



இந்த நாட்டின் பரப்பளவு வெறும் 21 சதுரகிலோ மீட்டர் தான்..
ஒரே நாளில் ஒரு முழு நாட்டையும் சுற்றிப் பார்த்து விடக்கூடிய
அளவிற்கு சிறிய தீவு நாடு “நவ்ரூ” …. ஆனால், இதுவும் ஐக்கிய
நாடுகள் சபையில் உறுப்பினராக இடம் பெற்றிருக்கிறது.
இந்த சுதந்திர நாட்டின் ஜனத்தொகை எவ்வளவு இருக்குமென்று
நினைக்கிறீர்கள்…? கற்பனையே செய்ய முடியாது…
வெறும் பத்தாயிரம் மக்கள்தான்.
ஆம் – ‘நவ்ரூ’ – உலகிலேயே மிகச்சிறிய சுதந்திரக் குடியரசு…!
(வாடிகனை தவிர்த்து விட்டால்…! )
அதிகாரப்பூர்வமாக தலைநகர் என்று எதுவும் இல்லாமல் இருந்த
இந்த நாட்டிற்கு தற்போது யாரென் என்ற இடம் தலைநகர் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
பற்பல அதிசயங்களை கொண்டுள்ள பசுபிக் பெருங்கடலில்
ஆஸ்திரேலியாவிலிருந்து 3000 கி.மீட்டர் தொலைவில் இந்த தீவு
நாடு அமைந்திருக்கிறது.
பிரிட்டனின் திமிங்கல வேட்டை பிரியரான ஜோன் பேர்ன்
என்பவர் தான் – 1788-ஆம் ஆண்டில் இந்த நாட்டிற்கு வந்த
முதல் வெளிநாட்டவர்….
ஜோன் பேர்ன் வந்திறங்கிய – 40 ஆண்டுகளுக்குப் பிறகு நல்ல நீர்
பெறுவதற்காக கப்பல்கள் இத்தீவில் நங்கூரம் பாய்ச்சின. திமிங்கலவேட்டையர்கள் நிறைய பேர் வந்து தங்கலாயினர்.
வந்திறங்கிய ஐரோப்பியர், உள்ளூர் மக்களை தங்கள் வசப்படுத்திக்
கொள்ள – மதுவகைகளை அறிமுகப்படுத்தினர்… துப்பாக்கிகளில்
ஆர்வமூட்டினர். இவற்றில் மயங்கிய நவ்ரூ மக்கள் தமது
உணவுப் பொருள்களை பதிலுக்கு கொடுத்து பண்டமாற்றம் செய்தனர்.
இதன் விளைவாக –
நவ்ரூ மக்களுக்கு மதுவால் போதை மயக்கமும்,
தூப்பாக்கிகளை இயக்குவதில் ஆசையும் ஏற்பட்டது…
அதன் விளைவாக –
அவர்களுக்குள்ளாகவே – அங்கு வாழ்ந்த 12 இனங்களுக்கிடையிலேயே
1878-ஆம் ஆண்டு சண்டை தொடங்கியது. 10 ஆண்டு நீடித்த
இந்த சண்டையில் அந்த நாட்டில் வாழ்ந்த மக்களில் மூன்றில்
ஒருபங்கினர் கொல்லப்பட்டனர்.
இப்படி நிறைய உயிர் இழப்புகள் ஏற்பட்டதற்குப் பிறகு,
சிறிய அளவில் காவல் துறை ஒன்று உருவாக்கப்பட்டது. ஆனால்,
நாட்டைப் பாதுகாக்க ராணுவப்படை இல்லை. இப்போது
இந்நாட்டின் பாதுகாப்பு ஆஸ்திரேலியாவின் பொறுப்பில் இருக்கிறது…
நவ்ரூ ஒரு காலத்தில் செல்வம் கொழிக்கும் வளமான நாடாக
இருந்தது…. காரணம் அந்நாட்டில் அபரிமிதமாக கிடைத்த பாஸ்பேட்.
உரம் தயாரிப்பதற்கு இது மூலப்பொருள் என்பதால்
பல நாடுகளின் பார்வையும் இதன் மேல் விழுந்தது.
தங்கள் நாட்டின் மேற்பரப்பில் அனைத்துமே பாஸ்பேட்
பாறைகள்தான் -என்பதால், அந்நியர் யார் கேட்டாலும்
வருமானத்திற்காக அவற்றை வெட்டி எடுக்கும் உரிமையை
தாராளமாக வழங்கியது நவ்ரூ.
இதனால் அங்கே கனிம வளம் குறைந்து கொண்டே வந்தது.
இதனிடையே இரண்டாம் உலகப் போர் சமயத்தில், இந்த நாட்டின்
இயற்கை வளம் ஜப்பானின் கண்களை உறுத்தியது;
அவ்வளவு தான் – நவ்ரூ ஜப்பான் வசமானது.
போரில் ஜப்பான் வீழ்த்தப்பட்டதும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,
பிரிட்டன் ஆகிய நாடுகளின் நிர்வாகத்தின் கீழ் நவ்ரூ
கொண்டு வரப்பட்டது.
கடைசியாக பிரிட்டன் ஆதிக்கத்தின் கீழிருந்து 1968ல் விடுதலை
பெற்றது நவ்ரூ….. இந்த நாடு ஜனவரி 21, 1968-ஐ தனது
சுதந்திரதினமாகக் கொண்டாடி வருகிறது. கருநீல நிறத்தில்
12 கால்களைக் கொண்ட வெள்ளை நட்சத்திரம் பொறிக்கப்பட்ட
கொடி. இதில் தங்க நிறத்தில் ஒரு கோடு. இதுதான்
இந்த நாட்டின் தேசியக் கொடி.
பசுபிக் பெருங்கடலைக் குறிக்க கரு நீலநிறம்,
12 இனங்களைக் குறிக்க 12 கால்கள் கொண்ட நட்சத்திரம்.

சுதந்திரம் அடைந்த புதிதில் தனிநபர் வருமானம், நாட்டின் வரி
வருவாய் எல்லாம் நவ்ரூ’வில் பிறநாடுகள் பொறாமைப்படும்
அளவில் இருந்தது. வருமானத்தை மேலும் பெருக்க, வரம்புமீறி
பாஸ்பேட் வெட்டி எடுக்க அனுமதிக்கப்பட்டதால், சுரங்கத் தொழில்
பெருகப் பெருக சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
கனிமவளம் வெட்டி எடுக்கப்பட அது அந்த நாட்டின் சூழலியலில்
ஒரு பெரும் தாக்கத்தை செலுத்தியது. நவ்ரூவின் வரலாறு
ஒரு சபிக்கப்பட்ட கதையாக மாறியது. ஒரு சமயத்தில் பசிபிக்
பெருங்கடலில் சொர்க்கமாக இருந்த அந்த பகுதி மெல்ல
நகரமாக மாறியது.
வெட்டி எடுக்க எடுக்க கனிம வளமும் குறைந்தது.
கனிம வளம் குறைந்ததால், வருமானம் குறைந்தது….
வரி ஏய்ப்பு, சட்ட விரோத பணப்பறிமாற்றம் அதிகரித்தது.
ஒரு காலத்தில் இனிமையான தீவாக இருந்த இந்நாட்டின்
சோகக்கதை உலக மக்களின் மனக்கதவை தட்டுகிறது.
இத்தீவைச் சுற்றி பவளப்பாறைகள் உள்ளதால் துறைமுகங்களை
உருவாக்க முடியவில்லை. வளங்கள் சுரண்டப்பட்டு வாழ்விடங்கள்
அழிக்கப்பட்டதால் விலங்குகள், பறவைகள் அரிதாகிவிட்டன.
தாவரங்களும் குறைந்து விட்டன். இந்த நாட்டில் பொதுப்
போக்குவரத்து இல்லை. சுற்றுலாப்பயணிகள் வருகையும்
நின்று விட்டது…
2012 -முதல் நவ்ரூ ஆஸ்திரேலியாவின் அகதிகள் முகாமாக
மாறிவிட்டது. ஆஸ்திரேலியாவில் தஞ்சம் பெறும் நோக்கோடு
சட்ட விரோதமாக நுழைபவர்கள் கைது செய்யப்பட்டு நவ்ரூவில்
உள்ள அகதி முகாம்களில்தான் அடைக்கப்படுகின்றனர். இந்த அகதி
முகாம்கள்தான் நவ்ரூ மக்களின் ஒரே வேலைவாய்ப்பு.
தடுப்பு முகாம்கள் ஏற்படுத்தியுள்ள நவ்ரூவுக்கு ஆஸ்திரேலிய அரசே
நிதியுதவி வழங்குகிறது. செய்திப்பத்திரிக்கை எதுவும் வெளிவராத
இந்நாட்டில் மக்களின் ஒரே பொழுதுபோக்கு மது அருந்துவதுதான்.
நவ்ரூ பற்றி வியக்கத்தக்க 2 செய்திகள் –
உலகிலேயே உடல் பருமனாக இருப்பவர்கள் அதிகம் வாழும்
நாடு நவ்ரூ தான். இந்நாட்டின் மக்கள் தொகையில் உடல்
பருமானவர்கள் 72 சதவீதம்.
இந்த நாட்டின் பெரிய சோகத்திற்கு மத்தியில் ஒரு நல்ல விஷயம்,
இன்று வரை இங்கு கொரோனா -உள்ளேயே நுழையவில்லை;
உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி நவ்ரூ’வில் இதுநாள்வரை
ஒருவர்கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.
.
……………………………………………………………………………………………………………………………………………………………….