

1999-ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றை தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானின் கந்தஹாருக்கு கடத்திச் சென்ற சம்பவம் பற்றி இன்றைய இளைஞர்கள் விவரமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.
சம்பவம் நிகழ்ந்தபோது, இந்தியாவே பதட்டமாக இருந்த சூழ்நிலை….இந்திய மக்கள் அனைவரும் அடுத்து அன்ன நடக்குமோ என்கிற திகிலுடன் ஒவ்வொரு நிமிடத்தையும் கடந்து கொண்டிருந்த சூழ்நிலை அது….
அந்த 1999- விமானக் கடத்தலை வாஜ்பாய் அரசு கையாண்ட விதம் குறித்து அண்மையில் சிலர் விவாதங்களை கிளப்பி இருக்கிறார்கள்.
இந்தியப்பிரதமராக, பாஜக-வின் சார்பில் வாஜ்பாய் அவர்கள் தலைமையேற்று பணியாற்றி வந்த நேரம் அது….
மிகவும் பரபரப்பாக இருந்த அந்த சம்பவத்தை – இந்திய மக்கள் அனைவரும் தொடர்ந்து பதட்டத்துடனும், அடுத்து என்ன நடக்குமோ என்கிற திகிலுடனும், கவனித்து வந்தனர்….
மீடியாக்கள் தொடர்ந்து பரபரப்பான செய்திகளை வெளியிட்டு வந்தன…. தாமதிக்கும் ஒவ்வொரு விநாடியும் மக்களிடையே பதட்டம் அதிகரித்தது… உடனடியாக முடிவெடுக்கும் அழுத்தமான நிலைக்கு இந்திய அரசு தள்ளப்பட்டது.
அன்றைய தினம் நடந்த சம்பவங்கள் அனைத்தும் கோர்வையாக நினவில் இல்லை; இருந்தாலும், படித்த செய்திகளின் உதவியுடன் முடிந்தவரை –
சுருக்கமாகத் தருகிறேன்.
1999, டிசம்பர் 24. மாலை 4:25 மணிக்கு நேபாள் தலைநகர்
காத்மண்டுவிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டது இந்தியன்
ஏர்லைன்ஸ் விமானம். 178 பயணிகள், 2 பைலட்டுகள்,
13 இந்தியன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் உட்பட மொத்தம்
193 பேர் அந்த விமானத்தில் பயணித்தனர். விமானம்
புறப்பட்டு 40 நிமிடங்கள் கடந்த நிலையில், ஐந்து பேர்
தங்களது இருக்கைகளிலிருந்து எழுந்தனர். அவர்களில்
இருவர் பைலட்டுகளின் அறைக்குச் செல்ல, மீதி மூவரும்
விமானத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து, பயணிகளைத்
தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அந்தத்
தீவிரவாதக் கும்பலிடம் நிறைய துப்பாக்கிகளும்
வெடிகுண்டுகளும் இருந்தன.
“நாங்கள் பாகிஸ்தானில் இயங்கும் ஹர்கத்-உல்-முஜாஹிதீன்
அமைப்பைச் சேர்ந்தவர்கள்” என்கிறார்கள் கடத்தல்காரர்கள்.
பின்னர், அந்தக் கடத்தல் குழுவின் தலைவன் பைலட்டுகளை
மிரட்டி பாகிஸ்தானின் லாகூரில் இறங்கச் சொல்கிறான்.
ஆனால், லாகூர் அதிகாரிகள் கடத்தல் விமானம் அங்கு
தரை இறங்க அனுமதி தர மறுக்கிறார்கள்.
தொடர்ந்து பாகிஸ்தானிலுள்ள வேறொரு விமான
நிலையத்தில் விமானத்தைத் தரை இறக்குமாறு
உத்தரவிடுகிறார்கள் கடத்தல்காரர்கள். அதற்கு
`போதிய எரிபொருள் இல்லை. எனவே, பஞ்சாப் மாநிலம்
அமிர்தசரஸில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு செல்லலாம்’
என்று யோசனை சொல்கிறார்கள் பைலட்டுகள்.
இதற்கிடையில், தீவிரவாதிகளுக்குத் தெரியாமல்
விமானம் கடத்தப்பட்ட தகவலை டெல்லிக்குச் சொல்கிறார்
பைலட் ஒருவர்.
`அமிர்தசரஸிலிருந்து உடனே புறப்படாமல், ஏதாவது
காரணம் சொல்லி தாமதம் செய்யுங்கள்’ என பைலட்டுக்கு
டெல்லி அதிகாரிகள் தகவல் அனுப்புகின்றனர்.
அந்தச் சமயத்தில், டெல்லியிலுள்ள அதிகாரிகளிடம்
தங்களது கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்
கடத்தல்காரர்கள்.
200 மில்லியன் அமெரிக்க டாலரை இந்திய அரசு
தர வேண்டும். இந்தியச் சிறைச்சாலைகளிலிருக்கும்
36 பாகிஸ்தான் தீவிரவாதிகளை எந்த நிபந்தனையுமின்றி
விடுவிக்க வேண்டும். ஜம்மு பகுதியில் இந்திய
ராணுவத்தால் கொல்லப்பட்ட ஸஜத் ஆ கானி உடலைச்
சகல மரியாதைகளுடன் எங்களிடம் ஒப்படைக்க
வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற
ஒப்புக்கொள்ளாவிட்டால் அனைத்துப் பயணிகளையும்
கொன்றுவிடுவோம் என்பது கடத்தல்காரர்களின் கோரிக்கை
ஆட்சியிலிருந்த வாஜ்பாய் தலைமையிலான
பா.ஜ.க அரசு, இந்தக் கோரிக்கைகளைக் கேட்டு
ஆடிப்போனது. தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தைக்குத்
தயாரானது வாஜ்பாய் அரசு.
மக்கள் கொந்தளிப்புடன் இருந்தனர். தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்று சொல்கிற தைரியம் எந்த அரசியல் கட்சிக்கும் அப்போது இல்லை;
மத்திய அரசு உடனடியாக டெல்லியிலிருந்து தேசியப் பாதுகாப்புப்
படையினரை அமிர்தசரஸுக்கு அனுப்பிவைத்தது.
அதிகாரிகள் சொன்னதைக் கேட்டு அமிர்தசரஸில்
அரை மணி நேரம் விமானத்தை நிறுத்திவைக்கிறார்
பைலட். சந்தேகமடைந்த தீவிரவாதக் குழுத் தலைவன்,
விமானத்தை எடுக்குமாறு பைலட்டை மிரட்டுகிறான்.
ஆனால், பைலட் மறுக்கிறார்.
உடனே பயணிகள் கூட்டத்திலிருந்த 25 வயது இளைஞர்
ஒருவரைப் பதம் பார்க்கிறது தீவிரவாதக்குழுத்
தலைவனின் கத்தி. அந்த இளைஞரின் மனைவி
கதறி அழத் தொடங்குகிறார்.
விமானம் அமிர்தசரஸிலிருந்து புறப்படுகிறது.
லாகூரில் தரை இறங்க அனுமதி கிடைக்கிறது.
`விமானத்தை லாகூரிலேயே நிறுத்திவையுங்கள்’
என பாகிஸ்தானிடம் கோரிக்கை வைக்கிறது இந்தியா.
ஆனால், கடத்தல்காரர்களோ அடுத்து துபாய் செல்ல
வேண்டும் என்கிறார்கள். பாகிஸ்தான், இந்தியாவின்
கோரிக்கையை மறுக்கவே, துபாய்க்குப் பறக்கிறது
விமானம். அங்கும் விமானம் தர இறங்க அதிகாரிகள்
அனுமதி மறுக்கிறார்கள்.
`உயிருக்குப் போராடிவரும் பயணியின் நிலைமையை
மனதில்வைத்து அனுமதி வழங்க வேண்டும்’
என்கின்றன இந்தியாவும் அமெரிக்காவும். மனிதாபிமான
அடிப்படையில் அனுமதி தருகிறது துபாய் அரசு.
அதேநேரத்தில், `தீவிரவாதிகளை எதிர்க்க, இந்தியப்
பாதுகாப்புப் படைக்கு அனுமதி வழங்க வேண்டும்’ என்கிற
இந்தியாவின் கோரிக்கையை மறுத்துவிடுகிறது துபாய்.
நேரம் நள்ளிரவைத் தாண்டுகிறது. விமானத்திலிருந்த
உணவுகளும் தண்ணீரும் காலியாகிவிடுகின்றன.
“பெண்களையும் குழந்தைகளையும் விடுதலை
செய்யுங்கள். தண்ணீர், உணவு தருகிறோம்”
என்கிறார்கள் துபாய் அதிகாரிகள். பெண்கள், குழந்தைகள்
என 25 பயணிகளை விடுவிக்கிறது தீவிரவாதக்குழு.
கத்தியால் குத்தப்பட்ட இளைஞரின் உடலும் வெளியே
அனுப்பப்படுகிறது. அதிக ரத்தம் வெளியேறிய
காரணத்தால் அந்த இளைஞரின் உயிர் பிரிந்துவிட்டது.
உணவும் தண்ணீரும் கிடைத்தவுடன் துபாயை விட்டுக்
கிளம்புகிறது விமானம். அடுத்ததாக தாலிபன்கள்
கட்டுப்பாட்டிலிருக்கும் ஆப்கானிஸ்தானின்
கந்தஹாருக்குச் செல்லுமாறு உத்தரவிடுகிறார்கள்
தீவிரவாதிகள். டிசம்பர் 25-ம் தேதி காலை நேரத்தில்
கந்தஹாரில் தரை இறங்கியது விமானம்.
அப்போதைய தாலிபன் தீவிரவாத அரசோடு இந்தியாவுக்கு
நல்லுறவு இல்லாத காரணத்தால், ஆப்கனில் இந்தியத்
தூதரகம் கிடையாது. எனவே, பாகிஸ்தானிலுள்ள ஆப்கன்
தூதரகத்தின் உதவியோடு டிசம்பர் 27-ம் தேதியன்று
கந்தஹார் சென்றது இந்தியப் பேச்சுவார்த்தைக் குழு.
இந்தியப் பாதுகாப்புப் படை ஆப்கானிஸ்தானுக்கு வர,
தாலிபன் அரசு அனுமதிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல்
கடத்தல்காரர்களுக்குப் பாதுகாப்பாக பீரங்கிகளையும்,
ராக்கெட் லாஞ்சர்களையும் விமானத்தைச் சுற்றி
நிறுத்தினார்கள் தாலிபன்கள்.
இந்தநிலையில், தீவிரவாதிகளோடு பேச்சுவார்த்தை
நடத்தியது இந்தியக் குழு. `ஒரு கோரிக்கையையும்
ஏற்க மாட்டோம்; பயணிகளை விடுவியுங்கள்’ எனத்
தொடர்ந்து விட்டுக்கொடுக்காமல் பேசியது இந்தியா.
இதற்கிடையில் உணவு, தண்ணீரில்லாமல்
விமானத்துக்குள் அவதிப்பட்டனர் பயணிகள்.
கழிவறைகளும் பயன்படுத்த முடியாத அளவுக்கு
மோசமடைந்தன. வியர்வையில் பயணிகள்
செய்வதறியாமல் தவித்துக்கொண்டிருந்தனர்.
`எப்படியாவது பயணிகளை விடுவியுங்கள்’ எனப்
பயணிகளின் உறவினர்கள், மனிதநேய ஆர்வலர்கள்
இந்திய அரசிடம் வலியுறுத்திக்கொண்டேயிருந்தனர். தீவிரவாதிகள் வசம் சிக்கிக்கொண்ட ஒன்றும் அறியாத அப்பாவி சிவிலியன்களை உடனடியாக மீட்க வேண்டும் என்பது மட்டுமே அப்போதைக்கு அனைவரின் மனோநிலையும், கோரிக்கையுமாக இருந்தது.
நான்கு நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு,
மசூத் அஸார் உள்ளிட்ட மூன்று பாகிஸ்தான்
பயங்கரவாதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டது
இந்திய அரசு. அப்போது வெளியுறவுத்துறை
அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங்,
விடுதலை செய்யப்பட்ட மூன்று பயங்கரவாதிகளுடன்
தனி விமானத்தில் கந்தஹார் சென்றார்.
மக்கள் – அப்போதைய சூழ்நிலையில்,
பாஜக மூத்த தலைவரும் –
( முன்னாள் ராணுவ அதிகாரியும் கூட )
வெளியுறவுத்துறை அமைச்சருமான ஜஸ்வந்த் சிங்’கை
ஒரு பெரிய ஹீரோவாகவே கருதினார்கள்.
அங்கு கடத்தல்காரர்களிடம் மூன்று பயங்கரவாதிகளும்
ஒப்படைக்கப்பட்டு, பயணிகளும், இந்தியன் ஏர்லைன்ஸ்
ஊழியர்களும் இந்தியாவுக்கு மீட்டு வரப்பட்டனர்.
இந்தியாவால் விடுவிக்கப்பட்டு, கந்தஹார் கொண்டு
செல்லப்பட்ட அந்த 3 தீவிரவாதிகளையும்,
இந்திய ராணுவ விமானத்திலிருந்து இறக்கி,
வெற்றிக்களிப்பில் – குஷியாக, ஒரு ஜீப்பில்
ஏற்றிக்கொண்டு,
பாகிஸ்தான் நோக்கி அந்த தீவிரவாத கும்பல் சென்றதை –
வெறுப்போடும், ஏமாற்றத்தோடும் தொலைக்காட்சியில்
பார்த்த காட்சி மட்டும் இன்னமும் என் நினைவில்
அப்படியே நிற்கிறது.
இன்று அரசியல்வாதிகள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். தீவிரவாதிகளின் கோரிக்கைக்கு இணங்கி 3 பயங்கரவாதிகளை சிறையிலிருந்து விடுவித்து காந்தஹார் கொண்டு சென்று ஒப்படைத்ததை இன்று குறை சொல்வது மிக சுலபம்….
ஆனால், அன்றைய தினத்தில் அது எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, யார் பிரதமராக இருந்திருந்தாலும் சரி, அவர்களுக்கும் சிவிலியன்களை பத்திரமாக எப்படி மீட்பது என்பது ஒன்றுமட்டுமே குறிக்கோளாக இருந்திருக்க முடியும்.
1999 சம்பவத்திற்காக, இன்று வாஜ்பாய் அரசை – யாராவது குறை கூறினால் – அது முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காக மட்டுமே என்று தான் சொல்ல வேண்டும். அன்றைய தினம், இந்த சிக்கலை, இதைவிடச் சிறப்பாக வேறு யாரும் கையாண்டிருக்க முடியாது என்பதே உண்மை.
அது தொடர்பான ஒரு சுருக்கமான காணொலி –
BYNGE இலவச செயலியில் எழுத்தாளர் பா.ராகவன் எழுதும் மீண்டும் தாலிபன் தொடரில் இந்த விமான கடத்தல் தொடர்பான விடயங்கள் கையாளப்படுள்ளன.
நன்றி கமல்.
என்னிடம் இந்த செயலி இல்லை;
எனவே நான் பார்க்கவில்லை;
இருப்பவர்கள், மேற்கொண்டு விவரம் அறிய –
இது உதவலாம்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்