ஒரே கல்லில் – இரண்டு-மூன்று மாங்காய்கள் … !!!

பல்வேறு செய்தித்தளங்கள் தரும் தகவல்கள் –

“பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவரான ரவீந்திர
நாராயண் ரவி, 1974-ல் கல்லூரிப் படிப்பை முடித்து,
1976-ல் ஐ.பி.எஸ் அதிகாரியாகத் தேர்வானவருக்கு
கேரளா கேடர் ஒதுக்கப்பட்டது.

மத்திய உளவுத்துறையான ஐ.பி-யில் பணிபுரிந்தபோதுதான்,
இவர் பெயர் டெல்லி வட்டாரங்களில் பிரபலமானது.
ஐ.பி-யில் வடகிழக்கு மாநிலங்கள் பொறுப்பை
ஏற்றிருந்த ரவிக்கு, அந்த மாநிலங்களில் செயல்பட்ட
தீவிரவாத இயக்கங்களின் ஜாதகங்கள் அனைத்தும் அத்துபடி.
அந்தச் சமயத்தில், ஐ.பி-யில் இயக்குநராகப்
பணியாற்றிய அஜித் தோவலின் நட்பும் ரவிக்குக்
கிடைத்தது. அந்த நட்பின் தொடர்ச்சிதான் இன்று
அவரைத் தமிழக ஆளுநராக்கியிருக்கிறது.

2012-ல் ஐ.பி-யின் சிறப்பு இயக்குநராக ஓய்வுபெற்ற ரவி,
2014-ல் பா.ஜ.க ஆட்சி அமைந்தவுடன், பிரதமர் அலுவலகக் கூட்டு

உளவுக்குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பிறகு தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் ஆனார்.

ரவியின் வளர்ச்சி அதோடு நின்றுவிடவில்லை.
நாகாலாந்தில் தனி நாடு கோரி ஆயுதமேந்திய போராட்டம்
1970-களிலிருந்து இன்றுவரை நடைபெற்றுவருகிறது.
இந்த ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட என்.எஸ்.சி.என்
(ஐ.எம்) என்ற அமைப்பு, 1997-ல் மத்திய அரசுடன்
சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்டது.
ஆனாலும், இன்னும் சில குழுக்கள் ஆயுதப் போராட்டத்தைத்
தொடர்ந்து வந்தன. 2014-ல் மோடி அரசு பொறுப்பேற்றவுடன்,
இந்திய அரசின் சார்பில் நாகாலாந்திலுள்ள பிரிவினைவாத
அமைப்புகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு
முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அஜித் லால் என்பவரை
நியமிக்க, முதலில் உத்தேசிக்கப்பட்டிருக்கிறது….

ஆனால், தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலின்
பரிந்துரை காரணமாக, பேச்சுவார்த்தைக்கான மத்தியஸ்தர்
பொறுப்பு ஆர்.என்.ரவிக்கு வழங்கப்பட்டது. அந்த அளவுக்கு
அஜித் தோவலின் செல்லப்பிள்ளையாகவே ரவி வலம்வந்தார்.

2015-ம் ஆண்டு என்.எஸ்.சி.என் (ஐ.எம்) அமைப்புடன்
மத்திய அரசு சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.
இதற்குக் காரணமான ரவி, அப்போது பெரிதும்
கொண்டாடப்பட்டார். ஆகஸ்ட் 2019-ல் நாகாலாந்து
ஆளுநராக ரவி நியமிக்கப்பட்டவுடன், தலைநகரான
கோஹிமாவே குலுங்கும் வண்ணம் அவருக்கு
வரவேற்பளித்தனர் அந்த மாநில மக்கள். எல்லாமே சில
மாதங்கள்தான்.

ஆளுநரானவுடன் தன் அதிகாரத்தைக் காட்ட
ஆரம்பித்தார் ரவி. என்.எஸ்.சி.என் (ஐ.எம்) அமைப்புடன்
உரசல் ஆரம்பித்தது. ‘எங்களுடன் போட்ட ஒப்பந்தத்தில்
சில திருத்தங்களைச் செய்து வெளியிட்டார் ரவி’ என
அவர்மீது குற்றச்சாட்டை சுமத்தியது அந்த அமைப்பு.
‘உண்மையான ஒப்பந்தம் இதுதான்’ என அந்த அமைப்பு
வேறொரு நகலை வெளியிட்டது. அதன்படி நாகாலாந்துக்குத்
தனிக் கொடி, தனி அரசியல் சட்டத்தை
ஏற்றுக்கொள்வதாகக் கையெழுத்து போட்டிருந்தாராம் ரவி.

இந்த விஷயம் வெளியானதும், காங்கிரஸ் உள்ளிட்ட
எதிர்க்கட்சிகள் கொந்தளித்தன. மத்திய அரசுக்கே
தர்மசங்கடம் ஏற்பட்டது. உடனே ரவி, ‘நீங்கள்
இல்லாமலேயே நாகாலாந்தில் அமைதியை ஏற்படுத்துவோம்’
என அந்த அமைப்புக்குச் சவால் விட்டார்.

நாகாலாந்தில் செயல்படும் ஏழு தீவிரவாத இயக்கங்களை
ஒருங்கிணைத்து, `நாகா தேசிய அரசியல் குழு’ என்ற
ஒன்றை உருவாக்கச் செய்து, அவர்களுடன் அமைதிப்
பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார்.
இருப்பதிலேயே பெரிய குழுவான என்.எஸ்.சி.என் (ஐ.எம்)
இதனால் முறுக்கிக்கொண்டது. ‘ரவி எங்களைப்
புறக்கணிக்கிறார். அவர் நாகாலாந்திலிருந்து மாற்றப்பட்டால்
மட்டுமே சமாதானப் பேச்சுவார்த்தை நடக்கும்’ என்று
திட்டவட்டமாகக் கூறிஇருக்கிறது.

இதற்கிடையே பிப்ரவரி, 2020-ல் நாகாலாந்து தலைமைச்
செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், ‘தலைமறைவு
இயக்கங்களுடன் தொடர்புடைய அரசு அதிகாரிகள்,
அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களைச்
சேகரியுங்கள்’ என்று ரவி உத்தரவிட்டிருந்தார். இது
நாகாலாந்து மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்து ஜூன் மாதத்தில், நாகாலாந்து முதல்வர்
நெப்யூ ரியோவுக்கு ரவி அனுப்பிய கடிதம் அடுத்த சர்ச்சைக்கு
வித்திட்டது. அந்தக் கடிதத்தில், நாகாலாந்தில் மாநில
அரசுக்கு நிகராகச் சில அமைப்புகள் தனி ராஜாங்கம்
நடத்துவதாகவும், பணம் வசூலிப்பதாகவும் குற்றம்சாட்டிய ரவி,

‘சம்பந்தப்பட்ட அமைப்புகள் மீது நடவடிக்கை
எடுக்கவில்லையென்றால், நாகாலாந்து ஆளுநருக்கு என
இந்திய அரசியல் சாசனம் அளித்திருக்கும் சட்டவிதி
371(a)(1)(b)-யின் அதிகாரப்படி கடும் நடவடிக்கை
எடுக்கப்படும்’ என்று எச்சரித்திருந்தார். இது, முதல்வர்
நெப்யூ ரியோவை சூடாக்கியிருக்கிறது.
நாகாலாந்தில் பா.ஜ.க கூட்டணியுடன்தான் தேசிய ஜனநாயக
முன்னேற்றக் கட்சி ஆட்சி நடத்துகிறது.
ஆளுநரின் இந்தக் கடித சர்ச்சையை பா.ஜ.க தலைமைக்குக்
கொண்டுசென்றார் ரியோ. ஆனாலும், ரவியின்
செயல்பாடுகளில் சூடு குறையவில்லை.

இதற்கிடையே பெகாசஸ் விவகாரம் பெரிதாக
வெடித்தபோது, அரசால் ஒட்டுக் கேட்கப்பட்ட போன்
எண்களின் பட்டியல் வெளியானது. அதில் என்.எஸ்.சி.என் (ஐ.எம்)
தலைவர்கள் பலரின் எண்களும் இருந்தது, அந்த அமைப்பை
இன்னும் உஷ்ணமாக்கியது.

‘மீண்டும் ஆயுதம் ஏந்தவும் தயார்’ என அவர்கள்
சொன்னார்கள். இந்தநிலையில், சமாதானப்
பேச்சுவார்த்தையைச் சீர்ப்படுத்தும் பொறுப்பை ஐ.பி
இயக்குநர் அரவிந்த் குமாரிடம் பிரதமர் மோடிஜி அளித்தார்.
‘நாங்கள் மோடிஜியை நம்புகிறோம். ரவியை நம்பவில்லை’
என அவரிடம் சொல்லி அனுப்பினார்கள்
என்.எஸ்.சி.என் (ஐ.எம்) தலைவர்கள்.

‘இனியும் நாகாலாந்தில் ஆர்.என்.ரவியை ஆளுநராக
வைத்திருந்தால், சமாதானப் பேச்சுவார்த்தையில்
பின்னடைவு ஏற்படும்’ என்று பிரதமரிடம் ஐ.பி ரிப்போர்ட்
அளித்துவிட்டது. அதன் பிறகுதான், நாகாலாந்திலிருந்து
தமிழகத்துக்கு ஆர்.என்.ரவி மாற்றப்பட்டார்- என்கின்றன
மீடியாக்கள்….அவரை மாற்றியதை நாகாலாந்து அரசியல்
கட்சியினர் அனைவரும் வரவேற்று கொண்டாடியிருக்கிறார்கள்….!!!

…………………………

நாகாலாந்து சிக்கலை சமாளிக்கவும், அதே சமயம்
ரவி அவர்களின் முக்கியத்துவத்தை குறைக்காமலும்
செயல்பட முனைந்திருக்கிறார்கள் … என்று தோன்றுகிறது…!!!
சாமர்த்தியமான காய் நகர்த்தல்…

தமிழகத்தில் திமுக-வின் கூட்டணி கட்சிகள் அனைத்தும்
அவரது நியமனத்தை எதிர்க்கின்றன… ஆனால் ஆளும் திமுக
எந்தவித எதிர்ப்பையும் காட்டவில்லை; மாறாக வரவேற்பு
தெரிவித்திருக்கிறது….

ஆனால், புதிய ஆளுநரை தி.மு.க வரவேற்றது
சம்பிரதாயத்துக்குத்தான் என்கிறது அறிவாலய வட்டாரம்.

‘ஆளுங்கட்சியாக இருந்துகொண்டு ஆளுநர் நியமனத்துக்கு
எதிர்ப்பு காட்ட முடியாது. அதேநேரம் அவர் வரவை
உஷாராகத்தான் பார்க்கிறோம் என்றும் சொல்கிறது
திமுக வட்டாரம்.

பன்வாரிலால் புரோஹித் அவர்கள் கவர்னராக இருந்தபோது
செய்ததைப்போல் – தங்களால் இப்போது நேரடியாக
எதிர்க்க முடியாது என்பதால், கூட்டணி கட்சிகளான,
காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மூலம் எதிர்ப்பு
அறிக்கைகள் திமுக-வால் வெளியிட வைக்கப்படுகின்றன….

ஆளுநர் நினைத்தால், ஒரு மாநில ஆளுங்கட்சிக்கு
எதிராகக் கோப்புகளை உருவாக்கி டெல்லிக்கு
அனுப்ப முடியும். தேவையான சமயங்களில்
அதை அரசியல் ஆயுதமாகக்கூட
பயன்படுத்தலாம். இவையெல்லாம் ஏற்கெனவே
பல மாநிலங்களில் நிகழ்ந்து கொண்டு தானிருக்கின்றன….

நாம் தமிழகத்திற்கு வெளியே நடக்கும் அரசியல்
சம்பவங்களை ஆழமாக பார்ப்பதில்லை என்பதால் –
நமக்கு நாகாலாந்தும் தெரியவில்லை;
வங்காளமும் பெரிதாகத் தோன்றவில்லை …!!!

இது – நாகாலாந்தில் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்க்கவும் உதவும்….
தமிழகத்தில் – ஆளும் கட்சியான திமுகவுக்கு கிலி ஏற்படுத்தவும்,
அழுத்தம் தரவும் கூட உதவும்….

ஒரே கல்லில்….2 மாங்காய்…!!!

உண்மையில் – 2 இல்லை… 3 மாங்காய்கள்….

இந்த மூவ் – தமிழக பாஜக மக்களையும் மிகுந்த பரவசத்திற்கு
உள்ளாக்கி இருக்கிறது ….!!! இனி தமிழக பாஜக மக்கள்
அடிக்கடி ராஜ்பவனுக்கு விசிட் செய்யலாமே …!!!

………………………………………………………………………………………………………………………………………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to ஒரே கல்லில் – இரண்டு-மூன்று மாங்காய்கள் … !!!

  1. புதியவன் சொல்கிறார்:

    தமிழகத்துக்கு ரவி மாதிரி ஆளுநர் அவசியம் என்று நினைக்கிறேன். தமிழக அரசுக்குக் கண்டிப்பாக கடிவாளம் வேண்டும், அதன் நடவடிக்கைகள் தேசியத்திற்கு எதிராக இருக்கிறது. இது நாட்டுக்கு நல்லதல்ல.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.