எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலென்ன…?கோட்டை எதிரிலேயே கொள்ளை …

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு ஒரு செய்தியை
கண்டுபிடித்து வெளியிட்டிருக்கிறது….

தமிழகத்தின் தலைமைச்செயலகம் அமைந்துள்ள
செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகேயே,
கூவம் முகத்துவாரத்திலிருந்து, நம்பர் ப்ளேட்
போடாத, லாரிகளில் இரவு நேரங்களில், தொடர்ந்து –
குறைந்த பட்சம் கடந்த ஒரு வருடமாக
மணல் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது என்று
இந்தியன் எக்ஸ்பிரஸின் கள ஆய்வு உறுதி செய்வதாக
இந்த செய்தி தெரிவிக்கிறது.

பொதுப்பணித்துறையின் தலைமை அலுவலகம்
அப்பகுதியின் அருகில் இருந்தபோதும் எவ்விதமான
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும்
இந்தச் செய்தி கூறுகிறது.

இங்கிருந்து எடுக்கப்படும் மணலை –
கட்டிடங்கள் கட்டுவதற்கு பயன்படுத்தக்கடாது.
அவ்வாறு கட்டப்படும் கட்டிடங்கள் பாதுகாப்புக்கு
உரியது அல்ல என பொறியியல் வல்லுநர்கள்
தெரிவிக்கின்றனர். ஆனால் சட்டவிரோதமாக
இம்மண்ணை எடுத்து கட்டுமானப் பணிகளுக்கு
பயன்படுத்தியுள்ளனர்.

எத்தனை அரசு கட்டிடங்கள், தனியார் கட்டிடங்கள்
இதற்கு பலியாகி இருக்கின்றனவோ – தெரியவில்லை;

( இடிந்து விழும்போது தானே தெரியவரும்… )

கூவம் கடலுடன் இணையும் பகுதியில் மணல்
அள்ளப்படுவதால், சூழல் மிக மோசமாக அழிந்து வருகிறது
என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ச்சியாக
சொல்லி வருகிறார்கள்.

அரசுக்கோ, ஆளும் கட்சிகளுக்கோ
இது தெரியாத விஷயமா என்ன…?

நாளேடு – இது குறித்து விசாரித்தபோது,
கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில், அரசு அல்லது தனியார்
நிறுவனங்களுக்கு மணல் அள்ள அனுமதி ஏதும் அளிக்கப்பட
வில்லை; அரசின் உத்தரவின் பேரில் மட்டுமே இப்பகுதியில்
மணல் அள்ள முடியும் என்றும் அதிகாரிகள் கூறியதாகவும்
சொல்கிறது.

கடந்த 2013-ஆம் ஆண்டு இந்தப்பகுதியிலிருந்து 11,000 கன மீட்டர்
மணல், வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு எடுத்துச்செல்ல
அனுமதியளித்து அரசு உத்தரவு பிறப்பித்தது.

ஆற்றுமணலுடன், கலப்படம் செய்ய கடல் மணல் பயன்படுத்த
பட்டதாக புகார் வெளியானதையடுத்து, அந்த உத்தரவு
அரசால், 2014-ஆம் ஆண்டே ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடல் மணலைக்கொண்டு கட்டப்படும் கட்டிடங்கள் தரமற்றவை
என்றும் ஆபத்தானவை என்றும் கட்டுமான நிறுவனங்கள்
தெரிவிக்கின்றன.

இந்த மணல், ஒரு லாரிக்கு 40,000 முதல் 50,000 ரூபாய் வரை
விற்கப்படக்கூடும் என்று தமிழ் நாடு மணல் அள்ளும் லாரிகள்
சங்கத்தின் தலைவர் கூறி இருக்கிறார்.

ஒரு லாரியில் 6 அலகு மணல் பிடிக்கும்.
ஒரு அலகு மணல் – 2.83 கன மீட்டர் அளவு கொண்டது.
ஒருவேளை – ஒரு இரவுக்கு – 15 லோடு மணல்
அந்தப்பகுதியிலிருந்து அள்ளப்பட்டால், ஒரு லோடுக்கு
20,000 ரூபாய் என்றே வைத்துக்கொண்டாலும் கூட,
ஏறத்தாழ 3 லட்சம் ரூபாய் வரும்படி தரக்கூடியது.

அதிகாரபூர்வ கணக்கீட்டின்படி, இந்தப்பகுதியில்
ஒரு லட்சம் கன மீட்டர் மணல், கடல் அலையின் போக்கின்
மூலம் குவிவதாகவும்,

இது 25,000 லாரிகளில் எடுத்துச் செல்ல போதுமான மணல்
என்றும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் – சில நாட்களுக்கு
முன் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆய்வு மேற்கொண்டபோது,
இந்தப்பகுதியில் மணல் அள்ளப்பட்டு, நிறைய பள்ளங்கள்
இருந்ததாகவும் கூறியுள்ளது.

“மணல் கொள்ளை” “மணல் கொள்ளை” என்று கூக்குரல்
இடுவதை மட்டும் இரண்டு கட்சிகளும் மாறி வழக்கமாகக்
கொண்டிருக்கின்றன. இது ஆட்சியில் இருந்தால் – அது கூவும்…
அது ஆட்சியில் இருந்தால் -இது கூவும்…

மக்கள் இளிச்சவாயர்களாக இருக்கும் வரையில்
இவர்களின் கூக்குரல்களுக்கும் பஞ்சமில்லை;
பணக்கொள்ளைக்கும் பஞ்சமில்லை;

  • வியாபாரிகள் – ஆட்சி மாறி விட்டால் என்ன செய்வது என்று அநாவசியமாக அச்சப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை… அந்தந்த சமயத்தில் – “உரிமையாளர்” கள் யாரோ…. அவர்களிடம் உரிய “கப்பம்” செலுத்தி விட்டு எந்த வியாபார’த்தையும் தொடர்ந்து செய்து கொள்ளலாம்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.