ஸ்வாமிகள் கணக்கு …. ரகு…!!!( வாசக நண்பர் ஒருவரின் முதல் படைப்பு -)

2 நாட்களுக்கு முன்னர், நெதர்லாந்திலிருந்து நித்தி என்கிற
வாசக நண்பரொருவர் எழுதியிருந்த பின்னூட்டத்திற்கு
நான் பதிலெழுதியபோது, வாசக நண்பர்களும் இங்கே
எழுதுவதை வரவேற்கிறேன் என்று எழுதியிருந்தேன்.

அதனையேற்று முதன் முதலாக ரகு என்கிற வாசக நண்பர்,
இன்று ஒரு இடுகையை அனுப்பி இருக்கிறார்….
மிகுந்த மகிழ்ச்சியுடன் அதை கீழே பிரசுரித்திருக்கிறேன்.

வரும் காலத்தில் வாசக நண்பர்களிடையேயிருந்து நிறைய
எழுத்தாளர்கள் இந்த தளத்தில் உருவெடுப்பார்கள்
என்று நம்புகிறேன்.

அதற்கு முன்னதாக அந்த பின்னூட்டத்திலிருந்து
குறிப்பிட்ட பகுதி கீழே –

…………………………………………………………………………………………………………………………………………………..


மற்றவர்களையும் இங்கே இணைத்துக்கொண்டால்
நன்றாக இருக்கும் என்று ஆலோசனை கூறி
இருக்கிறீர்கள்….

உங்கள் யோசனையை உளமாற வரவேற்கிறேன்.

நான் கிட்டத்தட்ட கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து
இந்த வலைத்தளத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

நான் முன்பெல்லாம் மற்றவர்களை இங்கே எழுத
அழைக்காததற்கான முக்கிய காரணம் –

துவக்கத்திலிருந்தே நான் அதிகமாக அரசியல் மற்றும்
சமூக நலன் சார்ந்தே எழுதிக் கொண்டிருந்தேன்.

அநேகமாக எனது எல்லா இடுகைகளும் கடுமையான
விமரிசனங்களை கொண்டிருக்கும்.
அரசியல்வாதிகளையும்,
ஆளும் கட்சிகளையும்
மத்திய, மாநில அரசுகளையும்,
சமூகத்தில் உலவும் போலி மனிதர்களையும்,
போலி சந்நியாசிகளையும் –
மிகக்கடுமையாக சாடிக் கொண்டிருந்தேன்….
இதற்காக நான் பல
எதிர்விளைவுகளையும் சந்திக்க நேர்ந்தது….

என் கொள்கைகளுக்கு, என் எழுத்துக்கு – அதனால்
ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு – முழுக்க முழுக்க
நான் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று நான்
எண்ணியதால் – யாரையும் துணைக்கு அழைக்கவில்லை;

ஆனால் – அதையும் மீறி கடந்த காலங்களில் –

பல நண்பர்கள்,
பின்னூட்டங்களின் மூலம் எனக்கு பெரும் துணையாக,
அரணாக இருந்தார்கள். அவர்கள் யார், எந்த ஊர்,
என்ன தொழில் – என்பதெல்லாம் ஒன்றும் எனக்கு
தெரியாது… ஆனால் உடுக்கை இழந்தவன் கை போல்
எனக்கு துணையாக இருந்தார்கள். தங்களின்
பின்னூட்டங்களின் மூலம் எனக்கு வலு சேர்த்தார்கள்.

இப்போதெல்லாம் அரசியல் எழுதுவதை கொஞ்சம்
குறைத்துக் கொண்டிருக்கிறேன்…( நிறுத்தவில்லை…!!!)

எனக்குப் பிடித்த பல்வேறு விஷயங்களைப்பற்றி
எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இங்கே நான் எழுதுகின்ற செய்தி – உங்களுக்கு
மட்டும் என்றில்லாமல் –

வாசக நண்பர்கள் அனைவருக்கும் போய்ச்சேர
வேண்டும் என்பதால், உங்களுக்கு தனியே
பதில் எழுதாமல் – இங்கேயே –
இந்த தளத்திலேயே எழுதுகிறேன்.

ஓரளவு தமிழில் கருத்துகளை தெளிவாகச் சொல்ல
முடியும் என்கிற நம்பிக்கையுடைய நண்பர்கள்
யாராக இருந்தாலும், இந்த விமரிசனம் தளத்தில்
எழுதலாம்… அவர்களது எழுத்தை
விமரிசனம் தளத்தில் – அவர்கள் பெயரிலேயே
பிரசுரம் செய்ய நான் மிகவும் விரும்புவேன்.

வாசக நண்பர்கள் அனைவருக்குமே
இந்த அழைப்பினை நான் விடுக்கிறேன்.

ஒரே ஒரு கட்டுப்பாடு தான்….

அவர்கள் யாரும், தாங்கள் சார்ந்த அல்லது
தாங்கள் விரும்பும் கட்சிக்கான
விளம்பர மேடையாக இதை பயன்படுத்திக்
கொள்ள முயற்சிக்கக் கூடாது….

அரசியல் தவிர்த்த மற்ற விஷயங்களுக்கு –
“வானமே எல்லை….” ( அசிங்கம் இல்லாமல்,
ஆபாசம் இல்லாமல் …)

மேலே தளத்தின் about column பார்த்திருப்பீர்கள் –


இந்த வலைத்தளத்தில் எழுதுவதன் நோக்கம் –
நல்லதைப் பாராட்ட வேண்டும்.
கண்ணில் படும் தவறுகளைக் கண்டிக்க வேண்டும்.
(இன்றில்லா விட்டாலும் நாளையாவது
மாறுமல்லவா ? )
அச்சமின்றி எழுத வேண்டும் ( இயன்ற வரை ! )

ஆபாசமின்றி எழுத வேண்டும்.

இதன் கூட இன்னும் சில விஷயங்களையும்
சேர்த்துக் கொள்ளலாம்….

இயன்ற வரை சுவாரஸ்யமாக,
பயனுள்ளதாக அல்லது

நல்ல பொழுதுபோக்கானதாக – எழுத வேண்டும்.

நண்பர்கள் எழுதும் கட்டுரைகளை எனது –

kavirimainthan@gmail.com

 • என்கிற விலாசத்திற்கு மின்னஞ்சல் மூலம்
  அனுப்பி வைக்கலாம்.

நான் படித்துப் பார்த்து விட்டு, இயன்ற அளவு
விரைவாக இந்த தளத்தில் பிரசுரம் செய்கிறேன்.
( என் லட்சியங்களுக்கு விரோதமானதாக
இல்லாதவரை, அவை அப்படியே பிரசுரிக்கப்படும் )

உங்கள் பின்னூட்டத்தின் மூலம்
இந்த அழைப்பை அனைத்து நண்பர்களுக்கும்
விடுக்க முடிந்ததற்கு மகிழ்வடைகிறேன்.

.
-வாழ்த்துகளுடன்,

காவிரிமைந்தன்

…………………………………………………………………………………………………………………………………………………..

இனி – நண்பர் ரகு அவர்களின் படைப்பு –

ஸ்வாமிகள் கணக்கு

வரவு எட்டணா
செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா
கடைசியில் துண்டனா துண்டனா துண்டனா

அது துண்டனா அல்லது துந்தநா.

செலவு எகிறி துண்டு விழுவதால் அந்த துண்டனா
தான் சரி என்று நினைக்கிறேன்.

வரவைப் பெருக்குவதைப் பற்றிய பதிவோ
சேமிப்பை அதிகரிப்பதைப் பற்றிய பதிவோ அல்ல.

இது வரவு செலவு கணக்கு வைப்பதைப் பற்றிய பதிவு.

என் சிறு வயதில் கூட்டுக்குடும்பமாய் என் தாத்தா
(என்தந்தையின் சிறிய தகப்பனார்) உடன் இருந்தோம்.
குடும்பவியாபாரம் இருந்தது.இந்த வியாபாரம்
என் தாத்தா அவருடைய சிறு வயதில் ராயவரம்
செட்டியாருடன் வேலைக்குச் சேர்ந்து பின்னர் அவருடன்
பங்குதாரராக உயர்ந்து பின்னாளில் பிரிந்து செய்தது.
இதில் என் தகப்பனாரும் பங்குதாரர் மற்றும் பொறுப்பாளர்.

செட்டியார்களின் நெருங்கிய பழக்கத்தால் அவர்களுடைய
வழக்கங்களில் ஒன்றான கணக்கு எழுதும் பழக்கம்
வியாபாரம் மற்றும் குடும்பத்திலும் உண்டு.

இந்த கணக்குப் புத்தகம் (Financial Accounts )
தமிழில் எழுதப்படும். இதற்கென்று சில குறிப்பிட்ட
சொற்கள் உண்டு.

கூடவே இதில் இருக்கும் தத்துவம் மற்றும்
இலக்கணத்தையும் சற்றே பார்ப்போம்.

 1. ஸ்வாமிகள் கணக்கு — ஸ்வாமிகள் / கடவுளிடம்
  வரவு/ஆசியைப் பெற்று வியாபாரம் / கணக்கு
  தொடங்கப்படுகிறது. இது திருப்பி தர வேண்டியது
  அல்லது கடன் பெற்றது போன்ற ஒன்று.
  [இது உங்களுக்கு வில்லன் சுமன் “சிவாஜி”
  ரஜினிக்கு கொடுத்த ஒரு ரூபாய் பெருகியதை
  ஞாபகப்படுத்துகிறதா?]
 2. தனது முதல் — தனது முதலில் தொழில் தொடங்கி
  வியாபாரம் பெருக கடன் பெறப்படுகிறது. (Own Capital) .
  இதில் வீட்டின் பெரியவர்களிடமிருந்து மற்றும்
  கைராசி உள்ளவரிடம் இருந்து தொகை பெற்று
  தொழில் தொடங்கப்படும்
 3. வரவு — விற்றுமுதல் — வியாபாரத்தில்
  அல்லது விற்பனையில் வரும் வரவு
  (Credit — Income / Sales / Turnover)
 4. பற்று / சிலவு — செலவு கணக்கு. பற்று என்பது
  பிடிப்பு அல்லது வர வேண்டியது (Debit—Expenses)
 5. கொள்முதல் — கொள்முதல் என்பது விற்கும் நிமித்தம்
  வாங்கும் பொருளுக்கும் மற்றும் அசையும் அசையா பொருள் /

சொத்திற்கும் சொல்வது. இதை வேறு படுத்தி காண்பிக்க
வேண்டிய கட்டாயம் உள்ளது. (Purchases —
Property — Assets)

 1. அசல் குறிப்பு — தினசரி பணம் கொடுக்கல் வாங்கல்
  பதிவு செய்யப்பட்டு இருப்பு சரி பார்க்கப்பட வேண்டும்.
  (Cash book — Day book)
 2. பேரேடு — கொள்முதல், வரவு, செலவு கடன் பற்று
  எல்லாமும் தினமும் பேரேட்டில் பதியப்படவேண்டும்.
  (General Ledger)
 3. ஆதாய வரவு — எல்லா செலவு கணக்கையும்
  இதில் சேர்த்து வரவுடன் சரி பார்த்து மிஞ்சுவது
  (Profit and Loss account)
 4. ஐந்தொகை — பேரேட்டில் உள்ள எல்லா கணக்கையும்
  இருப்பையும் சேர்த்து கணக்கு சரியாக இருக்கிறதா
  என்று சரிபார்த்து வியாபார நிலையை தெரிந்து
  கொள்ள உதவுவது.(Trial Balance —
  Balance Sheet)
 5. தனது முதல் வட்டி — தனது முதலில் வட்டி கணக்கு
  செய்யப்படுகிறது. லாபம் என்பது பங்குதாரர்களின்
  முதலுக்கு வட்டி கொடுத்த பிறகும் கிடைத்தால் மட்டுமே
  வியாபாரம் பெருகுகிறது என்று அர்த்தம். (Interest
  on Capital). [செட்டியும் வட்டியும் கெட்டியாக
  இணைந்தவை, பிரிக்கமுடியாது.]
 6. தேய்மானம் — வயது மற்றும் திறன் குறையும்
  காரணத்திற்க்கு தேய்மானத்தைக் கணக்கில் கொள்ள
  வேண்டும். (Depreciation)

கணக்குப் புத்தகத்தின் மாதிரி படம்

பட விளக்கம்:-

கணக்குப் புத்தகத்தில் முதல் நெடுவரிசை வரவு.

அடுத்தது செலவு.

வரவுக்கான சின்னம் மற்றும் செலவுக்கான சின்னம் உள்ளது.

மஞ்சள் பூசிய எண்கள் பேரேட்டின் பக்க எண்ணை குறிக்கிறது.

தமிழ் கணக்கின் சுருக்கம்

• வரவு தான் முக்கியம்.

• வரவிற்கு பிறகு தான் செலவு..

• எல்லாவற்றையும் கணக்கில் வைக்க வேண்டும்.

• கணக்கை அவ்வப்போது சரி பார்க்க வேண்டும்.

• அதன் மூலமே வியாபாரத்தை தொழிலை சரியாக
லாபமாக நடத்த முடியும்.

எங்கள் வீட்டில் செலவு கணக்கு தினமும் பதியப்பட்டு
எங்கள் தாத்தா மாத செலவை ஒரு சிலேட்டில் எழுதி
எல்லோர் பார்வையும் படும் படி வைத்திருப்பார்.

இக்காலத்தில் எல்லாமே கம்ப்யூட்டர், எக்ஸ்ல் ஷீட்டில்
வெகு சுலபமாக செய்ய முடிகிறது. அதில்கையால் எழுதி
சரி பார்க்கும்(Tally) மகிழ்ச்சி கிடைக்கவில்லை.

முடிவாக மீண்டும் அந்தப் பாட்டும்

இதை படிப்போருக்கு

என் வாழ்த்தும்.

வரவு நூறாயிரம்

செலவு சில ஆயிரம்

சேமிப்பு பல்லாயிரம்

உங்கள் வளம் பெருகட்டும்

ஆயிரம், ஆயிரம்

 • ரகுராமன்

.
………………………………………..

பின் குறிப்பு – இந்த இடுகையை எழுதியிருக்கும் நண்பர் ரகு’வைப் பற்றி ஒரு சிறு அறிமுகக் குறிப்பு –

படித்தது – ஆடிட்டர், சார்டர்ட் அக்கவுண்டெண்ட்… ஆனால் தற்போது இருப்பது கணிணித் துறையில்.. தொழில் முறையில்- சென்னை, நாசிக்,மும்பை, சிங்கப்பூர் ….என்று சுற்றிக்கொண்டிருக்கிறார் இந்த அதிருஷ்டக்காரர்.

அவர் லைட் சப்ஜெக்டுகளில் எழுத விரும்புகிறார். தமிழில் எழுதி நண்பர்களைப் பெறுவது அவர் நோக்கம்.

-காவிரிமைந்தன்

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

8 Responses to ஸ்வாமிகள் கணக்கு …. ரகு…!!!( வாசக நண்பர் ஒருவரின் முதல் படைப்பு -)

 1. Manivannan Kamaraj சொல்கிறார்:

  என் தாத்தாவும் அப்பாவும் நூல் வியாபாரம் செய்யும் போது பார்த்த கணக்கு புத்தகக நினைவுகள். வருகிறது. நன்றி

 2. ரகுராமன் சொல்கிறார்:

  ஸார்,
  என் எழுத்துக்களை உங்கள் தளத்தில் வெளியிட்டதற்கு மிக்க நன்றி. 🙏

  இன்று என் எழுத்துக்கள் பரத்வாஜ் ரங்கன் தளத்திலும் வந்திருக்கின்றன.

  https://baradwajrangan.wordpress.com/2021/09/24/readers-write-in-412-kaalathai-thindra-gadigaram/

  என் தளத்திற்கு – https://raghuk9000.medium.com உங்களையும் உங்கள் வாசகர்களையும் வரவேற்கிறேன் 🙏 ~ ரகுராமன்.

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ரகு – உங்களுக்கு என் உள்ளம் நிறைந்த
  நல் வாழ்த்துகள்…

  “ஸ்வாமிகள் கணக்கு”டன் துவங்கி
  இருக்கிறீர்கள்… பயனுள்ள, சுவாரஸ்யமான
  பல விஷயங்களை நீங்கள் தொடர்ந்து
  எழுதலாம்.

  ஒரு சின்ன வேண்டுகோள்….

  ————–
  உங்களைப்பற்றிய ஒரு சிறு குறிப்பு –
  உங்கள் முழுப்பெயர்,
  எந்த ஊர்,
  எந்த நாட்டில் வசிக்கிறீர்கள்,
  எந்த துறையில் ஈடுபட்டிருக்கிறீர்கள்..

  உங்களைப் பற்றிய மேல் விவரங்கள்
  எதையாவது வாசக நண்பர்களுக்கு
  தெரிவிக்க விரும்புகிறீர்களா…

  வாசக நண்பர்கள், இடுகை சம்பந்தமாக
  உங்களுடன் தொடர்பு கொள்ள
  விரும்பினால் – அதற்கான உங்கள்
  e-mail ID
  —————

  போன்றவை அடங்கிய ஒரு குறிப்பை
  அடுத்த இடுகையை அனுப்பும்போது
  கூடவே சேர்த்து அனுப்பினால்,
  வாசக நண்பர்களுக்கு உங்களை
  கூடுதலாக அறிமுகப்படுத்த
  உதவியாக இருக்கும்.

  ———–
  இந்த வேண்டுகோள் – உங்களைப்
  போன்றே இங்கே எழுதக்கூடிய மற்ற
  வாசக நண்பர்களுக்கும் சேர்த்தே….

  உங்கள் இடுகை வெளிவந்திருக்கும்
  இந்த பக்கத்தை உங்கள் நண்பர்களுக்கோ,
  உறவினர்களுக்கோ தெரிவிக்க விரும்பினால்-
  அதற்கான லிங்க் –

  https://vimarisanam.com/2021/09/24/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b0%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5/#comment-35372

  ————-

  .
  வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • ரகுராமன் சொல்கிறார்:

   ரகுராமன் – CA – ஆடிட்டர் ஆனால் தற்போது IT. CA எல்லாம் மறந்தாகிவிட்டது.
   சென்னை – நாஸிக் – பம்பாய் – சிங்கப்பூர். ஸ்வாமிகள் கணக்கில் துவங்கி தற்போது 35 பதிவுகள் என் தளத்தில். எல்லாம் Light and Easy read. இந்த pandemic காலத்தில் தான் எழுத துவங்கினேன். என் அனுபவங்கள் உட்பட சில விஷயங்களில் பதிவுகளை காணலாம்.
   உங்களுக்கும் அவற்றில் சில பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
   நேரம் கிடைத்தால் படிக்க அழைக்கிறேன்.
   ஐயா உங்களுக்கும் வாசகர்களுக்கும் நன்றி.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    அன்புள்ள ரகு,

    உங்கள் கடிதத்திற்கு நன்றி.

    உங்கள் தளத்திற்கு வந்து சில இடுகைகளை
    படித்தேன்…

    நீங்கள் மனிதர்களை நன்கு படிக்கிறீர்கள்.
    ரியலிஸ்டிக்’காக எழுதுகிறீர்கள்.

    அதேபோல் நீங்கள் இருக்கும்
    இடத்தையும், போகும் இடத்தையும்
    விவரமாக அறிந்து கொள்ளும் முயற்சியிலும்
    வெற்றி பெற்றுள்ளீர்கள்..

    உங்கள் அனுபவங்களை தெளிவாகவும்,
    அழகாகவும் சொல்லவும் உங்களால் முடிகிறது.

    தொடர்ந்து நிறைய எழுதுங்கள்….

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

 4. Ramanathan சொல்கிறார்:

  Dear Raghu sir, Your first impression itself giving us best impression
  Give us your valuable thoughts and experiences to us like KM sir Thanks a lot for your best efforts

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s