ஸ்ரீரங்கத்து நினைவுகள் ……!!!”திடீரென்று வந்தார்….!!! “

என்னதான் திருவரங்கம் என்று அரசு ஆவணங்கள்
சொல்லிக்கொண்டாலும் –
ஸ்ரீரங்கம் என்று சொல்லப்படுவதையே உள்ளூர் மக்கள்
விரும்புகின்றனர்….. (என்னையும் சேர்த்து தான்…) ….!!!

சுவாரஸ்யமான ஸ்ரீரங்கத்து பழைய நினைவுகள் சிலவற்றை
– இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

பூலோக வைகுந்தம் – 108 திவ்ய ஸ்தலங்களில்
முதன்மையானது என்கிற பெருமையெல்லாம் இதற்கு உண்டு..

துவக்கத்திலிருந்தே, ஸ்ரீரங்கமும், திருச்சியும் – தனித்தனியான
நகரங்களாகவே…. இரட்டை நகரங்களாகவே இருந்தன….

அடிப்படையில் சென்ற நூற்றாண்டின் துவக்கம் வரை
திருச்சி சைவ சமயத்திற்கு என்றும்,
ஸ்ரீரங்கம் – வைணவர்களின் இருப்பிடமாகவும்
பெயர் பெற்றிருந்தன…
பல சமயங்களில் – இரு பிரிவினருக்கும் இடையில்
அடிக்கடி சமய சச்சரவுகளும், மோதல்களும் கூட நிகழ்ந்து வந்தன.

கல்கியின் பொன்னியின் செல்வனில்
வரும் “ஆழ்வார்க்கடியான்” பாத்திரம் நினைவிருக்கிறதா…?

1994-ல் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உருவாக்கப்படும்போது,
இரண்டையும் இணைத்து ஒரே நகரமாக்கி விட்டார்கள்….!!!

இப்போதும், ஸ்ரீரங்கத்திற்கென்று – தனித்த அடையாளங்கள்
நிறைய உண்டு…

கோவிலுக்கு வெளியே, தென்புறத்தில் – நுழைவாயிலில் –
400 ஆண்டுகளுக்கு முன், நாயக்க மன்னர்களால் கட்டத்
துவங்கப்பட்டு, முற்றுப்பெறாமல் முதல் 2 கட்டங்களுடனேயே
இருந்தது … “மொட்டை கோபுரம்” என்று அழைக்கப்பட்டு வந்தது
இந்த ராஜகோபுரம்.

இந்த ராஜகோபுரத்தை முழுமையாக கட்டிமுடிக்கலாமே
என்று அகோபில மடம் ஜீயரிடம் ஆலோசனை கூறினார் –
காஞ்சி சங்கர மடத்தின் மஹாபெரியவர்.

அதனைத் தொடர்ந்து, அகோபில மடத்தின் 44 வது ஜீயர்
அழகிய சிங்கரின் முயற்சியால் இந்த கோபுரத்தை
முழுமையாக கட்டி முடிக்க ஒரு திட்டம் உருவாக்கப்பட்டு,
கட்டுமான பணிகள் 1979-ல் துவக்கப்பெற்றன…

பல தரப்புகளிலிருந்து ஒத்துழைப்பும், நிதிஉதவியும் கிடைத்தன.
8 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று 13 நிலைகளுடனும்,
13 கலசங்களுடன் 236 அடி உயரத்தில், ஆசியாவிலேயே
பெரிய கோபுரமாக 1987 ஆம் ஆண்டு ராஜகோபுரம்
கட்டி முடிக்கப்பட்டது…

இந்த வைணவத் திருத்தலமான அரங்கநாதர் திருக்கோவிலின்
ராஜகோபுரத்தை உருவாக பெருமுயற்சி எடுத்துக் கொண்டவர் –

  • சைவ மடமான காஞ்சி மடத்தின் மஹாபெரியவர்
    என்பது குறிப்பிடத்தக்கது….

( அரி’யும் சிவனும் ஒண்ணு – அதை
அறியாதவன் வாயில மண்’ணு ..!!!!! )

காஞ்சி பெரியவரின் சொற்களை
கட்டளையாக ஏற்று – பல செல்வந்தர்கள் முன்வந்து
கோபுர திருப்பணிக்கு உதவினார்கள்…

( செல்வந்தர்கள் மட்டும் தானா…? இந்த இடுகையின் அடுத்த
பகுதியில் இது குறித்து- ஒரு சுவாரஸ்யமான செய்தி இருக்கிறது…!!! )

1981-வாக்கில், எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக
இருந்த சமயத்தில், இந்த கோபுரம் உருவாகிக் கொண்டிருந்தது…
கட்டிடப்பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.

இந்த கோபுரம் கட்டப்பட்டு வரும்போது அதை பல நிலைகளில்
அதன் வளர்ச்சியை தொடர்ந்து காணக்கூடிய வாய்ப்பு எனக்கு
கிட்டிக்கொண்டே இருந்தது.

1980 கடைசி அல்லது 1981-ன் துவக்கமாக இருக்கும்…
ஏறத்தாழ 40 ஆண்டுகள் கடந்த பின்னும் –
அந்நாளைய ஞாயிற்றுக்கிழமை ஒன்றின் காலைவேளை
இன்னமும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது….

அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் கூட,
கோபுரத்தின் கட்டுமானப்பணிகள் தொடர்ந்து நடந்து
கொண்டிருந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுமானத்
தொழிலாளர்கள் – கோபுரத்தின் பல நிலைகளிலும்,
சாரம் கட்டி வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

அன்று காலை நான் ஸ்ரீரங்கத்தில் இருந்தேன்….

கோபுரத்தின் அடிவாரத்திலிருந்து சுமார் 50 அடி தெற்கேயுள்ள
காந்தி சிலையருகே உள்ள பேப்பர் கடையில் ஏதோ
வாங்கிக்கொண்டிருந்த நான் ஒரு சுவாரஸ்யமான
காட்சியை காணும் வாய்ப்பை பெற்றேன்…!!!

யாரும் எதிர்பார்க்காத அந்த காலை வேளையில்,
காந்திரோடு வழியாக வந்த ஒரு சாதாரண கருப்பு நிற கார்
கோபுரத்திற்கு அருகேயிருந்த காந்திசிலை அருகே
-நான் நின்றிருந்த இடத்திற்கு வெகு அருகே – நின்றது.

கட்டப்பட்டுவந்த இந்த ராஜகோபுரத்தை பார்வையிட்டு, அதில்
பணிபுரிந்து வந்த தொழிலாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக
யாருக்கும் சொல்லாமல் –

  • முன் அறிவிப்பு ஏதுமின்றி திடீரென்று அங்கு வந்திருக்கிறார் அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.

அங்கே இருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியத்தோடு பார்த்தனர்…
( எனக்கு 10 அடி தூரத்திற்குள்,
அன்றைய முதலமைச்சரான எம்.ஜி.ஆர்….!!! )

ஐந்தே நிமிடங்கள் தான் எம்.ஜி.ஆர். அங்கே இருந்தார்…

காரிலிருந்து அவர் சுற்றும் இருந்தவர்களைப் பார்த்து,
கைகளை அசைத்துக்கொண்டும், கூப்பியபடியும் வெளியே வந்தார்.

அவருடன் –

இதர அமைச்சர்கள்,
கட்சிக்காரர்கள்,
அதிகாரிகள், காவல் துறையினர்,
பெர்சனல் உதவியாளர்கள் என்று யாரும் வரவில்லை;
போலீஸ்காரர்கள் யாருமே அந்த சமயத்தில் அங்கே இல்லை;

ஞாயிற்றுக்கிழமை என்பதால் –
அந்த இடத்தில் ஒரு அரசாங்க அதிகாரி கூட இல்லை…
முன் அறிவிப்பு ஏதும் இல்லாததால்
ஒரு கான்ஸ்டபிள் கூட இல்லை;
அவரை அங்கே யாரும் எதிர்பார்க்காததால்,
கட்சிக்காரர் எவரும் இல்லை;

( அப்போது, அவருடன் அந்த சாதாரண காரில் டிரைவருடன் –
இதயம் பேசுகிறது – மணியன் மட்டுமே வந்திருந்தார்…!!!)

அதற்குள்ளாக சுற்றிலும் பரபரப்பு….

காரைவிட்டு வெளியே வந்தவர் மேலே உயரத்தில் கோபுரத்தில்
வேலைசெய்துகொண்டிருந்த கட்டிடத் தொழிலாளர்களை
பார்த்து உற்சாகமாக கைகளை ஆட்டினார்…. மேலே
இருந்தவர்களில் சிலர் “வாத்தியாரே….வாத்தியாரே..” என்று
உற்சாக மிகுதியால் உணர்ச்சிவசப்பட்டு சத்தமாக கூவினார்கள்.
( அது 40 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த அன்பின் வெளிப்பாடு…!!!)

கோபுரத்தின் அடியில் கட்டிட வேலை சம்பந்தமாக
மேற்பார்வை பணியில் இருந்தவர்களில் ( காண்டிராக்டரின்
பணியாளர்கள் ….) மூத்தவராக தெரிந்தவரை, கைகாட்டி அழைத்தார்….
அதற்குள்ளாகவே, அவர்களில் சிலர் ஓட்டமும் நடையுமாக
எம்.ஜி.ஆரை நோக்கி வந்துகொண்டிருந்தனர்;.

அவர்களில் சீனியர் போல் தெரிந்த ஒருவரிடம் எம்.ஜி.ஆர்.
ஏதோ பேசினார்… சில விவரங்கள் கேட்டார்…. பிறகு –

ஜிப்பா பையிலிருந்து சில கட்டுகள் கரன்சி நோட்டுகளை எடுத்து
அவரிடம் கொடுத்து ஏதோ சொன்னார் ….

( அவர் சென்ற பிற்பாடு தான் தெரிந்தது…
அங்கு வேலை செய்து கொண்டிருந்த
அத்தனை பேருக்கும் அன்றைய தினம் –

வடை, பாயசத்துடன் விருந்து சாப்பாடு
போடச்சொல்லி (சொந்த….) பணத்தை
கொடுத்திருக்கிறார் ..!!! )

எம்.ஜி.ஆரின் கொடைக்குணம் பற்றி முன்னரே
நிறைய கேள்விப்பட்டிருந்தேன்…. இருந்தாலும் –

எவ்வளவு தருகிறோம் என்று கூட
எண்ணிப் பார்க்காமல் – தானம் செய்யும் ஒரு மனிதரை,

  • அன்று தான் நான் முதன் முதலில் பார்த்தேன்.

மாநிலத்தின் முதலமைச்சர் ஒருவர் ஒரு இடத்திற்கு –
“திடீரென்று வருவது” என்றால் எப்படி என்பதற்கான
உண்மையான அர்த்தத்தை அன்று அங்கே பார்த்தேன்…

முதலமைச்சர், தன்னந்தனியாக, பொது வெளியில் –
மக்களிடையே வந்திருக்கிறார்…
எப்படி முடிந்தது….?

கொஞ்சம் யோசித்துப் பார்த்தபிறகு எனக்குத் தோன்றியது –

இது நம்பிக்கை சார்ந்த விஷயம்…
மக்கள் தன்னை நேசிக்கிறார்கள், நம்புகிறார்கள்,
என்பதை அவர் மனதார உணர்கிறார்…

தன்னை விரும்பும், தன்னை நம்பும்,
தன்னை தேர்ந்தெடுத்த மக்களிடம் வருவதற்கு
அவர் ஏன் தயக்கப்பட வேண்டும்…?

அவரென்ன காசு கொடுத்து ஓட்டு வாங்கியா
ஆட்சிக்கு வந்தார்…?

என்ன …. மக்கள் பெருமளவில் கூடி விட்டால்,
அன்பு மிகுதியால் உணர்ச்சி வசப்பட்டால்,
பிறகு அவர்களை கட்டுப்படுத்துவது கடினம்….

எனவே தான், கூட்டம் கூடுவதற்குள் –
உடனே கிளம்பி விட்டார்….!!!

.
……………………………………………………………………………………………………………………..…

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to ஸ்ரீரங்கத்து நினைவுகள் ……!!!”திடீரென்று வந்தார்….!!! “

  1. புதியவன் சொல்கிறார்:

    இதற்கு ஒரு நிலைக்கு இளையராஜா, என்று பலர் உதவியிருந்தனர். தள்ளாத வயதிலும் ஜீயர் அவர்கள் இதில் மிகவும் ஈடுபாட்டுடன் உழைத்தார். திறப்பு விழாவிற்கு இரு நாட்களுக்கு முன்பு அரியலூர்(?) இரயில் விபத்து என்பதைக் காரணம் காட்டி திறப்பு விழாவின் தேதியை மாற்ற முயன்றதற்கு மிகுந்த எதிர்ப்பு தெரிவித்து சொன்ன தேதியிலேயே நடத்தவேண்டும் என்று முனைப்பாக இருந்தார் அஹோபிலமடம் ஜீயர். இந்தக் கைங்கர்யத்தில் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் பங்கும் உண்டு.

  2. vimarisanam - kavirimaintha சொல்கிறார்:

    புதியவன்,

    ஆர்.எம்.வீ. பற்றி உங்கள் எடைபோடல் எப்படியோ….

    என்னப் பொருத்த வரை அவர் ஒரு
    ” பக்கா சுயநலவாதி…” தன் சுயநலத்துக்காக
    எதையும் செய்யத் தயங்க மாட்டார்….

    வயதாகி விட்டது –
    செய்த வினைகள் காரணமாக பயம் வந்து விட்டது…..
    எனக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்று
    சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டு, முழுதாக வெளிவராமல்
    இன்னமும் சுயமரியாதைப் போர்வையில்
    ஒளிந்துகொண்டிருப்பவர். இவருக்கு எதற்கு
    ஆழ்வார் ஆய்வு மையம் எல்லாம்…?

    எம்.ஜி.ஆரிடம் இருந்தே, அவர் துணையாலேயே
    வளர்ந்தவர், எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு,
    எம்.ஜி.ஆரை தன் பரமவைரியாக கருதி செயல்பட்டவருடனேயே
    கூட்டு சேர்ந்தவர்… வேண்டிய அளவிற்கு “சேர்த்து” விட்டார்…

    அவர் சிறந்த புத்திசாலி தான்.
    திறமையான நிர்வாகி தான்.

    ஆனாலும், மனசாட்சியே இல்லாத ஒரு மனிதரை
    என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை;

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

      ஆர்.எம்.வீரப்பன், காஞ்சி மடத்திற்கும் உதவிகள் செய்திருக்கிறார், ஸ்ரீரங்கம் கோபுரம் கட்டியபோது அரசாங்கத்திற்கும் ஜீயருக்கும் பாலமாகவும் இருந்தார். இது வேறு.

      ஆர்.எம்.வீ நீங்கள் எழுதியிருப்பதுபோல, முழுச் சுயநலவாதி. ஜெ.வை எதிர்த்தார் (தனக்குப் பெரிய பதவி வந்துவிடும் என்ற நம்பிக்கையில்). அதே ஜெ வின் காலடியில் வீழ்ந்தார், பதவி சுகத்திற்காக. பிறகு கழுத்தைப் பிடித்துத் தள்ளியதும், கருணாநிதி காலடியில் விழுந்தார்.

      முன்பு ஜெகத்ரட்சகனோடு இருந்த தொடர்பு காரணமாக, ஆழ்வார் ஆய்வு மையம் நடத்தும் ஜெகத்ரட்சகன், ஆர்.எம்.வீக்கு ஆழ்வார் ஆய்வு மையம் சார்பாக பட்டயம் அளித்தார் (அது ஒரு நகைச்சுவை நிகழ்வு)

      ஆர்.எம்.வீக்கு எம்ஜியாரிடம் உதவியாளராகப் பணியாற்றிய வரை மட்டும்தான் கொஞ்சத்துக்குக் கொஞ்சம் மனசாட்சி இருந்தது. எம்.ஜி.ஆர் அவரை எப்போதும் தன்னுடைய கணக்கப்பிள்ளையாகத்தான் வைத்துக்கொண்டிருந்தாரே தவிர, ஜெ மட்டும்தான் எம்.ஜி.ஆரின் உள்வட்டத்தைச் சேர்ந்தவர் என்பதில் எம்.ஜி.ஆர் மிகத் தெளிவாக இருந்தார்.

      எம்.ஜி.ஆரின் பக்கலில் அவர் இல்லாமலிருந்தால், ஆர்.எம்.வி ஒரு சாதாரண ஆள்தான். சொத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்காகவும், சேர்ப்பதற்காகவும் எந்த நிலைக்கும் செல்லத் தயங்காதவர்தான் இந்த சுயநலவாதி ஆர்.எம்.வீ (இவரே எம்.ஜி.ஆர் கேம்பில் கருணாநிதிக்கான black sheep ஆக இருந்திருப்பார்)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.