ஆறாவது நிலையும் – இளையராஜாவும்….( ஸ்ரீரங்கம் நினைவுகள் – 2 …!!! )

ஆயிரக்கணக்கான தடவைகள் ராஜகோபுரத்தின் கீழே
நடந்து சென்று கடந்திருக்கிறேன். அநேகமாக ,
நான் ஸ்ரீரங்கத்தில் இருந்த நாட்கள் முழுவதுமே, தினமும்
இதன் வழியே நடந்து கடப்பேன்… அது எனக்கு மிகவும்
பிடித்த ஒரு அனுபவம்…

முதல் முக்கிய காரணம் –

எனக்கு முன்னர், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக –
எத்தனையோ கோடி மனிதர்களின் பாதங்கள் பட்ட இடம் அது…
பல மஹாத்மாக்களும், சரித்திர புருஷர்களும், நடந்து கடந்த
இடம் அது… அந்த இடத்தில் என் பாதத்தையும் பதிக்க –
எனக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்கள் அனைத்தையும்
பயன்படுத்திக்கொள்ள நான் விரும்புவேன்.

இன்னொரு காரணம் – சந்தோஷம்…
கோபுரத்தின் கீழே – எல்லா பருவங்களிலும்,
எந்த நேரத்திலும் – ஜில்’லென்ற காற்று ஜிலுஜிலுவென்று
அற்புதமாக வீசிக்கொண்டே இருக்கும்… அங்கிருந்து
நகரவே மனம் வராது… எப்போதுமே, குறைந்த பட்சம்
ஒரு 5 நிமிடமாவது அங்கே நின்று அதை அனுபவித்து
விட்டுத்தான் செல்வேன். அந்த ஆனந்தத்திற்கு ஈடு இணையே
கிடையாது…

அப்படி நிற்கும்போது – பல சமயங்களில் என் கண்களில்
அங்கே கீழ்ச்சுவற்றில் பதிக்கப்பட்டிருக்கும் பளிங்குக்கற்கள்
தென்படும். அந்த கோபுரத்தை நிர்மாணிக்க, திருப்பணிக்கு
யார் யாரெல்லாம் உதவி செய்தார்கள் என்கிற விவரங்கள்
அவற்றில் இருக்கும்.

ராஜ கோபுரத்தின் 6-வது நிலையை அமைக்கும் பொறுப்பை
இளையராஜா அவர்களிடம், ஒப்படைத்திருந்தார்கள் –
காஞ்சி மஹாபெரியவரும், அஹோபில மடம் ஜீயர் சுவாமிகளும்.

அந்த அனுபவத்தைப்பற்றி முன்பொரு முறை
இசைஞானி இளையராஜா அவர்கள் சொன்னது
இங்கே நினைவுக்கு வருகிறது…

அவரது வார்த்தைகளிலேயே அதை கீழே தந்திருக்கிறேன்….

இது இளையராஜா அவர்களின் வார்த்தையில் –

மகா பெரியவர் அவர்களை நான் முதன் முதலாகச்
சந்தித்தது – சதாராவிற்கு அருகில் உள்ள ஒரு
சிறிய கிராமத்தின் எல்லையில்தான்.. நான் அவரைச்
சந்திக்கும் முன்பாக – சந்திரமௌலி என்ற எனது
நண்பரொருவரும், ஸ்ரீஜீயர் சுவாமிகளின் சிஷ்யருமான
திரு. தேசிகன் என்பவரும், என்னைப் பிரசாத்
ஸ்டுடியோவில் சந்திக்க வந்திருந்தனர்., அவர்கள்
கூறிய விஷயம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது”.

‘மகா பெரியவர் அவர்களிடமிருந்து வருகிறோம்’
என்றார்கள். ‘என்ன விஷயம்?’ என்றேன்
(வேறு வேலையாக பெரியவர்களை சந்தித்துவிட்டு
வரும் வழியில் என்னையும் பார்த்துவிட்டுப் போகும்
எண்ணத்தில் இருக்கலாம் என்று….)

’பெரியவர் உங்களைப் பார்க்கச் சொன்னார்கள்’
என்றார்கள். எனக்கு ஆச்சரியம் அதிகமாக,
ஆவலுடன் ‘என்னையா?’ என்றேன்.

‘ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் கட்டுவதற்கு – செலவுக்குப்
பணம் நிறையத் தேவையாக இருக்கிறது… அதற்காக
உங்களைப் பார்க்கச் சொன்னார்கள்’ என்றார்கள்.

‘என்னை எப்படிப் பெரியவருக்குத் தெரியும்?
நான் அவர்களைச் சந்தித்ததே இல்லையே” என்றேன்.

“தெரியாது” என்ற பாவனையில் அவர்கள் தலையை
ஆட்டினார்கள். சரி… மேலே கொஞ்சம் விளக்கமாகச்
சொல்லக் கேட்டேன்.

பின்னர் ராஜகோபுரம் எப்படி உருவாகப் போகிறது
என்பது போன்ற பல தகவல்களை எனக்குச் சொன்னார்கள்..
அதன் வரைபடத்தையும் காட்டினார்கள்.

‘இதற்கு என்னைப் பணம் கொடுக்கச் சொன்னார்களா?”
என்றேன்.

‘ஆமாம்’ எனத் தலையாட்டினார்கள்.

‘மொத்தம் எவ்வளவு செலவாகும்?” என்றேன்.

’21 லட்சமோ.. 22 லட்சமோ’ என்று சொன்னார்கள்
(சரியாக நினைவில்லை). மறுவார்த்தை சொல்லாது
‘சரி’ என்று சொல்லிவிட்டேன்.

“ஐயோ.. 21 லட்சமும் நீங்கள் கொடுக்க வேண்டியதில்லை..
நீங்கள் கட்டிக்கொடுக்க வேண்டியது – ஆறாவது நிலை
மட்டும்’ என்றார்கள்.

‘அதற்கு எவ்வளவு ஆகும்?” என்றேன்.

“எட்டு லட்சம்” என்றார்கள்.

’21 லட்சத்திற்கே சரி என்றேன்.. எட்டு லட்சம்
பெரிய விஷயமா?” என்றேன்.

அவர்கள் என்னைப் பார்த்த பார்வை – இவரிடம்
எக்கச்சக்கம் பணம் இருக்கும் போல் தெரிகிறது என்ற
எண்ணத்துடன் அவர்கள் உடம்பையும், ஒரு வளைத்து
வளைத்து விட்டது. அவர்கள் மனதில், உள்ளே ஓடிய
எண்ணத்தைப் புரிந்துகொண்டு,

‘நீங்கள் நினைப்பது போல் என்னிடம் அவ்வளவு
பணம் இல்லை… பெரியவர் என்னை யாரென்று
தெரியாமலேயே என் பெயரைச் சொல்லிவிட்டாரல்லவா…

அவர் சொல்லியதை அவரே நிறைவேற்றிவிடுவார்.
என்னால் முடிவதும், முடியப்போவதும்
ஒன்றுமில்லை’ என்றேன்.

‘பெரியவர் மேல் அவ்வளவு நம்பிக்கையா?”

நன்றாக யோசித்துப் பார்த்தால் – வேறெதையும்
கவனிக்காது, பெரியவர் நாவில் அதிகமாக உச்சரிக்கப்படுவது –

வேதமாகத்தான் இருக்கும். வேத மந்திரங்களை
உச்சரித்து உச்சரித்து தழும்பேறிய அந்த நாக்கு –
என் பெயரை உச்சரிக்கும் அளவுக்கு, அந்தப் பெயர்
என்ன புண்ணியம் செய்ததென எனக்குத் தெரியவில்லை.

அதன்பின் – இன்னொருமுறை, ஜீயர் மடத்தில் இருந்து
வந்தவர்கள், ஜீயருக்கு, பெரியவர் எழுதிய ஸ்ரீமுகத்தை
எனக்குக் காட்டினார்கள்.

அதில், ’லோகத்தில் பணம் இருக்கிறவாள் நிறையப் பேர்
இருக்கா.. ஆனா மனம் இருக்கிறவாளைப் பார்க்கிறது
ரொம்பக் கஷ்டம். இளையராஜாகிட்டே மனசு இருக்கு’
என்று இருந்தது.

இது நிகழ்ந்து பல மாதங்களுக்கப்புறம்தான் சதாராவிற்கு
அருகிலுள்ள ஒரு கிராமத்தின் எல்லையில் –
மகா பெரியவரைச் சந்தித்தேன். சாயங்காலம் நான்கு மணி
இருக்கும். என்னை அறிமுகப்படுத்தினார்கள்.
அப்போது அவர் கண்ணாடி அணிந்திருக்கவில்லை.
அவர் கண்களிலிருந்து வந்த ஒளி என்னைத்
திக்குமுக்காட வைத்துவிட்டது.

என்னை ஒரு பாடல் பாடச் சொன்னார். எனக்குத் தெரிந்த
ஓர் கீர்த்தனையைப் பாடும்போது – நாக்குளறி அழுகை
வருவது போல் ஏதேதோ ஆகி.. எப்படியோ முடிந்தது.
எனக்கு இப்படி நேர்ந்தது இல்லை. அவர் கையில்
வைத்திருந்த மாம்பழத்தை எனக்குக் கொடுத்தார்.

மாலை ஐந்து மணிக்கு வேறோர் ஊருக்கு கிளம்புவதாக
பரிவாரம் தயாரானது. ஆனால் சிறிது நேரத்திற்குள் –
“போகவில்லை” என முடிவாயிற்று. என்ன
காரணத்தினாலோ, அவருடனேயே இருக்கவேண்டும்
என்ற என் எண்ணத்திற்குச் சாதகமாக அந்த முடிவு
இருந்தது, எனக்கு அதிசயமாக இருந்தது.

ஒரு திறந்தவெளியில் மகா பெரியவர் வந்தமர்ந்தார்.

அவர் எதிரில் நானும், என்னுடன் வந்திருந்த புகழ்பெற்ற
ஓவியர் சில்பியும். இன்னும் இருவரும் இருந்தனர்.
அன்று வானில் இருந்த நட்சத்திரங்கள் அவ்வளவும்,
தெள்ளத் தெளிவாக இருந்தன.

பெரியவருக்குப் பணிவிடை செய்து வந்த பாலு –
‘சாயங்காலம் இளையராஜா பாடும்போது சரியாக பாட
வரலையாம்.. அதனால் இப்போது அவரைப்
பாடச்சொல்லலாம்’ என்றார்.

பெரியவரின் பார்வை எங்கேயோ இருந்தது.

‘பாடுங்கள்’ என்றார்கள்.

‘சாமகான வினோதினி’ என்ற கீர்த்தனையைப்
பாடியதும், பெரியவரின் பார்வை என் பக்கம் திரும்பியது.

பின், வேறு ஏதேதோ விஷயங்களை எல்லாம் பேசிவிட்டு
வானத்திலிருந்து 27 நட்சத்திரங்கள் அனைத்தையும்
விளக்கமாக எனக்குக் காட்டினார்கள். அது ஏன் என்று
எனக்கு இன்னும் விளங்கவில்லை.

மூன்றாம் முறை நான் அவரைச் சந்தித்தபோது,
அவர்கள் மௌனமாக இருந்தார்கள்.

என்னுடன், ‘சங்கராபரணம்’ படத்தைத் தயாரித்தவரும்,
அவருடன் அந்தப் படத்தை டைரக்ட் செய்த திரு. கே.
விஸ்வநாத் அவர்களும் வந்திருந்தார்கள். என்னுடன்
அவர்களை அறிமுகப்படுத்தி வைக்க உள்ளே போனபோது –
அவர் வேத புத்தகம் ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தார்.

ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி வைக்க, ஆசீர்வாதம்
செய்வதும், புத்தகத்தை வாசிப்பதுமாகத் தொடர்ந்தது.

நான் வந்திருப்பதைச் சொன்னதும், என்னைத் திரும்பிப்
பார்த்தபடி, ‘என்ன விஷயம்?’ என்பது போல் சைகை செய்தார்.

அருகிலிருந்தவர், ‘ராஜாவுக்கு இன்னும் சொந்த வீடே

அமையவில்லையாம். பெரியவர் அனுக்கிரஹம் பண்ணி,
சொந்த வீடு வாங்கணுமாம்’ என்றார்.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. காரணம், நான் அப்படி

நினைத்ததுமில்லை.. சொல்லவுமில்லை.

மிகவும் சத்தமாக ‘பெரியவர் என்னை மன்னிக்கணும்.
அப்படி நான் சொல்லவே இல்லை. எனக்கு வீடெல்லாம்
வேணாம். மனம் மட்டும் சுத்தமானாப் போதும்’
என்று கத்தினேன்.

அவர் கண்களில் ஒளி பறந்த அதே நேரத்தில் அவர்
படித்துக்கொண்டிருந்த புத்தகத்தைப் படாரென்று கீழே விட்டார்.

கையை உயர்த்தி என்னை நோக்கித் திரும்பி ஆசீர்வாதம்
செய்தார்.. அதே நேரத்தில் என் உடம்பின் உள்ளே
ஏதோ ஒன்று இறங்குவதும், அது உடம்பின் அத்தனை
பாகங்களிலும் அது நிரம்பி வழிவதும் எனக்கு நன்றாகத்
தெரிந்தது. ஆனால், அவர் கை தூக்கிய அந்த க்ஷணம்
முதல், இறக்கிய கடைசிச் க்ஷணம் வரை, என் கண்கள்
தாரை தாரையாக நீரைப் பொழிந்து கொண்டிருந்தது.

உலகத்தாருக்கு என்னைத் தெரிகிறதோ இல்லையோ,
மகா பெரியவருக்கு என்னை மிக நன்றாகத் தெரியும்
இந்த நிறைவான மனதிற்கு வேறு குறையே இல்லை”.


நன்றி : மங்கை இதழ்

.
………………………………………………………………………………………………………………………………….……….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to ஆறாவது நிலையும் – இளையராஜாவும்….( ஸ்ரீரங்கம் நினைவுகள் – 2 …!!! )

  1. Subramanian சொல்கிறார்:

    கே.எம்.சார்,
    ஸ்ரீரங்கம் நினைவுகள்;
    மாதிரி நிறைய எழுதுங்க.
    சுவாரஸ்யமா இருக்கு.

Subramanian க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s