தாங்க முடியாத சோகம் தாக்கும்போது ….

வாழ்க்கையில் தாங்க இயலா துன்பம், சோகத்தை தரும்
நிகழ்வுகள் நிகழ்ந்தேறும்போது அதனை நேர்மறையாக
எப்படி மாற்றுவது ….. மஹாராஷ்டிராவில் வாழ்ந்த ஒருவரின்
வாழ்க்கை கதை இது …!

வருத்தம் என்பதையே வளர்ச்சிக்கான ஒரு வழியாக
மாற்றிக் கொள்ள முடியும் என்பதற்கான ஒரு உதாரணம் இது….

வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போடும் துயரங்களை
பெரும்பாலான மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால்
குறிப்பிட்ட சாராருக்கு, உண்மையிலேயே அது நிகழும்போது,
அவர்களது வாழ்வின் ஆதார சுருதிகளாக இருந்த அனைத்தும்
பறிக்கப்பட்டு, ஆழமான சோகம் அவர்களுக்குள் தங்கிவிடுகிறது.
இந்த சோகத்தைக் கையாள்வதற்கு அநேக வழிகள் உண்டு.

சிலர் ஒரு மூலையிலேயே உட்கார்ந்துகொண்டு,
மற்றவர்களுக்குத் துன்பம் உருவாக்கியவாறு தங்களையே
பைத்தியமாக்கிக் கொள்கின்றனர். வேறு சிலர் இருக்கிறார்கள் –
அவர்கள் அதிக வருத்தம் உண்டாகும்போது, ஏதோ ஒரு
வழியில் உபயோகம் நிறைந்த வேலையைச் செய்வார்கள்.


நாம் பார்க்கும் கர்ம யோகிகள் பலரும்
இந்த மாதிரி காயப்பட்ட மக்களாகவே இருக்கின்றனர்.

மகாராஷ்ட்ராவில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக ஒருவர்
இருந்தார். சஹயாத்திரி மலைகளுக்கு சற்று அப்பால் இருந்த
ஒரு கிராமத்தில் தனது மனைவி மற்றும் இரண்டு
குழந்தைகளுடன் வாழ்ந்திருந்தார். அதன்பிறகு ஏதோ ஒரு
ஆட்கொல்லி நோய் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை
பலிகொண்டதில், முற்றிலுமாக தனித்து விடப்பட்டார்.
அந்த மனிதர் நொறுங்கிப் போய்விட்டார்.

ஏனெனில், அவரது ஒட்டுமொத்த வாழ்வும் அந்த மூன்று
நபர்களைச் சுற்றியே அமைந்திருந்தது. அவர் புத்தி
பேதலித்துப் போகும் நிலையில் இருந்தார். எதுவும் செய்யத்
தோன்றாதவராக, சஹயாத்திரி மலைகளுக்குள் கால் போன
போக்கில் நடந்து சென்று, உட்கார்ந்துவிட்டார். அப்போது,
அவர் குழந்தையாக இருந்தபோது இந்த மலைகள் இருந்த
விதத்தை நினைவு கூர்ந்தார்.

அப்போது அந்த மலைகள் பசுமையாக, மரங்கள் நிறைந்து
இருப்பது வழக்கம். இப்போது மலைகளில் அவர் நடந்து
கொண்டிருந்தபோது, அது தரிசாக உஷ்ணம் தகிக்க, தாங்க
முடியாததாக இருந்தது. பல நாட்களுக்கு அவர் அங்கேயே
அமர்ந்துகொண்டு கீழே விழுந்த பழம், கொட்டைகளை
எடுத்துத் தின்றவாறு சுற்றி அலைந்து கொண்டிருந்தார்.

சிலகாலம் கழிந்தபிறகு இந்த மலைகள் தரிசாகிவிட்ட
காரணத்தினால்தான் –

காலம் தன் வாழ்க்கையையும்
தரிசாக்கிவிட்டது என்கிற முடிவிற்கு வந்தார்….. அது சரியா,
தவறா என்பது முக்கியமல்ல. இதற்காக ஏதாவது
செய்யவேண்டும் என்று உறுதிகொண்டது தான் முக்கியம்.

அவர் அங்கே ஒரு துறவியைப்போல வாழ்ந்துகொண்டு,
ஒற்றை மனிதராகவே, எங்கெல்லாம் மரங்களிலிருந்து விதைகள்

விழுந்திருக்கின்றன என்று தேடி எடுத்து, எவருடைய
துணையும் இல்லாமல், ஏறக்குறைய நான்கு இலட்சம்
மரங்களை நட்டு, வளர்த்தெடுத்தார். இருபத்தைந்து வருடங்கள்
அவர் அவைகளுக்காக உழைத்தார். இந்த ஒரு மனிதரால்
சஹயாத்திரி மலைகளில் இன்றைக்கு நான்கு இலட்சம் மரங்கள்
நிற்கின்றன.

எந்த ஒரு உணர்ச்சியையும், தங்களது வாழ்வில் ஒரு
ஆக்கப்பூர்வமான சக்தியாக ஒருவரால் உருமாற்ற முடியும்.


துயரமும், துன்பமும் – எதிர்மறையான ஆற்றல் அல்ல.
எதிர்மறையானது என்று எதுவும் இல்லை. ஏதோ ஒன்று
எதிர்மறை என்றும், மற்றொன்று நேர்மறை என்றும் நாம்
நினைக்கலாம். ஆனால் எதிர்மின்னோட்டமும்,
நேர்மின்னோட்டமும் இணைவதால்தான் ஒரு விளக்கு
ஒளி தருகிறது. இதை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

நம்முடைய துயரம் நம்மை முழுமையற்றவராக நினைவுபடுத்தினால்,
அந்த துயரத்தை, துன்பத்தை – மற்றவர்களின், சமூகத்தின் – வளத்திற்கான ஒரு முயற்சிக்கு பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

உங்களுக்குள் சோகம் எழும்போது, நீங்கள் இன்னும் அதிக
கருணையுடையவராக

மற்றவர்களின் மீது அதிக அக்கறையுள்ளவராக –

அதிக அன்பு கொள்பவராக மாறினால், அது சிறப்பானது.


வருத்தம் கொள்ளும்போது,

எரிச்சலாகவும், கோபமாகவும், ஒட்டுமொத்த உலகமும் தவறாக
இருக்கிறது என்றும் நினைத்தால் – அது எந்தவித தீர்வையும் தராது.


ஆகவே துயரத்தை நாம் கோபமாக மாற்றுகிறோமா
அல்லது அன்பு மற்றும் கருணையாக மாற்றுகிறோமா
என்பது மிக முக்கியம்.

ஒருவர் வருத்தமாக இருக்கும்போது,
கருணையானவராக உருமாறுவது மிகவும் எளிது.

நம்முடைய எல்லா உணர்ச்சிகளையும் ஆக்கப்பூர்வமாகப்
பயன்படுத்தக் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியமானது.


மகிழ்ச்சிகரமாக இருப்பது மட்டும் முக்கியமானதல்ல.
துயரத்தை நாம் அறியவில்லை என்றால், நாம்
பக்குவம் பெற மாட்டோம். துயரத்தையும், வலியையும்
அறிவது, உணர்வது ஒருவரை பக்குவப்படுத்த வேண்டும்.

( படித்து அறிந்ததும், நானாக உணர்ந்து எழுதியதும் …!)

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.