Cotten 30 வயதில் திடீர் என்று மரணமடைந்த உடன் அவர் பொறுப்பில் இருந்த 145 மில்லியன் டாலர் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சிகளை மீட்க முடியவில்லை! அவர் லேப்டாப் password யாருக்கும் தெரியாததால்.
இந்த மாதிரி கரன்சிகள் மறைவது, கரன்சியை காணாமல் போவது எல்லாம் நடக்கும்.
என்னை பொறுத்தவரை இது ஒரு மிகப்பெரிய ஏமாற்றுவேலை!